மஹாத்மா காந்தி

Print Friendly, PDF & Email
மஹாத்மா காந்தி

வம்சம்

மோகன்தாஸ் கரம்சந்த்காந்தி 1869 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 2ஆம் தேதி, போர்பந்தரில் பிறந்தார். மோகனின் தந்தையார், கரம்சந்த்காந்தி, காபாகாந்தி என்ற பெயரில் பிரபலமாக அறியப்பட்டார். அவரது தாயார் புத்லிபாய் அம்மையார். அவரது தந்தையார், முதலில் போர்பந்தர் சமஸ்தானத்து திவானாகவும், பின்னர் ராஜ்கோட் சமஸ்தானத்தில் திவானாகவும் இருந்தார்.

கல்வி

மோகன்தாஸ் தொடக்கக்கல்வியை போர்பந்தரிலும்,ஆரம்பக் கல்வியை ராஜ்கோட்டிலும் முடித்து, மெட்ரிகுலேஷனை உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். பின்னர், பாவ்நகரில் உள்ள, சமால்தாஸ் கல்லூரியில் சேர்ந்தார், இதனிடையே அவரது தந்தையார் 1885 இல் காலமானார். தனது தந்தையார் வகித்து வந்த திவான் பதவியை ஏற்கவிரும்பினால், காந்தி இங்கிலாந்து சென்று மூன்று வருட பாரிஸ்டர் பட்டப்படிப்பை முடித்துவருதல் நலமாக இருக்கும் என்று, குடும்பநண்பர் ஒருவர் ஆலோசனை கூறினார். இந்த யோசனை, காந்தியை துள்ளிக்குதிக்க வைத்தது. இப்போது அன்னை புத்லிபாய் மோகனிடம் மூன்று வாக்குறுதிகள் கேட்டார். அவையாவன: மாமிசம் சாப்பிடுவதில்லை, மது அருந்துவதில்லை மற்றும் ஒழுக்கக்கேடான வாழ்க்கையை நடத்துவதில்லை.

காந்தி இவற்றை ஏற்றார். இங்கிலாந்துக்கு கப்பல் ஏறினார். சட்டப்படிப்பை முடித்து தாயகம் திரும்பினார்.

இளமைக்கால வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
  • ஒருமுறை சிரவணகுமாரன் கதையைப் படித்தார். அதில் சிரவணகுமாரன் தன் வயதான, கண் தெரியாத பெற்றோரை மூங்கில் கூடையில் வைத்து மூங்கில்கழியில் தொங்கவிட்டு சுமந்து செல்வார்.இதைப்படித்த மோகன், வயதான பெற்றோரிடம் அவனுக்கிருந்த பக்தியால் ஈர்க்கப்பட்டார். தானும் சிரவணகுமாரனைப் போல் பெற்றோருக்கு சேவை செய்யவேண்டும் என்று உறுதி பூண்டார்.
  • ஒருமுறை ராஜா அரிச்சந்திரனின் வாழ்க்கை சரிதத்தைக் குறித்த நாடகத்தைக் கண்டார். வாய்மையைக் காப்பாற்றும் பொருட்டு, ராஜாஅரிச்சந்திரன், தன்நாட்டையும் விட்டுக்கொடுத்து, அனைத்து விதமான துன்பங்களுக்கும் ஆளாக வேண்டியிருந்ததைக் கண்டார். மோகனிடம் இந்தநாடகம், ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி, அவனை கண்ணீரில் ஆழ்த்தியது. ஒருபோதும் சத்தியத்தின் பாதையிலிருந்து பிறழக்கூடாது. எப்போதும் அரிச்சந்திரனைப்போல் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கவேண்டும் என்று தீர்மானித்தார்.
  • காந்தியின் அன்னை புத்லிபாய்,”கோகிலாவிரதம்” என்னும் ஒரு நோன்பை மேற்கொண்டிருந்தாள். சடங்குகள் பூர்த்தியான பின்னர், உணவு உண்ணும் முன் குயிலின் குரலோசைக்காகக் காத்திருப்பாள். குயில்தன் இனிய குரலில் கூவுவதைக் கேட்காதவரை உணவைத் தொடமாட்டாள். ஒருநாள், நெடுநேரம் ஜன்னலருகிலேயே குயிலின் ஓசைக்காகக் காத்திருந்தாள். ஆனால், அந்தோ! அவள் எதையும் பார்க்கக்கூடவில்லை. சிறுவன் காந்தி, ஜன்னலருகே, துன்பத்துடன் இருந்த தாயை கவனித்தான். உடனே அவன் தலையில் ஒருதிட்டம் உருவானது. வீட்டின் வெளியே வந்தான், குயிலின் ஓசையைப் போல் குரல்கொடுத்தான், பின்னர், வீட்டிற்குள் ஓடிவந்து தாயிடம் கூறினான்,” அம்மா, நீங்கள் இப்போது சாப்பிடலாம், அது குரல் கொடுத்துவிட்டது”. காந்தியின் தாயார், நீண்ட நெடுங்காலமாக இந்த சடங்கை அனுசரித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு உடனே தன் மகனின் சிறுபிள்ளைத்தனமான செயல் தெரிந்துவிட்டது. தன் துயரத்தைத் தாங்கவியலாமல், காந்தியை அறைந்தாள், பின்னர்,  “இறைவா! நான் என்ன பாவம் செய்தேனோ, இது போன்ற ஒரு பொய்யன் எனக்கு மகனாகப் பிறந்திருக்கிறானே” என்று புலம்பினாள். அவளது கலங்கிய கண்களும், உடைந்த இதயமும், காந்தியை நெகிழவைத்தது. அன்றைய தினம் தன் தாய்க்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்தார், “இன்றிலிருந்து, நான் பொய் பேசமாட்டேன். எனது தாயின் மென்மையான இதயத்தை வருத்தும் எந்த செயலையும் செய்யமாட்டேன்.” இவ்வாறு தொடங்கியது சத்தியத்தின் சகாப்தம்.
  • தனது பிள்ளைப்பருவத்தில், இளம்காந்தி மிகுந்த பயந்த சுபாவம் கொண்டவர். தனது சொந்த வீட்டில்கூட, இருட்டில் வெளியே வரமாட்டார். அவர், பேய், திருடர்கள், பாம்பு இவற்றைக் கண்டு அஞ்சினார். ரம்பா என்னும் அவர்கள் வீட்டு வேலைக்காரப் பெண்மணி ஒருமுறை, “மோகன், எதற்காக இவ்வளவு பயப்படுகிறாய். ராமரை நினைத்துக்கொள். ராமர் எப்போதும் உன்னைக் காப்பார். ராமரை நினப்பவரை பயம் எப்போதும் பீடிக்காது.” என்று கூறினாள். மோகன், இந்த வார்த்தைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டார். ராமநாமம் ஜபிப்பதை வழக்கமாகக் கொண்டார்.
  • ராஜ்கோட்டில் தங்கியிருந்த காலத்தில், அவரது பார்ஸி மற்றும் முகம்மதிய நண்பர்கள், அடிக்கடி அவர் இல்லத்திற்கு விஜயம் செய்து தங்கள் மதத்திலிருக்கும் நல்ல விஷயங்களைப் பற்றி விவாதிப்பார்கள். இந்த விவாதங்கள், அவரிடம் அனைத்து மதங்களிடமும் அன்பை ஏற்படுத்தியது ஒருசமயம்.
  • பள்ளி ஆய்வாளர் பள்ளிக்கு விஜயம் செய்தார். மாணவர்களை சோதிக்க விரும்பிய அவர், சில ஆங்கில வார்த்தைகளைக் கூறி (டிக்டேஷன்) எழுதச் சொன்னார். மோகனால் அதில் ஒருவார்த்தையை உச்சரிக்க இயலவில்லை. அவனது ஆசிரியர், பக்கத்திலிருக்கும் மாணவனைப் பார்த்து எழுதும்படி மெதுவாகக் கூறினார். ஆனால், மோகன், யாரையும் ஏமாற்ற விரும்பாத காரணத்தால், அவ்வாறு செய்யவில்லை. விளைவு என்னவெனில், மோகனைத் தவிர, அனைத்து மாணவர்களும் சரியாக எழுதியிருந்தனர். ஆசிரியர், வகுப்பு முடிந்ததும் மோகனைத் திட்டினார். மோகன் வருத்தப்பட்டாலும், உள்ளுக்குள்ளே, தான் செய்தது சரியே என்று அவருக்குத் தெரியும்.
  • அவருடைய நண்பர்களில் ஒருவர், அவரிடம், ஆங்கிலேயர் இந்தியாவை ஆளமுடியும். ஏனெனில், அவர்கள் மாமிசம் உண்கின்றனர். அது அவர்களுக்குத் தேவையான சக்தியைத் தருகிறது என்று அவரை சமாதானம் செய்தார். எனவே, சைவ உணவுப்பழக்கம் உடைய குடும்பத்தில் தோன்றிய மோகன்தாஸ் திருட்டுத்தனமாக மாமிசத்தை ருசிபார்த்தார். அதுவும் தேசபக்தியின் காரணமாகவே தான். ஆனால், ஒருதுண்டு உண்டவுடனேயே, வயிற்றுக்குள் ஒரு உயிருள்ள ஆடு கத்துவதுபோல் உணர்ந்தார். மேலும் பொய்யுரைப்பதும் பெற்றோரை ஏமாற்றுவதும், பிடிக்காததால், திரும்பவும் மாமிசத்தைத் தொடுவதை நிறுத்தினார்.
தேசத்திற்காற்றிய தொண்டு
சம்பாரன் மற்றும் கேதாசத்யாகிரகங்கள்

காந்தியடிகள், ஏழை விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, சம்பாரன் ஜில்லாவிற்கு செல்ல வேண்டியிருந்தது. அவர்களது நிலத்தில் பதினைந்து சதவிகிதம், அவுரி நீலம் பயிரிடப்பட வேண்டும் எனவும், அதனை முழுமையாக அவர்களுக்கு வாடகைக்கு வழங்க வேண்டுமெனவும் ஆங்கிலேயர் வற்புறுத்தினர். மேலும் அடக்குமுறையாக, வரியும் விதித்தனர். அந்த நேரத்தில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கேதா என்னும் இடத்திலும் இதேபோன்ற நிலைமை இருந்தது. காந்திஜி, பள்ளிகள் கட்டுதல், கிராமசுகாதார ஆஸ்பத்திரி கட்டுதல், சமூக அநீதிகளைக் கண்டிக்க, கிராமத்தலைவரை ஊக்குவித்தல், போன்ற சீரமைப்புகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். காந்திஜி, அமைதியற்ற நிலையை உருவாக்குவதாக குற்றம்சாட்டி பிரிட்டிஷார், அவரைக்கைது செய்தனர். எனினும், நூற்றுக்கணக்கானோர் பேரணியாகத் திரண்டு,  காவல்நிலையத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அவரது விடுதலையைக் கோரினர். நீதிமன்றமும் விருப்பமின்றி அனுமதித்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, மக்கள் அவரைபாபு (தந்தை) என்றழைத்தனர்.

ஒத்துழையாமை இயக்கம்

நாடுமுழுவதும் நடக்கும் அகிம்சைமுறையிலான போராட்டங்களின் வரிசையில், முதலாவதானது,  காந்தியால் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஒத்துழையாமை இயக்கமே. இந்தியாவில் இந்த இயக்கம் காந்திய சகாப்தத்தில் அதிகாரப் பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு, கல்வி நிலையங்கள் புறக்கணிக்கப்பட்டன. அந்நிய தேசத்துப்பொருட்கள் புறக்கணிக்கப்பட்டன. அரசு நிறுவனங்களில்,  மக்கள் தங்களுக்கு நியமனம் செய்யப்பட்டப் பதவிகளைத் துறந்தனர்.

சட்டமறுப்பு இயக்கம்

காந்தி மீண்டும், மற்றுமொரு அகிம்சை வழிப்போராட்டத்தைக் கையில் எடுத்தார். அதுவே சட்டமறுப்பு இயக்கம். இதன் குறிக்கோள் என்னவெனில், ஆங்கிலேய அரசாங்கத்திற்கு அளித்துவரும் அனைத்து ஆதரவையும் விலக்கிக்கொண்டு, நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைப்பதேயாகும். நிலவருவாய், உப்புவரி எதிர்ப்பு, ராணுவ செலவினத்தைக் குறைத்தல், அந்நியநாட்டுத் துணிகளின் மீது வரிவிதித்தல் ஆகியவற்றினை எதிர்த்தனர்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

வெள்ளையனே வெளியேறு இயக்கம், மஹாத்மாகாந்தியின் தலைமையில், 1942-ஆம் வருடம் ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்டது. இதன் முக்கியகுறிக்கோள், ஆங்கிலேயரை, இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு ஈடுபடச்செய்தலேயாகும்.  இது உடனடியான இந்திய சுதந்திரத்திற்கான அறைகூவலாகும். “செய் அல்லது செத்துமடி” என்னும் கோஷம் எழுப்பப்பட்டது. எனினும், காந்தி உரைநிகழ்த்திய பின் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். தளர்ச்சியுறும் தன் உடல்நிலையையும் கருத்தில் கொள்ளாது,தலைவர்களின் விடுதலையைக்கோரி, காந்திஜி 21 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். பிரிட்டிஷார், அவர்களை விடுதலை செய்ய வேண்டியதாயிற்று.

இந்திய விடுதலை

வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்குப் பின்னர் சுதந்திரப்போராட்டம் மேலும் தீவிரமடைந்தது, உணர்ச்சி பூர்வமானது இந்தியா முழுவதும் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் ஒன்றிணைந்தது. பூர்ணஸ்வராஜ்யம் அதாவது,முழுமையான சுதந்திரம் என்பதற்கான கூக்குரல் எழுந்தது. பலதியாகங்கள், மற்றும் முயற்சிகளால், இந்தியா 1947 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் நாள் சுதந்திரம் அடைந்தது.

தேசப்பிதா

மஹாத்மா காந்தி தேசப்பிதா என்று மதிக்கப்பட்டார். சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனத்தை வடிவமைக்கும் முன்பே தேசப்பிதா என்னும் பட்டம் அவருக்கு சூட்டப்பட்டது. அன்னை கஸ்தூர்பாவின் இறப்பின்போது, வருத்தம் தெரிவிக்கும் செய்தியில்,நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான் முதலில் அவரை அவ்வாறு அழைத்தார்.

மஹாத்மா காந்தியின் ஆன்மீகம்
  • மஹாத்மா காந்தி, மதம்,ஆன்மீகம், நல்லொழுக்கம்….  ஏன் வாழ்க்கைச் செயல்பாடுகள் அனைத்தையுமே, அவை, சொந்தவாழ்க்கையிலோ அல்லது பொது வாழ்க்கையிலோ- அவற்றை ஒருங்கிணைத்து ஆத்மவிசாரம் மேற்கொண்டார். தனது சுயசரிதையின் முன்னுரையில் அவர் கூறினார் நான் என்ன அடையவேண்டும் என்று விரும்பினேன், 30 ஆண்டுகளாக, எதனை அடைய பாடுபட்டேன், என்றால் அது “தன்னையுணர்தல், இறைவனைக் கண்ணெதிரே காணுதல், மோட்சநிலையை அடைதல் ஆகும்”.
  • காந்தியைப்பற்றி ஐன்ஸ்டீன் கூறினார் “நூற்றாண்டுகளுக்குப் பின்னர்,மக்கள்,இதுபோன்ற ஒருமனிதன் உயிருடன் பூமியில் உலாவினார் என்பதை மக்கள் நம்புவதே கடினம்”
  • காந்தி மிகுந்த உயர்ந்த ஒழுக்கம் கொண்டவர்.முக்கியமாக, காலம், பணம் மற்றும் காகிதம் இவற்றை வீண்விரையம் செய்தலுக்கு எதிரானவர். காகிதத்தைப் பொறுத்தவரையில், சிறிய துண்டுக் காகிதங்களைக்கூட குறிப்புகள் எழுத பத்திரப்படுத்தி வைப்பார். பணம் சம்பந்தப்பட்ட வரையில், எப்போதும் புகைவண்டியில் மூன்றாம் வகுப்பிலேயே பிரயாணம் செய்வார்.  நேரம் குறித்து அவரது இயல்பு என்னவெனில், ஒரு புகழ்பெற்ற பாக்கெட் கடிகாரம் அவரது இடுப்பில் தொங்கிக்கொண்டிருக்கும், அதனை அடிக்கடி பார்ப்பதால், நேரவிரயத்தைத் தவிர்ப்பார்.
  • காந்தியின் ஆடை அமைப்பு, இந்தியாவின் மிகவும் நலிந்தவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய விதத்தில், வீட்டில் நெய்யப்பட்ட கதராடையாக இருந்தது.
  • வாரத்தில் ஒருநாள் மௌனவிரதம் காத்தார். வாரத்தில் ஒருநாள், பேச்சைத் தவிர்ப்பதால் ஆழ்மன அமைதியும், செவிமடுக்கும் திறன் மேம்படுவதாகவும் நம்பினார்.
  • பகவத்கீதையில், கிருஷ்ணன், மனிதன் உடலைத் துறக்கும்போது இறைநாமத்தை உச்சரித்துக் கொண்டே துறக்கவேண்டும் என்று கூறுகிறார். அதைத்தான் காந்தி செய்தார். “ஹேராம்” என்று இரண்டு முறை கூறிக்கொண்டே கீழே விழுந்தார்.  நாமஸ்மரணையில் அவரது பற்றை வலியுறுத்தும் விதத்தில், காந்தி ஒருமுறை கூறினார் என் மூச்சு நிற்கலாம், ஆனால், எனது உச்சாடனம் நிற்காது.
  • ஸ்வாமி எப்போதும் கூறுவார் தலைவனைப் பின்பற்று, உனது மனசாட்சியே உனது தலைவர். அதைத்தான் காந்தி எப்போதும் செய்துக் கொண்டிருந்தார். ஒரு உதாரணம். இருபதாம் நூற்றாண்டின், முற்பட்ட முப்பதுகளில், புகழ்பெற்ற,சத்யாகிரகம், அதாவது,ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி ஆரம்பித்தார். முழுமையும் அது ஒரு அகிம்சை போராட்டம் எனவே கருதினார். ஆனால் ஆரம்பித்த சில நாட்களிலேயே சுதந்திரபோராட்டத்தில் பங்குபெற்ற சில தீவிரவாதிகள், சவுரிசவுரா என்னும் இடத்தில் காவல் நிலையத்தை தாக்கினர். தீ வைத்தனர், பல போலீஸ்காரர்களை உயிரோடு கொளுத்தினர். காந்தி இந்த நிகழ்ச்சியல் நிலைகுலைந்தார். அவர் உடனே, போராட்டத்தை வாபஸ் பெற்றார். சுயபரிகாரம் மேற்கொள்ள உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதனை அவர் அடிக்கடி செய்வது வழக்கம். இந்த போராட்டத்தை அறிவித்ததன் காரணமாக, தான் ஒரு இமாலயத்தவறு செய்துவிட்டதாக அறிவித்தார்.
  • குறிப்பிடத்தக்கது என்னவென்றால், காந்தியின் அரசியல் போராட்டம், அவரது ஆன்மீகப்பயணமாக அவருக்கு அமைந்தது. இங்கு சில உதாரணங்கள். ஒரு சமயம் பிரிட்டிஷாரால் தண்டனையாக விதிக்கப்பட்டு, மக்களுக்கு மிகவும் கஷ்டம் கொடுத்த உப்புவரியை எதிர்த்துப் போராட காந்தி தீர்மானித்தார். உப்பு சத்தியாகிரகம் என்று அறியப்பட்ட போராட்டத்தை துவக்கினார். மக்களை கடற்கரை நோக்கிச்சென்று, கடல்நீரை சேகரித்து,அதனை ஆவியாகச் செய்து உப்பு தயாரிக்கக் கோரினார்.இதுவே எதிர்ப்பின் அடையாளம், மேலும் இறைவனின் கொடைகடல். தண்டிக்கும் விதத்தில் வரிகளைப் போட்டு, செல்வம் குவிப்பதற்கு மனிதனுக்கு உரிமை கிடையாது என்று முழங்கினார். எனவே, கடலை நோக்கிய எதிர்ப்புப்பேரணிகள், இந்தியாவின் நீண்டகடற்கரை முழுவதும் ஒரு குறிப்பிட்ட தினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. காந்தியடிகள் தானே குஜராத்திலுள்ள தண்டி என்னும் இடத்தில் நடந்த அத்தகைய ஒரு பேரணிக்கு தலைமை தாங்கினார்.  .இந்த நிக்ழ்ச்சியே தண்டியாத்திரை என்று அறியப்பட்டது.
  • தண்டியாத்திரையின் ஆரம்பத்தில் காந்திஜி, பேரணியில் பங்கேற்றவர்களுக்கு உரையாற்றினார். அதன் நோக்கத்தைப் பற்றியும், வழிமுறைகளைப் பற்றியும் குறிப்பாக உணர்த்தினார். இக்காலத்தில், நிறையபேர், ஒரு நற்காரியத்தை காரணம் காட்டி. முறையற்ற, ஒழுங்கற்ற நடவடிக்கைகளை, செயல்களை நியாயப்படுத்துகின்றனர். காந்திஜி, குறிக்கோளைப் போலவே, வழிமுறைகளும் சரியாக இருத்தல் முக்கியம் என்பதில் கறாராக இருந்தார். இதை வலியுறுத்தும் விதமாக, பகவத்கீதை ஸ்லோகத்தை மேற்கோள் காட்டினார். கிருஷ்ணனின் தூய்மையான குறிக்கோளையும், அர்ஜுனனின் புனிதமான வழிகளையும் ஒப்பிட்டார். காந்தியடிகள், கீதையின் வாக்கியமான, கிருஷ்ணனும், அர்ஜுனனும் எங்கேயோ அங்கே வெற்றி நிச்சயம் என்பதை விளம்பினார். நடைமுறையில், இதன் பொருள் என்னவென்றால், குறிக்கோள் மட்டும் நல்லதாக இருந்தால் போதாது, வழிமுறையும் அங்கனமே இருக்கவேண்டும் என்பதேயாம்.
  • 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் நாள் பாகிஸ்தான் உதயமானது. மறுநாள் இந்தியாவுக்கு ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை கிடைத்தது.இந்த வரலாற்று சிறப்பு தினத்திற்கு முன்னரே, வடஇந்தியாவில் வன்முறை வெடித்தது. அதன் பின்னரும் சிலகாலத்திற்கு தொடர்ந்தது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி, இந்தியா முழுவதும், மக்கள் தாங்கள் நூறாண்டுகாலம் எதிர்பார்த்திருந்த தருணத்தை கோலாகலத்துடன் கொண்டாடினர். ஆனால் காந்தி இந்தக்கொண்டாட்டம் எதிலும் பங்கேற்கவில்லை. வங்காளத்தின் புறநகர் நவகாளி பகுதியில், வன்முறை வெறியாட்டம் நடந்துக்கொண்டிருக்கும் இடத்தில் இருந்தார். எழுபது வயதைக் கடந்திருந்த காந்தி, அப்போது கிராமம், கிராமமாக, மக்களை சமாதானப்படுத்த நடந்துக் கொண்டிருந்தார்.
  • பகவத்கீதையை எவ்வாறு அரசியலிலும் நடைமுறைப்படுத்த முடியும் என்று காந்தி காண்பித்தார். கீதை எவரையும் வெறுக்கக்கூடாது என்கிறது. இறைவனின் ஆணையை தவறாது பின்பற்றினார் காந்தி. அவரது யுத்தம், பிரிட்டிஷாரின் எதேச்சதிகாரத்தை எதிர்த்துத்தானே ஒழிய, பிரிட்டிஷாரை எதிர்த்து அல்ல என்று கூறுவார். இவ்வாறே, வட்டமேசை மானாட்டிற்காக இங்கிலாந்து சென்றபோது, நூற்பாலை தொழிலாளர்களை சந்தித்து உரையாற்ற லன்காஷையருக்கு சிறப்புப்பயணம் மேற்கொண்டார். என்ன காரணம்? இந்த விஜயத்திற்கு பின்னால் ஒரு சுவாரசியமான கதை உள்ளது.
  • ஒரு சராசரி இந்தியனின் உடை வேட்டி என்பது அனைவருக்கும் தெரியும். பண்டைக்காலத்தில், வேட்டி, இந்தியாவில், இந்தியர்களால், கிராமத்தில் தயாரிக்கப்பட்ட நூலைக்கொண்டு தயாரிக்கப்பட்டது. பிரிட்டிஷார், இந்தியாவை ஆளத்தொடங்கியவுடன், வேட்டிக்கு பெரியசந்தை இங்கிருப்பதைக் கண்டனர். இவ்வாறு இந்தியாவில் விற்கும் பொருட்டு, வேட்டிகள் தயாரிக்க நிறைய ஆலைகள் லங்காஷையரில் முளைத்தன. நேர்த்தியானதரம், போராட்டமான சந்தை. உண்மையைச் சொல்லப்போனால்,ஆயிரக்கனக்கானோர் வாழ்வாதாரம் இழந்தனர். காந்தி சுதேசி இயக்கத்தைத் தொடங்கி,மக்களை உள்நாட்டு தயாரிப்பான வேட்டிகளை மட்டுமே வாங்க அழுத்தம் கொடுக்கும் வரை இந்த நிலை. இப்போது,இந்தநேர்வு, பிரிட்டிஷ் ஆலைகளைத் தாக்கியது. வியாபாரம் படுத்ததால், லங்காஷையர் ஆலைத்தொழிலாளிகள் வேலை இழந்தனர், காந்தியை வெறுக்கத் தொடங்கினர். ஆகவேதான், அங்குசென்று, ஆலைத் தொழிலாளிகளைச் சந்தித்து, விளக்கியதும்,அவர்கள் புரிந்துக்கொண்டு, தங்களை காந்தி வெறுக்கவில்லை, வெறுப்பதற்கு சொந்தக்காரணம் எதுவுமில்லை என்பதை உணர்ந்தனர்.
  • இயற்கையாகவே, காந்தியிடம், அறிஞர்களுக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. சிலநேரம் அவருடைய கருத்துகளுக்கு ஒத்துபோகாவிட்டாலும் கூட உதாரணமாக, காந்தியடிகள் ஒருமுறை தேசத்துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதியாக ஆங்கிலேய நீதிபதி முன் நிறுத்தப்பட்டார். அந்த நீதிபதி தன்னிச்சையாக நாற்காலியை விட்டு எழுந்து நின்றார். கைதிமுன்!
  • காந்தி மஹாத்மாவாக பிறக்கவில்லை. ஆயினும் ஒருநாள், சத்தியத்தைக் கைக்கொண்டு ஒழுகத் தீர்மானித்தார். அதுவே திருப்புமுனை. அதனால்தான் தன்னுடைய சுயசரிதைக்கு சத்தியசோதனை என்று பெயரிட்டார். ரவீந்திரநாத்டாகூர் மஹாத்மா என்னும் பட்டத்தை 1920 ஆம் ஆண்டு காந்தியடிகளுக்கு சூட்டினார்.
  • மஹாத்மா காந்தியின் வார்த்தைகளில்- “என்னை சந்தேகங்கள் துளைக்கும்போது,  என்னை ஏமாற்றங்கள் சூழும்போது, எந்த நம்பிக்கை ஒளிக்கீற்றையும் நான் காணவியலாதபோது, நான் பகவத்கீதையின் பக்கம் திரும்புவேன். என்னை சமாதானப்படுத்தக்கூடிய பாடல் வரிகளைக் காண்பேன். தாளமுடியாத துயரின் இடையே நான் புன்னகைக்க ஆரம்பிப்பேன். என் வாழ்க்கை முழுவதும் துயரால் நிறைந்தது. அவை என்னிடம் வெளியே தெரியக்கூடிய, அழியாத வடுக்களை உண்டாக்கவில்லையெனில், அதற்குக் காரணமான. பகவத்கீதையின் போதனைகளுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.
குருமார்களுக்கு மேலும் படிக்க:
  • சத்தியசோதனை-மஹாத்மா காந்தியின் சுயசரிதை

(இந்த கட்டுரை பலவேறு புத்தகங்களிலிருந்தும், தொகுப்புகளிலிருந்தும், ரேடியோ சாய் பகுதியிலிருந்தும் தொகுக்கப்பட்டது)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: