தற்பெருமை (மதம்)

Print Friendly, PDF & Email
தற்பெருமை (மதம்)

ஒருமுறை அரக்கரை எதிர்த்துப் போரிட்டுத் தேவர்கள் வென்று விட்டனர். கடவுளுடைய நல்ல கருணையால் தான் அவர்கள் அங்ஙனம் வெற்றிக் கொள்ள முடிந்தது. ஆனால் அறியாமையினால், வெற்றி பெற்ற பெருமை, தங்களுடைய திறமையினால் தான், என்று தங்களையே பாராட்டிக் கொண்டு அவர்கள் தற்பெருமையும் அகந்தையும் அடைந்தனர். “உண்மையாக இந்த வெற்றிக்கும் புகழுக்கும் காரணம் தாமேதான்” என்று இறுமாந்திருந்தனர்.

பிரம்மா இதை அறிந்தார். அவரவர்களுடைய தகுதியை உணர்த்தி அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க எண்ணினார். மகிழ்ச்சியின் எல்லையில் அவர்கள் களித்திருக்கும் போது, அவர்கள் எதிரில் திடீரெனத் தோன்றினார். ஆனால் இறுமாப்பும், வீணான தற்பெருமையும் கண்களை மறைத்திருந்ததால் எப்படி அவர்களால் அவரைக் கண்டு கொள்ள இயலும்? யாரோ விந்தையான உருவம் தங்கள் முன் நிற்பதை உணர்ந்தனரே தவிர, அவர் யார் என்று திட்ட மாக அவர்களால் அறிந்துக்கொள்ள முடியவில்லை. கருத்தோடு அவரைப் பற்றி அறிந்து கொள்ள பல வழிகளில் முயன்றனர். பிறகு நெருப்பின் தலைவனும் எல்லாம் அறிந்தவனுமாகிய அக்னியை, அவர் யாரென்று துப்பறிந்து வரும்படி ஏவினர்.

அக்னி விந்தையாக வந்து நின்றவரை அணுகினான். “நீ யார்?” என்று பிரம்மா அவனைக் கேட்டார். “ஏன்! நான்தான் புகழ் வாய்ந்த அக்னி தேவன், எல்லாம் அறிந்தவன் என்று என்னை போற்றுவார்கள்,”என்றான் அக்னி இறுமாந்து.

“உன் பெயரும் புகழும் அங்ஙனமாயின், நீ என்ன ஆற்றல் பெற்றிருக்கிறாய் என்று நான் அறிந்து கொள்ளலாமா?”

“உலகத்தின் மேலுள்ள, ஆகாயத்திலுள்ள, ஏழு உலகிலும் உள்ள எல்லாப் பொருள்களையும் நொடியில் எரித்து விட என்னால் முடியும்.”

பிரம்மா அவன் எதிரில் ஒரு நீண்ட காய்ந்த புல்கட்டை வைத்தார். “வலிமை மிக்கவனே! இந்த கட்டை எரித்து உதவி புரி” என்றார்.

அக்னி தன் திறமையெல்லாம் பயன்படுத்தி அதை எரிக்கப் பார்த்தான். ஒரு பொறி கூட அவனால் அதில் பற்றி விட முடியாது போயிற்று. அவமானமுற்றவனாக தேவர்களிடம் திரும்பி விட்டான் அவன். அங்கு வந்திருக்கும் விந்தையானவரைத் தான் தெரிந்து கொள்ள முடியவில்லை என்று அவர்களிடம் தன் தோல்வியை ஒப்புக் கொண்டான்.

பிறகு வாயு, காற்றுக் கடவுள், அடுத்தபடியாக சென்று துப்பு துலக்கி வரவும், அக்னியின் முயற்சியை எது செயலாற்றுப் போகச் செய்தது என்று அறியவும் ஏவப்பட்டான். வாயு வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கையோடு விரைந்து சென்றான்.

தம்மை நெருங்கியவுடன் அவனையும் “யார் நீ?” என்று பிரம்மா வினவினார். “எல்லாரும் அறிந்திருக்கும் காற்றின் கடவுள் நான். பரந்த ஆகாயமெங்கும் பரவி வீசும் தேவதை என்றும் கூறப் பெறுவேன்” என்றான் வாயு.

“உனக்கு என்ன ஆற்றல் தன்மையிருக்கிறது?” பிரம்மா கேட்டார்.

“என்னுடைய வலிமை மிக்க வீச்சினால் உலகத்தில் நிறைந்திருக்கும் அனைத்தையும் வாரி எடுத்துச் செல்ல முடியும்” என்று வாயு கூறினான்.

பிரம்மா அவன் முன் ஒரு துண்டு வைக்கோலைப் போட்டார். அதை வீசித் தள்ளும்படி வாயுவிடம் கேட்டார்.

பெரும் முயற்சி செய்தும் ஒரு மயிரளவு கூட வாயு ,அந்த வைக்கோல் துண்டை அசைக்க முடியவில்லை. அவனும் தோற்றுத் திரும்பிச் சென்று தன் தோழர்களிடம் புதியவரை அறிந்து கொள்வது என்பது அவன் சக்திக்கு அப்பாற்பட்ட செயலாக இருப்பதைத் தெரிவித்தான் .

தேவர்கள் அடுத்து இந்திரனைப் போகும்படி கேட்டுக் கொண்டனர். “பெருந்தனவானே! இருவரையும் தோற்கடித்த இந்த தனித்தன்மை வாய்ந்தவரை உன்னால் இனம் கண்டு கொள்ள முடியுமா என்று முயன்று பாருங்கள்” என்று அனுப்பினர்.

தேவர்களின் தலைவனான ஆற்றல் மிக்க இந்திரன், அவன் சொல்லுக்கு இணங்கியவனாய் சென்றான். அவன் அந்த விந்தையானவரை அடையுமுன்னரே, அவர் மறைந்து விட்டார். அவர் நின்ற இடத்தில், எழிலுருவாக ஒரு பெண்மணி நின்றாள்.

ஆடம்பரமான நகைகளை ஏராளமாக அணிந்து கொண்டு, அங்கு ஆன்மீக ஞானத்தின் தேவதையான உமா நின்றிருந்தாள்.

இந்திரன் துணிவு மிக்கவனாய் அவளிடம் சென்று, “நீ இப்போது நிற்கும் இடத்தில் வியப்பைத் தூண்டும் வகையில் சற்று முன்பு நின்றிருந்தவர் யார்?” என்று கேட்டான்.

அதற்கு உமா, “அறிவிற் குன்றியவர்களே! இதை அறிந்து கொள்ளுங்கள்! அவர் தாம் பிரம்மா! அரக்கரோடு போரிட்டபோது உங்களுக்கு வெற்றியை தந்தவர் அவரே! உங்களை வெற்றி பெறச் செய்த அவரை பெருமையோடு போற்றுங்கள்!” என்றாள்.

பிரம்மா தான் தங்கள் முன்னர் தோன்றினார். என்று இந்திரன் உணர்ந்து கொண்டதும், தன் தோழர்களிடம் சென்று நடந்த உண்மையைத் தெரிவித்தான். தங்கள் குற்றத்தை உணர்ந்தவர்களாய் அவர்கள் பரம் பொருளின் பேரறிவைப் போற்றினர்.

கேள்விகள்:
  1. தேவர்கள் ஏன் தற்பெருமை கொண்டிருந்தனர்?
  2. அக்னி எங்ஙனம் அவமானப் படுத்தப் பட்டான்?
  3. வாயுவால் ஏன் வைக்கோலை அசைக்க முடியவில்லை?
  4. உமா இந்திரனுக்கு என்ன கற்றுக் கொடுத்தாள்?
  5. இக்கதையின் கருத்து என்ன?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன