நரசின்ஹ மேத்தா

Print Friendly, PDF & Email
நரசின்ஹ மேத்தா

நரசின்ஹ மேத்தா, தாலஜா என்ற கிராமத்தில் பிறந்தார். அது குஜராத்தி மாநிலத்தில் பவ நகர் அருகில் உள்ளது. அவர் சிறுவனாக இருந்த போதே அவரது பெற்றோர் இறந்து விட்டனர். அவர் தன் தமையனோடும் அண்ணியோரோடும் வசித்து வந்தார்.

ஒரு நாள் அவரது அண்ணி அவரை ஏனோ கடுமையாகப் பேசிவிட்டாள். அவரால் அவளது கொடுஞ் சொற்களைத் தாங்கவே முடியாது போயிற்று. அன்றே வீட்டை விட்டகன்று அவர் அடுத்துள்ள காட்டிற்குச் சென்று விட்டார்.

அங்கிருந்த ஒரு சிவன் கோவிலில் அன்ன ஆகாரமின்றி ஏழு நாட்கள் தங்கியிருந்தார்.

அங்கு தனக்கு நேரிட்ட இன்னலை ஒரு பாடலாக அவர் வெளியிட்ட போது, அவரது தூய பக்தியையும் ஆர்வத்தையும் கண்டு சிவனார் மிகவும் மகிழ்ந்தவராய் அவர் முன் தோன்றினார். நரசின்ஹர் விரும்பிக் கேட்கும் வரம் தருவதாகவும் கூறினார். தனக்கு எது மிக நல்லது என்று இறைவன் விரும்புகிறாரோ அதையே நல்கியருளும்படி நரசின்ஹர், ஐயன் தருவதாகச் சொன்ன வரத்தை அவரது இனிய கருத்துக்கே விட்டுவிட்டார்.

சிவன், பிறகு, அவரை துவாரகைக்கு அழைத்துச் சென்று கிருஷ்ணர் கோபிகைகளோடு ஆடும் ராசலீலையைக் காட்டினார். துவாரகையில் நரசின்ஹர் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார். கிருஷ்ணபிரான் அவருக்குக் கை நிறைய பல வண்ண மலர்களைத் தந்து, மலர்களைப் போல மணமும் எழிலும் மிக்க பாடல்களை இயற்றும்படி பணிந்தார். அவர் ஊருக்குத் திரும்பிய போது அண்ணனும் அண்ணியும் அவரை மகிழ்ந்து வரவேற்றனர். அவரது வாழ்க்கை இப்போது முற்றிலும் மாறியிருந்தது.

ஹரியின் திருநாமத்தைப் புகழ்ந்து பாடிக் கொண்டும், இடைவிடாது ஹரியையே சிந்தித்துக் கொண்டும், ஹரியின் சிறப்பையே பேசிக்கொண்டும் இருப்பதில் பெரும் விருப்பம் கொண்டார். அவர் அண்மையிலிருந்தும் சேய்மையிலிருந்தும் பெருவாரியாக பக்தர்களும், ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்களும் அவரது பேச்சைக் கேட்கக் குழுமினர். அந்த சமயம் அவர் ஜூனகாத் என்ற சிறிய நகரத்திற்குக் குடி வந்து விட்டார்.

கிருஷ்ணபிரானிடம் அவர் கொண்டிருந்த பக்தியையும் நம்பிக்கையையும் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த சில குறிப்பான நிகழ்ச்சிகள் விளக்குகின்றன. அவற்றில் ‘மமெரா’, ‘ஹூண்டி’, ‘ஹாரம்’, இவை குறிப்பிடத்தக்கவை. மமெராவின் ஒரு நிகழ்ச்சியில் அவர் ஒரு நாள் குளிப்பதற்கு மிகுந்த சூடுள்ள வெந்நீர் தரப்பட்டார். தக்க சூட்டில் கலந்துக் கொள்ள தண்ணீரும் அங்கில்லை அப்போது அவர் ‘மால்ஹார்’ என்ற ராகத்தில் ஒரு பாட்டைப் பாடினார் சரியான நேரத்தில் இறைவன் திருவருள் புரிந்து குளிர்ந்த நீரை அவருக்கு மழையாகப் பொழிந்தார். அந்த நிகழ்ச்சியை அவர் ஒரு பாடலில் இங்ஙனமாகப் பாடியுள்ளார்.

“என்னுடைய மருமகள்கள் மிகச் சூடான வெந்நீரைக் குளிக்கத் தந்தனர். அந்தச் சமயம் ப்ரபுவே! தாங்கள் குளிர்ந்த மழையை அனுப்பி தங்கள் ஊழியனைக் காப்பாற்றினீர்கள்.”

துவாரகையில் கூட இறைவன் ‘சமால்ஷா சேட்’டாக ஒரு முறை உருவெடுத்து வந்து தல யாத்திரிகர்களுக்கு ரூ 700/- தரும்படி நேரிட்டது- அவர்கள் ஜூன காத்திலுள்ள நரசின்ஹா மேத்தாவிடம் பணம் தந்து வைத்திருந்தனர். அந்த சமயம் அவர் தர இயலாது போகவே கிருஷ்ணபிரான் அவருக்காகத் தர நேர்ந்தது.

ஹாரம் நிகழ்ச்சி பரிவு மிகுந்து நெஞ்சம் நெகிழ வைப்பதாகும். அரசன் இராமன் தனிக்கண் என்பவன் நரசின்ஹனைச் சிறையில் அடைத்து விட்டு, இறைவன் அவரது கழுத்தில் ஒரு மாலையிட்டால் தான் அவரை விடுவிக்கப் போவதாகக் கூறிவிட்டான். மறுநாள் காலைக்குள் அங்ஙனம் நிகழாவிட்டால், அவர் தலையைக் கொய்து விடுவதாகவும் அச்சுறுத்தினான். தம் இதயத்தின் அடித்தளத்திலிருந்து எழும்பிய உருக்கத்தோடு மேத்தா இரவு முழுவதும் இறைவன் புகழைப் பாடிக் கொண்டேயிருந்தார். துவக்கத்தில் அவர் இறைவனைக் கெஞ்சியும், இரங்கியும் வேண்டினார். பலன் ஒன்றும் இல்லை, பொழுதே விடிந்து கொண்டிருந்தது- பிறகு ஒரு கொடிய நார்குலத்தவனைப் போல தந்திரமாக இறைவனைத் தாக்கலானார் மேத்தா.

“இறைவா! என்னுடைய பூர்வ கர்மங்களைப் பார்க்காதீர்கள். அங்ஙனம் செய்தால் ‘பதீதபாவன’ என்ற தங்களது பட்டம் பறந்து விடும்” “என்னைப் புறக்கணிக்க நினைத்தீர்களானால் அது தங்களால் இயலாத செயல். ஏனெனில் அப்புறம் மக்கள் தங்களை நிந்தித்து எள்ளி நகையாடுவர்” என்று எச்சரித்தார்.

அப்போதும் கூட இறைவர் வந்து அருள்வதற்கு அறிகுறியாக ஏதுமே வழி புலப்படவில்லை. அதனால் சத்தம் போட்டு உரக்க, “நீ எதற்காக ஒரு பூமாலையைப் போட்டுக் கொண்டிருக்கிறாய்? அது போன்று ஒரு மாலையை எனக்கு அருளினால் உன் புகழ் எங்கும் பரவுமே! நான் உன் பெருமையைத் தானே பாடிக் கொண்டிருக்கிறேன். நீ உன் பக்தனை இத்தகைய இடுக்கண்ணான நிலையில் காப்பாற்றாவிட்டால், ஒருவருமே உன்னை இனிமேல் வணங்க மாட்டார்கள். நான் இறப்பதற்கு அஞ்சவில்லை ஆனால் இறந்து விட்டால் நீ தான் மிகவும் இகழப்படுவாய்,” என்று பலவாறு மிகவும் கலங்கி மனம் நொந்தவராய் பிதற்றலானார். இறுதியாக இறைவர் நரசின்ஹ மேத்தாவின் பக்தியைக் கண்டு மனமிளகினார். உடனே வானத்திலிருந்து பூமாலை ஒன்று பறந்து வந்து அவர் கழுத்தில் விழுந்தது.

பல நெருக்கடியான நேரங்களில் பகவான் கருணையுடன் மேத்தாவின் உயிரையும் பெருமையையும் காப்பாற்றியருளியதைக் குறிக்கும் நிகழ்ச்சிகள் அவரது வரலாற்றில் நிறைந்துள்ளன. அவர் ஒரு சிறந்த பக்தர் மட்டுமல்ல. சங்கராச்சாரியாரைப் போன்று, அத்வைத சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு பெரும் ஞானியுமாவார். வேதம், உபநிஷத்துக்கள், ஸாஸ்திரங்கள் எல்லாம் கற்றறிந்து இருந்த அவர் சில சமயம் உடலுக்கு இன்றியமையாத உணவு போன்றவை கூட ஏற்காமல், தம்முடைய ஆழ்ந்த பக்தி நிலையில் அமிழ்ந்து விடுவார். பசி தாகம் அவரை வருந்தியதில்லை. உலகியல் இன்பங்களும் துன்பங்களும் கூட அவரை ஆட்கொண்டதில்லை. இறையுணர்வு தூண்டிய பேரின்ப நிலையில் இருக்கும் போது, தம்மைப் பற்றி மக்கள் என்ன சொல்வார்கள் என்று கூட அவர் கவலை பட்டதே கிடையாது. அவரது ஆன்மீக சாதனையின் முன்னேற்றத்தில் உலகியல் செயல்கள் புகுந்து, அவரை உயர்த்தவோ தாழ்த்தவோ இயலாது இருந்தது. அவருடைய மனம், அறிவு, புலன்கள் எல்லாமே இறைவரது பேரின்பத்தில் திளைத்திருந்தன. அவர் ஆண்டவனிடம் பரிபூர்ண சரணாகதி அடைந்து விட்டிருந்தார். இத்தகைய பரிபூர்ண சரணாகதி பக்தர்கள் சிலரிடமே காணப் பெறுவதாகும்.

மேத்தா, அன்பானவர், கனிவானவர், பெருந்தன்மையாளர், எல்லோருடனும் சினேக பாவத்துடன் நடப்பவர். மக்கள் ஆன்மீக எழுச்சி பெற வேண்டுமென அவர் பெரிதும் முயன்றார். தம் பாடல்கள் மூலம் ஆன்மீக வழிகளைப் பரப்பி வந்தார். குழந்தைகள் இத்தகைய பக்தர்களது வரலாறுகளைப் படித்து, இறையன்பு மீதூரப் பெற்றவர்களாய், இறைவனிடமும், அவருடைய படைப்புகளிடமும் அன்பு கொள்ளல் வேண்டும்.

[Illustrations by A. Priyadarshini, Sri Sathya Sai Balvikas Student.]
[Source: Stories for Children II, Published by Sri Sathya Sai Books & Publications, PN]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: