கர்ணன் – நிலையான உறுதியின் பண்பினன்

Print Friendly, PDF & Email
கர்ணன் – நிலையான உறுதியின் பண்பினன்

மிக உயர்ந்த இதிகாசமான மகாபாரதத்தில், குறிப்பிடத்தக்க பண்புகள் செறிந்திருக்கின்றன. எனினும் கர்ணன் பெற்றிருந்த பண்பு, ஆழமான அஸ்திவாரத்தின் மேல் அமைந்திருந்தது. ஒன்றை ஒன்று மிஞ்சும்படியான பல சிறந்த இயல்புகள் அவனிடம் எடுத்துக்காட்டாக பொருந்தியிருந்தன.

அங்க நாட்டின் இளவரசனாக கர்ணன், தன கொடைத் தன்மையில் மிகச் சிறந்து விளங்கினான். அவன் என்றுமே தன்னை நாடி வந்த யாருக்குமே எத்தகைய பொருளையும் இல்லை என்று உரைத்ததில்லை. அர்ஜுனனுக்கு நிகரான போட்டியாக கர்ணன் இருப்பதை முன்கூட்டியே இந்திரன் யூகித்திருந்தான். அதனால் அவன் சூழ்ச்சிக்குத் திட்டமிட்டான். ஓர் நாள் ஒரு அந்தணர் வேடமேற்று அவன் கர்ணனது மாளிகைக்குச் சென்றான்.

தன்னை நாடி வேதியர் ஒருவர் வருவதைக் கண்ணுற்றதும், இருக்கையின்றும் எழுந்து வந்து, அவரை போற்றி வரவேற்றான் கர்ணன். வந்த வேதியர் இந்திரனேயன்றி வேறு யாருமில்லை என்று அவன் நன்கு அறிந்துதான் இருந்தான்

“ஒ! மதிப்பிற்குரிய ஐயா! நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று பணிவோடு அவரைக் கேட்டான் கர்ணன். “அங்கராஜா! உனக்கு என் ஆசி உரித்தாகுக! உன் கொடைத் தன்மையைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்க்றேன். நான் ஒரு ஏழை அந்தணன். உன்னுடைய தயையை வேண்டி வந்திருக்கிறேன்”, என்று இந்திரன் நயமாகக் கேட்டான்.

அதற்கு முந்தின இரவுதான் கர்ணன் ஒரு கனவு கண்டான். சூரிய தேவன், இந்திரன் அவனிடம் வர இருப்பதையும் அவனுடைய அஞ்சத்தக்க உட்கருத்தையும் விளக்கிக் கூறி எச்சரித்திருந்தான். அனால் கர்ணனுக்குத் தானம் செய்வதைக் குறித்து தயக்கமான எண்ணம் ஏதும் எப்போதுமே கிடையாது. அதனால், “போற்றற்குரிய ஐயா! தாங்கள் தேவர்கோனான இந்திரன் என்பது எனக்குத் தெரியும். அர்ஜுனன் பயனடைவதற்காக எதையோ ஒன்றை நான் இழக்கச் செய்யவே தாங்கள் வந்துள்ளீர்கள், ஆனால் நான் கொடுத்த வாக்கினின்றும் பிறழ மாட்டேன். அதனால் தாங்கள் விரும்பிக் கேட்பதை வாரி வழங்குவேன்.” என்று கூறினான்.

அதன் பிறகு இந்திரன் எத்தகைய வாக்கு வாதமுமின்றி, சுற்றி வளைக்காமல் கர்ணனின் இரும்பு கவசத்தையும், காது குண்டலங்களையும் தரும்படி கேட்டான். தன் செயலினால், தன்னுடைய வலிமைமிக்க ஆற்றலில் பாதியைத் தந்து விடுவதை அவன் உணர்ந்திருந்தபோதிலும் கண நேரமும் தயங்காது தன் உடலோடு ஒட்டியிருந்த கவச குண்டலங்களை அறுத்து எடுத்து தந்து விட்டான்., கர்ணன். அவனது கொடைத் தன்மையைக் கண்டு மனமகிழ்ந்து போன இந்திரதேவன் “சக்தி” என்ற பேராற்றல் படைத்த அஸ்திரத்தை கர்ணனுக்கு வரமாகத் தந்தான். கூடவே அந்த அஸ்திரத்தை ஒரே ஒருவன் மீதுதான் செலுத்த வேண்டும் என்று ஒரு நிபந்தனையும் இட்டான்.

“அங்கராஜா ‘ என்ற பட்டம் அளித்து, தனக்கு இளவரசன் என்ற உயர் நிலைமையையும் தந்த பேரன்பிற்குரிய தன் நண்பன் துரியோதனனோடு,. கர்ணன் மிகவும் மனமொத்து இணைந்திருந்தான். அதனால் எத்தகைய நிலை ஏற்பட்டாலும், தன நண்பனுடனேயே தன்னுடைய ஊழ்வினையையும் சேர்த்து செலுத்த உறுதி கொண்டான்.

திருதராஷ்டிரனது சபையில் தாம் மேற்கொண்டு வந்த தூது பணி தோல்வியுற்ற பிறகு, கிருஷ்ணர் கர்ணனது வழியை கௌரவர் பாதையிலிருந்து மாற்றிவிட ஒரு திட்டத்தை உருவாக்கினார். ஹஸ்தினாபுரத்தை விட்டு அகலும் முன்பு, அவர் கௌரவர் அரண்மனையில் இருக்கும் கர்ணனை அணுகினார்.

கர்ணன் அவரை மாண்புடன் மதித்து வணங்கி வரவேற்றான். பொருத்தமான இருக்கை தந்து உபசரித்தான். கிருஷ்ணர் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, அவனை, “ஒ ! என் அன்பின் உறவினனே !” என்று விளித்தார். மகிழ்ந்தார். அன்பு கலந்து அவர் அங்ஙனம் விளித்ததில் கர்ணனது உள் மனம் ஏதோ ஒன்றை உணர்த்தியது. தன் உணர்வுகளை வெளிக்காட்டாது, வாளாயிருந்து, கிருஷ்ணரது நெருங்கிய, அன்பு நிறைந்த சொற்களுக்கு, ஏற்ற வகையில், அவனும் பேசி அவர் தன்னைக் காண வந்திருப்பதன் காரணத்தைப் பணிவோடு வினவினான். “பேரன்பு மிக்க கிருஷ்ணா ! தங்களுக்காக நான் ஏதேனும் செய்ய இயலுமா?” என்று கேட்டான்.

“ஆ! அன்பின் உறவினனே! உன் நல்லியல்புகளை நான் நன்கு அறிவேன். அதனால் உன்னோடு தனிப்பட்ட முறையில் நம் சொந்த நலன்களைக் குறித்துப் பேச இங்கு வந்துள்ளேன்! என் அருமைக் கர்ணா! உனக்கே தெரியாமல் இருக்கும் உன் கடமையைக் குறித்து உனக்கு நின்வூட்டவே நான் இங்கு வந்துள்ளேன்” என்று கிருஷணர் கூறினார்.

கர்ணனுக்கு அவரது பேச்சு புதிராக இருந்தது, அவனது கடமை எது? என்று கேட்டான். “இதுவரை மூடி மறைத்து வைக்கப்பெற்றிருந்த ஒரு இரகசியத்தை நான் இப்போது கூறப் போகிறேன், நீ உண்மையில் சூரிய தேவனின் திருவருளால் குந்தியின் வயிற்றிலுதித்த அவளது புத்திரனாகிறாய். ஆனால் தனக்கு ஏற்பட இருக்கும் பழிச்சொல்லிலிருந்து தப்பித்துக் கொள்ள பச்சிளங் குழந்தையாக இருந்த உன்னை, அவள் கங்கை நதியில் விட்டுவிட்டுப் பிரிந்து விட்டாள். நீ தேரோட்டியால் கண்டெடுக்கப் பெற்றாய். அவனது மனைவி இராதா உன்னை வளர்த்தாள். நீ நடை பெற்றுவிட்ட உண்மையை அறிந்து கொள்ளும் காலமும், அதனால் உன்னுடைய உண்மையான தம்பியரோடு நீ சேர்ந்திருக்கும் நேரமும், இப்போது வந்து விட்டது. நற்பண்புகளில் பாண்டவர்களின் நேர்மையான இயல்பையும், கௌரவர்களது நீதிக்குப் புறம்பான செயல்களையும் நீயே அறிவாய். நீ ஒரு நாணயமானவன். அது எனக்கு முழுமையாகத் தெரியும். அதனால் நீ அதர்ம மார்க்கத்தை விட்டு விட்டு, தர்ம பாதையில் வந்து சேர்ந்து விடு, இத்தகைய செயலால் நீ உன் அன்னை குந்தியையும் மகிழ்வித்தவனாவாய்.!” என்று அறிவுறுத்தி முடித்தார்.

ஆனால் கர்ணன் தனக்கென தனி ஒழுங்குகளையும் பண்புகளையும், வகுத்து வைத்திருந்தான். எனவே அவன், “கிருஷ்ணா! தாங்கள் ஒரு அவதார புருஷர், தர்மத்தைப் பற்றித் தாங்கள் அறியாதது ஏதுமில்லை. என்னுடைய இப்போதைய உயர் நிலையும், சிறந்த பதவியும் துரியோதனனால் நான் பெற்றவை. அதுவுமின்றி நாங்கள் இருவரும், மனமொத்த நண்பர்கள். இப்போது நிலவும் நெருக்கடியான நேரத்தில் நான் அவனை விட்டு விலகினால், அவன் மிகவும் துன்புறுவான்” என்று தன் நிலையைத் தெளிவாக விளக்கினான்.

கிருஷ்ணர், பிறகு “கர்ணா! தர்மஜாவும் அவரது நான்கு தம்பியரும் உன்னை அவர்களது மூத்த சகோதரனாக ஏற்று மூத்தவனான உனக்கு முடி சூட்டி மிகவும் மகிழ்வார்கள் என்பதையும் அறிந்துகொள்” என்று சற்று ஆசைக் காட்டியும் பேசிப் பார்த்தார்.

ஆனால் கர்ணன் அத்தகைய ஆசைக்கு அடிமையாகிப் பணியவில்லை. “கிருஷ்ணா! போர் மூளும் போன்ற அச்சுறுத்தும் சூழ்நிலையில், என்னுடைய உதவி அவனுக்குத் தேவைப்படும் நிலைமையில், என்னுடைய நன்மைக்காக பரிந்து பலபல செய்திருக்கும் அவனை விட்டு அகல நான் விரும்பவில்லை. என்னை அன்பு கூர்ந்து மன்னித்து விடுங்கள். நான் செழிப்பதோ சாவதோ எதுவாயினும் சரி என்னுடைய சொந்த மேன்மைக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், நான் கௌரவப் படையை விட்டு வர இயலாது. பாண்டவர் தான் இறுதியில் வெற்றி பெறுவர் என்பதில் ஐயமில்ல. எனினும் என் முடிவிலிருந்து நான் மாற முடியாது,” என்று தெளிவாக தன் நிலையை மீளவும் எடுத்துரைத்தான் கர்ணன்.

கர்ணனை இனிமேல் எந்த விதமான ஆசைக்கும், அடிமையாக்க முடியாது என்று கிருஷ்ணர் புரிந்து கொண்டு, விடைப் பெற்று சென்றார்.

சில நாட்களுக்குப் பிறகு, குந்தியே கர்ணனிடம் வந்து, கௌரவர்களை விட்டு விட்டு பாண்டவர் பக்கம் சேரும்படி மன்றாடி வேண்டினாள். ஆனால் தன்னுடைய் கொள்கையில் கர்ணன் உறுதியாக நின்றான். எப்படியிருந்தாலும் அவன் குந்திக்கு, வரப்போகும் போரில், பாண்ட சகோதரர்களில் ஒருவனை மட்டுமே கொல்வதாக இருப்பதாக ஒரு வரம் தந்தான். அதனால் குந்திக்கு எப்போதும் ஐந்து புத்திரர்கள் உயிரோடு இருப்பார்கள் என்றும் கூறினான்.

கேள்விகள்:
  1. தன மகன் அர்ஜுனன் நலம்பெற இந்திரன் எங்ஙனம் திட்டமிட்டு செயலாற்றினான்?
  2. கிருஷ்ணர் கர்ணனுக்கு எங்ஙனம் ஆசை காட்டினார்?
  3. கர்ணனுடைய சிறந்த நல்லியல்புகள் என்னென்ன?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: