ஞானயோகம்

Print Friendly, PDF & Email
ஞானயோகம்

இதுவும் நாமதேவரைப் பற்றிய கதை. நாமதேவர் விட்டல பக்தர். சிலையிலுள்ள விட்டலன் அவருடன் பேசுவதுண்டு. அவர் அளித்த உணவைக் கூட ஏற்றுக்கொள்வார். அவரது குரல் மிகச் சிறந்தது. கீர்த்தனைகள் பல இயற்றினார். அவர் பாடல்கள் பலரை மிகவும் கவர்ந்தன.

அவர்காலத்தில், அநேக விட்டல பக்தர்கள் வாழ்ந்து வந்தனர். சௌதாமாலி (தோட்டக்காரர்) பணிப் பெண் ஜனாபாய்,தட்டான் நரகரி சோனார், நாவிதர் சேனா, தாழ்ந்த ஜாதியரான சோகாமேளா, குயவர் கோரா, நிவிருத்தி நாதர், ஞானேஸ்வரர், சோபன்தேவ், முக்தாபாய் போன்றவர் வாழ்ந்தனர்.

ஒரு சமயத்தில் தற்செயலாக அவர்கள் எல்லோரும் சந்தித்தார்கள். நாமதேவர் நெருங்கி வந்தபோது, எழுந்திருந்து எல்லோரும் அவரை வரவேற்று, விட்டலனின் அத்யந்த பக்தர் என்று புகழ்ந்தார்கள். வயதில் சிறிய முக்தாபாய் மட்டும் எழுந்திராது, நாமதேவர் ஏதோ சாதாரண மனிதர் என்பது போல நடந்து கொண்டார்.ஞான தேவருக்கு வெட்கமாகவும் அவமானமாகவும் இருந்தது. பெரும் பக்தரிடம் மரியாதை இல்லாமலும் இங்கிதமில்லாமலும் நடந்து கொண்டதற்குக் கடிந்து கொண்டார். நாமதேவர் கச்சா மனிதர் முழுமையாக வேகாத பானை போன்றவர் என்றாள் முக்தாபாய். அவளது துடுக்கான வார்த்தையால் சகோதரர்கள் எரிச்சல் அடைந்தார்கள். நான் கூறியது சரியா தவறா என்பதை கோராமாமாசரி பார்த்துச் சொல்லட்டும் என்று கூறினாள் முக்தா. குயவர் கோரா, ஒவ்வொருவரின் ஆன்மீகத் தரத்தையும் கண்டறியும் படி எல்லோரும் அவரைக் கேட்டனர். கோரா ஒவ்வொருவரின் தலையையும் பானையைத் தட்டுவது போலத் தட்டிப் பார்த்தார். ஒவ்வொருவரும் முழுமையாக வெந்த பானையென்றும், ஆன்மீகத்தில் நன்குமலர்ந்து கனிந்தவர் என்றும் கூறினார். விட்டலரின் மிக அருமந்த பக்தராக இருந்தாலும் நாமதேவர் முழுமையாக வேகவில்லை என்றுகூறினார். முக்தா அலட்சியமாக இருந்ததும் அவளது மதிப்பீடும் பொருத்தமானது என்றார்.

நாமதேவருக்கு மிகுந்த அதிர்ச்சியும், நிராசையும் ஏற்பட்டன. கோரா கூறினால் அது சாரியாகத்தானிருக்கும் அவரது தீர்ப்பில் தவறிராது, விட்டலரின் கோயிலுக்கு ஓடிச்செல்கிறார் நாமதேவர். தனக்கு நல்வழி காட்டும்படிபிரபுவிடம் அழுதுகொண்டே பிரார்த்திக்கிறார். விட்டோபா, தொலைவிலுள்ள, கிராமத்தில் உள்ள விசோபா கேச்சாரிடம் ஆத்ம ஞானம் பெற்றுக் கொள் என்று கூறினார். விசோபாவைத் தேடிக் செல்கிறார் நாமதேவ். கிராமத்துக்குள் நுழைந்ததும், அவரைப் பற்றி விசாரித்தார்.கோயிலில் எங்காவது தூங்கிக் கொண்டிருப்பார் என்று கூறினார்கள், கோயிலுக்குள் நுழைந்ததும், மிகவும் வயதான ஒருவர் சிவலிங்கத்தின் மேல் காலைப் போட்டுக் கொண்டு தூங்குவதைக் கண்டார். நாமதேவர் திடுக்கிட்டார்! என்ன அக்கிரமம்! விட்டலன் இந்த மூடரைக் காண அனுப்பினாரே என்று நொந்தார். இறைவனும், கர்வம் பிடித்த முக்தாவைப் போல் நடந்து கொள்கிறார். அந்த முதியவரைக் குலுக்கி எழுப்பினார். எங்கு காலை வைத்துக் கொள்கிறீர் என்று தெரியாதா? கடவுளின் இருக்கையைத் தவிர கால்களை வைத்துக் கொள்ள வேறிடம் கிடைக்கவில்லையா? முதியவர், தளர்ந்த குரலில் மெதுவாகக் கூறினார். மன்னியுங்கள். என்னால் சரியாகப் பார்க்க முடியவில்லை. நான் கால்களைக்கூட நகர்த்த இயலாமல் பலவீனமாக இருக்கிறேன் சிவலிங்கத்திலிருந்து என்கால்களைத் தள்ளி நகர்த்தி வைக்க உதவி செய்யுங்கள், என்று கேட்டுக் கொள்கிறார். நாமதேவர் சினத்துடனும் எரிச்சலுடனும் சிவலிங்கத்திலிருந்து அவர் கால்களை விலக்கினார். சிவலிங்கமோ அவர் கால்களை விட்டு நகர மறுக்கிறது. அவரது கால்களுடன் கூடவே நகர்கிறது. நாமதேவர் பேச்சிழந்து நின்றார்.

நாமதேவருக்கு அறிவும் ஞானமும் பளிச்சிட்டன விட்டலன் இருக்குமிடம் பண்டரிபுரம் மட்டுமல்ல. எங்கும் பரந்துள்ள இப் பிரபஞ்சத்தில், அவரது இருக்கை இல்லாத இடம் ஏது? இறைவனை எல்லாரினுள்ளும் காணுதல், எல்லா இடங்களிலும் காணுதல், இறைவனுக்குள் எல்லாரையும் காணுதல் இதுவே ஞானம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன