நம்மாழ்வார்

Print Friendly, PDF & Email

நம்மாழ்வார்

ஆழ்வார் – என்ற சொல்லுக்கு மூழ்கியவர் என்று பொருள்.அதாவது இறையருளில் மூழ்கியவர்கள் ஆழ்வார்கள். ஆழ்வார்கள் அருளாளர்களாகக் கருத்தப்பட்டமைக்குக் காரணம் அவர்களின் வரலாற்றில் காணப்பட்ட சிறப்புகளே. ஆழ்வார்களைத் திருமாலின் அணி மற்றும் ஆயுதங்களாகக் கருதும் வழக்கம் குருபரம்பரைகளில் உண்டு. இது வைணவத்தின் உயிர் நாடிகளில் ஒன்றான அவதாரக் கொள்கையின் திட்டமே. பொதுவாக வீர வைணவத்தின்மீது ஈடுபாடு கொண்ட ஆழ்வார்கள், படைகலங்களின் அம்ஸமாகவும் பக்தி பிரசாகர்கள் அணிகலன்களின் அம்ஸமாகவும் கருதப்பட்டனர்.

பேயாழ்வார்- வாள், திருமங்கை ஆழ்வார்- வில் , பூதத்தாழ்வார் – கதாயுதம்- பொய்கை ஆழ்வார் – சங்கு, தொண்டரடிப் பொடியாழ்வார்- வனமாலை, மதுரகவி- தாமரை, ஆண்டாள்- பூதேவி, நம்மாழ்வார் – சேனை முதலியார்.

பொய்கையார், பூதத்தார், பேயார், திருமழிசைபிரான், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப் பொடிகள், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார், மதுரகவியாழ்வார், ஆண்டாள் என இவர்கள் பன்னிருவரும், கி.பி 6 முதல் 9ம் நூற்றாண்டு வரையான காலத்தில் இம் மண்ணில் அவதரித்தவர்கள். சங்கத் தமிழை, தெய்வத்தமிழ் ஆக்கிய பெருமைக்கு உரியவர்கள். அவர்களது பாசுரங்கள் மொத்தம் நாலாயிரம். அவை திவ்வியமான கவிகள். எனவே, அவற்றின் தொகுதிக்கு “நாலாயிர திவ்யபிரபந்தம்” என்ற பெயர் வந்தது. அப்பாசுரங்களில் மண்ணிலும், விண்ணிலும் உள்ள “திவ்யதேசங்கள்” என வழங்கப்படுகின்ற 108 திருத்தலங்களில் எழுந்தருளியுள்ள திருமாலைப் போற்றிப் பாடியுள்ளனர். நாலாயிர திவ்ய பிரபந்தம் வைணவத்தின் வழிபாட்டு நூல், பொய்கையாழ்வார், பூதத் தாழ்வார், பேயாழ்வார், ஆகிய மூவரும் முதலாழ்வார்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் சமகாலத்தினர் என்றும் இவர்கள் காலம் கி.பி 6-ஆம் நூற்றாண்டு என்றும் கூறப்படுகிறது.

இவர் வைணவத்தின் குருநாதராக போற்றப்படுகிறார். ‘நம்’ என்ற அடைமொழி, பெரும் தகுதி பெற்றவர்களுக்கே உரியது. ஆழ்வார்களில் ‘நம்’ என்ற அடைமொழி சடகோபர் என்று அழைக்கபடுகின்ற இவருக்கு மட்டுமே உண்டு. நம்மாழ்வார் என்ற பெயர் திருவரங்கத்து அரங்கப் பெருமான் சடகோபருக்கு வழங்கிய திரு நாமம் என்பதற்கு திருவரங்கக் கோவில் வரலாற்றில் குறிப்புகள் உள்ளன மார்கழிப் பெரு விழாவின் போது வேதங்களோடு ஒத்து திருவாய் மொழியையும் ஓதி சேவை செய்வதற்காக திருவரங்கம் வந்த சடகோபர் குழுவை எதிர்கொண்டு வரவேற்ற திருமங்கை மன்னர், அவரைப் பெரிய பெருமானாகிய அரங்கன் முன் அழைத்துச் செல்ல, அது காலை, பெருமாளும் சடகோபரை அவரது படிமத்தை உற்று நோக்கி, மனம் குளிர்ந்து, ‘நம்மாழ்வார்’’ என்று திரு நாமம் சார்த்தி அனைத்து மரியாதைகளையும் அருளினார்.

குரு பரம்பரைகள், ஒரு முகமாய் ஆழ்வார்களுள் நம்மாழ்வார்க்கே ஏற்றம் கூறுகின்றன. நம்மாழ்வாரை அவவியாகவும் (?) உடலாகவும் ஏனைய ஆழ்வார்களை அவயங்களாகவும் கொண்ட கற்பனைகள் வைணவத்தில் பொதிந்து கிடக்கின்றன. ஆழ்வார்களில் காலத்தால் இருதியாளராக கருதப்படுகின்ற நம்மாழ்வார் சிறப்பில் முதன்மையாளராக எண்ணப்படுவதற்கு இருல காரணங்கள் உண்டு.

  1. வைணவ மரபில் காணப்படுகின்ற ஆழ்வார் – ஆச்சார்யார் வரன் முறையில் இவர் நடுவர் என்பது
  2. வீர வைணவத்திலிருந்து சற்று விலகி சன்மார்க்கம் கண்ட வகையில் நம்மாழ்வார் ஒரு மூல குரு நாதர்.

நம்மாழ்வாரின் இயற் பெயர் மாறன். இவர் சடகோபன், காரிமாறன், பராங்குசன் வகுளா பரணன் என்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். தென் தமிழ் நாட்டில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருக் குருகூர் என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை காரியார் திரவழுதி, வளநாட்டு குறுநில மன்னர். தாயார் உடையநங்கை, வேளான்குடியை சார்ந்தவர்கள். பிள்ளைப்பேறு இல்லாமையால், இத்தம்பதியினர், திருக்குறுங்குடிப் பெருமானைத் தொழுது, அவர் அருளால் வெகுதான்ய ஆண்டு, வைகாசித் திங்களில், விசாக பௌர்ணமி கூடிய வெள்ளிக் கிழமை அன்று, கடக லக்னத்தில் ஒரு ஆண் மகவைப் பெற்றெடுத்தனர். இவரது பிறப்பு பற்றிய எல்லா குறிப்புகளும் குருபரம்பரை உள்ளிட்ட எல்லா நூல்களிலும் காணப்படுகிறது. அக்குழந்தை மற்ற குழந்தைகளைப் போல் அழுதல், பாலுண்ணுதல் ,போன்ற உலகாயதச் செயல்கள் ஏதுமில்லாமல் ஒளி பொருந்திய முகத்துடன் இருந்தது. பெற்ற தாயும் தந்தையும் மனம் கலங்கினர் . அவ்வூரில் குருகூர் கோவில் வாசலில் புளியமர நிழலில், திருமாலடியில் அதைக் கிடத்தினார்கள். எம்பெருமானின் திரு அவதாரத்தைமுன்னரே ஆனந்தாழ்வார் தாமே புளியமரமாக அங்கே தோன்றி வளர்ந்திருந்தார் என பெரியோர் கூறுவர். வாய் திறவாது கண்மூடி மௌனமாகவே 16 ஆண்டுகள் யோக நிலையில் மூழ்கி இருந்தது. அந்தக் குழந்தை மதுர கவியாழ்வார் அயோத்தி யாத்திரை செய்த போது, ஒரு நாள் இரவில் தனது சொந்த ஊரான திருக்கோளூர் பெருமான் இருக்கும் திசை நோக்கி வணங்கும் பொழுது தென் திசையிலிருந்து வானளாவிய பேரொளியைக் கண்டு அதிசயித்தார். தொடர்ந்து மூன்று நாட்களிலும் அந்த பேரொளி தெரியக் கண்டு, அந்த பேரொளியை நோக்கி, பல நாட்கள், நடந்து ஆழ்வார் திருநகரி வந்தடைந்தார். உறங்காப் புளி மரத்தின் அடியில் இருந்த குழந்தையின் உடலில் இருந்து பரவும் ஒளி என அறிந்து வியந்தார். மதுர கவிகள் ஒரு சிறு கல்லை எடுத்து லேசாகத் தரையில் வீசி சிறு சப்தத்தை எழுப்பினார். உடனேயே குழந்தை கண் திறக்கிறது. அதைப் பார்த்த மதுரகவி, புதிர் போடுவது போல ஒரு கேள்வி கேட்கிறார்,”செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” உடனேயே அந்தக் குழந்தை கணீரென்று பதில் தந்து விடுகிறது. “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்.” என்று இப்படி ஓர் அதிசயமான வெத்க்ந்த (?) விசாரம் தமில் மண்ணில் விளைந்தது.

மதுரகவியார் வினாவின் உட்கருத்து செத்ததன் வயிற்றில் = உருவற்ற பிரக்ருதியினால் உருவான உடம்பில். சிறியது பிறந்தால் = அணு வடிவமான ஜீவாத்மா பிறந்தால், எதைத் தின்று=எதை அனுபவித்துக் கொண்டு, எங்கே கிடக்கும்? = எங்கே இன்பம் உண்டென்று இருக்கும்?

குழந்தையின் விடையின் கருத்து: அத்தைத் தின்று = மெய்ஞான உணர்வுபெற்ற ஜீவாத்மாக இருந்தால் பரமாத்மாவை அனுபவித்துக்கொண்டு, அங்கே கிடக்கும் = அந்த பரமாத்மாவிலேயே ஐக்கியமாகிக் கிடக்கும் ! சரி, மெய்ஞான உணர்வு பெற ஜீவாத்மாவாக இருந்தால்? அத்தைதின்று = உடல் தொடர்பால் உண்டாகும் ஐம்புலன் இச்சைகளில் ஈடுபாடு கொண்டு, அங்கே கிடக்கும் = மீண்டும், மீண்டும் பிறவிச் சூழலில் கட்டுண்டு இருந்த இடத்திலேயே கிடக்கும்.

இவர் 35 ஆண்டுகள் வாழ்ந்திருந்தார், திருவரங்கத்தில் திருவாய் மொழியை ஓத, திருமங்கை மன்னர் ஏற்பாடு செய்திருந்தார். திருவரங்கத்திற்கு மதுரகவிகளுடன் நம்மாழ்வார் எழுந்தருளினார். திருவரங்கத்தில் மதுரகவி ஆழ்வார் திருவாய் மொழியை தேவகானத்திலேபாட,அபிநயத்துடனே பெருமாளை சேவித்து, பத்தாம் நாளில் திருவாய் மொழியை தலையில் கட்டினவாறே அரங்கன் திருவடிகளை அடைந்தார், என திருவரங்கக் கோயில் வரலாற்றில் குறிப்பிடப்பட்டிருப்பது, திருவாய் மொழிப் பாடி முடிந்த உடனேயே நம்மாழ்வார் பரமபதம் அடைந்துவிட்டார் என்பதனைக் காட்டுகிறது. குருபரம்பரை பிரபாவம் என்ற நூலில் இவரது வரலாறு சுருக்கமாக காணப்படுகிறது.

நம்மாழ்வாரின் நூல்களும் – சமய கருத்துகளும்

இவர் இயற்றிய நூல்கள் திருவாசிரியம், பெரிய திருவந்தாதி திருவிருத்தம், திருவாய்மொழி ஆகிய நான்கு பிரபந்தங்கள், நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் 1296 பாடல்களின் ஆசிரியர் நம்மாழ்வார்

திருவாசிரியம் – 7 பாக்கள்

பெரியதிருவந்தாதி – 87 பாடல்கள்

திருவிருத்தம் – 100 பாடல்கள்

திருவிருத்தம் – 100 பாடல்கள்

நாலாயிர திவ்ய பிரபந்தத்தை உலகிடை பரப்பிய நாதமுனிகள், பிரபந்தததை நம்மாழ்வாரிடமிருந்து நேரில் பெற்றார் என்றும், யோகத்தில் பெற்றார் என்றும் இருவேறு கருத்துக்கள் உண்டு. 108 திவ்ய தேசங்களும் – 34 திருத்தங்களை நம்மாழ்வார் பாடியுள்ளார். அதில் நவதிருப்பதிகள் அடங்கும்.

நூல்சிறப்பு :

சங்க காலத்தில் ‘மனிதக் காதல்“ பெற்றிருந்த இடத்தை சமயத் தமிழ் கிளர்த்தெழுந்த பல்லவர் காலத்தில் “இறைக்காதல்” பெற்றுவிட்டது. இறைவனிடம் செலுத்துகிற அன்பு பக்தி தொண்டன் வழி, பிள்ளை வழி, பெற்றோர், நட்பு வழி என்பது போல காதல் வழி என ஒன்றும் உண்டு. இது மதுரமானது, வைணவர்கள் இதை மதுர பக்தி எனக் கூறுவர். அப்பரால் தொடங்கப்பட்ட இந்த காதல் வழி பக்தி, கோதை நாச்சியார், நம்மாழ்வார் காலத்தில் மங்கைப் பருவம் கண்டது. நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் 100 பதிகங்களில் 17 தலைவியின் கூற்றாகவும், 7 தாயின் உடையதாகவும், 3 தோழியின் உடையதாகவும் அமைந்த அகத்துறை திருவிருத்தம் முற்றிலும் அகப்பொருள் இலக்கியம்.

திராவிட வைணவ வேதம்

இவரை வேதம் செய்த பெருமான் என வைணவர்கள் கொண்டாடுகிறார்கள். நாதமுனிகள் திருவாய் மொழியை “திராவிட வேத சாகரம்” என வருணித்திரிக்கிறார். இதற்கு ஏற்ப திருவிருத்தம் ரிக்வேதசாரம் எனவும், திருவாசிரியம் யஜுர் வேத சாரம் எனவும், திருவாய்மொழி, சாம வேத சாரம் எனவும்,பெரிய திருவந்தாதி அதர்வண வேத சாரம் எனவும் கருதப்படுகிறது. திருவாய் மொழிக்கு வட மொழியில் உரை எழுதிய ஸ்ரீமத் நாத முனிகள் சடகோபரின் தமிழ் வேத சாகரத்தை வணங்குகிறேன் என்கிறார். வடமொழி வேதத்திலும் அறிய முடியாத பல சிக்கலான மெய்ப்பொருள் செய்திகளை இத்தமிழ் வேதத்தை பயின்று உணர்வதால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார்.

ஆனால் அதே சமயத்தில் நம்மாழ்வாரின் நூல்கள் ‘மறை’என போற்றத்தக்கவையா என்ற சர்சசையும் அன்றே எழுந்தது. மதுரகவி ஆழ்வார் தமது குருநாதராகிய நம்மாழ்வாருக்கு சிலை வைத்து சிறப்பு செய்தார். ஆண்டு தோறும் விழா எடுத்து அவர் பெயரில் பல விருதுகளை வழங்கி வந்தார். அவ்விருதுகளில் “வேதம் தமிழ் செய்த பெருமான் வந்தார்” என்ற விருதும் ஒன்று. அக்காலத்திய தமிழ் சங்கத்தார் சிலர் அவ்விருதை கடுமையாக எதிர்த்தனர். இந்த சர்ச்சையை சங்கப் பலகையின் உதவி கொண்டு தீர்ப்பது என முடிவு செய்யப்பட்டது. ஒப்பந்தப்படி “கண்ணன் குழலினை “ என்ற திருவாய் மொழி பாசுரத்தை ஒரு ஏட்டில் எழுதி மதுர கவிகள் சங்கத்தாரிடம் அளித்தார்கள். அதனையும் தங்களது நூல்கள் சிலவற்றையும் சங்கப் பலகையில் மீது அவர்கள் வைக்கவும் அது அவ்வேற்று நூல்களை தள்ளி விட்டு ஆழ்வார் பாசுரத்தை மட்டுமே ஏந்தி நின்றதாம். அது கண்ட சங்கத்தார் அதிசயித்து தங்களின் தவறை உணர்ந்து நம்மாழ்வாரின் பாசுரங்களைப் பாராட்டிப் பாட அனைவரது பாராட்டுப்பாக்களும் ஒரே மாதிரியாக அமைந்ததாம். நாயன்மார்களின் வரலாற்றை சேக்கிழார் பெருமான் வடித்த பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணமாகிய சைவ நூல் எவ்வாறு பலரால் உரை செய்யப்பட்ட பெருமைக்கு உரியதோ அது போல திருவாய் மொழியும் சிறப்பு பெற்றது. நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்கு நம்பிள்ளை சொல்லக் கேட்டு வடக்கு வீதி பிள்ளையும் ராமானுஜர் நியமனத்தால் திருக்குறுகைபிரானும் வாதகேசரி அழகிய மணவாளன் ஜீயர் ஆகியோர் செய்து வெளியிட்ட உரைகள் சுமார் 36000 படிகள் என கூறப்படுகிறது.

மேலும் அழகிய மணவாள பெருமாள் நாயனார் என்பவர் மாறனார் நம்மாழ்வார் மனதை நன்றாக விளக்கி “ஆச்சார்ய ஹிருதயம்” என்ற பெயரோடு செய்த நூலும், மணவாள முனிவரால் செய்யப்பட்ட “திருவாய்மொழி நூற்றந்தாதி” என்ற நூலும் திருவாய்மொழியின் சிறப்புக்கு எடுத்துக் காட்டுகள். வாய்மொழி = வாய்மை + மொழி சத்தியவாசகம் என்பது போல திருவாய் மொழியும் சத்திய வாசகமாக கருதப்படுகிறது. பரிபாடல் என்னும் சங்க நூலில் “வாய்மொழி” என்ற சொல் வேதத்தைக் குறிப்பிடுவதாகக் காண்கிறோம். எனவே தான் பராசரப்பட்டர் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரம் ஈன்ற முதல் தாய் சடகோபர் எனவும், வாய்த்த அதனை வளர்த்த தாய் ராமானுஜர் எனவும் கூறுகிறார்.(?)

நம்மாழ்வாரின் திருவாய்மொழியே ராமானுஜருக்கு விசிட்டாத்துவைதக் கொள்கையை உதவி,புது நெறிகளை வழி செய்தது என்பது அறிஞர்கள் கருத்து.

நம்மாழ்வார் சமயகருத்துக்கள்

“வைணவ சித்தாந்தம்” –வைணவத்தின் மூன்று மந்திரங்களில் முதலாவதான “ஓம் நமோ நாராயணாய “என்ற பெரிய மந்திரத்தின் பொருள் திருவிருந்தத்திலும்,மூன்றாவதாகிய சரமச்சுலோகத்தின் பொருள் திருவாசிரியம், பெரிய திருவந்தாதி ஆகியவற்றிலும் இடைப்பட்டதும் மந்திர ரத்தினம் என்று கூறப்படுகின்றன, “ஸ்ரீமந் நாராயண சரணம் சரணம் பிரபத்யே,ஸ்ரீமதே நாராயணாய நமஹ” (?)என்ற திவ்ய மந்திரத்தின் பொருளை திருவாய் மொழியின் பதிகங்கள் உட்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஐம்பொருள் விளக்கம்

திருவாய் மொழியின் சிறந்த பொருள் யாது? என்று பெரிய வங்கிபுரத்து நம்பி என்னும் பெரியவரை சிலர் கேட்டார்கள். அதற்கு அவர் “ஐம்பொருள் விளக்கமே திருவாய் மொழி” என்றாராம். எனவே நம்மாழ்வாரின் பாசுரங்கள் “அர்த்த பஞ்சகம்”சொல்லப் பெறும் ஆன்மீக படித்தரங்கள் பற்றிய தமிழ்நூல் என்று கருதப்படுகிறது.

ஐம்பொருள் விவரமாவது
  1. இறைவன் நிலை
  2. ஆத்மாவின் நிலை
  3. இறைவனை ஆத்மா அடையும் நெறி
  4. இறைவனை ஆத்மா அடையும்பொழுது உண்டாகும் தடைகள்
  5. ஆத்மாவுக்கு முடிவான புருஷார்த்தம், இவ்வனைத்துமே ஆத்மாவால் அறியப்பட்டு அடையத் தகுந்த உறுதிப் பொருள்கள் ஆகும்.
ஐந்து நிலைகள்

நம்மாழ்வார் இறைவனை ஐந்து நிலைகளில்போற்றி வணங்குகிறார்.

  1. அப்பாலுக்கப்பாலாய் எங்கோ உள்ள பரம பதத்தில் இருக்குமிறைவன்(?) ‘பரதத்துவம்
  2. அவனே திருப்பாற்கடலில் எழுந்தருளி உலகை நிர்மாணிக்கும் பொறுப்பேற்றுக் கொள்ளும்போது காட்சி தருவது வியூகம்
  3. உலகின் மனிதனாக வரும் அவதார நிலை ‘விபவம் ‘ எனப்படும். கோவில்களில் திருச்சிலை வடிவமாய் காட்சி தருவது “அர்ச்சை’ ஆகும். எல்லாப் பொருள்களிலும் உயிர்களிலும் உள்ளுக்குள் உள்ளாய்(?) மறைந்து கொண்டே அந்த உயிரை செயலாற்ற செய்யும் விந்தை ‘அந்தர்யாமி’எனப்படும்.இந்த ஐந்து நிலைகளிலும் உள்ள இறைவனை நம்மாழ்வார் எனப்படும். இந்த ஐந்து நிலைகளிலும் உள்ள இறைவனை நம்மாழ்வார் ஆங்காங்கே பாடல்களில் பாடியுள்ளார். ஆனாலும் அவதார விசேஷங்களைப் புகழ்வதிலும் அர்ச்சனை வடிவங்களை வழிபடுவதிலும் அவர் காட்டிய ஈடுபாடு திருவாய் மொழியில் திறம்பட வெளிப்படுகிறது.
பிரபக்தி – பாகவத பக்தி

பிரபக்தி

நம்மாழ்வார் பக்திக்கு மேலான பிரபக்தி நெறியை கடைபிடித்தார் என்பது முன்னோர்களின் முடிவாகும். நம்மாழ்வார் மேற்கொண்டது பக்தியா, பிரபக்தியா என்கிற ஆய்வும் ஆச்சார்யார்களால் மேற்கொள்ளப்பட்டது. இராமானுஜர் திருவாய் மொழி “பக்தி நூலே” என்று குறிப்பிடுவதாய் நம்பிள்ளை எழுதுகிறார். ஆனால் ஆளவந்தாரும் திருமலை ஆண்டாணும்(?) நம்மாழ்வார் பிரபக்தி பற்றிய பாசுரம் அருளியுள்ளார் என்கிறார்கள். நம்பிள்ளையின் கருத்துப்படி இவரது பாசுரங்கள் இருவகையிலும் விளக்கப்படலாம்.

பக்தி யோகத்தில்,விதிமுறைகளும்,கட்டுப்பாடுகளும் உண்டு.ஆனால் பிரபக்தி மார்க்கத்தில் தீர்க்க சரணாகதி ஒன்று தான் செய்ய வேண்டிய செயல் ஆகும்.

பாகவத பக்தி

நம்மாழ்வார் பகவானிடத்து கொள்ளும் பக்தியை குறிப்பிட்டத்தோடு அமையாது, பாகவதர்களாகிய அடியார்களிடத்தும் பக்தி கொள்ள வேண்டும் என்கிறார். அடியார்களிடத்தில் கொள்கிற பக்தியே கடவுள் பக்தியை விடவும் சிறந்தது என்பது வைணவர் கொள்கை. நம்மாழ்வார் திருவாய் மொழியில்

பயிலும் சுடரொளி

நெடுமார்க்கடியை என்னும் இருபது பாடல்களில் இக்கருத்தினை வெளிப்படுத்துகிறார்.
“தொண்டர்,தொண்டர்,தொண்டர்,தொண்டர்,தங்கள் சடகோபன்’ என்று தம்மை அழைத்துக் கொள்வதிலிருந்து அவரது பாகவத பக்தி புலனாகிறது.

மனிதாபிமானம்

“சைவத்திற்கு மாணிக்க வாசகர் போல,வைணவத்திற்கு நம்மாழ்வார்” என தமிழ்ப் பெரியார் திரு.வி.க அவர்களால் போற்றப் பெற்றவர்.வைணவ குறவர்களில் “ஆழ்வார்கள் “ எனவும்,”ஆச்சார்யார்கள்” எனவும் இருவகையினர் உண்டு.இவர்களில் நம்மாழ்வார் மட்டுமே ஆழ்வாராகவும்,ஆச்சார்யாராகவும் ஏற்கப்படுகிறார்.

வைணவர்களில் கொண்டாடும் ஆச்சார்யார்கள் பதின்மர் 10 பேர். அந்த பத்து பேர்களில் முதல் மூவர்,திருமால், திருமகள்,விஷ்வக்ஸேனர் பரமபதத்தை சார்ந்தவர்கள். நான்காவது ஆச்சாரியராக, பூவுலகில் முதல் ஆச்சரியராக மதிக்கப்படும் நம்மாழ்வார்” குழந்தை கருப்பையில் இருக்கும்போதே அதன் முப்பிறவி நினைவுகளை அகற்றி புதிய பிறவி பந்தத்தை ஏற்படுத்த சடம் என்னும் வாயுவை கோபித்து விரட்டியதால் இவர் ‘சடகோபர்’ என வழங்கப் பெறுவர். பதினாறு வயதுவரை பரந்தாமன் தியானத்திலேயே இருந்த இவருக்கு 11 வயது ஆனபோது சேனை முதலியார் சகல கலைகளையும் உபதேசம் செய்தாராம். அவ்வாறே அவர் யோக நிலையில் இருந்த பொழுது நம்மாழ்வாரின் மனக் கண்ணில் 108 திருத்தலங்களின் மூர்த்திகளும் காட்சியளித்தனராம். அந்த ஆனந்த அனுபவத்தையே நம்மாழ்வார் பிரபந்தங்களாக அருளிச் சென்றார்.

பரமாத்மாவில் தரிசனம் பெற விரும்பிய மதுர கவியாழ்வார் ஒருமுறை தனது விருப்பத்தை தனது குருநாதராகிய நம்மாழ்வாரிடம் வெளியிட, அவர் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க திரு உள்ளம் கொண்ட சடகோபர், திருவரங்கப் பெருமாள் மீது காதல் கொண்ட பெண் பாடுவதாக ஒரு பாடலைப் பாட, பரந்தாமன் தன் தேவியார் மகாலட்சிமியுடன், சங்கு, சக்ர தாரியாக கருட வாகனம் மீது சடகோபருக்கும், மதுரகவிக்கும் காட்சி கொடுத்தாராம்.

கம்பர், தனது கடவுள் வாழ்த்தில், இறைவனைத் ‘தலைவன்’ எனவும்,பின்னர் ‘சரஸ்வதி’,, அனுமன் ஆகிய தெய்வங்களோடு நம்மாழ்வாரையும் வணங்குகிறார். அது முதல் வைணவர்கள் நூல் இயற்றத் தொடங்கும் போது நம்மாழ்வார் துதி கூறும் வழக்கம் உண்டாயிற்று.

கம்பன் தன் காவியத்தைத் திருவரங்கம் கோவில் மண்டபத்தில் அரங்கேற்று முன் அரங்கனே கனவில் தோன்றி சடகோபனே பாடினால் தான் உன் இராமாயணத்தை ஏற்போம் எனக்கூற 100 கட்டளை கலித்துறை பாடல்களால் கம்பர் “சடகோபரந்தாதி” பாடியதாகவும் கூறப்படுகிறது.

குருகை எனப்படும் திருக்குறுகூர் நம்மாழ்வார் தோன்றியதால் “ஆழ்வார் திருநகரி” என்ற சிறப்பு பெயர் பெற்றது.ஆழ்வார் திருநகரியில் வைணவர்களின் எச்சிலைகளை உண்டதால் நாய் இறந்த பின் மோட்சம் அடைந்ததாகவும், அதையறிந்த யோகி ஒருவர் நம்மாழ்வாரே! நீ பிறந்த குரு கையில்(?) எச்சில் இலைகளை உண்டு வாழ்ந்த நாய்க்கு பரம பதம் அளிக்கும் தாங்கள், இந்தப் பேய்க்கு அளிக்கக் கூடாதா? என வேண்டிய அவருக்கும் பரம பதம் கிட்டியதாம். ஞான யோகத்தில் வீடுபேறு பெற்றவர்கள், வர்த்தமான மகாவீரர், கௌதம புத்தர், திருமூலர், ஆதி சங்கரர் முதலியோர். வைணவத்தில் இதற்கு இணையாக நம்மாழ்வாரையும்,திருமழிசைப் பெருமானையும் கூறலாம். மதுரகவியாழ்வார் தமது 11 பாசுரங்களையும் நம்மாழ்வாரையே போற்றிக்கொண்டு பாடினார்.

புதுயுகம் – சமரச சன்மார்க்க கருத்து

திருமூலர், ஆதி சங்கரர், சடகோபர் வாழ்ந்த காலம் தென்னாட்டில் சமரச சன்மார்க்க யுகம் ஒரு பொலிவு படைத்த புதுயுகம். திருவாய் மொழியில் நெடுக திருமாலின் அவதாரங்களுக்கு மட்டுமல்ல அரனுக்கும், அதனுக்கும் கூட வணக்கம் செலுத்துகிறார். திருவாய் மொழியில் சில இடங்களில் எந்த பெயரானால் என்ன? தெய்வம் தெய்வந்தான் – என்று புதுமைக் கவி பாடுகிறார். ஒன்றே குலம்,ஒருவனே தேவன், என்ற மூல மந்திரமே ஆழ்வாரின் கொள்கையாயினும், பல பெயர்களில் அதை வழிபடுவதில் தவறில்லை என்பது தான் அவரது சன்மார்க்கம். ஆழ்வாரின் சன்மார்க்கத்திற்க்கு சங்கரரின் உடன் போதனைகள் காரணமாயினும் இவ்விருவருக்கும் முற்பட்ட திருமூலர் கருத்தும் காரணமாக இருக்கிறது என்பது பின்வரும் பாடல்களால் தெளிவாகிறது.

“ஆதிபிரானும்அணிமணிவண்ணனும்
ஆதி கமலத்து அலர் மிசை யோனும்
சோதிக்கின் ஒன்றின் தொடர்ச்சியே என்னார்
பேதித்து உலகின் பிணங்குகின்றாரே “திருமூலர் – திருமந்திரம்.
வணங்கும் துறைகள் பலபல ஆக்கிமதிவிகர்பால் பிணங்கும் சமயம் பலபல ஆக்கி அவையவி தோறு அணங்குகள் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய் இணங்க நின்னோரையில்லாய் நின்கண் வேட்கை எழுவிப்பனே. – நம்மாழ்வார்

முடிவுரை

தாம் மட்டும் வாழ்வதன்றி மண்ணுலகம் அனைத்தும் வாழவேண்டும் என்னும் பரந்த அன்பு நிலையே வைணவ சமயத்தின் ஆணிவேர்,மனித சமுதாயத்துடன் இறையுணர்வைப் பகிர்ந்து கொள்வதில் நம்மாழ்வார் வைணவக் கொள்கையை வழுவாது பின்பற்றியிருக்கிறார். மக்களிடத்தே அவர் கொண்ட அன்பும் பரிவும் அவரை அவர்களூக்காக பிரபந்தம் பாடத் தூண்டியது. இத்தகைய நற்குணங்களால், சடகோபர் திருமாலுக்கு மிகவும் விருப்பமானவராக இருந்த காரணத்தால், பெருமானது பாதுகை, க்கு இவரது பெயரைக் கொண்டு இட்டு ஸ்ரீசடகோபன் அல்லது ஸ்ரீசடாரி என அழைக்கப்படுகிறது.

நம்மாழ்வார் மிகச் சிறந்த ஞானி, முனிவரும்,ஞானியாரும் தன் இடையறாத சாதனையால் ஆத்ம விடுதலை பெறுவார்கள். அண்ணல் நம்மாழ்வார் முனிவருக்கும், ஞானியருக்கும் மேலாக இறையருள் ஒன்றாலேயே பக்தி நெறி நின்று, இறை அனுபவம் பெற்றார். பக்தி இல்லாத ஞானம் பயனற்றது. அவ்வாறே ஞானமில்லாத பக்தியும் சிறப்பற்றது. பக்திக்கு ஞானம் கைகொடுத்து உதவும் ஒளி. உண்மை ஒளி பெற்ற ஞானம், பகவானிடம் காதலாக மலர்கிற போது பக்தியாக பரிணமிக்கிறது. இத்தகைய பக்தியைத் தான் நம்மாழ்வார் திருவாய்மொழியில் விவரிக்கிறார். பகவான் அவருக்கு பக்திகளை காட்டுகிற நெறியாகவும் அதே நேரம் அவர் அடையத் தகுந்த முடிவாகவும் இருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: