புரந்தரதாசர்
புரந்தரதாசர்
புரந்தரதாசர் என்பது கர்நாடகத்தில் ஒரு குடும்பப் பெயராகும். அவர் கர்நாடக சங்கீதம் எனப்பெறும் தென்னிந்திய இசையில் ஒரு வல்லுநராக விளங்கினார். அவர் 4,75,000 கீர்த்தனங்கள், (தெய்வீகப் பாடல்கள் இயற்றியுள்ளார். அவரது கீர்த்தனம் ஒன்றில், அவர் கூறுகிறார்: “கேதாரி நாத்திலிருந்து இராமேஸ்வரம் ஒன்றில், அவர், புனித யாத்திரை சென்று கொண்டே நான் 4,75,000 கீர்த்தனைகளை இயற்றினேன். அவை இறைவன் வாசுதேவனையும், அவரது மற்ற அவதாரங்களையும் புகழ்பவனாக அமைந்துள்ளன. மற்றும் என் ஆன்மீக குரு வியாசராயரது புகழினையும் அவை கூறுகின்றன”. புரந்தரதாசர் பல புதிய இராகங்களையும், தாளங்களையும் கூட அமைப்பதில் வல்லவராக சிறப்புற்றிருந்தார்.
புரந்தரதாசரது பாடல்கள், புகழ்பெற்ற இசை மேதையையும், சிறந்த மகானுமான தியாகராஜருடைய சிந்தனைகளை ஒட்டிப் பாடப்பெற்றன என்று எல்லோரும் கூறுகின்றனர். தென்னிந்திய பாடகர்கள் எல்லோருமே புரந்தரதாசர் இயற்றிய பாடலோடுதான் இன்னிசை விருந்தைத் துவக்குகின்றனர். இசையின்பத்தோடு அவர் அவற்றில் கூறியுள்ள இலக்கிய கருத்துரைகள், நிறைந்தும் உயர்ந்தனவாகவும் அமைந்துள்ளன. எக்காலத்திலும் அருளார்ந்த நினைவோடு படித்து, பாடப்பெறுவனவாக அவை இருந்தன. இது போன்ற மகான்களைப் பெற நம் நாடு நல்வினை செய்திருக்க வேண்டும்.
கி.பி. 1484-ல் இந்த மகான் பிறந்தார். பூனாவிலிருந்து பதினெட்டு மைல் தொலைவில் புரந்தரதாசம் என்ற இடத்தில் பிறந்தார். இத்தகைய மகனை வாய்க்கப் பெற்றவர்கள் வரதப்ப நாயகரும், கமலா தேவியுமாவர். புனிதமான ஏழு மலையில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வர பெருமானை அவர்கள் பக்தியுடன் வழிபட்டு இத்தகையப் பிள்ளைபேற்றை அடைந்தனர். இறைவன் ஸ்ரீனிவாசன் பெயரையே அருமருந்தென பெற்ற பிள்ளைக்குச் சூட்டி மகிழ்ந்தனர்.
குழந்தை பையனாகி பள்ளியில் சேர்ந்து படித்தார். இசையும், வடமொழியும் அவரது விருப்பப் பாடல்களாக இருந்தன. உரிய காலத்தில் சரஸ்வதிபாய் என்ற நற்குண பெண்மணியை மணந்து கொண்டார். பொருளீட்டுவதிலும், சேமித்து வைப்பதிலும் அவர் மிதமிஞ்சிய ஆவல் கொண்டவராக இருந்ததினால் அவரிடம் இறை தன்மை எதுவுமே பொருந்திருக்கவில்லை. பொருளைச் சேர்க்க சேர்க்க அவர் மேலும் மேலும் பேராசை கொள்ளலானார். பரமனையே மறந்து விட்டு பொன்னையே தொழலானார். தனக்காகவும் ஒரு காசு செலவழிக்க மட்டுமல்ல, பிறர்க்கு தரவும் அவர் மனமொப்பதாவராக இருந்தார். அவரது மனைவி கூட அங்ஙனமே யாருக்கும் எதுவும் கொடுக்க அனுமதிக்கப் பெறவில்லை. சேமிப்பதையே தன் குறிக்கோளாகக் கொண்டிருந்த அவர், ஒன்பது கோடி ரூபாய்க்கு அதிபதியாகி விட்டார். அதனால் நவகோடி நாராயணன் என்று ஊராரால் அழைக்கப் பெற்றார்.
எப்படியிருந்த போதிலும் முன்வினைப் பயனாக ஸ்ரீநிவாசநாயக்கரது வாழ்வில் ஒரு பெறும் மாற்றம் விரைவில் ஏற்பட இருந்தது. எனவே இறைவன் ஒரு வயோதிகராக அவரது கடைக்கு வந்தார். தம் மகனுக்குப் பூணூல் போட கொஞ்சம் பண உதவி செய்ய வேண்டும் என்று அவரிடம் கெஞ்சினார் பெரியவர். இல்லையென்று மறுத்து விடாமல் அன்று தருவதற்கில்லை என்றும், மறுநாள் வரும்படியும், அந்தப் பேராசைக்காரர் பெரியவரைத் திருப்பி அனுப்பி விட்டார். அதிலிருந்து, நாயக்கர் கூறியபடியே, நாள் தவறாமல், அந்த பெரியவர் கடைக்கு வருவதும், மறுநாள் வரச்சொல்லி திருப்பி அனுப்பப்படுவதுமான , இந்த நாடகம் ஆறு மாதங்கள் நீடித்தது. பிறகு அப்பெரியவர் உருவில் இருந்த இறைவன், ஸ்ரீநிவாச நாயக்கரது மனத்தை மாற்றுவதற்கு ஒரு மாற்று வழி கண்டுபிடித்தார்.
சரஸ்வதிபாய் தனித்திருந்த சமயம் பார்த்து அந்த பெரியவர் அவளைச் சென்று கண்டு அவளிடம் தான் விரும்பிய உதவியைக் கோரினார். அவள் கணவனுக்கு அஞ்சியவளாய் தயங்கி நின்றபோது பெரியவர், அவளது வைர மூக்குத்தியைக் குறிப்பிட்டு அதையாவது தந்து உதவும்படி கேட்டார். வாய்விட்டு அவர் அங்ஙனம் கேட்டபிறகு ஒரு தகுதியான காரணத்திற்கு உதவுவதற்காக, அவளால் தன் வைர மூக்குத்தியைக் கொடுக்காமல் இருக்க முடியவில்லை. பெரியவர் மனம் நிறைந்து பெற்றுக் கொண்டு அவளை மனம் கனிந்து வாழ்த்தி விட்டு மறைந்தார்.
நாயக்கரது கடைக்கு மீண்டும் வந்தார் பெரியவர். அவரிடம் அந்த மூக்குத்தியைத் தந்து, அதை வைத்துக் கொண்டு 400 ரூபாய் தரும்படி வேண்டினார். அப்போது கூட நாயக்கருக்குப் பணத்தை விட்டுப் பிரிய மனம் வரவில்லை. மறுநாள் வரும்படி கூறினார். பாவம், பெரியவர்! அன்றும் பணம் ஏதும் பெறாமலே திரும்பிச் செல்ல நேர்ந்தது பிறகு நாயக்கர் மூக்குத்தியைப் பாதுகாப்புப் பெட்டியில் எச்சரிக்கையாக வைத்துவிட்டு கடையையும் மூடிப் பூட்டினார். வீட்டிற்கு ஓட்டமாக ஓடி வந்தார். மனைவியிடம் அவளது வைரமூக்குத்தியை அந்தக் கணமே கொண்டு வரும்படி பணிந்தார். பாவம்! அவள் கணவரது கட்டளையைக் கேட்டு கதிகலங்கிப் போனாள், பூஜை அறைக்கு ஓடிச் சென்று, தன்னைக் கணவரது கோபத்தினின்றும் காப்பாற்றும் படி கடவுளிடம் வேண்டினாள்.
இறைவரிடம் இருந்து எந்த வகையான உதவியும் பெறாது போகவே, அவள் ஒரு குவளை நிறைய கொடிய நஞ்சை எடுத்துப் பருகி உயிர் துறக்க உறுதி செய்தாள். அதை அவள் தன் வாயருகில் கொண்ட சென்றவுடன் வியக்கத்தக்க வகையில் நஞ்சு நிறைந்த குவளைக்குள் ஒரு வைரமூக்குத்தி போடப் பெறுவதைக் கண்ணுற்றாள். அவளது நிலைமைக்கு இரங்கி கருணையுடன் வைர மூக்குத்தியை இறைவன் விட்டலனுடைய கண்களுக்குப் புலனாகாத விரல்கள் தான் போட்டன என்று உணர்ந்து கொண்டாள். உடனே அவளுக்காக கணவன் காத்துக் கொண்டு நின்றிருந்த இடத்துக்கு வேகமாகச் சென்று அவரது கையில் வைரமூக்குத்தியைத் தந்தாள் கூடவே தான் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் கழற்றிவிட்டு, “எவ்வளவு நாள் இப்படி பேராசை பிடித்துப் பொன்னுக்கும், பொருளுக்கும் அலைவீர்கள்? மரணம் வந்து பற்றியிழுத்துக் கொண்டு போகும்போது, வெறுங்கையுடன் தானே நாம் போகப் போகிறோம். எனவே எனக்கு கடவுளின் கருணையார்ந்த அன்பு தவிர வேறொன்றும் தேவையில்லை,” என்று கூறியவாறு நகைகளை அவரது காலடியிலேயே போட்டு விட்டாள்.
நாயக்கரால் அவள் பேசி முடிக்கும் வரைகூட அங்கு நிற்க முடியவில்லை. கடைக்கு விரைந்து சென்றார். கதவைத் திறந்து உள்ளே சென்று, பாதுகாப்புப் பெட்டியைத் திறந்தார். அதில் தாம் வைத்துச் சென்ற வைரமூக்குத்தி அங்கு இல்லாதது, சொல்லொணா உணர்வில் அவரை மலைத்து நிற்கச் செய்தது.
இந்த அற்புதமான நிகழ்ச்சி அவரது வாழ்க்கையையே மாற்றி அமைத்து விட்டது. பேச்சற்றுப் போய், என்னவென்று சொல்ல முடியாத ஓரு வேதனையோடு, வீட்டிற்குத் திரும்பி வந்து மனைவியின் காலடியில் சுருண்டு விழுந்து விம்மி விம்மி அழுதார். “சரசுவதி! எல்லாம் வல்ல இறைவனையே அவமதித்த கொடியவன் நான். மன்னிக்க முடியாத குறைகள் பல புரிந்து விட்டேன், என் தலை சுழல்கிறது. என் இதயம் ஈரத் துணியை முறுக்கிப் பிழிவது போல கசக்கிப் பிழியப்படுகிறது. இத்தகைய பற்றற்ற தன்மை பெற நீ பெரும் புண்ணியம் செய்துள்ளாய். நான் கடையில் பெட்டியில் வைத்துபூட்டி விட்டு வந்த மூக்குத்தி உனக்கு எப்படி கிடைத்தது என்று தயவு செய்து எனக்கு விபரமாகச் சொல்லு. அந்த வயோதிகனுக்கு, முதலில் நீதான் அந்த மூக்குத்தியைத் தந்தாயா? நடந்தவனவற்றை எல்லாம் விரிவாகக் கூறு,” என்று வேண்டினார்.
சரசுவதி, வைரமூக்குத்தியை தான் எப்படி எந்த நிலையில் அந்த பெரியவருக்குத் தர நேர்ந்தது என்றும் அதைப் பெற்றுக் கொண்டவுடன் அவர் மறைந்துவிட்ட மாயத்தையும் விரிவாகக் கூறினார். “அந்த வயோதிகர் வேறு யாரும் இல்லை. ஐயன் பாண்டுரங்கனே அங்ஙனம் வந்தார்.” என்று மேலும் கூறினார். அதைக் கேட்டவுடன், நாயக்கர் கண்ணீர் தாரை தாரையாகப் பெருக விசும்பினார். மனம் கசந்து தன் தலையில் அடித்துக் கொண்டார். “ஐயகோ! மறுபடியும் நான் அவரை எப்போது காண்பேன். என் வீடு தேடி வந்த தெய்வத்தை விரட்டியடித்து விட்டேனே! ஆறு மாத காலம் அவரது அடிகள் நோக அனுதினமும் அலைக் கழித்தேனே! இப்போது நான் என் செய்வேன்! அவருடைய தரிசனத்தை மீண்டும் நான் எங்ஙனம் பெறுவேன்,” என்று துடித்துத் துவண்டு கதறி நினைவிழந்து போனார் நாயக்கர்.
வயோதிகனாக தம் வீட்டிற்கு இறைவன் வந்தபோது, சரஸ்வதி அவருக்கு மூக்குத்தியைத் தந்த இடத்தில் சோர்ந்து போய் அவர் அமர்ந்தார். அவரும், அவருடைய மனைவி சரஸ்வதியும் மூன்று நாட்கள் விரதமும், வழிபாடுமாக பிரார்த்தனை செய்து வந்தார்கள். மூன்றாம் நாள் இறைவன் சரஸ்வதியின் கண்களுக்கு மட்டும் புலனாகும்படி தோன்றினார். அவளது கணவன், அனைத்தையும் துறந்துவிட்டு ஒரு ஹரிதாசராக– இறைவன் ஹரியால் ஆட்கொள்ளப்பட்ட தொண்டனாக– ஆக வேண்டுமென்றும், அப்போதுதான் அவர் கருணை மிக்கக் கடவுளைக் காணும் பேறு பெறமுடியும் என்றும் கூறினார்.
நாயக்கருக்கு இறைவனது குரல் தெளிவாகக் கேட்டது. ஆனால் அவரைக் காணும் பேறு தான் பெறவில்லை. உடனே தம் பொருள்களையெல்லாம் ஏழை எளியவர்களுக்குத் தந்து விட்டு, துறவு ஏற்கத் துணிந்து விட்டார். அதுவரை அவரை ஆட்டி வைத்த ஆசை அவரை விட்டு அகன்றது. உண்மையான துறவு மனப்பான்மை மனத்தை நிறைத்தது. அனைத்தையும் துறந்துவிட்டு மனைவியோடும் நான்கு குழந்தைகளோடும் நிலையான பரம்பொருளைத் தேடிப் புறப்பட்டு விட்டார் நாயக்கர். மறுபடியும், இறைவன் வயோதிக வடிவில் அவர் முன் தோன்றி, குரு வியாசராயரிடம் முறைப்படி துறவறம் பெற்றுக் கொள்ளும் படி அறிவுறுத்தி மறைந்தார். அங்ஙனமே துறவறம் ஏற்று பண்டரீபுரம் வந்தால், தாம் அவருக்குத் தரிசனம் தருவதாகவும் வாக்களித்தார்.
நாயக்கர் ஹம்பி நகரத்தை அடைந்தார். சக்ரதீர்த்தம் என்ற புனித நீரில் குளித்தார். பிறகு குரு வியாசராயரது மடத்திற்குள் சென்றார். தன் பணிவார்ந்த வணக்கங்களை அவருக்குத் தெரிவித்து, தமக்குச் சந்நியாசம் கொடுத்தருளும்படி அவரைக் கேட்டார் நாயக்கர். அக்கணமே அவரை ஒரு தாசனாக ஏற்றுக் கொண்டார் குரு வியாசராயர். ஒருவரிடமிருந்து ஒரு பொருளும் வாங்கக்கூடாது, கடவுள் எதைத் தந்தாலும் அதை மன நிறைவோடு, பெற்றுக் கொள்ள வேண்டும். நாளைக்கு என்று எதையுமே சேமித்து வைக்கக்கூடாது என்று குருவினுடைய சட்ட திட்டங்களுக்கு ஒப்பினவராய் அக்கணமே சபதமும் இட்டார்.
குரு அவருக்கு ஒரு துளசி மணிமாலையும், கால் சலங்கைகள் இரண்டும், கை தாளங்களில் ஓர் இணையும், ஸ்ருதி மீட்டும் தம்பூரா ஒன்றும் கொடுத்து ஆசி கூறி வாழ்த்தினார். மேலும் குரு, இறைவன் புரந்தர விட்டலனின் திரு நாமப் புகழினை குறிப்பாக அடியெடுத்துக் கொடுத்து தமது பாடல்களை அந்த இறைவனுக்கே அர்ப்பணிக்கும்படி அறிவுறுத்தினார். அவரது பெயரையும் அன்றிலிருந்து அவர் பாடல்களில் வருவது போலவே புரந்தரதாசர் என்று உறுதிப்படுத்தி உயர்த்தி அருளினார் குரு வியாசராயர்.
சிறப்பு பெற்ற புண்ணிய தலங்கள் பலவற்றிற்குச் சென்று இறைவனைச் சேவித்தார் புரந்தரதாசர். ஆன்மீக உணர்வோடு இறைவனைக் குறித்து அவர் கண்ட தெளிவான விளக்கமான கனவுகள், மனித குலம் சாதனா மூலம் ஆன்மீக வெற்றி பெறமுடியும் என்பதை நிரூபித்தன.
ஆன்மா கடைத்தேற்ற பெறுவதற்கான, உணர்ச்சி வசப்படாத, புலனடக்கமும் ஆழ்ந்த இறையன்பும், ‘நான்’ என்ற அகங்காரம், பற்றவிடாத பயமற்ற தன்மையும் இன்னும் பல சிறப்புகளும் அவரது பாடல்களில் வர்ணிக்கப்பட்டிருந்தன. காலம் காலமாக வரும் ஆன்மீக வரலாறுகள் அவரை ஓர் ஒளிவீசும் புகழ் வாய்ந்த பேரறிஞராக உயர்த்திச் சிறப்பித்தன. அவர் தம் கருத்துக்களை வெளிப்படுத்திய தெளிவு, அவற்றில் பொதிந்துள்ள எண்ணங்களின் உயர்வு, அவற்றை எளிமையாக எல்லோரும் வியந்து போற்றும் வண்ணமாக அவரது பாடல்கள் இருந்தன. உலக ஆன்மீக இலக்கியத் துறையிலேயே அவரது பாடல்கள் ஈடு இணையற்று அமைந்திருந்தன.
“பற்றற்ற தன்மை, தூய்மை, உள்ளார்ந்த பக்தி இவை, ஒருவனை, இறைவனுடைய மேலான அன்புக்கு உகந்தவனாக்குகின்றன. அத்தகைய அன்பு அவனுக்கு முக்திலை நல்கும்,” இதுவே அவர் தம் பாடல்களில் விளக்கிய போதனைகள்.
புரந்தரதாசர் நாரத முனிவரது அவதாரமாக எல்லோராலும் கருதப் பெற்றார். நம் எல்லோரையும் பாண்டுரங்க விட்டல் கருணை கூர்ந்து ஆசி பெற வாழ்த்துவாராக!
கேள்விகள்
- புரந்த தாசர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்? அவரது இயற்பெயர் என்ன?
- அவர் எத்தகைய மனிதனாக இருந்தார்?
- சரஸ்வதிபாயிடம் அந்த வயோதிகர் வந்து என்ன கேட்டார்?
- சீனிவாச நாயக்கரது வாழ்வில் மாற்றத்தை உண்டு பண்ணிய நிகழ்ச்சி என்ன?
- அவர் எப்படி பாடல்களை இயற்றி, இனிமையாகப் பாடும் பேறு பெற்றார்?
Illustrations: A. Harini, Sri Sathya Sai Balvikas Student.
[Source: Stories for Children II, Published by Sri Sathya Sai Books & Publications, PN]