எண்ணம் பராமரித்தல்

Print Friendly, PDF & Email
எண்ணம்

எண்ணம் என்பது ஒரு சக்திப்பொறி என்கிறார் பாபா. ‘சக்தி’ என்பது பணிபுரியும் திறன் என்பதே! சாதாரணமாக நாம் குழந்தைகளுக்குக் கூறும் அர்த்தம், சக்தியின் விளைவால் உதிக்கும் எண்ணங்கள் ஒன்று கூடி ஒரு ‘ஆசை’யை அல்லது விருப்பத்தை உருவாக்குகின்றன.

இப்படி உருவாகும் ஆசைகளின் கூட்டமைப்பே ‘மனது’. இதற்குப் பகவான் கூறும் உதாரணம் ஒரு கைக்குட்டையே. இதுபஞ்சினால் ஆன நூற்களைக்கொண்டு நெய்ததனால் உருவாக்கப்பட்டது. எண்ணங்களே – பஞ்சு எனவும்,இதிலிருந்து நூற்கப்பட்ட நூலிழையே – ஆசைகளெனவும்,நூற்களால்நெசவு செய்யப்பட்டதே கைக்குட்டைத்துணி – அதுவே மனது எனவும் கொள்ளலாம். மூளை பௌதிகமாக இருக்கும் பொருள். ஆனால் ‘மனது’ அப்படியல்ல, அது எங்கே இருக்கிறது என்று கூற முடியாது. நீங்கள் இங்கு இருக்கும் போதே உங்கள் மனது பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள ஒன்றை அல்லது தொலைக்காட்சியில்பார்த்த நிகழ்ச்சியைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கும். மனது நமது உடலுக்குள்ளே இருக்கும்படியாக அதைக்கட்டுப்படுத்தல் வேண்டும். நாமே எஜமானராகவும் மனதை நாம் சொல்படி கேட்கும்படியும் செய்தல் வேண்டும். ஒரு கைக்குட்டை வெளுப்பாக இருக்க வேண்டுமானால், நீங்கள் நூலையோ மற்றும் நெசவு செய்தபின் துணியையோ வெள்ளையாக மாற்ற முடியாது. பஞ்சின்வெண்மைதான் அடிப்படையாகும். ஆகவே அடிப்படையான எண்ணங்களை அடக்கினால் மனது தானே அடங்கிவிடும்.

பாபா கூறும் மற்றொரு உதாரணம் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். நான் பேசுவதை நீங்கள் கேட்பதும் என்னைப் பார்ப்பதும் எதனால் சாத்தியமாகிறது? ஒலியின் வேகம் ஒரு வினாடிக்கு 1120 அடி என்ற விகிதத்தில் இருப்பதால் ஒலியைக் கேட்கிறீர்கள். அதேபோல் ஒளியின் வேகம் 1 நொடிக்கு 1,86,000மைல்கள் ஆகும். இதன்படி, சூரியனிடமிருந்து கிளம்பும் ஒளி நம்மை வந்தடைய 9 நிமிடங்கள் ஆகின்றன. இந்த ஒளியின் வேகத்தினால்தான் நீங்கள் பார்க்க முடிகிறது. இப்போது நீங்கள் கண்களை மூடிக்கொண்டு சூரியனைப் பற்றி நினைத்துப் பாருங்கள். ஒரு நொடியில் இது சாத்தியமாகிவிடுகிறது. ஆகவே நினைவு அதாவது எண்ணத்தின் வேகம் ஒளியின் வேகத்தைவிட மிக அதிகமானது என்று விளங்குகிறதல்லவா? (இதையே வாயுவேகம் மனோவேகம் என்று குறிப்பிடுவர்).

மற்றொன்று கவனிக்க வேண்டியது என்னவென்றால்,சாலையில் வெகுவேகமாகச் செல்லும்போது ஒரு வாகனத்தின் ‘பிரேக்’ பிடிக்காவிட்டால் ஜெமினிசந்திப்பு போன்ற ஒன்றுக் கொன்றுநெருக்கமாகப் பல வாகனங்கள் போய்க் கொண்டிருக்குமிடத்தில் என்னவாகும்? பெரிய விபத்து ஏற்படும். அதேபோல் மனது கட்டுக்குள் இல்லாமல் எண்ணங்கள் தடையின்றி வெகுவேகமாக ஓடிக்கொண்டிருக்கையில் விபரீத விளைவுகள் ஏற்படுகின்றன.இவையே மனிதர்களைப் பயங்கரவாதிகளாக உருவாக்கிவிடுகின்றன. மனக்குழப்பமடைந்து கண்மூடித்தனமாக பயங்கர
நடவடிக்கைகளில் துணிந்து இறங்கி விடுகின்றனர். இதுவெகுகாலமாக மனிதனின் அறிவில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒருபிரச்னையே, மகாபாரதத்திலேயே யட்சப் பிரச்னத்தில் தர்மருக்குக் கேட்கப்பட்ட கேள்விகளில் காற்றைவிட வேகமாகப் போகும்சக்தி படைத்தது எது? என்ற கேள்விக்கு மனிதனின் ‘மனதே’ என்று தருமர் கூறுகிறார். ‘உலகில் உள்ள புற்களின் எண்ணிக்கையைவிட அதிகமானது எது’, என்ற கேள்விக்கு, ஒரு மனிதனின் மனதில் தோன்றும் எண்ணங்களே என்கிறார் தருமர். இதுவே உண்மை. ஆகவே முதலில் இந்த மனதைக் கட்டுப்படுத்தும் முயற்சி அவசியமானது. இதற்கு ஒரு முனைப்பாட்டுடன் ஒரே பொருளை உற்றுநோக்கித் தியானம் செய்தல் ஒரு வழிமுறை (Concentration)

பகவானின் மற்றொரு அரிய உதாரணம்: ஒரு காகிதத்தைச்சூரிய ஒளியில் காட்டினால் ஒன்றும் ஆகாது. ஆனால் சூரியனுக்கும் காகிதத்துக்கும் இடையில் ஒரு குவிலென்ஸைக் (lens) காட்டினால்இதில் ஒரு முனையாகக் குவிந்து பாயும் ஒளிக்கிரணங்கள்காகிதத்தை எரிக்கும் அளவிற்குத் தீப்பொறியை உண்டாக்குகிறது.இதேபோல் நமக்கும் மனதுக்கும் இடையே Sai lens (சாயிலென்ஸ்) அதாவது Silence (மௌனம்) என்பதைக் கொணர்ந்தால் இந்த எண்ணங்களை எரித்துவிடலாம். நாம் மௌனமாக உட்கார்ந்திருக்கும் போது உண்மையில் வாயிலிருந்து சப்தம் வராமலிருக்கலாம். ஆனால் மனதிற்குள் இடைவிடாது சர்ச்சைகள் போராட்டங்கள், பேச்சுக்கள் நிகழ்ந்து கொண்டே உள்ளன. ஆகவே Silent Sitting “மௌனமாய்அமர்ந்திருத்தல்” என்ற பயிற்சியின் போது உண்மையில் மனதும் மௌனமாக வேண்டும். இதற்கு ‘ஜோதி தியானம்’ மிகச்சிறந்த சாதனமாகும், இதில் ஜோதியின் ஒளி நம்முள் பரவுகிறது. நமது எண்ணத்தின் வேகத்தை ஒளியின் வேகத்திற்குக் குறைத்துக் கொண்டால் “உள்ளுணர்வு”(intuition)என்றதொரு பிரகாசத்தைக் கொடுக்கும். இந்த அரியசாதனையை ஒவ்வொருவரும் அலுவலகம் செல்லும் முன்பு சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து சிந்தனையை வெளியே ஓடவிடாமல் உள் நோக்கிச் செலுத்திப் பாருங்கள். ஒரு கடிகாரம் 24 மணிநேரம் ஓடுவதற்கு ஒருசில வினாடிகளே ஆகும் முயற்சியாக அதை முடுக்கிவிடுவது போன்றதே இது. சில வினாடிகள் அனுபவித்த இந்த அமைதி ஒரு நாள் முழுவதும் குதூகலமாகச் செயலாற்ற உதவிபுரியும். மீண்டும் இரவில் படுக்கப்போகுமுன் ‘சுயசோதனை’ செய்ய வேண்டும். “இன்று நான் என்னென்ன தவறுகள் செய்தேன்? தர்மத்துக்கு முரண்பாடாக நடந்து கொண்டேனா? பகவானின் உபதேசத்திற்கு மாறாக நடந்தேனா?” என்று ஆராய்ந்துபார்த்து எங்கே தவறிருந்தாலும் இனி திருத்திக்கொள்வேன் என்று உறுதி எடுத்து உறங்க வேண்டும். மறுநாள் காலை மௌனமாய் அமரும்போது எந்த உறுப்பு தகாத செயல் செய்ததோ அதை நோக்கிஜோதியின் ஒளியை பாய்ச்சுங்கள்.

நாம் பிரார்த்தனை செய்துக் கொண்டு, நல்லவராக இருக்க ஆசைப்பட்டு, ஆனால் நல்லவராக இல்லயென்றால் அதாவது தன்னுடன் போரிடாமல் மனம் திறந்திருந்தால் பகவானின் அருள் இரு மடங்காகப் பெருகும் என்று பாபா கூறுகிறார். ஆகவே எண்ணத்தைப் பராமரிக்கும் பணிக்கு மௌனமாய் அமருதலும்சுய சோதனையுமே தகுந்த சாதனங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன