தற்பெருமை தாழ்வைத்தரும்

Print Friendly, PDF & Email
தற்பெருமை தாழ்வைத்தரும்

கிருஷ்ணபிரானும் அர்ஜுனனும் ஒருமுறை யமுனை நதிக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். ஆற்றங்கரை கிருஷ்ணரது மனதில் இளமைப் பருவத்தில் தாம் அங்கு விளையாடிய நினைவுகளை எழுப்பியது. அர்ஜுனனோ, அண்மையில் துவங்க இருக்கும் குருக்ஷேத்திரப் போரைப் பற்றியே எண்ணி வந்தான். கௌரவர்களைப் பற்றி நினைக்கும்போதே, போர்த்துறையில் சிறந்த வில்லாண்மையாளனாக அவன் பெற்றுள்ள துணிவையும் ஆற்றலையும் எண்ணியவனாய் விழிப்புணர்வோடு இறுமாந்து இருந்தான். “இந்த உலகத்தில் வில்லாண்மையில் எனக்கு நிகரானவர் எவருமேயில்லை“ என்று அகந்தையோடு தனக்குள் சொல்லிக் கொண்டான். அருகில் யமுனை நதி சுழித்து ஓடுவதைப் பார்த்ததும் அந்த அகன்ற நதியின் மீது தான் ஒரு விற்பாலத்தையே கூட அமைக்க முடியும் என்று செருக்குற்றான்.

உடனே அவனுக்கு ஒரு விசித்திர எண்ணம் தோன்றியது. “இராமர் இராவணனோடு போர் புரிய இலங்கைக்குப் போகும்போது செய்ய இயலாமற் போனதைக் கூட என்னால் செய்யமுடியும்,” என்று தனக்குள் ஆணவத்துடன் கூறிக்கொண்டான்.

கிருஷ்ணர் அவன் மனதில் தற்பெருமையும், அகந்தையும் தலை தூக்குவதை உடனே கண்டு கொண்டார். அவர் அவனிடம், “அர்ஜுனா! உனக்குள்ளாகவே ஏதேதோ பேசிக்கொண்டு சிரிக்கிறாய் போலிருக்கிறதே! நான் செய்த தவறு ஏதாவது உன்னை இங்ஙனம் சிந்திக்க வைக்கிறதா?” என்று கேட்டார். அவரது பேச்சு அவனைச் சற்றுத் தடுமாற வைத்தது. பின்னர் தெளிந்து, “உண்மைதான் நான் எனக்குள் சிரித்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் அது ஏனென்றால், எனக்குத் திடீரென ஒரு விந்தையான நினைவு உண்டாகியது. இராமர் இலங்கைக்குக்குப் போகும்போது கடல் மீது பாலம் கட்டக் குரங்குக் கூட்டத்தை அமர்த்திக் கொண்டார். நான் மட்டும் அங்கு இருந்திருந்தால் அம்புகளினாலேயே கண் சிமிட்டும் நேரத்தில் ஒரு பாலம் அமைத்திருப்பேன். இதை நினைத்துத்தான் நான் சிரித்தேன்” என்று பெருமையோடு கூறினான் அர்ஜுனன்.

அர்ஜுனனின் அகந்தையை அடக்கக் கிருஷ்ணர் உறுதி கொண்டார். பெரிய குரங்குப் படையின் கனத்தை அம்புப் பாலம் தாங்க முடியாமல் நொறுங்கி விழுந்து விடும் என்பதாலேயே இராமர் அம்பினால் பாலம் அமைக்கவில்லை என்று தெளிவாக்க முயன்றார். ஆனால் அர்ஜுனனின் செருக்கு அதை ஏற்க விடவில்லை. “குரங்குகளின் பாரத்தைத் தாங்கும் அளவுக்கு இராமரால் அம்புப் பாலம் அமைக்க முடியவில்லை என்று இதனால் தெளிவாகிறதல்லவா?” என்று மேலும் திடமாகக்கூறினான்.

கிருஷ்ணர் ஒரு நொடி நேரம் சிரித்தார். பிறகு சற்று மகிழ்ந்தவராய் “இராமர் படையிலிருந்த வலிமை மிக்க குரங்கு ஒன்று இன்னும் உயிருடன் உள்ளது. யமுனையின் மேல் அம்புகளால் ஒரு பாலம் அமைத்துவிடு. நான் அந்தக் குரங்கைக் கூப்பிட்டு உன் பாலத்தின் உறுதியைச் சோதிக்கச் செய்கிறேன்” என்று உத்தரவிட்டார். அர்ஜுனன் பெருமை மிகுந்தவனாய் கிருஷ்ணரது அறை கூவலை ஏற்றான். சற்று நேரத்தில் நதியின் இரு கரைகளையும் சேர்த்து அம்புகளைக் கொண்டு ஒரு அழகிய பாலம் அமைத்து விட்டான்.

“ஹே அனுமான்! விரைவில் வா! என்று கிருஷ்ணர் விளித்தார். அடுத்த நொடியே ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த மாபெரும் குரங்கு ஒன்று கிருஷ்ணர் முன்பு வந்து அவரது பாதங்களில் பணிந்து வணங்கியது. கிருஷ்ணர் அந்த குரங்கை அம்புப் பாலத்தின் மேல் நடக்கச் சொன்னார்.

அவன் கட்டிய பாலம் ஒரு குரங்கின் பாரத்தைத் தாங்காமல் உடைத்து விடப் போகிறது என்ற கிருஷ்ணரது அச்சத்தை ஏளனம் செய்யும் வகையில் அர்ஜுனன் வாய் விட்டு உரக்க நகைத்தான். குரங்கு சற்று தாமதித்த பிறகு, தன் வலக்காலைப் பாலத்தின்மேல் வைத்தது. அடுத்த காலை அது உயர்த்தும் முன்னரே ஒரு பெரும் சத்தத்துடன் முழுப் பாலமும் நொறுங்கி விழுந்து விட்டது. உடனே அர்ஜுனன் அவமானத்தினால் குன்றிப் போனவனாய் வில்லையும் அம்பையும் வீசி எறிந்து விட்டுக் கிருஷ்ணரது திருவடிகளில் தொய்ந்து விழுந்தான்.

கிருஷ்ணர் அமைதியாக அறிவுரை கூறி அர்ஜுனனுக்கு ஆறுதல் அளித்தார். “மனதைத் தளரவிடாதே அர்ஜுனா! இந்த வலிமை மிக்க குரங்குகளை தாங்கும் வகையில் இராமரால் கூட அம்புகளால் பாலம் அமைக்க முடியாது. அதனால், உன்னால் இயலாமற் போனமைக்காக நீ ஏன் அவமானத்தில் குன்றிப் போக வேண்டும்? நீ எப்போதும் ஒரு பாடத்தை நினைவில் வைத்துக் கொள். அதாவது தற்பெருமையையும், அகந்தையையும் உன் மனத்தை எப்போதும் பற்ற விடாதே. ஒரு வீரனுக்குத் தவறாது வீழ்ச்சியைத் தரக் கூடிய மிக மோசமான எதிரிகளாகும் அவை” என்று அறிவுறுத்தினார்.

அர்ஜுனன் கிருஷ்ணரது அறிவுரைகளைத் தயங்காது ஏற்றுக்கொண்டான். அதன் பயனாகப் பின்னர் நடைபெற்ற குருக்ஷேத்திரப் போரின்போது அர்ஜுனன் தன் தேரின் மீது பறந்த “கபித்வஜம்” என்ற கொடியில் அனுமாரது உருவத்தைப் பொறித்துக் கொள்ளும் பேறு பெற்றான்.

கேள்விகள்:
  1. தற்பெறுமையும் செருக்கும் ஏன் தீமை விளைவிப்பனவாகும்? அவை என்ன தீமை புரியக்கூடும்?
  2. கிருஷ்ணர் அர்ஜுனரிடம் எத்தகைய மாறுதலை உண்டாக்கினார்?
  3. பள்ளி மாணவன் வகுப்பில் முதலாவதாக வந்து, அதனால் அகந்தையும், தற்பெருமையும் அடைந்தானானால் அவனுக்கு என்ன தீங்கு நேரிடக்கூடும்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன