தொலைந்து கிட்டிய மகன்

Print Friendly, PDF & Email
தொலைந்து கிட்டிய மகன்

தந்தையார் லெவி ஒரு மகிழ்வான மனிதன். வாழ்நாள் முழுதும் அரும்பாடுபட்டு, ஒரு பெரிய பண்ணைக்கு அதிபதியாக அவர் இருந்தார். பொருட் செல்வம் மட்டுமன்றி அவருக்கு புத்திரச் செல்வமும் சிறக்க வாய்த்திருந்தது. அவருக்கு இரண்டு அழகிய மகன்கள் இருந்தனர். அவர்கள் வளர்ந்து திருமணம் செய்து கொண்டு நல்ல வண்ணமாக வாழ்வதற்கு அவர் நல்ல முறையில் கவனித்துக் கொண்டார். பிறகு, அவர் சிறிய பேரக் குழந்தைகள் கூட வாய்க்கும் பேறு பெறுவார். தன்னுடைய உழைப்பினால் பெற்ற வயல்கள், ஆடுமாடுகள், பழத்தோட்டங்கள், திராட்க்ஷை தோட்டங்ளைப் பார்த்து அவர் பூரித்து மகிழ்ந்தார்.

ஆனால் அவரது மகிழ்ச்சி நீடித்து நிலை பெறவில்லை. அவருடைய மூத்த மகன் மனநிறைவு பெற்றவன். நாள்தோறும் வயல்களில் பணியாட்களோடு பாடுபட்டு உழைத்தான். அவரது இளைய மகனோ இடைவிடாது அலை பாய்ந்தவனாய் பொறுமையற்றிருந்தான். கிராமத்தில் உல்லாசமாகப் பொழுது போக்க, மாற்றங்களும், நூதனமான நிகழ்சிகளும், இல்லாததால் உற்சாகமற்று, வயல் வேலைகளில் சோர்வடைந்து வந்தான். மிகப்பெரிய, ஒளி மிகுந்த நகரப் பகுதிகளுக்குச் சென்று வாழ்வதில் அவனுக்கு மிக மிக ஆவல். அங்கு எல்லாமே, அதிக உற்சாகமும், இன்பமும் தருபனவாக இருக்கும். அதனால், தான், அங்கு சென்று விட்டால் மிக்க மகிழ்ச்சியாக வாழமுடியும் என்பது அவன் நம்பிக்கை. ஒரு நாள் தன் எண்ணத்தை உறுதி செய்து விட்டான். இனி அவன் அந்த இருண்ட வயல்களில் இருக்க முடியாது. தந்தையிடம் சென்று தன் எண்ணத்தைக் கூறினான்.

“அப்பா! என் பங்குக்குரிய பணத்தைத் தந்து விடுங்கள். எனக்கு இப்போதே தேவைப்படுகிறது. நான் வீட்டை விட்டுப் போகப் போகி றேன்.” என்று கேட்டான்.

தந்தையார் லெவி, அவனது பேச்சினால் மிகவும் வருத்தமுற்றார். தன் மகன் சைமனுக்குப் பணம் மட்டும் மகிழ்ச்சியைத் தந்து விடாது, என்று அவர் அறிந்துதான் இருந்தார். மகனை அளவு கடந்த பாசத்தோடு, அங்கேயே தங்கியிருக்கும்படி முதலில் வற்புறுத்தினார். இருந்தபோதிலும், சைமன், தானே பொருளீட்டி, தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமல்லவா? லெவி, பேரன்போடும் பேரறிவோடும், அவனைத் தடுத்து நிறுத்தவில்லை.

அவர் ஆடுமாடுகள், நிலம் இவற்றில் சிலவற்றை விற்றார். தன் முழு சொத்திலும் சரியாக மூன்றிலொரு பாகத்தையே விற்றார். ஏனெனில் சைமனுக்குச் சட்டப்படி மொத்த உடமையில் அவனது பங்கு கிடைத்து விடுமல்லவா? அந்த பணத்தை வெள்ளி நாணயங்களாக சைமனிடம் தந்தார்.

சைமன் அங்கிருந்து போவதிலேயே மிக துரிதமாக இருந்தான். நல்ல துணிமணிகளை ஒரு பெட்டியில் அடைத்துக் கொண்டான். பணப்பையை தன் இடுப்புப்பட்டையினுள் பாதுகாப்பாக வைத்துக் கொண்டான். அனைவரிடம் அமைதியாக விடைபெறக் கூட அவனுக்குப் பொறுமையில்லை.

தந்தையார் அவன் சாலையில் நடந்து சென்று கண்ணுக்கெட்டாது மறைவதைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தார். அவனைப் பிரிவது அவருக்கு மிக்கத் துயரத்தைத் தந்தது. ஆனால் அவரால் என்ன செய்ய முடியும்? அவன் திரும்பி வருவதற்காக, வழி பார்த்து, எதிர்பார்த்துப் பொறுத்திருக்கவே அவரால் இயலும். துயரம் நிரம்பிப் வயல்வெளிகளை விட்டு தொலைவில், பின்னும் தொலைவில் சென்று கொண்டிருந்த சைமனுக்குத் தான் எத்தனை மகிழ்ச்சி! இப்போது அவனால் விரும்பியவண்ணம் வாழ முடியும், உவகையும், வேடிக்கையும், உற்சாகமுமாக அவன் வாழ முடியும். இன்பமான அந்த இளைய யூதன் செலவுக்கு அளவற்ற செல்வம் பெற்றிருந்தான். பணம் அவனுக்குப் பல நண்பர்களை கூட்டுவித்தது. வாழ்க்கை, விருந்தும், கேளிக்கையுமாக கழிந்தது. இசையும், நடனமும் சைமன் மனத்தைக் கவர்ந்தன. மணம் மிக்க விருந்துகளும் மதுபான பழக்கமும் அவனை ஓர் உல்லாச பிரியனாக்கி விட்டன. தந்தையார் அரும்பாடுப்பட்டு சேமித்த பொருள் இங்ஙனம் வெறுமே செலவாகி வந்தது. முதலில் சைமன் அது குறித்துக் கவலையே படவில்லை. அவன் தன் நண்பர்களுக்காகப் பெரும் பொருள் செலவழித்து அவர்களை நன்றாகவே கவனித்துக் கொண்டான். அதற்குப் பிரதி பலனாக அவர்கள் அவனை கவனித்துக் கொள்ள வேண்டிய நிலமை வந்தது. ஆனால் என்ன ஏமாற்றம்? அவர்களை நாடிச் சென்ற சைமன் திடுக்குற்றுப் போனான். அவர்கள் அவனைக் கண்டு கொள்ளாது திருப்பி அனுப்பி விட்டனர். அவர்களுக்கு அவனிடம் என்ன வேலை இனிமேல்? அவனது பொருள் போன பின்பு நண்பர்களும் கூட போய் விட்டனர். தன்னுடைய நல்ல நல்ல உடுப்புகளையும் அன்றாட உணவிற்காக விற்றான். பிறகு அவனிடம் நல்ல உடுப்பு கூட இல்லாது போய் விட்டது. அந்த நகரத்துத் தெருக்களில், துயரமுற்ற நிலையில் சைமன் சுற்றி சுற்றி வந்தான். அவனுக்கு சொந்த பந்தங்கள் யாரும் இல்லை. அங்கு உதவி புரியவும் அந்த ஊரில் ஒருவரும் கிடையாது. ஒரு புது இடத்தில், ஒரு புது ஆளாக அவன் கருதப்பட்டான். நண்பர்களுமின்றி, பொருளுமின்றி கைவிடப்பட்ட தனியாளானான் அவன்.

இறுதியில் சைமன் அந்த அழகிய நகரத்தை விட்டு அகன்றான். அடுத்துள்ள கிராமப் புறத்திற்குச் சென்றான். யாராவது ஒரு குடியானவன் அவனுக்கு ஒரு வேலை தரமாட்டானா என்று எண்ணினான். நல்லவேளையாக அவனுக்கு நாள் முழுவதும் கூட வயலில் உழைக்கத் தெரியுமே! பயிரிடுவதைப் பற்றி அவன் அனைத்தும் அறிந்துள்ளானே! ஆனால் கிராமத்திலும் அவனுக்கு வேலை தர எவரும் முன் வரவில்லை. துணிகள் எல்லாம் கிழிந்து தொங்க, பட்டினியால் வாடி சோர்ந்து போனான். இறுதியில் ஒரு விவசாயி அவனைப் பார்த்துப் பரிதாபப் பட்டு, தன் பன்றிகளைக் கவனித்துக் கொள்ள சைமனை அமர்த்திக் கொண்டான். பன்றி மேய்ப்பது என்பது எல்லா பணிகளிலும் இழிவான செயலல்லவா? ஆனால் அத்தகைய கெளரவம் எல்லாம் பார்க்கும் நிலையில் சைமன் அப்போது இல்லை. பசி அவனை அவ்வளவு கொடுமையாக் வாட்டியது அந்த பன்றிகளுக்கு, ஒரு குறிப்பிடத் மரத்தின் சொரசொரப்பான தோல்கள் உணவாகத் தரப்படும். அவை இனிமையான சுவையோடு பட்டாணி தோல் போன்றவை. சைமனுக்கு இருந்த பசியில், பன்றிகளின் உணவை அவனே வாயிலிட்டு மென்று விழுங்கினான்.

பன்றிகளைப் பார்த்துக் கொண்டிருக்குபோது சைமனுக்கு ஆழ்ந்து சிந்திக்க அவகாசம் கிடைத்தது. “நான் எத்தகைய முட்டாளாக இருந்தேன். என்னை எவ்வளவு விரும்பி வைத்திருந்தனர் என் வீட்டார். இப்போது இங்ஙனம் கிடக்கிறேனே! என் தந்தையாரின் பணியாட்கள் கூட என்னை விட நல்ல நிலையில் இருக்கின்றனரே! இல்லை! நான் இங்ஙனம் அல்லலுற வேண்டியதில்லை. நான் அவர்களிடம் திரும்பி போகிறேன். ஆமாம்! நான் என் தந்தையாரிடம் திரும்பி போகத்தான் போகிறேன். கடவுளுக்கு எதிராக பல பாவம் புரிந்து விட்டதை, தந்தையிடம் ஒப்புக் கொள்ள போகிறேன். நான் ஒரு தீய மகனாக இருந்ததை அவரிடம் கூறி விடப் போகிறேன். அவரை மதிக்காது, அவரை உயர்வாக நினைக்காது, அவருக்குப் பணியாது கிடந்ததையெல்லாம் ஒப்புக் கொள்ள போகிறேன். அவருடைய உடமையில் என் பங்கை நான் பெற்றுக் கொண்டு விட்டேன் என்று தெரிகிறது. அவர் என்னைத் தன் மகனாக ஏற்றுக் கொள்வார் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. அவருடைய வயலில் ஒரு கூலியாளாக ஏற்றுக் கொள்ளும்படி நான் கேட்கப் போகிறேன். அவரிடம், ”நான் ஒரு மகனைப் போல கருதக் கூடாதவன். அன்பு கூர்ந்து தங்கள் வயலில் ஒரு பணியாளாக என்னை அமர்த்திக் கொள்ளுங்கள்” என்று அவரிடம் கேட்கப் போகிறேன்!. இங்ஙனமெல்லாம் அவன் நினைவு ஓடிக் கொண்டிருந்தது. நீண்ட துயரமான பயணத்திற்குப் பிறகே அவன் வீட்டை நெருங்கினான். தூசி மிகுந்த அந்த சாலையில் பசி காதை அடைக்க அவன் நொண்டி நொண்டி நடந்தான். வழியில் கிடைத்த காயும், பழமுமே அவனுக்கு உணவாகியது. சாலையின் ஓரமே அவன் படுக்க இடமாகியது. அழுக்கு பிடித்து, தடுமாறி நடந்து, பிச்சைக்காரன் போல் தோன்றிய அவனை, தந்தையார் லெவியின் பெருமைக்குரிய மகன் என்று ஊரில் எவராலும் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.

ஆனால் ஒருவர் மட்டும் அவனைத் தூரத்தில் கண்டவுடனே யார் என்று புரிந்து கொண்டார். அவன் சென்றதிலிருந்து, தந்தையார் வருத்ததோடு சோகமாகவே இருந்து வந்தார். நாள்தோறும் அவர் தன் வீட்டின் தளத்திற்குச் சென்று அமர்ந்து கொண்டு அவன் திரும்பித் தன்னிடம் வந்து விட மாட்டானா என்ற ஏக்கத்தோடும், நம்பிக்கை யோடும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பார்த்துக் கொண்டே இருப்பார்.அவர் தாம் தெருவில புரண்ட கந்தலான, துணிகளுடன் தொய்ந்தவாறு வந்துக் கொண்டிருந்தவனை அடையாளம் கண்டு கொண்ட பெரியார், தனயனைக் கண்டவுடன் தளத்திலிருந்து வேகமாக படிகளில் இறங்கி வந்தார் தந்தையார். தம்முடைய மதிப்பு, கெளரவம் அதை கடைபிடிக்க வேண்டிய நிலைமை எல்லாம் அவருக்கு அடியோடு மறந்து விட்டது. தெருக்களில் விரைவாக ஓடினார். ஓடிச் சென்று சைமனை இறுக்கமாக அணைத்து கொண்டு மகிழ்ச்சியில் அழுதே விட்டார்.

தந்தையார் தன்னை அணைத்து முத்தமிடுவதை சைமனால் நம்ப முடியவில்லை “நான் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்தேன்” என்று திணறிய குரலில் கூற முயன்றான். “அப்பா! நான் கடவுளுக்கே பொறுக்காத பாவம் செய்து விட்டேன். தங்களிடமும் மரியாதை குறைவாகவும், கீழ்படியாமலும் நடந்து கொண்டு விட்டேன். தங்கள் மகனாக ஏற்றுக் கொள்ளப் பெறுவதற்கே அருகதையற்றவன் நான். தங்கள் பணியாட்களில் ஒருவனாக என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்.” என்று விம்மிக் கொண்டே கூறினான். தந்தையார் லெவி எதையும் கேட்கும் நிலையிலில்லை.கை தட்டி பணியாட்களை அழைத்தார். என்னவோ ஏதோ என்று அவர்கள் பதறி ஓடி வந்தனர். அவர்களிடம், “என் மகன் திரும்பி என்னிடம் வந்து விட்டான். என்னுடைய உடுப்புகளில் உயர்ந்ததாக ஒன்றை அவன் கைகளில் இட கொண்டு வாருங்கள். அதனால் அவன் என் அதிகார உரிமையைப் பெறுவான். வரும்போது ஓர் இணை நல்ல காலணிகளைக்கொண்டு வர மறந்து விடாதீர்கள். ஒரு வேலைக்காரனைப் போல அவன் தெருவில் வெறுங்காலில் நடந்து வர நான் ஒப்ப மாட்டேன். ஒரு கொழுத்த கன்றைக் கொன்று அவனுக்குச் சுவை மிக்க உணவு தயாரியுங்கள். நாங்கள் இன்பமுடன் உண்டு அருந்தி மகிழப் போகிறோம். என் மகன் இத்தனை நாள் இறந்து விட்டான் என்றே நினைத்திருந்தேன்; இல்லை அவன் உயிரோடு என்னிடம் வந்து விட்டான்! அவன் காணாமற் போயிருந்தான். இப்போது கண்டு பிடிக்கப் பெற்று விட்டான்!” என்று மகிழ்ச்சியான ஆரவாரக் குரலில் பலவாறு பிதற்றினார். அவரது கட்டளைகளை நிறைவேற்ற பணியாட்கள் விரைந்தனர். மிக விரைவில், அவனது வரவால் வீடு முழுவதுமே பரபரப்பும், கலகலவென்ற குரலொலியுமாக நிறைந்தது. தந்தை லெவியின் இன்பத்தில் எல்லோருமே பங்கு கொண்டனர்.

Father receiving back the son

அன்று பரிமாறப்பெற்ற அறுசுவை விருந்தை வர்ணிக்கவும் இயலுமா? உண்ணலும் படுக்கலும் முடிந்த பிறகு உல்லாச நிகழ்ச்சிகள் துவங்கின. புல்லாங்குழல்கள் இசைத்தன. அதற்கேற்ப சிலர் நாட்டியமாடினர். பாட்டு, கால்களைத் தட்டுதல், கரவொலி எழுப்புதல் என்று ஒரே கோலாகலமாக இருந்தது. அவர்கள் ஏற்படுத்திய ஆனந்தமான ஆரவாரவொலி ஆகாயத்தை எட்டியது. நெடுந்தொலைவிற்கு அந்த ஒலி பரந்து கேட்டது. ஆம், அந்த ஒலியை ஒருவன் கேட்டான். அவனே, சைமனின் தமையனான ஜூட் என்பவன் அவன் நாள் முழுவதும் வயல்களில் அரும்பாடு பட்டுவிட்டு களைத்துச் சோர்ந்தவனாக வீடு திரும்பிக் கொண்டுயிருந்தான். வீட்டை நெருங்கி வந்த போது, அந்த ஆரவார ஒலியைக்கேட்டான். “ஏன் இங்ஙனம் ஆடி,பாடி சத்தமிடுகின்றனர்,” என்று பணியாளைக் கேட்டான். அவன் அதற்கு சைமன் வந்துவிட்டதாகவும் அவனை மகிழ்வுறுத்த இத்தகைய கோலாகலம் என்று பணியாள் விளக்கினான். அதைக் கேட்டதும் ஜூட்டிற்கு மிக்க கோபம் வந்து விட்டது.

ஜூட் வயலிலிருந்து திரும்பி விட்டான் என்பதை தந்தையிடம் அறிவிக்க ஒரு பணியாள் ஓடினான். உடனே அவர், “ஜூட் உடனே வந்து நம் விருந்தில் பங்கு கொள்ளும்படி கூறு” என்று கூறினார் தந்தை லெவி. பணியாள் சென்று பகர்ந்த போது, “என்ன? ஒன்றுக்கும் உதவாத அவர் மகன் திரும்பி வந்ததை மகிழ்ந்து கொண்டாட நானும் அதில் பங்கு கொள்வேன் என்று நினைத்துக் கொண்டுள்ளாரா? அந்த இளைய சோம்பேறிக் கயவனுக்காக நானும் மகிழ்ந்து வரவேற்பு விழாவில் சேர்வேன் என்று கற்பனை செய்கிறாரா,” என்று கோபத்தில் கொதித்து உரக்கக் கத்தினான் ஜூட். பணியாள் அவன் கூறியதை அப்படியே சென்று தன் தலைவனிடம் கூறிவிட்டான். அவரே எழுந்து தன் மூத்த மகனைக் காண வந்தார். அவனிடம் அன்பாக, கனிவாகப் பேசினார் .அதை கேட்கும் நிலையிலேயே ஜூட் இல்லை. தந்தையாரிடம் பொறுமையாகப் பணிவோடு நடந்துக் கொள்ளக் கூட இயலாத அளவு கோபம் அவனை ஆட்கொண்டிருந்தது. வழக்கம் போல அவருடன் மரியாதையுடன் பேசக் கூட அவனால் முடியவில்லை. தந்தையார் கெஞ்சிக் கேட்கும் அளவுக்கு அவனது கோபமும், முரட்டுத்தனமும் ஓங்கியிருந்தன. “இத்தனை ஆண்டுகளாக் நான் உங்கள் வயலில் அடிமையாக் உழைத்தேன். உங்களுக்கு பணிவிடை பல புரிந்திருக்கிறேன். நானும் என் நண்பர்களோடு உல்லாசமாகப் பொழுது போக்க என்றாவது ஒரு நாள் எனக்காக ஒரு விருந்து வைத்திருக்கிறீர்களா? இல்லையே! பொருளையெல்லாம் வீணாக்கிய அந்த நாடோடி மகன் திரும்பி வந்ததும் உங்களுக்கு என்ன ஏற்பட்டு விட்டது? அவனால் ஒரு நன்மை கூட கிடையாது. உங்களுக்கு அவன் செய்ததெல்லாம், பெரிய நகருக்குப் போய், உங்கள் பணத்தைக் கரைத்து இன்புற்று வந்ததுதான். ஆனால் அவனுக்குத்தான் கொழுத்த கன்றும், உயர்வான விருந்தும் தரப்படுகிறது,” என்று தந்தையாரிடம் இரைந்து கேட்டான்.

தந்தையார் லெவி, சைமனை நேசிப்பது போலவே ஜூட்டையும் விரும்பினார். ஜூட் எவ்வாறெல்லாம் நினைத்து துன்புறுகிறான், ஏன் கோபப் படுகிறான், என்பதை அவரால் உணர முடிந்தது. எனவே அவர் அவனுடைய கூற்றுக்குக் கடுமையாக ஏதும் கூறவில்லை. அன்பற்றவன் என்று அவனைக் குறை கூறவுமில்லை. தம் கரங்களை அவனுடைய கழுத்தில் சுற்றி அனைத்துக் கொண்டு, ஜூட் என் மகனே! என் அருமை மகனே! நீ என்றும் என்னோடேயே இருக்கிறாய்! என் நம்பிக்கைக்கு உகந்தவனாகவும் இருக்கிறாய். சைமன் அவனது பங்கை வாங்கிச் சென்று விடவே, என் உடமையெல்லாம் இப்போது உன்னுடையது தானே! உன்னைப் போலவே அவனும் என்னுடைய மகன்.உங்கள் இருவரையுமே நான் மனமார நேசிக்கிறேன். அவனை மறுபடியும் வீட்டிற்கு வரவேற்க நான் மட்டும் தானே இந்த வீட்டில் இருந்தேன்! உன்னை என்னோடேயே வைத்திருப்பதில் எவ்வளவு மகிழ்கிறேனோ அதே அளவில், அவனை மீண்டும் என்னுடன் வைத்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மகனே அவன் திரும்பி வந்தது, இறந்து போனவன் மீளவும் உயிர் பெற்று வந்தது போல எனக்கு இருக்கிறது. அவன் சென்ற பிறகு அவனை மீண்டும் பார்க்கவே முடியாதோ என்று ஏங்கியிருந்தேன். என்னை பொறுத்தவரையில் அவன் இறந்து விட்டிருந்தான். இப்போது அவன் உயிருடன் வந்துள்ளான்.அவன் காணாமற் போய் விட்டிருந்தான். இப்போது கண்டெடுக்கப் பெற்றான். என்னோடு வா! என் அன்பின் ஜூட், வந்து என் மகிழ்ச்சியில் பங்கு கொள்,” என்று அறிவுறுத்தி அமைதி படுத்தி மகனை அழைத்துச் சென்றார் தந்தையார் லெவி.

கேள்விகள்:
  1. தந்தையார் லெவியின் இரண்டாவது மகனின் இயல்பைக் கூறு?
  2. இரண்டாவது மகன் தன் பங்கைக் கேட்டபோது தந்தையார் லெவி என்ன செய்தார்?
  3. தந்தையார் லெவி காணாமற் போன தன் மகனைக் கண்டபோது, என்ன செய்தார்?
  4. மூத்த மகன் தந்தையாரிடம் ஏன் கோபம் கொண்டான்? அதற்குத் தந்தையார் லெவியின் பதில் என்ன?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன