கிருஷ்ணரது சமாதான தூது

Print Friendly, PDF & Email
கிருஷ்ணரது சமாதான தூது

பெரும்பாலான மக்கள் கிருஷ்ணர் ஒரு போர் வெறியர் என்று நினைக்கின்றனர். ஏனெனில் அவர் அர்ஜுனன், போர்க்களத்திலிருந்து ஓடிவிடுவதைத் தடுத்து நிறுத்தி போர் புரிய வற்புறுத்தினாரல்லவா ? அதனால் அத்தகைய தவறான கருத்து மக்களிடையே பரவியது. உண்மையில் ஆராய்ந்தால் அவர் யுத்தம் நிகழ்வதைத் தடுக்க தம்மாலியன்ற பெரு முயற்சி செய்தார். பாண்டவர் வனவாசத்திலிருந்து திரும்பிய பிறகும் அவர்களுக்குரிய பங்கான நாட்டைத் தர கௌரவர்கள் மறுத்தனர். எங்கும் பகைமைக் காற்று வீசியது. அதனால் கிருஷ்ணர், கடவுள் அவதாரமாக இருந்த போதிலும் சமாதானம் நிலவ இறுதி முயற்சியாக ஒரு முறை முயன்று பார்க்க, தாமே, பாண்டவர்களின் தனிப்பட்ட தூதுவனாக, திருதராஷ்டிரனது சபைக்குச் சென்றார்.

அஸ்தினாபுரத்திற்குச் செல்லும் முன்பு, பாண்டவரிடம் அவர் நீண்ட நேரம் கலந்து பேசினார். அவர்களும் அவரிடம் தங்களது இறுதியான கருத்தைத் தெரிவித்தனர். பின்னர் சாத்யகி தொடர கிருஷ்ணர் அஸ்தினாபுரத்தை அடைந்தார். கௌரவர்கள் அவரது வரவை முன் கூட்டி அறிந்து, அவரை வரவேற்க ஆடம்பரமாக ஏற்பாடுகள் செய்தனர். தங்களது பகட்டான, வரவேற்பினால் அவரை மகிழ்வுறுத்த விரும்பினர். துரியோதனனே, தனது தம்பியரும், கர்ணனும் புடை சூழ நகர வாயிலுக்கே சென்று அவரை வரவேற்றான். தன்னுடைய அரண்மனையில், அரச போகத்துடன் தங்கியிருக்கவும், தங்கள் விருந்தினராகத் தங்களுடன் அமர்ந்து உணவருந்தவும் அவரை வேண்டினான். ஆனால் கிருஷ்ணன் அமைதியாக “என் அன்பின் உறவினர்களே! உங்கள் பகைவரது தனிப்பட்ட தூதுவனாக நான் வந்துள்ளேன். ஒரு தூதுவன் தான் ஏற்று வந்த தூது, வெற்றிகரமாக முற்றுப்பெறும் வரை அவர்கள் விருந்தினனாக உணவருந்தக் கூடாது,” என்று தடுத்து மறுத்து விட்டார்.

அங்ஙனம் கூறிவிட்டு கிருஷ்ணர் அருகிலிருந்த விதுரரது மாளிகைக்குச் சென்றார். எதிர்பாராத வகையில் தம் வீட்டில் ஐயனைக் கண்டவுடன் விதுரர் பெற்ற மகிழ்ச்சிக்கும், வியப்புக்கும் அளவேயில்லை. கிருஷ்ணரைப் பணிந்து வணங்கி, தம் பக்தியை பலவிதமாக வெளியிட்டு, அவரை மதித்துப் போற்றினார். பக்தனது வீட்டில் தங்கியதைக் கிருஷ்ணரும் பெரிதும் அனுபவித்து மகிழ்ந்தார்.

விதுரர், “ஐயனே! இந்த சமாதான தூதுப்பணியை ஏற்று மதிப்பற்ற கௌரவர்களிடம் ஏன் வந்து துன்புறுகிறீர்கள்! அவர்கள் போருக்குத் தினவு எடுத்துத் திரிவதைத் தாங்களே அறிவீர்களே,” என்று கேட்டார். அதற்குக் கிருஷ்ணர் புன்சிரிப்புடன், “என் அன்பின் விதுரா! எனக்கு எல்லோருடைய மன நிலையும் தெரியும். துரியோதனனும் அவனுடைய சகோதரர்களும், என்னுடைய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் ஒருகாலும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இரத்தம் சிந்த விடாமல் தடுப்பது என் கடமை என்றே எண்ணினேன். இறுதி முயற்சி ஒன்று செய்து பார்த்து விடுகிறேன்” என்று விடையளித்தார்.

பிறகு கிருஷ்ணர் திருதராஷ்டிரனுடைய அரச சபையை அடைந்தார். திருதராஷ்டிரன், துரியோதனன், பீஷ்மர், துரோணர், கர்ணன் எல்லோரும் அவரை வரவேற்று தக்க ஆசனம் தந்து உபசரித்தனர். அமரும் முன் கிருஷ்ணர் தம்மைச் சுற்றிலும் பார்த்தார். சிறப்பு வாய்ந்த முனிவர்களும், சாதுக்களும், அவரவர்களுக்கேற்ற தரத்தில் ஆசனம் தரப்பெறாததைக் கவனித்தார். அதனால் ”பெருமை மிக்க அவர்கள் அனைவரும் தக்கபடி அமர்ந்த பிறகே நானும் அமர்வேன்,” என்று கூறியவாறு அமராமல் நின்றார்.

சில நொடிகளில் அவரது மனம் மகிழ அங்ஙனமே அனைவரும் மதிக்கப் பெற்று அமர்ந்தனர். பிறகு கிருஷ்ணர் தாம் மேற்கொண்டு வந்த தூதின் கருத்தை விளக்கினார். “மாட்சிமை மிக்க பெரியோர்களின் முன்னிலையில் தம்மிடம் ஒப்படைக்கப்பெற்ற பணியைச் சீர்தூக்கிப் பார்த்து பாண்டவருக்கு அவர்களுடைய பங்கு அரசைத் தரும்படி திருதராஷ்டிரனிடம் நான் ஒரு தாழ்மையான விண்ணப்பம் இடுகிறேன். இது வீணாக இரத்தம் சிந்துவதைத் தடுத்து, நிலையான அமைதியை உறுதியாக அளிக்கும்.” என்று சுருக்கமாகக் கூறி முடித்தார்.

பீஷ்மர், துரோணர் போன்ற பெரியோர்கள் கிருஷ்ணரது கருத்துக்களை முழுமையாக ஆதரித்தனர். ஆனால் துரியோதனன் நாட்டைக் கூறு போட்டுத் தருவது என்பது இயலாத செயல் என்று மூர்க்கத்தனமாக எதிர்த்தான். சற்றும் சிந்திக்காமல், “கிருஷ்ணா! என்ன நேர்ந்தாலும் ஓர் அங்குல அளவு நாடு கூட அவர்களுக்குத் தர முடியாது என்று பாண்டவர்களிடம் போய்ச் சொல்லுங்கள்! போருக்கு நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம்,” என்று வெடித்துக் கூறினான்.

திருதராஷ்டிரனுக்கு உள்ளூர தன மகனின் பிடிவாதமான் செயல் மகிழ்ச்சியையே தந்தது. எனினும், மகனது கருத்தை மாற்றுவது போல, மெல்லிய குரலில் ஏதோதோ கூற முயற்சி செய்தான். காந்தாரி கூட பகைமையான சூழ்நிலையை மாற்ற மகனிடம் வேண்டி முயன்றாள். ஆனால், துரியோதனன், நம்பிக்கையுள்ள தன் தோழனான கர்ணனும் மற்றும் சிலரும் தன் கூற்றை ஆதரிக்கவே, தன் பிடிவாதத்தினின்றும் இறங்கவில்லை.

கிருஷ்ணர் இறுதியாக ஒருமுறை “பாண்டவர் வலிமை குன்றியவர்கள் என்று நினைக்க வேண்டாம். பீமன் அர்ஜுனனுடைய உறுதியார்ந்த வலிமையும், தர்மஜாவின் நேர்மையான கோபமும், உலகம் முழுவதையுமே அடியோடு அழித்து விடக் கூடிய ஆற்றல் பெற்றவை. அனைத்து மனித குலத்திற்காக அவர்கள் அமைதி நிலவுவதையே விரும்புகிறார்கள். அதனால் மறுபடியும் ஒருமுறை இனிய இயல்போடு தீர சிந்தித்து, விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு பெறுங்கள்” என்று அவர்களை கேட்டுக் கொண்டார். ஆனால் அதிகாரப் பித்தும், அகங்காரமும் கொண்ட கெளரவருக்கு, செவிடன் காதில் ஊதிய சங்காகவே அவரது சொற்கள் இருந்தன. கிருஷ்ணரைச் சிறை பிடிக்கவும் அவர்கள் கள்ளத்தனமாக முயன்றனர். ஆனால் ஐயன் கிருஷ்ணர், ஒரு நொடி நேரம், தமது உண்மை ஸ்வரூபத்தை (விஸ்வரூபத்தை) வெளிக் காட்டினார். குருடனான திருதராஷ்டிரனுக்கும் ஒரு நொடி நேரம் பார்வை தந்து, தம்மைக் காண வைத்தார். அவரது தெய்வீக உருவத்தைக் கண்டு கௌரவர் கண் கூச மலைத்து நின்றனர்.

கிருஷ்ணர், பிறகு விதுரரும், சாத்யகியும் பின் தொடர, வெளியேறினார். அமைதி நிலவ, ஓர் இறுதி முயற்சி செய்து பார்த்து விட்டார். அவர் போர் ஏற்ப்பட்டு, இரத்தம் வழிவதும், அதர்மத்தின் அழிவும், தர்மத்தின் வெற்றியும் தவிர்க்க இயலாதது என்று அவர் நன்கு அறிந்திருந்தார்.

கேள்விகள்:
  1. ஹஸ்தினாபுரத்திற்கு கிருஷ்ணர் தூது சென்றதன் முதன்மையான கருத்து என்ன?
  2. கௌரவ சபையில் அவர் பெற்ற மறு மொழி என்ன?
  3. கிருஷ்ணர் தாம் உயர்ந்த பரம்பொருள் என்பதை எப்படி அவர்களுக்குக் காட்டியருளினார்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன