ஜெய் ஜெய் ஜெய் மனமோஹனா – மேலும் படிக்க
ஜெய் ஜெய் ஜெய் மனமோஹனா – மேலும் படிக்க
மனமோஹனா
மோஹனா” என்றால் மயக்குபவர் மற்றும் கவருபவர் என்றர்த்தம். “மனமோஹனா” என்னும் சொல், தன் அளவுகடந்த அழகாலும், அன்பாலும் ஒவ்வொருவரின் இதயத்தையும், மனதையும் கவருபவராகிய பகவான் கிருஷ்ணரைக் குறிக்கிறது
மதுசூதனா
“மதுசூதனா” என்ற சொல்லும் கிருஷ்ணரின் ஒரு நாமம்தான். அதாவது, மது என்ற அரக்கனை அழித்தவர் என்று பொருள். வேதாந்தத் தத்துவங்களில், “மது” என்ற சொல் நாம் செய்யும் செயலின் பலனைக் குறிக்கிறது. பகவானின் நாமத்தைத் தியானிப்பவருடைய பாபங்களை அழிப்பதனால், அவர் “மதுசூதனா “ என்றழைக்கப் படுகிறார். ஸ்வாமி இன்னொரு விளக்கமும் தருகிறார். “மது” என்றால் தேனைவிட இனிப்பான ஒன்று. மனிதனுக்குத் தேனைவிட இனிப்பான விஷயம் என்ன? அவனுடைய அகங்காரம். நம் அகங்காரத்தை முற்றிலுமாக அழிக்கவல்ல அந்த இறைவனே மதுசூதனன். அதனால் நாம் இந்த வரியில், நம்முள் இருந்து நம் பாபங்களைக் களைபவரும் மிக அழகானவருமான நம் சத்ய சாயியைப் போற்றிப் பாடுகிறோம்.
கேசவா
அழகானக் கேசத்தை உடையவர். கேசவா என்னும் நாமம், கிருஷ்ணாவதாரத்தில் ‘கேசி’ என்ற அரக்கனைக் கொன்றதையும் குறிக்கிறது. இந்த விளக்கம் ஸ்ரீ ஆதி சங்கரரால் அளிக்கப்பட்டது. மேலும், விஷ்ணு புராணத்திலும் காணப்படுகிறது. கிருஷ்ணரின் தாய் மாமனாகியக் கம்சன் குழந்தைக் கிருஷ்ணனைக் கொல்வதற்குக் ‘கேசி’ என்ற அரக்கனை அனுப்பி வைத்தான். ஆனால், குழந்தை கோபாலன் கையால், அவன் கொல்லப்பட்டான். ஆதி சங்கரர் மற்றொரு விளக்கமும் அளித்துள்ளார். அதாவது, “கேசா” என்பது சூரியனிடமிருந்து வரும் ஒளிக் கதிரைக் குறிக்கிறது. பகவான் கிருஷ்ணரே சூரியன், சந்திரன் உட்பட்ட இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஒளிக் கதிர்களுக்கும் மூல காரணமாதலால், அவரைக் “கேசவா” என்றழைக்கிறோம். ஆதி சங்கரர் இந்தக் கூற்றை நிரூபிக்க மகாபாரதத்திலிருந்து ஒரு மேற்கோள் காண்பிக்கிறார். அதாவது, கிருஷ்ணர் பகவத்கீதை உபதேசிக்கும்பொழுது, “என்னிடமிருந்து வெளிவரும் ஒளிக்கதிர்களுக்குக் ‘கேசங்கள்’ என்று பெயர்”. அதனால்தான், பண்டிதர்கள் என்னைக் ‘கேசவா’ என்றழைக்கின்றனர்” என்றுரைத்திருக்கிறார்.
மாதவா
மாதவா என்னும் சொல் “மா” மற்றும் “தவா” என்ற சொற்களிலிருந்து வருகிறது. “மா” எனும் சொல், சகல ஐஸ்வர்யங்களும் அளிக்கும் தேவி லக்ஷ்மியைக் குறிக்கிறது. “தவா” என்றால் பதி. லக்ஷ்மி பதியான பகவான் விஷ்ணுவின் அவதாரமே ஸ்ரீ கிருஷ்ணர் அதனால்தான் நம் புராணங்களின்படி அவருக்கு மாதவா என்ற நாமம் வந்தது. இதன் உள்ளர்த்தம் என்னவென்றால், இங்கு ‘லக்ஷ்மி தேவி’ என்று நாம் குறிப்பிடுவது பகவானிடமிருந்து என்றும் பிரிக்க இயலாத இயற்கை அல்லது ‘ப்ரக்ருதி’ யைத்தான். ஆகவே, இந்த இயற்கையின் அதிபதியும், உலகப் படைப்புகளின் ஆதாராமும் ஆகிய பகவானை மாதவா என்றழைக்கிறோம்.
கோபாலா
“கோ” என்றால் பசு, “பாலா” என்றால் ரக்ஷிப்பது. பகவான் கிருஷ்ணர், தேவகிக்கும் வசுதேவருக்கும் மதுராவில் பிறந்தார். ஆனால், பிருந்தாவனத்தில், இடையர் குலத்தைச் சேர்ந்த அன்னை யசோதா மற்றும் தந்தை நந்தகோபரால் வளர்க்கப்பட்டார். கிருஷ்ணர் இடயற்குலச் சிறுவர்களுடன் வளர்ந்ததால், அவரும் பசுக்களிடத்தில் அன்பு காட்டினார். அவற்றை மேய்ச்சலுக்கும் அழைத்துச் செல்வார். ஆகவே, கோபாலா என்றால் பசுக்களைக் காப்பவன் என்று பொருள். இது மேல்வாரியான அர்த்தம்தான். பாபா வேறு விதமாக விளக்குகிறார். ‘கோ’ என்ற சொல் ஒரு தனி மனிதனைக் குறிக்கிறது. அதனால், கோபாலா என்றால் அனைத்து ஜீவராசிகளையும் ரக்ஷித்து, எவ்விதத் தீங்கும் அண்டாமல் காத்து, நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிப்பவர் என்று பொருள்.