இறைவன் சேவைக்கு அடுத்தே உணர்வை மதிக்கிறார்
இறைவன் சேவைக்கு அடுத்தே உணர்வை மதிக்கிறார்
மெக்கா மசூதியின் ஒரு மூலையில் அப்துல்லா படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தவன் திடீரெனப் பேச்சுக் குரல் கேட்டு விழித்தான். அவனது தலைக்கு மேல் இரண்டு தேவதைகள்பேசிக்கொண்டிருந்தனர். அவை இரண்டும் இறைவனால் வாழ்த்தப் பெற்றவர் பெயர்களுக்குப் பட்டியல் தயாரித்துக் கொண்டிருந்தனர். ஒரு தேவதை மற்றொன்றினிடம் பலர் மெக்காவிற்குப் புனித யாத்திரை சென்று வந்த போதிலும் சிக்கந்தர் நகரத்திலுள்ள மஹபூப் என்பவன் தான் இறைவனது வாழ்த்துக்களைப் பெற்றவர்களில் முதல்வனாக இருக்கிறான் என்று அறிவித்தது.
அதைக்கேட்டவுடன் அப்துல்லா, சிக்கந்தர் நகரம் சென்று மஹபூபை பார்க்க விரும்பினான் மஹபூப் ஊராரின் செருப்புகளைத் தைத்துத் தரும் ஒரு எளிய சக்கிலி. அவன் மிக்க ஏழ்மை நிலையில் அன்றாட உணவிற்கே அல்லாடி வந்தான். அவனது வருவாய் வாய்க்கும் கைக்குமே எட்டாதிருந்தது. பல கடுமையான தியாகங்கள் புரிந்து அவன் சில காசுகள் சேமித்து வைத்தி ருந்தான். ஒரு நாள், தான் அங்ஙனம் சேமித்த பொருள் அனைத்தையும் கூட்டி எடுத்துக் கொண்டு சிறந்த உணவுபண்டங்களாக வாங்கினான். அதை தன் இளம் மனைவி மனம் மகிழ அவள் எதிர்பாராத வெகுமதியாகத் தர திட்டமிட்டான்.
தான் வாங்கிய பண்டங்களோடு மஹபூப் வீட்டிற்கு விரைந்து வந்து கொண்டிருந்த போது மிதமிஞ்சிய பசியின் கொடுமையால் ஒரு பிச்சைக்காரன் கூக்குரலிடுவதை கேட்டான். அதற்கு மேல் அவனால் உறுதியான மனதோடு அதைக்கடந்து போக முடியவில்லை, எனவே மிக விலையுயர்ந்த பண்டங்கள் இருந்த பாத்திரத்தை அப்படியே பிச்சைக் காரனிடம் தந்து விட்டான். அதோடு அங்கேயெ அமர்ந்து வறுமையின் கொடுமையால் முகம் எல்லாம் சுருங்கி விகாரமாக இருந்த அந்த பிச்சைக்காரன் ஆவலோடு சாப்பிடுவதை, பூரித்துப்போன முகத்தோடு மகிழ்ச்சி தளும்ப பார்த்துக்கொண்டிருந்தான் மஹபூப்
அவனுடைய இந்த சிறந்த செயலே அவனுக்கு இறைவனது வாழ்த்து பெற்றோரின் பதி வேட்டில் முதலிடம் தந்தது. மெக்கா நகருக்கு பயணம் சென்று இலட்சக்கணக்கில் பணத்தை தானம் செய்து பெற முடியாத முதலிடத்தை அவன், தன்னலமற்ற சேவையால் பெற்றான்.
எனவே இறைவன் சேவைக்கு பின்னர்தான் உண்ர்வுகளை மதிக்கிறார், ஆரவாரத்தையும் ஆடம்பரத்தையும் அல்ல என்பதையும் நாம் உணர்ந்து கொள்வோமாக
கேள்விகள்:
- மெக்கா மசூதியில் ஒரு நாள் அப்துல்லா உறங்கிகொண்டிருந்த போது அவன் என்ன கேட்டான்?
- சிக்கந்தர் நகர மஹபூபைப் பற்றி அவன் என்ன அறிந்தான் ?
- இறைவரால் வாழ்த்தப்பட்டோர் பதிவு ஏட்டில் முதலிடம் பெறும் வண்ணம் மஹபூப் ஆற்றிய சேவை என்ன ?