விலங்குகளிடத்திலும் அன்புகொள் II

Print Friendly, PDF & Email
விலங்குகளிடத்திலும் அன்புகொள் II

சர் ஐசக் நியூட்டன் ஒரு பெரிய விஞ்ஞானி. கணக்கிலும், விஞ்ஞானத்திலும் ஆராய்ச்சி செய்வதிலேயே தம் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்து வந்தார் அவர். அவரிடம் ஒரு நாய் இருந்தது. அதன் பெயர் டைமண்ட். வாயில்லாப் பிராணியாக இருந்த போதிலும், அவ்வீட்டிலிருக்கும் ஒரு நபராகவே வீட்டாரால் டைமண்ட் கருதப்பெற்றது. ஓர் இரவு விஞ்ஞானத்தில் முக்கியமான சிக்கல் பகுதி ஒன்றினை யாரும் தொல்லைதர இயலாத அவரது தனியறையில் அமர்ந்து, தம்முடைய மேசை மேல் வைத்துத் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தார் ஐசக் நியூட்டன். இறுதியில் அந்தச் சிக்கலின் சரியான விடையைக் கண்டுபிடித்து விட்டார். அதுவரை முனைப்புடன் ஈடுபட்டு வந்ததால் ஏற்பட்ட சோர்வும், விடையைக் கண்டு பிடித்துவிட்டதால் மகிழ்ச்சியும், அவரைச் சற்று காலார வெளியில் நடந்து, தூயகாற்றை அனுபவிக்கத் தூண்டின. தாம் எழுதிய குறிப்புகளை எல்லாம் அடுக்கி ஒரு கட்டாகக்கட்டி, முன்பே ஆராய்ந்து குறிப்பெடுத்து வைத்திருந்த கட்டோடு வைத்து அவர் கட்டினார். பிறகு, எழுந்து அறையை விட்டு அகன்றார்.

அது வரை மேசை அடியில் படுத்துக்கிடந்த டைமண்ட், அவர் அறையை விட்டு வெளியேறுவதைக் கண்ணுற்றதும், தானும் அவருடன் வெளியே செல்ல விழைந்து, விரைந்து எழுந்தது. துள்ளி எழுந்த வேகத்தில் தன்னை அறியாமலேயே மேசையை இடித்துக் குலுக்கி விட்டது. அதனால் மேசை மேல் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி சரிந்து, நியூட்டன் அப்போது தான் அடுக்கி வைத்தக் காகிதக்கட்டின் மேல் விழுந்தது. உடனே அந்தத் தாள்களில் தீப்பற்றி விட்டன. மேசை மேல் தீயின் ஒளியைக் கண்ட நியூட்டன் விரைந்து வந்து அணைப்பதற்குள் அவரது பல ஆண்டுகளின் உழைப்பு பெரும்பாலும் எரிந்து சாம்பலாகி விட்டது.

எதிர்பாராத இந்தத் திடீர் நிகழ்ச்சியால் நியூட்டன் திடுக்குற்று விட்டார். தம் பலநாள் உழைப்பும் மதிப்புமிக்க ஆராய்ச்சியும் பயனற்றுப் போயினவே என்று நொந்து போனார். சில நிமிடங்கள் அந்த நாயை வெறித்து நோக்கினார். அதுவோ தான் செய்தத் தவறை உணராமல், வாலை ஆட்டிக்கொண்டு எரிந்து விழுந்த தாள்களை மோப்பம் பிடித்து வந்தது.

நாயின் செயலைக் கண்ட நியூட்டன், அதன் மேல் கோபப்படுவதற்குப் பதில் பரிதாபமே கொண்டார். அறிந்து செய்த பிழையல்லவே அது! தற்செயலாக நிகழ்ந்து விட்டசெயலுக்கு நாயின் மீது கோபம் கொள்வதால் என்ன பயன் என்று தெளிந்தார். அதன் மீது அவர் வைத்திருந்த தூய அன்பே அவரது கோபத்தை வென்றது. நாயைத் தட்டிக் கொடுத்து, “டைமண்ட்! அன்பின் தோழா! நீ எப்படிப்பட்ட தீங்கைச் செய்திருக்கிறாய் என்று அறிவாயா?” என்று கேட்டார்.நியூட்டன் சிறந்த விஞ்ஞான மேதை என்பதால் மட்டும் புகழ் பெறவில்லை. எல்லா உயிர்களிடத்தும் கொண்டிருந்த அன்பு, பொறுமை போன்ற தம்முடைய இனிய பண்புகளாலும் அவர் போற்றிப் புகழப்பெற்றார்.

கேள்விகள்:
  1. நாம் ஏன் விலங்குகளிடம் அன்பு செலுத்த வேண்டும்?
  2. நாய் டைமண்ட் செய்துவிட்ட தவறுக்கு நியூட்டன் அதைத் தண்டிக்காமல் மன்னித்துப் பரிவுகாட்டியது ஏன்?
  3. நியூட்டன் இடத்தில் நீ இருந்திருந்தால் என்ன செய்திருப்பாய்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: