இராமன் விஸ்வாமித்திரருடன் செல்லுதல்
இராமன் விஸ்வாமித்திரருடன் செல்லுதல்
ஒரு நாள் மரியாதைக்குரிய விஸ்வாமித்திர முனிவர் அயோத்திக்கு வந்தார். அவர் காட்டில் தான் செய்யும் யாகத்திற்கு தீங்கிழைக்கும் அரக்கர்களை அழிப்பதற்காக தசரதனிடம் இராமனையும் லட்சுமணனையும் தன்னுடன் அனுப்புமாறு வேண்டினார். இதற்கு தசரதன் தயங்கிய போது, இராமன் இந்த உடல் எடுத்ததே முனிவர்களையும், புனிதமானவர்களையும் காப்பாற்றி நன்மை செய்வதற்கே என்று விஸ்வாமித்திர முனிவர் எடுத்துக் கூறினார்
குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியது :ஸ்ரீ ராமரைப் போல எந்த நேரமும் மற்றவர்களுக்கு உதவிசெய்ய தயாராக இருக்க வேண்டும்.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி :
பரோபகாரம் இதம் சரீரம் – இந்த மனித உடல் மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்காகவே
விஸ்வாமித்திரரும் யாகம் முடிந்தவுடன், இராமனையும் லட்சுமணனையும் திருப்பி அயோத்திக்குக் கொண்டு வந்து விடுவதாக தசரதனுக்கு உறுதி அளித்தார். தந்தையின் அனுமதி பெற்று இராம லட்சுமணர் விஸ்வாமித்திரருடன் சென்றனர்.
குருமார்கள் குழந்தைகளுக்கு சொல்லவேண்டியது:
வேலை நிமித்தம் வெளியில் செல்வதற்கு முன்பு ஸ்ரீ ராமரைப்போல நாமும் நமது பெற்றோர்களின் சம்மதத்தைப் பெறவேண்டும்.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி :
பெற்றோர்களுக்குக் கீழ்படிதல், அவர்களிடம் பெருமதிப்பும் மரியாதையும் கொள்ளல்
விரைவில் அவர்கள் சரயு நதிக்கரையை அடைந்தனர். விஸ்வாமித்ரர் அவர்களுக்கு அபாயத்திலிருந்தும் நோய்களிலிருந்தும் பாதுகாக்கும் “பலா, அதிபலா” என்ற இரண்டு மந்திரங்களை உபதேசித்தார். பிறகு அவர்கள் அரக்கியான தாடகை அவள் மகன் மாரீசனுடன் வசிக்கும் வனத்திற்கு சென்றனர். விஸ்வாமித்ரர் இராமனிடம் இந்த அரக்கியை கொல்வதால் தவறு ஒன்றுமில்லை என்றும் அதனால் நிறைய அழிவையும் தவிர்க்க முடியும் என்றும் கூறினார். அதனால் இராமனும் தயங்காமல் அந்த அரக்கியுடன் போர் செய்து கடைசியில் தன் அம்பால் அவள் மார்பை துளைத்து அவள் உயிரை போக்கினார்.
விஸ்வாமித்ரர் தன் இருப்பிடமான சித்தாஸ்ரமத்திற்குச் சென்று தன்னிடமுள்ள அனைத்து போர்க் கருவிகளையும் இராமனிடம் கொடுத்து, அந்த போர்க்கருவிகள் அவனது ஆணையை ஏற்கும் என்று கூறினார். அங்கு விஸ்வாமித்ரர் யாகத்தை ஆரம்பித்தார். இராமனும் லட்சுமணனும் தொடர்ந்து ஐந்து நாட்கள் விழிப்புடன் இருந்தார்கள். ஆறாவது நாள் மாரீசனும் சுபாகுவும் மற்ற அரக்கர்களுடன் யாகத்தை அழிக்க முயற்சித்தார்கள். ஆனால் அவர்களால் இராம லட்சுமணர்களுக்கு இணையாகப் போரிட முடியவில்லை. இராமன் மானசா அம்பை மாரீசன் மீது எய்து அவனை பல மைல்களுக்கு அப்பால் தூக்கி எறிந்தார். அக்னி அஸ்திரத்தினால் சுபாகுவை உடனே வதைத்தார். விஸ்வாமித்திரரும் எந்த இடையூறில்லாமல் யாகத்தை செய்து முடித்தார். அவர் மகிழ்ந்து அந்த ராஜகுமாரர்களை ஆசீர்வதித்தார்.
குருமார்கள் குழந்தைகளுக்கு சொல்லவேண்டியது:
ஸ்ரீ ராமரைப்போல நாமும் நமது ஆசிரியர்கள், பெரியோர்களின் வார்த்தைகளை அடக்கமாக கேட்டுக்கொண்டு அதன்படி நடக்கவும் வேண்டும். நமது ஆசிரியர்களின் வார்த்தைப்படி நடந்தோமானால், அவர்களால் மனமுவந்து ஆசீர்வதிக்கப்படுகிறோம்.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி :
ஆசிரியர்களுக்கும், பெரியோர்களுக்கும் கீழ்படிதல், அவர்களிடம் பெருமதிப்பும் மரியாதையும் கொள்ளல்
யாகம் சுபமாக முடிந்த பின் மறுநாள் சில வாக்கியங்கள் எழுதப்பட்ட பனை ஓலையை ஒரு இளைய மாணவன் விஸ்வாமித்திரரிடம் கொண்டு வந்து கொடுத்தான். அதில் மிதிலையின் அரசன் ஜனகமகாராஜன் ஒரு யக்ஞத்தை நடத்த விரும்புவதாகவும், அதற்கு விஸ்வாமித்திரர் தன் சிஷ்யர்களுடன் வரவேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது. அங்கிருந்த அனைவரும் அந்த அழைப்பை ஏற்றனர். ஆனால் இராமன் அயோத்திக்கு திரும்ப வேண்டும் என்று விரும்பினார். விஸ்வாமித்திரர், தசரதருக்கு இராம லஷ்மணர்களை அயோத்திக்கு திரும்பவும் தானே நேரில் கொண்டுவந்து விடுவதாக உறுதி அளித்திருப்பதாக விவரித்தார். இராமனும் அதை ஒப்புக் கொண்டதால் அவர்கள் அனைவரும் மிதிலை நகரத்திற்கு சென்றனர். ஜனகருக்கு சிவபெருமான் மூலம் ஒரு தனுசு கிடைத்திருப்பதாகவும், அதை அவர் தினமும் வழிபடுவதாகவும், இதுவரை அதை யாரும் நாணேற்றவில்லை என்றும் விஸ்வாமித்திரர் மூலம் இராமன் அறிந்தான். விஸ்வாமித்திரருடன் வந்த இந்த ராஜகுமாரர்கள் இருவரையும் கண்ட ஜனகர் இவர்களே தெய்வீக வடிவம் தாங்கி சுவர்கத்திலிருந்து வந்திருப்பதாக நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஜனகர், சிவதனுசை யக்ஞத்திற்கு கொண்டுவர ஏற்பாடு செய்தார்.