மனோஜவம் – மேலும் படிக்க
மனோஜவம் ஸ்துதி – மேலும் படிக்க
ஸ்துதிக்குத் தொடர்புடைய கதை
அனுமான் அஞ்சனை வாயுவுக்குப் புத்திரன், இராமனுக்குத் தூதன். அனுமான் மிகவும் சிக்கலான நேரத்தில் இராமனின் தூதனாக விளங்கியவன். அனுமான் செய்த தொண்டைப் போல், மற்ற எவராலும் செய்ய முடியாது. ஆகவே, அவனை இராமதூதன் என்று சொல்லுவார்கள். இராமரின் பணிக்குப் பல குரங்குகள் இருந்த போதும், அவருள்ளும், அனுமானை இராமர் தேர்ந்தெடுத்தது ஏனென்றால், புத்திமான்களுள்ளேயே மிகச்சிறந்த புத்திமான். அவன் புத்திமதாம் வரிஷ்டம்.
விபீஷணன், இராமனிடம் சரண் புகுந்த போது, நாம் என்ன செய்யலாம்? என்று அனுமானைத் தான் இராமர் கேட்டார்.
இலட்சுமணன் போரில் மயங்கிக் கிடந்த போது சூரிய உதயத்துக்கு முன் சஞ்சீவி மருந்தை துரோணாசல மலையிலிருந்து கொண்டுவர அனுமனைத் தான் இராமன் அனுப்பினார். ஏனென்றால், அனுமான் மனோவேகத்தில் சென்று மருந்தைக் கொண்டு வந்தார். சீதையைத் தேடவேண்டி வந்த போது, கடலை ஒரே தாவில் தாவி, இலங்கைச் சென்று சீதையைக் கண்டவர் அனுமான் தான்.
இலங்கைப் போர் முடிந்து திரும்பும் போது, சுக்ரீவன் விருந்தை இராமன் ஏற்க நேர்ந்த போது அயோத்தி செல்ல கால தாமதம் ஏற்பட்டது. அப்போது, பரதனுக்கு இவர்கள் திரும்பும் செய்தியைச் சொல்வதற்கு அனுமன் தான் அனுப்பப் பட்டார். இது மிகவும் ஆச்சரியமான காரியம். ஏனென்றால், பதினான்கு வருடம் காத்திருந்த பரதன் மேலும் ஒரே ஒரு நிமிடம் தாமதிக்க விரும்பவில்லை. அவர் அக்னியில் விழுந்து உயிர்த்தியாகம் செய்யத் தயாராக இருந்தார். இந்தக் குறுகிய கால இக்கட்டான நிலையில் அனுமன் ஒருவனே விரைந்து சென்று பரதன் உயிரைக் காக்க முடியும் என்று அனுமான் மறுபடியும் தூது அனுப்பப் பட்டார். அதை அவர் மிகவும் சரியாகச் செய்தார். இத்தகையப் பெருமை வாய்ந்த அனுமானை நாம் ஒவ்வொரு நாள் காலையிலும் வீழ்ந்து வணங்க வேண்டும்.
அனுமானின் பக்தி
பட்டாபிஷேகம் முடிந்த பிற்பாடு சீதை, இராமன், இலக்குவன், பரதன், சத்ருக்னன் ஆகிய எல்லோரும் ஒரு நாள் குழுமியிருந்தார்கள். இராமனுக்குத் தேவையான சேவைகளையும், அவற்றை செய்வதற்கான தொண்டர்கள் பெயர்களையும், ஒரு பட்டியலாகத் தயாரித்தார்கள். அதில் அனுமான் பெயரைச் சேர்க்கவில்லை.
ஏனென்றால், பலமுறை அனுமான் பல பணியைச் செய்து முடித்திருந்தார். ஆகவே பாக்கியுள்ள பணிகளைத் தம்பியர் மூவரும், பங்கிட்டுக் கொண்டாலே போதும் என்று கருதினர். ஒவ்வொரு பணியையும் நன்கு நினைத்துப் பார்த்து பட்டியலிட்டு இராமனிடம் ஒப்புதல் பெறக் காட்டினார்கள். அப்போது அனுமானும் அங்கேயிருந்தார். இராமன், அந்தப் புதிய ஏற்பாட்டைப் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்தார். அதற்குத் தன் புன்சிரிப்பின் மூலம் ஒப்புதல் அளித்தார். பிறகு இராமன், “எல்லாப் பணிகளையும் இவர்கள் பங்கிட்டுக் கொண்டு விட்டப்படியால், நீ சிறிது ஓய்வு எடுத்துக் கொள்” என்று அனுமனிடம் சொன்னார். அனுமான் பட்டியலைப் படிக்குமாறு வேண்டினார். அப்போது ஒரு பணி, விடுபட்டுப் போனதை அனுமான் கண்டார். அதாவது, இராமனையொத்த பேரரசர் கொட்டாவி விடுவார்களானால், அரசன் சொடுக்கக் கூடாது. அவரது பணியாளர்தான் சொடுக்குப் போட வேண்டும். அந்தப் பணியைத் தனக்குத் தருமாறு அனுமான் வேண்டிக் கொண்டார். இராமன் இசைவதைத் தவிர வேறு வழியில்லை.
அனுமானுக்கு இந்தக் காரியம் அதிர்ஷ்டமாகவும், அமைதியாகவும் இருந்தது. ஏனென்றால், இக்காரியத்திற்காக அரசனை விட்டு ஒரு சில நிமிடங்கள் கூடப் பிரிந்திருக்க முடியாது. கொட்டாவி எப்போது வருமென்று யாருக்குத் தெரியும்? அப்படி வரும் போது சொடுக்குக் கொடுப்பது இவர் வேலை. ஆகவே எந்த நிமிடமும் பிரியாமலிருக்க நல்வாய்ப்பு இவருக்கு வந்தது. இவ்விதம் ஒரு உண்மையான சேவகராக தெய்வத்தை விட்டுப் பிரியாது இருந்து மிகவும் விழிப்போடு பணி செய்யக் காத்திருந்தார் அனுமான். இது உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியல்லவா?