அராவசுவின் நற்பண்புகள்

Print Friendly, PDF & Email
அராவசுவின் நற்பண்புகள்

“உபாக்யானங்கள்” என்று போற்றப்பெரும் உவமையோடு கூடிய பலப்பல கதைகள் மகாபாரதத்தில் நிறைந்து உள்ளன. அவற்றிலிருந்து ஒருவன் கணக்கற்ற நீதி நெறிகளைக் கற்றுக்கொள்ள இயலும். கானகத்தில் வசித்தபோது, பாண்டவர்கள் வரிசையாக பல புண்ணிய நதிகளையும், முனிவரிகளின் குடில்களையும் கண்டு வந்தனர். அவை ஒவ்வொன்றும் உட்பொருளோடு கூடிய வரலாற்று நிகழ்ச்சிகளை ஒட்டி பெருமை பெற்றிருந்தன. அது போன்ற ஒரு குடில், கங்கை நதிக்கரையில் அமைந்திருந்த முனிவர் ரைப்யருடையது.

அந்த முனிவருக்கு பராவசு, அராவசு என்று இரண்டு புதல்வர்கள் இருந்தனர். அவர்களிருவருமே, சாஸ்திரங்கள் பல கற்று அவற்றில் தேர்ந்து விளங்கினர். ஒரு முறை அரசன் பிருத்யும்னன் ஆற்றி வந்த வேள்வியில் பங்கேற்று நடத்திக் கொடுக்க, முனிவர் ரைப்யர் தம் புதல்வர்களை அனுப்பினார். தந்தையரது கட்டளைப்படி இருவரும் அரசனது அரண்மனையை அடைந்தனர்.

ஒரு நாள் பராவசு தன தந்தையாரின் குடிலுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தான், அப்போது இரவு நேரம். ஒரு மரத்தடியில் பெரிய காட்டு விலங்கொன்று பதுங்கிப் பதுங்கிச் செல்வது போல அவன் கண்களுக்கு தெரிந்தது. உடனே அம்பு எய்து அதைக் கொன்று விட்டான். ஆனால் அது இறந்து விழுந்தபோது எழுப்பிய ஒலி கேட்டு நடுநடுங்கிப் போனான். ஏனெனில் அவன் கொன்றது அவனது தந்தையாரையேதான். உடனே விரைந்து ஈற்றுக் கடன்களுக்கு ஆவன செய்து முடித்து தந்தையைத் தகனம் செய்துவிட்டு மீளவும் அரண்மனைக்குத் திரும்பினான்.

அங்கு, தன தம்பி அராவசுவிடம், எதிர்பாராது நிகழ்ந்துவிட்ட துயர நிகழ்ச்சியை விவரித்து கூறினான். “அரசனின் வேள்வியை மேற்பார்வையிட்டு நடத்தி கொண்டிருந்தபோது, நம் பாதையில் துயர நிகழ்ச்சி ஏற்பட்டிருக்கக்கூடாது . இன்னும் சில காரியங்கள், இறந்து விட்ட நம் தந்தையாருக்காக நாம் செய்ய வேண்டியிருக்கிறது. சிறுவனான உன்னால் தனியாக நின்று இந்த யக்ஞத்தை நடத்த முடியாது. அதனால் நீ மறுபடி நம் குடிலுக்குச் சென்று, தந்தையாரது ஈற்றுக் கடனை என் சார்பிலும், செய்து முடித்து விட்டு பிறகு மீளவும் இங்கு என் உதவிக்கு வா. மேலும், நான் தலைமை சாஸ்திரியாக இருந்து யக்ஞத்தை நடத்துவதால், நான் ஈற்றுச் செய்ய முடியாது.” என்று தம்பியிடம் கூறினான் பராவசு.

அராவசு தன தமையனின் கட்டளையைத் தலைமேல் தாங்கி தன் தந்தையாரது குடிலுக்குச் சென்றான். அவன் தூய்மையான உள்ளம் பெற்றவன். அவனுடைய ஒரே குறிக்கோள் தனக்கிடப் பெற்ற பணிகளை செவ்வனே செய்து முடிப்பது ஒன்றுதான். எந்த செயலைச் செய்தாலும், முழு மனதோடு ஒன்றிச் செய்து வந்தான். அவன் இத்தகைய உண்மை உள்ளம் பெற்ற பண்பு, அவனது முகத்தில் எதிரொலித்து ஒரு தனி ஒளியை வீசியது.

பராவசு, தன் தம்பியின் ஒளிமிகுந்த வதனத்தைக் கூர்ந்து கவனித்தான். தம்பியின் ஞானச்சுடர் வீசும் முகமானது அவனைத் திடீரென ஒரு பொறாமை உணர்வு ஆட்கொண்டு அலைக்கழிக்க வைத்தது. அடுத்த கணமே அவனது அறிவு குரூரமாக வேலை செய்தது. அதன் விளைவாக, அவன் கூடியிருந்தவர்களிடம், “ பாருங்கள்! இந்த மனிதன் ஒரு அந்தணனைக் கொன்று விட்டான். அதனால் அவனை புனிதமான யக்ஞம் நடக்கும் எல்லையில் நுழைய விடக் கூடாது” என்று உரக்கக் கத்தினான்.

அண்ணனின் இந்தக் கட்டளையை கேட்டவுடன் அராவசுவிற்கு ஒரு நொடி தூக்கிவாரிப் போட்டது போலாகிவிட்டது. அவனால் அண்ணனது நடத்தையைப் புரிந்து கொள்ளவே இயலவில்லை. சுற்றிலும் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் ஏதோ கொலைக்குற்றம் புரிந்துவிட்டு வந்த ஒரு குற்றவாளி போல அவனை வெறித்து நோக்கினர். தன்னுடைய குற்றமற்றத் தன்மையை அவர்களுக்கு எப்படி விளக்கிக் கூறுவது என்று தெரியாமல் தவித்தான் அவன். பிறகு துணிவாக முன் வந்து, “ ஒ பெரியோர்களே! தயவு செய்து நான் கூறுவதை உன்னித்துக் கேளுங்கள். நான் உண்மையாகக் கூறுகிறேன். இவன் என்னுடைய தமையன். இவன்தான் உண்மையில் எங்கள் தந்தையாரைக கொன்றவன். யக்ஞத்தை மேற்பார்த்து நடத்த வேண்டியுள்ளதால் தந்தையாருக்குரிய ஈற்றுக்கடனை அவன் சார்பில் ஆற்ற என்னை இவன் பணித்து அனுப்பினான்” என்று கூறினான்.

குழுமியிருந்த அனைவரும் அராவசுவின் பேச்சை நம்பாமல் எள்ளி நகையாடினர். அவனது கூற்று நிலைமையை பின்னும் மோசமாகிவிட்டது. கூட்டத்தினர் அவனைப் பார்த்து “ ஒருவன் செய்த குற்றத்தை அவனுக்கு பதிலாகத் தான் ஏற்று செயல்புரிய யாராவது முன் வருவார்களா?” என்று இகழ்ந்துரைத்தார்கள்..

தெய்வத் தன்மை பொருந்திய அராவசு, தானாகக் குற்றம் சாட்டப்பட்டதோடு நில்லாமல், “ பொய் பேசுகிறான்” என்று வேறு பழி சுமத்தப் பட்டான். வாய்மையே மூச்சாக கொண்டுள்ள தூய உள்ளம் படைத்துள்ள அவனுக்கு, இத்தகைய துன்பங்கள் தாங்கொணாததாக இருந்தன. அவன் மேலும் அங்கு தங்க பொறுமை அற்றவனாய், திரும்பி காட்டுக்குச் சென்று கடுந்தவம் செய்யலானான்.

தெய்வங்கள் அவனது கொடிய தவத்தினைக் கண்டு மனமிளகி, அவன் முன் தோன்றி அவனது மன விருப்பத்தினைக் கூறும்படிக் கேட்டனர். அப்போது சிலகாலம் அவன் ஆற்றிய கடுமையான தவத்தின் வலிமையும், ஆழ்ந்த தியானமும், அவனது கோபத்தையும் பழி வாங்கும் உணர்வையும் ஆற்றி விட்டிருந்தன. அதனால் அவன், தன் தந்தையாரது உயிரை மீண்டும் தரும்படியும், அண்ணன் மனம் மாறி நல்லவனாகத் திருந்த வேண்டும் என்றும் அவர்களைக் கேட்டான். இங்ஙனம் அவன் கேட்டது தமையனின் நலத்திற்காக மட்டுமல்லாமல், தான் துன்புற்றது போல் மற்றவர்களும் அவனால் துன்புறக் கூடாதே என்ற எண்ணத்தினால் தான்.

பராவசு, அராவசு கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள். ஆனால், பராவசு குரூரமான எண்ணங்களாலும் பொறாமை உணர்வாலும் அலைக்கழிக்கப்பட்டான். நல்லொழுக்கங்கள் நிறைந்த அராவசு, அன்பான இதயமும், மற்றவர்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் தன்மையையும் பெற்றிருந்தான். வெறும் படிப்பு மட்டும் ஒருவனைச் சான்றோனாக்க முடியாது என்பது இதனால் தெளிவாகத் தெரிகிறதல்லவா? செழுமையான நல்லெண்ணங்களும், சொற்களும், செயல்களுமே மேன்மையைத் தர வல்லன.

கேள்விகள்:
  1. பராவசுவின் ஒழுக்கக்கேடான செயல் என்ன?
  2. அராவசு, தான் நல்லொழுக்கம் நிரம்பியவன் என்று எப்படி நிரூபித்தான்?
    இந்த கதையினால் நீ அறிந்த நீதி என்ன?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன