ராதையின் பக்தி

Print Friendly, PDF & Email
ராதையின் பக்தி குறித்து ஸ்வாமி குறிப்பிடுவது

கோபியர்களின் பக்தி பரிசுத்தமானதும் தன்னலமற்றதுமாகும். அது நிலையான, தடுமாற்றமில்லாத, சலனமற்ற பக்தி. அவர்களுள் ராதை மிக முக்கியத்துவம் வாய்ந்தவள். அவள் கிருஷ்ணனுடன் இரண்டறக் கலந்துவிட்ட நிலையில் தன்னை உணர்ந்தவள். அவர்களுடைய நோக்கமும், ஆசைகளும் கிருஷ்ணரைக் குறித்தே இருந்தனவே அன்றி உலகியல் நோக்கில் இல்லை.

கிருஷ்ணர் ருக்மிணியுடன் தனது ரதத்தில் அருகில் இருந்த பகுதிக்குச் சென்றார். இதை அறிந்த அந்தப் பகுதி வாழ் மக்கள் அனைவரும் அங்கே ஒன்று கூடினர். அவர்கள் மகிழ்ச்சியுடனும், ஆரவாரத்துடனும் கிருஷ்ணரை உற்சாகமாக வரவேற்றனர். அங்கு கிருஷ்ணரின் பார்வை ஒரு பெண்ணின் மீது நிலைத்து இருந்ததை ருக்மிணி கவனித்தாள். அந்தப் பெண்ணின் பார்வையும் கிருஷ்ணரின் மீதே இருந்தது. “ருக்மிணி, உனக்கு ராதையைத் தெரியுமா? எனக்கு மிகவும் பிடித்த பக்தை அவள்” என்று கிருஷ்ணர் மென்மையாகவும் மெதுவாகவும் ருக்மிணியிடம் கூறினார். இதைக்கேட்ட ருக்மிணி ரதத்திலிருந்து கீழே இறங்கி, விரைந்து ராதையின் அருகே சென்றாள். பரஸ்பரம் நலம் விசாரித்த பின், ராதையை துவாரகையில் உள்ள அரண்மனைக்கு வருகை தரும்படி அழைப்பு விடுத்தாள். அதன்படி, மறுநாளே ராதையும் துவாரகைக்குச் சென்றாள். ருக்மிணி அரண்மனை வாயிலுக்குச் சென்று ராதையை வரவேற்று, அவளை அரண்மனைக்குள்ளே அழைத்துச் சென்றாள். அரண்மனையில் ருக்மிணியுடன் கிருஷ்ணரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள். கிருஷ்ணரின் புகழைப் பாடிக் கொண்டிருந்தாள். இருவரும் கிருஷ்ணருடனான தங்கள் அனுபவங்களின் மகிழ்ச்சியைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தனர். ருக்மிணி, சூடான பால் என்பதால் ராதை மெதுவாக அருந்துவாள், அதனால் இன்னும் அதிக நேரம் கிருஷ்ணரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கலாம் என்றெண்ணினாள். ஆனால் ராதையோ, அந்த சூடான பாலை உடனே முழுவதுமாக ஒரே மடக்கில் விழுங்கி அருந்தி முடித்தாள். சிறிது நேரம் உரையாடிய பின், ராதை அரண்மனையிலிருந்து தன் கிராமத்திற்குப் புறப்பட்டாள்.

மாலையில் கிருஷ்ணர் மிகவும் களைப்புடன் அரண்மனைக்குத் திரும்பினார். அவர் ருக்மிணியைப் பார்த்து, “ருக்மிணி, பார், நான் மிகவும் சோர்வாகவும் களைப்பாகவும் இருக்கிறேன்; என்னுடைய பாதங்களில் மிகவும் எரிச்சலாக இருக்கிறது, தாங்க முடியவில்லை” என்று கூறினார். கிருஷ்ணரின் பாதங்களில் சில கொப்புளங்கள் ஏற்பட்டிருப்பதைக் கவனித்த ருக்மிணி அவை ஏன், எப்படித் தோன்றின என்று யோசித்தாள். அப்பொழுது கிருஷ்ணர் அவளிடம்,” ருக்மிணி உன் அழைப்பை ஏற்று இங்கு வந்த ராதைக்கு நீ சூடான பால் கொடுத்து உபசரித்தாய் அல்லவா? ராதையோ ஒரே மூச்சில் அதை முழுவதும் அருந்திவிட்டாள், என் பாதங்கள் அவளது இருதயத்தில் இருந்ததால் அவள் அருந்திய சூடான பால் முழுவதும் என் பாதங்களில் வந்து விழுந்தது. அதனால் ஏற்பட்ட கொப்புளங்களைத் தான், நீ காண்கிறாய்” என்று கூறினார். ராதையின் பக்தி அந்த அளவிற்கு இருந்தது.

ஒரு நாள் ராதையின் பக்தியைப் பரிசோதிக்க விரும்பிய கோபிகை ஒருத்தி, ஓட்டைகள் நிறைந்த பானையை ராதையிடம் கொடுத்து, யமுனா ஆற்றிலிருந்துத் தண்ணீர் நிரப்பிக் கொண்டு வருமாறு கூறினாள். பானை ஓட்டை என்பதை ராதை அறியவில்லை. அவள் கிருஷ்ணனின் புனித நாமத்தை இடைவிடாது கூறிக்கொண்டே பானையை ஆற்று நீருக்குள் அமிழ்த்தினாள். அவள் உதிர்த்த விலைமதிப்பில்லாத அந்த கிருஷ்ணரின் நாமத்தினால் பானையின் ஓட்டைகள் ஒன்று ஒன்றாக அடைப்பட்டன. பானையிலிருந்து சிறிதளவும் தண்ணீர் வெளியே கசியவில்லை; பானையை முழுவதுமாக நீர் நிரப்பி இல்லத்துக்கு எடுத்து வந்தாள் ராதை. அது தான் ராதைக்கு இருந்த பக்தியின் உச்சநிலை.

ராதா என்கிற பெயரில் ‘ரா’ ராதாவைக் குறிப்பதாகும், ‘ஆ’ என்பது ‘ஆதாரம்’ அல்லது அடித்தளம், ‘தா’ என்பது ‘தாரா’ அல்லது தொடர்ச்சி, இடைவிடாமல் விழுதல்; அடுத்ததாக அமைந்த ‘ஆ’ என்றால் ஆராதனா அல்லது வழிபாடு. ராதையின் பக்தி பயமில்லாததால், ஒரு ஒழுகலைப் போன்று, அதாவது எண்ணெய் தொடர்ச்சியாக ஒழுகிக் கொண்டிருப்பதைப் போலிருந்தது.

ராதை கிருஷ்ண நாமத்தை ஐபித்ததைப் போன்றே, கிருஷ்ணரும் ராதையையே நினைத்துக் கொண்டிருந்தார். இதுவே ஒரு பக்தன் அல்லது பக்தைக்கும் அவனுடைய / அவளுடைய இஷ்ட தெய்வத்திற்கும் இடையே உள்ள தொடர்பும் நெருக்கமும் ஆகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன