அறிவுறுத்துவதற்கு முன் அவற்றைக் கடைப்பிடி

Print Friendly, PDF & Email
அறிவுறுத்துவதற்கு முன் அவற்றைக் கடைப்பிடி

மகான்கள் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகி வந்த செயல்களையே மற்றவர்களுக்கு போதித்து வந்தனர். அதனால்தான் அவர்களது அறிவுரைகள் நமக்கு நன்மையை நல்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன.

மேன்மைமிக்க குரு ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸரது சீடர்களில் ஒரு எளிய பெண்மணியும் இருந்தாள். ஒருநாள் அவள் தன் மகனோடு அவரிடம் வந்து, “குருதேவா! என் மகன் தினமும் இனிப்பு பண்டங்கள் சாப்பிட விரும்புகிறான். இனிப்பு அவனது பற்களைக் கெடுத்து விடுகிறது. அவை விலை மிகுந்தவையாகவும் இருப்பதால், நாள் தோறும் அவனுக்கு வாங்கிக் கொடுப்பது எனக்கும் தொல்லையாக இருக்கிறது. என்னுடைய அறிவுரையும், எச்சரிக்கையும், தண்டனையும் அவனைத் திருத்தமுடியாது பயனற்றுப் போகின்றன. இந்த கெட்டபழக்கத்தை விட்டு விடுமாறு தாங்கள் அவனுக்கு நல்ல முறையில் அறிவுறுத்தி அவனை வாழ்த்தி அருள வேண்டுகிறேன்” என்றாள்.

இராமகிருஷ்ணர் சற்று நேரம் அந்தப் பையனையே உற்றுப் பார்த்தார். ஆனால் அவனிடம் ஒன்றுமே பேசாது, இரண்டு வாரங்கள் சென்ற பிறகு மறுபடியும் மகனோடு வருமாறு அந்தப் பெண்மணியிடம் சொன்னார்.

அதே போல அவள் மகனோடு இரண்டு வாரங்களுக்குப் பிறகு மறுபடியும் அவரிடம் வந்தாள். அவர்கள் இருவரும் அமர்ந்த பிறகு ஸ்ரீ இராமகிருஷ்ணர் பரிவுடன் அந்தப் பையனைப் பார்த்து, “என் அருமைக் குழந்தாய்! நாள் தோறும் இனிப்புப் பண்டம் வேண்டுமென்று உன் அன்னையைத் தொல்லைபடுத்துவது உண்மைதானா?” என்று கேட்டார்.

அந்தப் பையன் உடனே வருத்தமாகத் தலையை கீழே தொங்கவிட்டுக் கொண்டான். “ஆம் ஐயா!” என்று மட்டும் கூறிவிட்டு மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் வாளாவிருந்தான். “நீ ஒரு அறிவிற்சிறந்த பையன். அத்தகைய இனிப்புகள் உன் பற்களைக் கெடுத்துவிடுகின்றன என்பதையும் நீ அறிவாய். உன் அன்னையும் உன்னைப் பற்றி மிகவும் கவலைப் படுகிறாள். அவள் இது போல உனக்கு இனிப்பு வாங்கப் பணம் செலவழித்து வந்தால், உன் படிப்புக்காக புதிய புத்தகங்களும், நீ அழகுற அணிய நல்ல ஆடைகளும், அவள் எங்ஙனம் வாங்க இயலும்? நீ ஒரு பெருந்தவறு செய்து வருகிறாய் என்று உனக்குத் தோன்றவில்லையா?” என்று கனிவாக அறிவுறுத்தினார். ஸ்ரீஇராமகிருஷ்ணரது அன்பு கலந்த அறிவுரை அவன் இதயத்தைத் தொட்டது. மெதுவாகத் தலை நிமிர்ந்து அவரைப் பார்த்தான். பிறகு மெல்லிய குரலில் ஆம் ஐயா!”, என்று மட்டும் கூறி விட்டு மீண்டும் மௌனமானான்.

“இன்றிலிருந்து இனிப்புக் கேட்பதை நீ நிறுத்தி விடுவாய் இல்லையா?” என்று இராமகிருஷ்ணர் குழைந்து விண்ணப்பித்துக் கொள்வது போன்ற குரலில் கேட்டார். அவரது கனிவான வேண்டுகோள் அந்தப் பையனின் முகத்தில் மலர்ச்சியை உண்டுபண்ணியது. புன்னகையுடன், “ஆம் ஐயா! இன்றிலிருந்து இனிப்புக் கேட்டு என் அன்னையைத் தொல்லைப் படுத்தும் வழக்கத்தை நிறுத்திவிடுகிறேன்” என்று உறுதியாகக் கூறினான்.

இராமகிருஷ்ணர் அவனது திடமான பதிலினால் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். அவனை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டார். “மகனே! நீ ஒரு நல்ல பையன், உன் நலனுக்கு எது நல்லது, எது கேட்டது என்பதை நன்றாகப் புரிந்து கொள்கிறாய். நீ நிச்சயமாக இன்பம் நிறைந்த மனிதனாக வளர்வாய்,” என்றார். அவன் அவர் கால்களில் பணிந்து வணங்கினான். அவனை வாழ்த்தி அருளிவிட்டு அவர் மற்ற பக்தர்களை கவனிக்கத் திரும்பினார்.

பிறகு சிறுவன் தோட்டத்திற்குள் சென்றான். அவனுடைய அன்னை இராமகிருஷ்ணருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து விட்டு, “குரு தேவா! இத்தகைய சுருக்கமான, மிகச் சிறந்த அறிவுரை வழங்குவதற்கு ஏன் இரண்டு வார காலம் எங்களைக் காக்கவைத்தீர்கள்?” என்று கேட்டாள்.

இராமகிருஷ்ணர் அதற்கு இளநகையுடன், “அம்மா! நீ இரண்டு வாரங்களுக்கு முன்னர் என்னிடம் வந்த போது நானே பக்தர்கள் கொண்டு தரும் இனிப்புப் பண்டங்களை அவ்வப்போது தின்று வருபவனாக இருந்தேன். அப்படியிருக்க, நானே கடைப்பிடித்து ஒழுகாத செயலை உன் மகனைச் செய்யும்படி நான் எப்படி வற்புறுத்த இயலும்? அதனால் அன்றிலிருந்து முதலில் நான் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தினேன். அந்தச் செயல்,நான் வழக்கத்தில் கொண்டுள்ள ஒரு கொள்கையை, அவனுக்கும் போதிக்கத் தகுந்த வலிமையையும் ஆற்றலையும் தந்தது.

நாம் கடைப்பிடித்து ஒழுகுவதையே அறிவுறுத்தினால் தான் நம் சொற்கள் நம்பத் தகுந்தனவாகவும், வேண்டுகோள் போலவும், கேட்பவருக்கு நலம் பயப்பனவாகவும் தோன்றும். இன்று அதே போலத் தான், நான் கடைப்பிடிப்பதையே போதித்தேன்” என்று விளக்கம் கூறினார் இராமகிருஷ்ணர். அன்று அனைத்துப் பக்தர்களும் கூட இராமகிருஷ்ணர் போதித்த அந்த சிறந்த பாடத்தைக் கற்றுக் கொண்டதாக உணர்ந்து மகிழ்ந்தனர்.

கேள்விகள்:
  1. இனிப்பு சாப்பிடுவதை விட்டுவிடும்படி வந்த அன்றே அந்த சிறுவனுக்கு அறிவுறுத்தாமல் இரண்டு வாரங்கள் கழித்து மறுபடியும் அன்னையையும் மகனையும் வரும்படி ஏன் இராமகிருஷ்ணர் கூறினார்?
  2. தான் கடைப்பிடித்து வராத செயலை ஒருவன் பிறருக்குப் போதித்தால் என்ன நேரிடும்?
  3. உன் சொந்த அனுபவத்திலிருந்து விளக்கு: (அ) தானே கடைப்பிடிக்காத ஒரு செயலை உனக்கு ஒருவர் உபதேசிக்கிறார், (ஆ)தான் கடைப்பிடித்து ஒழுகி வருவதை உனக்கு ஒருவர் உபதேசிக்கிறார். இரண்டு நிலைகளிலும் உன்னுள் ஏற்படும் மாற்றம் எப்படியிருக்கும்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன