மஹாகணபதே பஜனைக்கு தொடர்புடைய கதைகள்

Print Friendly, PDF & Email
மஹாகணபதே பஜனைக்கு தொடர்புடைய கதைகள் – பகவானின் அருளுரையிலிருந்து
முதன்மை ஸ்தானத்துக்குரிய கணபதி

ஒரு முறை கணபதி மற்றும் சுப்ரமணியனின் பெற்றோர்களாகிய பார்வதியும் பரமேஸ்வரனும் அவர்களுடைய அறிவுத்திறனை (அ) விவேகத்தை பரிசோதித்து பார்க்க விரும்பினர். அதற்காக அவர்கள் இருவரையும் அழைத்து அவர்களுள் யார் உலகத்தை முதலில் சுற்றிவருகிறார்கள் என்று அறிய அவர்களை உலகத்தை சுற்றிவரச் சொன்னார்கள். மூத்தவனான கணபதி இருக்கும் இடத்தை விட்டு அசையவே இல்லை. இளையவனான சுப்ரமணியனோ தன்னுடைய மயில் மீது அமர்ந்து உலகத்தை வலம் வரப்புறப்பட்டான். சிறந்த முயற்சிகளினால் சுப்ரமணியன் தன்னுடைய பயணத்தை முடித்து பெற்றோர்களை நெருங்கி வந்து கொண்டிருந்தான். அவனைத் தொலைவிலிருந்து பார்த்து விட்டு கணபதி உடனே தன்னுடைய பெற்றோர்களை வலம் வந்து தானே ஜெயித்ததாகத் தெரிவித்தான்.

அன்னை பார்வதி கணபதியைக் கேட்டாள், “கணபதி!, உன்னுடைய சகோதரன் உலகம் முழுவதும் சுற்றி வந்திருக்கிறான், நீயோ இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. எவ்விதமான பிரயத்தனமும் செய்யாமல் நீ எவ்வாறு உலகத்தை வலம் வந்ததாக முறையிட முடியும்? நாங்கள் எவ்வாறு உன்னை ஜெயித்தவனாகக் கருதமுடியும்?”

கணேசர் பதிலளித்தார், “அன்னையே! அண்டம் (அ) பிரபஞ்சம் முழுவதும் அணுக்கள் மற்றும் சக்தியின் கூட்டமைப்பே. அது அன்னை தந்தையின் ஐக்கியமே. நான் உங்கள் இருவரையும் வலம் வந்தது இவ்வுலகத்தை வலம் வருவதற்குச் சமம், ஏனெனில் நீங்கள் இருவருமே இப்பிரபஞ்சத்தின் தாய் தந்தை . நீங்கள் இருவரும் இல்லாத இடமே இல்லை. நான் உங்களுடைய சர்வ வியாபகத்தன்மையையே காண்கிறேன். உங்கள் இருவரையும் வலம் வந்ததன் மூலம் நான் இவ்வுலகத்தையே சுற்றிவந்ததாகக் கருதுகிறேன்.”

கணபதி இங்ஙனம் கூறியதும் ஈஸ்வரன் அவனுடைய அதிபுத்திகூர்மையை நினைத்து பிரமித்தார். அவர் தன்னுடைய தெய்வீகப்பெற்றோர்களின் உண்மையை உணர்ந்திருந்தார் . ஈஸ்வரன் கூறினார், விநாயகா! நீ அனைவருக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் ஒரு புதல்வன். இவ்வுலகம் முழுவதும் என்னை வழிபடும் முன் உன்னை முதலில் வணங்கட்டும். நான் உன் அளவு அறிவாற்றல் கொண்டவன் இல்லை. நாங்கள் உன்னுடைய பெற்றோர்கள் ஆனால் உன்னைவிட புத்திகூர்மையுடையவர்கள் அல்ல. மேலும் ஈஸ்வரன் அறிவித்தார், “என்னிடம் பல விசேஷங்கள் உண்டு, ஆனால் உன்னுடைய விவேகம் எனக்குக் கிடையாது. ஆதலால் அனைவரும் என்னைப் போற்றி வணங்கும் முன்பு உன்னையே முதலில் வழிபடுவார்களாக. இதுவே நான் உனக்கு அளிக்கும் வரம்”.

[சாய்பாபா, சனாதன சாரதி, 10/98, pp. 255-256]

விநாயகருக்கு எருக்கம்பூவும் அருகம்புல்லும் சாற்றுதல்

“மதிப்பற்ற எருக்கம்பூவைக் கொண்டு பூஜித்தால் விநாயகர் மிகவும் பிரசன்னமாவார். இந்தப் பூவை யாரேனும் உண்டால் அவருக்கு பித்துபிடிக்கும் எனக் கூறப்படுகிறது. அத்தகைய பூவையே விநாயகருக்கு நாம் சாற்றுகிறோம் . மற்றும் அருகம்புல் கொண்டும் விநாயகரை நாம்வழிபடுகிறோம்”.

[சாய்பாபா, சனாதன சாரதி, 10/95. p. 256]

அருகம்புல்லினால்விநாயகரைவழிபடுதல் குறித்தகதை

ஒரு புராணக்கதையில், சிவனும் பார்வதியும் ஒரு சமயம் சொக்கட்டான் ஆடியதாகக் கூறப்படுகிறது. எந்த ஒரு ஆட்டத்திற்கும் ஒரு நடுவர் இருந்தால் தான் வெற்றியாளரை நிர்ணயிக்க முடியும் . சிவனும் பார்வதியும் நந்தியை (தெய்வீகக்காளை) நடுவராக்கத் தீர்மானித்தனர். நந்தி சிவனுக்கு மிகவும் பிரியமானவர் ஏனெனில் நந்தி அவருடைய வாகனமாவார், சிவன் ஆட்டத்தில் தோற்ற போதிலும் நந்தி அவரே ஜெயித்ததாக அறிவித்தார் . நந்தி சிவனிடம் காட்டிய இந்த பாரபட்சத்தினால் கடுஞ்சினங்கொண்ட பார்வதி நந்தியைத் தீராப்பிணியால் மரணம் உண்டாகும் என சபித்ததாகக் கூறப்படுகிறது. உடனே நந்தி பார்வதியின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரி மன்றாடினார். “அன்னையே! என்னை மன்னியுங்கள். என் பிரபுவிற்கு நான் இந்த அளவிற்குக் கூட நன்றி காட்டுதல் கூடாதா? என் பிரபு தோற்று விட்டார் என்று அறிவித்தல் என்னை நானே இழிவுபடுத்திக் கொள்ளுதல் அன்றோ? அவருடைய பெருமையைக் காக்கவே நான் பொய் கூறினேன், அதிலேதும் சந்தேகமில்லை. அந்த சிறிய குற்றத்திற்காக என்னை இந்த அளவுகடுமையாக தண்டிக்க வேண்டுமா?” நந்தி இவ்வாறு மன்னிப்பு வேண்டி மன்றாடினார். பார்வதி நந்தியை மன்னித்து அவர் சாபத்திலிருந்து விடுபட பரிகாரத்தையும் அறிவுறுத்தினாள். அவள் கூறினாள், “பாத்ரபத மாதத்தில் வரும் சதுர்த்தியன்று என் மகனுடைய பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் நீ உனக்கு மிகவும் பிடித்ததை அவனுக்கு அர்ப்பணிப்பாயாக.” இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது ஒருவர் அவர் பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக, தான் மிகவும் விரும்புவதையும் ரசிப்பதையும் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும். நந்தி மிகவும் ரசித்து உண்ணும் உணவு அருகம்புல். ஆகவே அன்னை பார்வதியின் அறிவுரைப்படி நந்தி, கணபதியை அருகம்புல் கொண்டு வழிபட்டார். அப்போது நந்தி தன்னுடைய கொடிய நோயிலிருந்து விடுபட்டார். அவருடைய ஆரோக்கியம் தேறி அவர் அன்னை பார்வதியின் கருணையினால் இரட்சிக்கப்பட்டார்.

[சாய்பாபா, சனாதன சாரதி, 10/95, p.256]

கதை குறிக்கும் பொருள்

கயா காசி மற்றும் பிறபுண்ணிய இடங்களுக்குச் செல்லும் யாத்ரிகர்களுக்கு அவர்களுக்குப் பிடித்தமான ஏதேனும் ஒன்றை விட்டுவிடவும் அதை தெய்வத்துக்கு அர்ப்பணிக்கவும் பரிந்துரைக்கப்படுவதற்கு இந்த சம்பவமே ஆதாரம். அதாவது நாம் விடக்கூடிய ஒன்று நமக்குப் பிடித்ததாக இருக்க வேண்டுமே தவிர நமக்குப் பிடிக்காத ஒன்றை அல்ல. காய்கனி எதுவாகிலும் கடவுளுக்குக் கொடுக்கும்போது நமக்கு மிகவும் பிடித்ததாக இருக்க வேண்டும். இதன் பொருள் யாதெனில் அந்த காயையோ கனியையோ நாம் அதற்குப்பிறகு சாப்பிடுவதை விட்டுவிட வேண்டும். இந்த பழக்கமானது ஆதிகாலத்திலிருந்தே காசி பிரயாகை மற்றும் புனிதஸ்தலங்களுக்குச் சென்று கங்கா அல்லது யமுனையில் நீராடும் யாத்ரிகர்களிடையே நடைமுறையில் உள்ளது. ஹ்ருதய நிவாசி பகவான் கூறுகிறார், “நீ உனக்கு மிகவும் பிடித்ததை எனக்கு அளிக்காமல் உனக்குப் பிடிக்காததைக் கொடுக்கிறாய். ஆதலால் பகவானும் உனக்குப் பிடிக்காததையே தருகிறேன். இவ்வாறு தெளிவற்று தெய்வத்துக்கு அளிக்கும் காணிக்கைக்கு பரிசாக ஆரோக்கியத்திற்குப் பதிலாக நோய்ப்பிணியே கிட்டும். நீ நல்லதை தெய்வத்துக்குக் கொடுத்தால், தெய்வம் உனக்கு நல்லது கொடுக்காதா?”

[சாய்பாபா, சனாதன சாரதி, 10/95, p.257]

உனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றையே கணேசருக்கு காணிக்கையாக அளிக்க வேண்டும்

தெய்வத்தை பிரசன்னப்படுத்தும் பொருள்களே அவருக்கு அளிக்க வேண்டும். இதைத் தான் பார்வதி தேவி நந்தீச்வரருக்கு உபதேசம் செய்கிறாள். அவர்கூறியதாவது, “உன்னை எது மிகவும் திருப்திப்படுத்துமோ அதையே என் மகனுக்கு அளித்துத் திருப்திப்படுத்து.” விநாயக சதுர்த்தி விழாவானது இத்தகைய காணிக்கையை அளித்து விநாயகரை சந்தோஷப்படுத்தவே கொண்டாடப்படுகிறது.

[சாய்பாபா, சனாதன சாரதி, 9/97. p.238]

கணேசருக்குவிநாயக சதுர்த்தியன்று அளிக்கக் கூடியவை

நீ விநாயகருக்கு விநாயகசதுர்த்தியன்று என்ன அளிக்க வேண்டும்? இன்று மக்கள் பழங்கள் மற்றும் பலவிதமான பண்டங்களை பகவானுக்கு அளிக்க நிறைய பணம் செலவு செய்கிறார்கள். இவை அனைத்துமே ஒருசடங்கு போல செய்யப்படுகிறது. இறுதியில் அவை அனைத்தையும் மக்களே உண்கிறார்கள். இவைகளினால் ஒரு பயனும் இல்லை. இலை, பழம், பூ மற்றும் நீர் இந்தநான்கையும் கடவுளுக்கு நாம் அர்ப்பணிக்க வேண்டும். இங்கே இலை என்பது உடல் . இந்த உடலானது எந்த நிமிடமும் அழியக் கூடியது. அதனால் உடல் மேல் பற்று வைக்காதே. பதிலாகக் கடவுளுக்கு சமர்ப்பி.

பூ –எப்போதும் வாடாத ஹ்ருதயத்தைக் குறிக்கிறது.

மனம் –பழத்திற்கும்

நீர்-ஆனந்தகண்ணீருக்கும் ஒப்பாகும்.

இவை அனைத்தையும் பகவானுக்கு அர்ப்பணிக்க வேண்டும். இந்த காணிக்கையையே கடவுள் எதிர்பார்க்கிறார்.

[சாய்பாபா, சனாதன சாரதி, 10/99, p.257]

சிறப்பு நைவேத்யங்களின் முக்கியத்துவம்

கணேசருக்கு நாம் நைவேதனம் செய்யும் பண்டமும் மிகமுக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் அது வெளியில் அரிசிமாவும் உள்ளே கடலைமாவு வெல்லம் அல்லது மிளகு நிரப்பி எண்ணெய் சேர்க்காமல் ஆவியில் வைத்துத் தயாரிக்கப்படுகிறது . ஆயுர்வேத முறைப்படி இது ஒரு மிகவும் சத்தான மற்றும் சுவையான உணவு. இன்றைய மருத்துவர்கள் கூட இத்தகைய ஆவியில் செய்யும் கொழுக்கட்டையின் சிறப்பை அறிந்து அறுவை சிகிச்சைக்குப்பின் நோயாளிகளுக்கு இதையே பரிந்துரைக்கிறார்கள். ஏனெனில் அது எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய ஒரு உணவு. மற்றும் வெல்லத்திற்கு வாயுக் கோளாறைக் கட்டுபடுத்தவும் கண்தொல்லைகளிருந்து நிவாரணம் அளிக்கக்கூடிய சக்தியும் உண்டு. பண்டைய காலத்துக் கலாச்சாரப்படி இம்மாதிரியான விசேஷங்களை அனுஷ்டிக்கும் போது ஆரோக்யமான மனதோடு தேக ஆரோகியத்திற்கும் மிகமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஏனெனில் இவை ஆன்மீக முயற்சிகளுக்கு அவசியமானதான ஒன்று. மனிதவாழ்க்கையின் நான்கு குறிக்கோள்- தர்மம் (சன்மார்க்கம்), அர்த்தம் (செல்வம்), காமம் (ஆசைகள்) மற்றும் மோக்ஷம் (முக்தி) எய்த ஒருவனுக்கு ஆரோக்யமான தேகம் இருப்பது அடிப்படையான தேவை. நேர்வழியில் சம்பாதித்துச் செல்வம் ஈட்டி மோக்ஷத்திற்கான ஆசைகளை வளர்த்துக் கொள்ள உனக்கு நல்ல தேக ஆரோக்கியம் இருக்க வேண்டும்.

[சாய்பாபா, சனாதன சாரதி, 10/94, p.265]

எண்ணெயற்ற பதார்த்தங்கள் எளிதில் ஜீரணம் ஆகக்கூடியவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. சளி , பித்தம் மற்றும் வாயுகோளாறு ஆகியவற்றின் கெட்டவிளைவுகளைத் தடுக்கக்கூடிய சக்தி எள்ளுக்கு உண்டு. வெல்லம் சேர்ப்பதினால் கண்பார்வை சீராக உதவுகிறது. இந்தத் தயாரிப்புகள் அனைத்தும் உடல்நலத்தைப் பெருக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளதேயல்லாது தெய்வத்தைச சாந்தப்படுத்த அல்ல. இப்பண்டங்களிளிருந்து கிடைக்கும் சக்தி ஆயுளைக் கூட்டுவதற்கு உகந்தது.

[சாய்பாபா, சனாதன சாரதி, 10/98. p.255]
[http://www.ssso.net/ganesh/gan1.htm]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: