லிகித ஜபம்
லிகித ஜபம்
இறைவனின் நாமத்தை எழுதுவது என்கிற சாதனையை ஆன்மீகப் பயிற்சியாக கொண்டது லிகித ஜபம். ‘லிகித’ என்கிற சமஸ்கிருத வார்த்தைக்கு எழுதுதல் என்று பொருள் ‘ஜபம்’ என்றால் இறை நாமத்தை மீண்டும் மீண்டும் உச்சரிப்பது. எனவே லிகித ஜபம் என்றால் இறை நாமத்தை மீண்டும் மீண்டும் எழுதுவது என்பது பொருள்.
லிகித ஜெபம் செய்வது எவ்வாறு?
நமது அன்றாட வாழ்க்கையின் வழக்கமான செயல்களிலிருந்து நேரம் ஒதுக்கி, ஒரு அமைதியான இடத்திலோ, பூஜை அறையிலோ அல்லது வழிபாட்டு பீடத்தின் முன்னோ அமர்ந்து கொள்ள வேண்டும். கண்களை சில நொடிகள் மூடி ஆழ்ந்து சுவாசித்தல் இறைவனைப் பற்றி சிந்திக்க வேண்டும். பின் கண்களைத் திறந்து, இறைவனது நாமத்தை எழுதத் தொடங்க வேண்டும். ராம, ராம,ராம அல்லது ஓம் ஸ்ரீ சாய்ராம்.
இறைவனைப் பற்றி சிந்தித்துக் கொண்டு, இறைவனது நாமத்தை உரக்க ஓதிக் கொண்டு அவரது நாமத்தை எழுதுவது லிகித ஜபத்தின் முக்கியத்துவம் ஆகும். நமது எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் உடனடியாக தூய்மை ஆகிறது. “மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றும் ஒருமை படுவதால் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் ஆகிய மூன்றும் தூய்மை ஆகின்றன. லிகித ஜபம் போன்ற ஆன்மீகப் பயிற்சிகள் முழு மனதுடன் செய்யப்படவேண்டும். அப்பொழுது அது புனிதமாகவும் இறைமையாகவும் மாற்றப்படுகிறது”, என்று பகவான் பாபா அறிவுறுத்துகிறார்.
“தற்காலத்தில் லிகித ஜபம் செய்பவர்கள் இறைவனைப் பற்றி எண்ணாமலும், வாயால் உழைக்காமலும் இறை நாமத்தை எழுதுகிறார்கள். எழுதத் தொடங்கும் பொழுது எழுதும் நாமத்தை மனதில் நிறுத்தி, வாயால் உரைத்து, பின்பு கைகளால் எழுத வேண்டும். இதுவே லிகித ஜபம் என்னும் இறை நாமத்தை எழுதும் தவமாகும்”, என்கிறார் நமது சுவாமி ஸ்ரீ சத்திய சாய் பாபா.
சனாதன சாரதி, ஆகஸ்ட் 1995