மயூரத்வஜனின் பக்தி

Print Friendly, PDF & Email
மயூரத்வஜனின் பக்தி — அர்ஜுனனின் தற்பெருமை குலைவு

ஒரு முறை அர்ஜுனன் அசுவமேதயாகம் ஒன்று இயற்றினான். அதற்காக ஒரு குதிரையை கட்டவிழ்த்து விட்டனர். அசுவமேத யாகம் செய்வதற்கான விதிகளில் அவிழ்த்து விடப் பெற்ற குதிரையை யாராவது பிடித்துக் கட்டி விட்டார்களானால் குதிரையின் உரிமையாளன் அதைக் கைபற்றியவனோடு சண்டையிட வேண்டும். அந்தச் சண்டையில் தோல்வியுற்றவன், வெற்றிப் பெற்றவனுக்குத் தன் இராஜ்ஜியத்தைத் தந்து விட வேண்டும். அங்ஙனமாக மயூரத்வஜ அரசன், அர்ஜுனனுடைய குதிரையைப் பிடித்துக் கட்டி விட்டான். அவனுக்கு அந்த குதிரையைப் பற்றிய விதிமுறைகள் நன்கு தெரிந்துதானிருந்தன. கிருஷ்ணரும், அர்ஜுனனும் குதிரையைத் தேடிச் சென்றனர் குதிரை மயூரத்வஜனால் கைப்பற்றப்பட்டிருக்கிறது என்று கண்டு கொண்டனர். இருவரும் மயூரத்வஜனோடு போரிடத் துவங்கலாமா என்றதைக் குறித்துச் சிந்தித்தனர். மயூரத்ஜவன் சாதாரண மனிதன் அல்ல என்றும், தம்முடைய சிறந்த பக்தன் என்றும், அர்ஜுனன் அவனோடு போரிடுவது என்பது எளிதான செயல் அல்ல என்றும் கிருஷ்ணர் கூறினார். யாகத்தின் ஒழுங்கு முறைகளின் படி, குதிரையைக் கட்டிப் போட்டவனோடு சண்டையிடுவதுதான் நியாயம் என்று அர்ஜுனன் வாதாடினான். அதன் பிறகு கிருஷ்ணர் இணங்கியவராய் போரிடக் கட்டளையிட்டார். மயூரத்ஜவனோடு அர்ஜுனன் பலபல வழிகளில் போரிட்டான். எனினும் தன் எதிரியைத் தோற்கடிக்க அவனால் இயலவேயில்லை. அவனுடைய தலையாய படைக்கலன் காண்டீபமும், அந்த சண்டையில் பழுதடைந்தது. அர்ஜுனன் சோர்ந்து போய் கிருஷ்ணனரை உதவிக்கு அழைத்தான். அவனுடைய வேண்டுகோளுக்கிணங்க கிருஷ்ணரும் போருக்கு ஆயத்தமானார். கிருஷ்ணருடைய தெய்வீகத்தை மயூரத்வஜன் நன்கு அறிந்திருந்த போதிலும், விதிமுறைகளின்படி நடக்க வேண்டியிருந்ததால் மயூரத்வஜன் கிருஷ்ணரோடும் யுத்தம் செய்ய நேர்ந்தது. அவன் ஒவ்வொரு அஸ்திரத்தையும், எடுத்து கிருஷ்ணரின் புனிதமான திரு நாமத்தை உச்சரித்தபடியே, செலுத்தினான். அந்த அம்புகள் உறுதியானவையாகவும், ஆற்றல் நிரம்பியும் இருந்தன. கிருஷ்ணர் அவற்றிற்கு அஞ்சி அங்கும் இங்குமாக ஓடலானார். அப்போது அர்ஜுனன், கிருஷ்ணரிடம் அவரது தெய்வீகச் சக்கரத்தை பயன்படுத்தும்படி கூறினான். ஆனால் மயூரத்வஜனை எதிர்த்தால், அவரது சக்கரமோ, அர்ஜுனனது காண்டீபமோ பயனற்றுத்தான் போகுமென கிருஷ்ணர் அறிவுறுத்தினார். அப்படியும் அர்ஜுனன் பொருட்படுத்தாது எல்லாம் வல்ல கிருஷ்ணர் வேடிக்கையாகப் பேசுகிறார். என்றும், உண்மையில் அவருக்குப் போர் புரியும் எண்ணமே இல்லையென்றும் நினைத்தான். மயூரத்வஜன் உண்மையிலேயே கிருஷ்ணரது பக்தனாக இருந்தால், கிருஷ்ணரோடேயே போர்புரிய அவன் துணிந்து முன் வருவானா என்று மேலும் எண்ணிக் குழம்பினான். அதனால் மயூரத்வஜன் சிறந்த பக்தனாக இருக்க இயலாது என்ற முடிவுக்கும் வந்தான் அவன், மயூரத்வஜன் ஓர் ஆழ்ந்த பக்தன் என்பதை அர்ஜுனனுக்கு நிரூபிக்க கிருஷ்ணர் விரும்பினார்.

அதற்காக கிருஷ்ணர், அர்ஜூனன், இருவரும் அந்தணர் போல வேடமிட்டுக் கொண்டு மயூரத்வஜனின் வீட்டிற்கு வந்தனர். அரசர்களின் பண்பாட்டின்படி தன்னுடைய வீட்டிற்கு வந்த விருந்தினரை வவேற்று உபசரித்துப் பேணுதல் ஓர் இன்றியமையாத இயல்பாகும். மயூரத்வஜன் அத்தகைய பண்பாட்டில் சிறந்து விளங்கினான்.

இரு அந்தணனர்களும் தன் வீடு நோக்கி வருவதைக் கண்ணுற்ற உடனே மயூரத்வஜன், தன் அரச உடைகளைக் களைந்து விட்டு, வேதியன் போல உடுத்திக் கொண்டு வேகமாக வெளியே வந்தான். நீர் கொண்டு வந்து விருந்தினர் இருவரது பாதங்களையும் கழுவி, தக்க, முறையில் உபசரித்தான். தன் விருந்தினராகத் தங்கியிருக்கும்படி கேட்டுக் கொண்டான். மயூரனின் பக்தியின் ஆழத்தை அர்ஜுனனுக்கு உணர்த்த விரும்பிய கிருஷ்ணர், இத்தகைய சந்தர்ப்பத்தை நீண்ட நாட்களாகவே எதிர் பார்த்திருந்தார். அதனால் மயூரன் கிருஷ்ணரையும் அர்ஜுனனையும் தன் விருந்து உபசாரத்தை ஏற்றுக்கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டபோது கிருஷ்ணர்,” உன்னுடைய விருந்துபசாரத்தை ஏற்க எங்களுக்கு நேரமில்லை. குறிப்பிட்ட ஒரு சிக்கலைத் தீர்க்க உன் உதவியை நாடியே நாங்கள் வந்திருக்கிறோம். உன் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்போது என் மகனை ஒரு புலி விழுங்கி விட்டது. இப்போது அவன் உடலில் ஒரு பாதிதான் வெளியில் இருக்கிறது. என் மகனுடைய உடல் முழுதும் புலியின் வாயிலிருந்து விடுபெற வேண்டுமானால், அரசன் மயூரத்வஜனின் உடலில் ஒரு பாதி புலிக்கு ஆகாரமாகத் தரப்படவேண்டும் என்ற ஓர் அசரீரி கூறிற்று. உன்னிடம் அந்த உதவிப் பெறவே வந்திருக்கிறோம்.,” என்று கூறினார்.

கிருஷ்ணரது சொற்களைச் செவி மடுத்தவுடன், விருந்தினருக்கு, சேவை புரிய ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. என்று மகிழ்ந்தான். மயூரன், தியாகத்தினால் தான், என்றென்றும் அழியா நிலை எய்த முடியும் என்று நன்கு அறிந்திருந்தான். எனவே தன் உடலைத் தியாகம் செய்ய முனைந்து விட்டான். இந்த மனித உடல் அவனுக்குத் தரப் பெற்றதே பிறருக்கு உதவி புரியவே என்று அவன் உறுதியாக நம்பினான். என்றாவது ஒருநாள் நிலையற்ற இந்த மனித உடல் இறந்துபட்டேயாகும் என்ற பேருண்மையையும் அவன் புரிந்து கொண்டிருந்தான். அதனால் வந்தவர்கள் இருவரும் மனம் மகிழ, தன உடலைத் தியாகம் செய்ய ஆயத்தமானான். உடனே தன மனைவியையும் மகனையும் அழைத்தான். வாள் கொண்டு தன் உடலை இரு கூறாக வெட்டும்படி கூறினான். மனைவியும் மகனும், அவன் ஏதோ ஒரு தெய்வீக பணியை முழுமை செய்யவே அங்ஙனம் வெட்டச் சொல்கிறான் என்று எண்ணி, அவனது உடலை இரண்டாகப் பிளக்க முனைந்தனர். அர்ஜுனனும் கிருஷ்ணரும் கண்கொட்டாமல் நடைபெறுவதைக் கவனித்துக் கொண்டிருந்தனர். கூர்மையாக அவர்கள் கவனித்துக் கொண்டிருந்தபோது, மயூரனின் இடக்கண் நீரைப் பொழிவதைப் பார்த்தனர். தாம் விரும்பிய வண்ணமே சூழ்நிலை முன்னேற்றமடைவதை கவனித்த கிருஷ்ணர், மேலும் சோதிக்க விரும்பி, “ கண்ணீரோடும், துயரத்தோடும் ஒருவன் பரிசளித்தால் அந்தப் பரிசுக்கு மதிப்பென்ன இருக்கிறது? எனக்கு இத்தகைய வெகுமதி தேவையில்லை. ஒரு பரிசு, மனமாற, தயக்கம் ஏதுமின்றி தர வேண்டும்,” என்றார். சலனமற்று அமைதியாக கண்களை மூடியபடி அமர்ந்திருந்த மயூரன் கண்களைத் திறந்து தன் உடலைத் தானம் செய்வதில் தனக்குத் துன்பமே ஏதும் கிடையாது என்றான், அது போன்ற துயரம் ஏதாவது தனக்கு இருந்திருந்தால் இரண்டு கண்களுமே தானே கண்ணீரைச் சிந்த வேண்டும். என்று விளக்கம் கூறி எடுத்துரைத்தான். “ஏன் ஒரே ஒரு கண் மட்டும் கண்ணீர் சிந்துகிறது என்று அவர்களையே கேட்டான்”. ஒரே ஒரு கண்ணில் மட்டும் நீர் வழிவது எதனால் என்று நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்று வேண்டினான். அந்தச் செயலில் பொதிந்திருந்த உண்மை எண்ணத்தை கிருஷ்ணர் அறியாதவரல்லர். அர்ஜுனனுக்கு மயூரனின் பக்தியை நிரூபிக்கவே அவர் அங்ஙனம் ஏதும் அறியாதவர் போல நடித்தார்..

மயூரன் கிருஷ்ணரது கூற்றுக்குப் பதிலாக, “ஐயனே! இந்த உடல் இரு கூறுகளாக இடப்பெறப் போகிறது. வலப்பக்கம் தெய்வீகப் பணிக்கு தங்களுக்கு வெகுமதியாக, தரப் போகிறது. இடப் பாகம் கழுகுகளும் காக்கைகளும் கொத்த வீணாக எறியப் பட்டுப்போகிறதே என்று தான் இடக்கண் கண்ணீர் வடிக்கிறது. புனிதமில்லாது புழுதியில் வீசப்படப் போகிறோமே என்று தான் அது கண்ணீர் சொரிகிறது என்று பணிவோடு கூறினான்.

அதைக் கேட்டவுடனே அர்ஜுனன் தன் தவறுக்கு வருந்தி, தனக்குக் கற்ப்பிக்கப்பட்ட ஒரு பாடமாக இந்த நிகழ்க்ச்சியை உணர்ந்தான். தன்னைவிட கிருஷ்ணரிடம் அடர்ந்து ஆழ்ந்த பக்தி பூண்டவர் அனேகர் உள்ளனர், என்று புரிந்து கொண்டான். உலகமே, பலவிதமான பக்தி கொண்டவர்களால் நிறைந்து உள்ளது. பக்தி என்ற கண்களோடு நாம் பார்த்தால், மயூரன் தனக்குள்ள எல்லாவற்றையுமே ஆண்டவன் திருவடிகளில் வைத்துவிட்டான். ஓர் அரசன் என்ற நோக்கொடு சரியான ஒழுங்கு விதிகளின், இயல்பின்படி பார்த்தால் மயூரன் அவற்றை முழுமையாகக் கடைப்பிடித்த ஒருவனாவான். விதிமுறைகளை நிலைநிறுத்த அவன் சண்டையிட ஆயத்தமாகவேயிருந்தான். அதனால் மயூரன் உலகியலாக இருந்தாலும், பொருட்களைப் பற்றியதாக இருந்தாலும், ஆன்மீகமாக இருந்தாலும் எந்த சூழ்நிலையிலுமே, கலங்காது செயலாற்ற ஆயத்தமாக இருந்தான் என்பது வெள்ளிடை மலைப் போலத் தெளிவாகப் புலனாகிறது அல்லவா? எத்தகைய பலபல சூழ்நிலயிலும் அவன் கடமையைச் செய்வதில் மிக்க ஆர்வமாக இருந்தான் என்பதை உலகுக்கும், அர்ஜுனனுக்கும் உணர்த்தவே கிருஷ்ணர் இந்த நிகழ்ச்சியை நிகழ்த்திக் காட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: