ஆதனூர் நந்தனார்
ஆதனூர் நந்தனார்
நந்தன் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆதனூர் கிராமத்தில் ஆதி திராவிடர் குலத்தில் உதித்தவர். அவர் ஒரு பெரிய சிவ பக்தர்.
நந்தன் சிறுவனாக இருந்தபோதே, அவர் வட்டாரத்திலுள்ள மற்ற சிறுவர்களைப் போலல்லாமல் தனித்து இருந்தார். களி மண்ணால் செய்யப்பெற்ற கடவுள் உருவங்களை வைத்து கொண்டு, அவற்றிற்கு விழா கொண்டாடி ஊர்வலமாக எடுத்துச் சென்று அவற்றைச் சுற்றி நடனம் ஆடி, பாட்டுப் பாடி வருவதே அவரது விளையாட்டாக அமைந்திருந்தது. ஆதனூரிலிருந்த சிவன் கோவிலின் உயர்ந்த கோபுரத்தையே அவர் ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டு நிற்பார். கோவிலினுள் வீற்றிருக்கும் கடவுள் மிகச் சிறந்தவராக, மேன்மையுற்று விளங்குபவராக, அழகிற்சிறந்தவராக, கண்டவர் வியந்து நிற்கத் தகுந்தவராக இருப்பார் என்பது அவரது முழு நம்பிக்கை. ஒரு நாள் அத்தகைய இறைவரைப் பார்க்க அவருக்கும் பேராவல் ஏற்பட்டது.
அவர் வளர வளர அவரது ஆவலும் கற்பனையும், உற்சாகமும் கூடவே வளர்ந்து வந்தன. கடவுளுக்காக நாமும், ஏதாவது தொண்டு செய்ய அவாவினார் அவர். இழி குலத்தில் பிறந்த ஏழை மனிதன் இறைவனுக்கு என்ன தொண்டு செய்ய முடியும். முதலில் கோவில் காப்பாளர்கள் அனுமதிக்க மாட்டார்களே! ஒரு நாள், அவருக்கு நல்ல வழி புலப்பட்டது. “தம்பட்டம் ஒலிக்கப் பயன்படும் தோலை நான் எடுத்துச் சென்று தரலாமே! என்று மகிழ்ந்தார். அங்கனமே, தோல் வாங்கி நீரில் ஊறவைத்துப் பதப்படுத்தி, சரியான அளவில் வெட்டி எடுத்துச் சென்று கோவில் காப்பாளர்களிடம் தந்து வந்தார்.
அந்தப் பணியே பிறகு அவரது விளையாட்டும், விருப்பமுமாகி விட்டது. அவருக்கும் சில நல்ல நண்பர் இருந்தனர். அவரது உற்சாகத்தில் பங்கேற்று பரிவோடு அவருடன் கூட உழைத்தனர். அவர்களுடன் இறைவரைப் பற்றிய புகழ்களை நந்தன் அடிக்கடி பேசுவார். சில சமயம் பெரு மகிழ்வோடு இனிமையாப் பாடிக் கொண்டு ஆடுவார். லிங்க வடிவில் கோவிலில் அமர்ந்துள்ள இறைவரைக் காண முடியவில்லையே என்றும், தான் உள்ளே அனுமதிக்கப்படவில்லையேஎன்றம் நினைக்கும் போதெல்லாம் அவரது கண்கள் ஆறாய்ப் பெருகும். கோவிலுள்ள மக்கள், விளக்கின் ஒளியிலும், கற்பூர ஆரத்தியின் ஒளியிலும், வழிபாட்டுப் பொருள்களுடன் இறைவரை வழிபடுவதைத் தனக்குள்ளே கற்பனை செய்து மகிழ்வார். சில சமயம் அந்த நினைவுகளில் ஊன்றியவராய்ப் பரவச உணர்ச்சியில் நினைவிழந்து விழுந்தும் விடுவார் அவர்.
ஒரு நாள் ஒரு பெரும் பண்டிதர், ‘சிதம்பரம் தான் மிக மிக புண்ணிய தலமாகும். அங்கு சென்று சேவித்தவன், அவன் “இழி குலத்தவனாக” இருந்தபோதிலும் கட்டாயம் மோக்ஷமடைவான்,” என்று கூறினார். ஆம்! முஸ்லீம்களுக்கு மெக்காவைப் போல சைவர்களுக்கு சிதம்பரம் மிகச் சிறந்த தலமாகும். அந்தப் பண்டிதர் நடராஜரது திருவுருவத்தை உயரிய சொற்களோடு உன்னதமாக வர்ணித்து விளக்கினார். அவரது சொற்கள் நந்தனின் உள்ளத்தில் உயிர் பெற்ற மந்திரங்களாக செயலாற்றின. விரைவில் சிதம்பரத்திற்குச் செல்வது தம் வாழ்வில் இன்றியமையாத செயலாகக் கருதினார் நந்தன்.
நினைவெல்லாம் நிமலன் மேல் வைத்தவராக அன்றிலிருந்து நடராஜரைக் குறித்து எண்ணங்களிலும், அவரைப் பற்றிய பேச்சுகளிலும், அவரைக் கண்டு சேவிப்பதிலும் அவரோடு பேசுவதிலுமாகவே வயல் வெளிகள் வேலை செய்து வந்தார் நந்தனார். இடைவிடாது இறைவர் நடராஜரது சிந்தனையிலேயே அவர் இருந்ததால் பித்துப் பிடித்தவர் போலானார். சிதம்பரம் செல்வதற்கு இனிமேல் பொறுத்திருப்பது என்பது அவரால் இயலாத செயலாயிற்று. எனவே அவர் அந்தண குலத் தலைவரிடம் சென்று, “ஐயா! ஒரு முறை நான் சிதம்பரம் சென்று சேவித்து வர நினைக்கிறேன். ஒரே ஒரு நாளைக்கு எனக்கு அனுமதி அளியுங்கள்” என்று வேண்டினார்.
அது கேட்ட முதலாளி கோபாவேசமானார்., “ஏய்! நீ ஒரு இழிகுலத்தினன், எந்தத் துணிவோடு நீ சிதம்பரம் சென்று இறைவனை சேவிக்க விரும்புகிறாய்? நன்றாக உதைபடுவாய் இவ்வாறு கேட்பதற்கு” என்று கத்தினார்.
நந்தன் அவரது கோபத்தைக் கண்டு செயலற்று நின்றார். ஆனால் எதிர்த்து ஏதுமே சொல்லவில்லை. “அவரருள்படி நடக்கட்டும்,” என்று மனம் தெளிந்தவராய் பொறுமையோடு காத்திருந்தார். “ஒரு வேளை என் பக்தி இன்னும் முழுமையாக கனிவு பெறவில்லையோ என்னவோ! நான் இன்னும் தியானம் செய்து என் பக்தியை மிகுதியாக வளர்த்துக் கொள்ள வேண்டும்,” என்று உறுதி கொண்டார்.
ஒரு நாள் அறுவடை நடத்துக் கொண்டிருக்கும் போது, அந்த வேதியர், நந்தன் முகத்திலிருந்து பணிவும் அமைதியுமான பண்போடும் கூடிய தெய்வீக ஒளியைக் கண்டு வியப்பிற்குள்ளானார். அதனால், “நந்தா! நீ உண்மையாகவே மிக நல்லவன்தான். அறுவடை பணிகளை நல்ல வண்ணமாக முடித்து விடு. பிறகு நீ சிதம்பரம் செல்ல உனக்கு அனுமதி தருகிறேன்,” என்றார்.
நந்தனது மகிழ்ச்சியை விவரிக்கவும் இயலுமா? குதித்தார், பாடினார், ஆடினார். வேக வேகமாக வேலைகளை முடித்து விட, வயல் வெளிக்குப் பறந்தார்.
அன்று மாலை நந்தன் தன் தலைவரிடம் சென்று, “வாருங்கள்! ஐயா! வந்து வயல்களைப் பாருங்கள்! என்று அழைத்தார். வேதியரே! “என்ன வேடிக்கை இது,” என்று எண்ணியவாறு சென்றார். ஆனால் இது என்ன? வேடிக்கையா? விசித்திரமா? மாயமந்திரமா? அவ்வளவு அறுவடையும் முடிந்து, நெல்மணிகள் தங்க மலை போன்று குவிக்கப் பெற்றிருந்தன. “நந்தா நீ ஒரு தெய்வீகப் பிறவி! மனிதர்களிலேயே தூய்மையான, புனிதமான, மனிதன் நீ தான். இந்த நொடியிலிருந்து நான் தான் உன் அடிமை! ஏனெனில் கடவுள் தான் உன்னுள்ளிருந்து வயலில் வேலை செய்திருக்கிறார் என்பதை நான் நன்கு உணர்கிறேன்” என்று உணர்ச்சி வசத்தில் உதடுகள் துடிக்கக் கூறினார் வேதியர்.
ஒரு வழியாக நந்தனாரது எண்ணம் ஈடேறியது. சிதம்பரத்திற்குப் பயணமானார். அங்கு அவர், தீயில் புகுந்து, நடந்து, வெளிவர கேட்டுக் கொள்ளப் பெற்றார். பரமனது புகழைப்பாடி, ஆடிக்கொண்டே, ஒரு வித ஊறுமின்றி அவர் அங்ஙனமே வெளிவந்தார். அது கண்ட மக்கள் அவர் ஒரு சிறந்த பக்தர் என்று போற்றினர். பிறகு கோயில் குருக்களால் அவர் கோவிலுக்குள், நடராஜர் சந்நிதிக்கு அழைத்துச் செல்லப் பெற்றார். அங்கு நந்தனர்,
நடராஜா நடராஜா
நர்த்தன சுந்தர நடராஜா
என்று உள்ளம் கசிந்து உருக, கண்களில் நீர் தாரை தாரையாகப் பெருகப் பாடினார்.
அங்ஙனம் பாடிக்கொண்டே, சுவாமி முன்னர் அவர் தரையில் விழுந்துவிட்டார். பூத உடலைவிட்டு அவரது ஆவி பிரிந்து சென்று நடராஜரோடு கலந்துவிட்டது.
கேள்விகள்
- நந்தனார் எந்த குலத்தைச் சேர்ந்தவர்?
- எந்த வகைகளில் அவர் மற்ற சிறுவர்களிடமிருந்து தனித்து இருந்தார்?
- கடவுளுக்கு அவர் எப்படி தொண்டாற்றினார்?
- நந்தனார் ஒரு சிறந்த பக்தர் என்று அந்தணத் தலைவரை நம்ப வைக்க எப்படி முடிந்தது?
- நந்தனார் சிதம்பரத்திற்குச் சென்றதை விளக்குக.
[Source:Stories for Children – II, Sri Sathya Sai Books & Publications, PN.]