இராமன் சீதையின் தெய்வீக திருமணம்

Print Friendly, PDF & Email
இராமன் சீதையின் தெய்வீக திருமணம்

Sita Rama Divine Marriage

ஜனக மகாராஜாவுக்கு, சீதை என்ற பெயருள்ள ஒரு பெண் இருந்தாள். சீதை சிறியவளாக இருந்த போது, ஒரு நாள் தன் சிநேகிதிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் கையிலிருந்த பொம்மை ஒன்று, அங்கு சிவதனுசு வைத்திருந்த நீள பெட்டியின் பின்னால் உருண்டோடியது. ஒவ்வொருவரும் அதை எடுக்க முயற்சித்துத் தோல்வி அடைந்தனர். சீதை அவள் சிறிய கையால் அந்த பெட்டியை தள்ளிக்கொண்டு தன்னுடைய பொம்மையை எடுத்தாள். இதைக் கண்ட ஜனகருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அப்போதே யார் அந்த சிவதனுசை முறிக்கிறார்களோ அவர்களுக்கே சீதையை மணமுடிக்க வைக்க அவர் முடிவு செய்து விட்டார்.

அந்த தனுசுவை மேல் நிறுத்தி நாண் ஏற்றுவதற்காக, அது யாகசாலைக்குக் கொண்டுவரப்பட்டது. எல்லாரும் காணும்படியாக அது வைக்கப்பட்டது. ஜனகர் அழைப்பை ஏற்று பல அரசர்கள், அரசகுமாரர்கள் அங்கு வந்திருந்தனர். ஜனகர் அங்கு அமர்ந்திருந்தவர்களை எல்லாம் அழைத்து அந்த வில்லை இழுத்து நாணேற்றுமாறு கூறினார். விஸ்வாமித்திரரின் ஆணைப்படி இராமர் அந்த வில்லை தன் இடது கையால் தூக்கி நிறுத்தினார். பின் வலது கையால் வில்லை சுலபமாக உயர்த்தி அதை இழுத்துக் கட்டினார்.

குருமார்கள் குழந்தைகளுக்கு சொல்லவேண்டியது:

பள்ளியிலோ அல்லது வெளியிடத்திலோ நமது ஆசிரியர்களுடன் அல்லது பெரியவர்களுடன் இருக்கும்போது அந்தசமயம் எந்தக் காரியம் செய்வதாக இருந்தாலும் அவர்களின் உத்தரவை பெறும் வரை ஸ்ரீ ராமரைப்போல பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

கற்றுக்கொள்ள வேண்டிய நீதி :
ஆசிரியர்களுக்கும், பெரியோர்களுக்கும் கீழ்படிதல், அவர்களிடம் பெருமதிப்பும் மரியாதையும் கொள்ளல்

ஒரு அம்பை அதில் வைத்து பின்பக்கமாக இழுத்து பிறகு அதை விட்டு விட்டார். அந்த வில் பெரும் சப்தத்துடன் முறிந்தது. ஜனகர் விஸ்வாமித்திரரை வணங்கி இராமரிடம் தெய்வீக சக்தி இருப்பதாகச் சொல்லி விஸ்வாமித்திரர் அனுமதி அளித்தால் அவருடைய மகள் சீதையை இராமருக்கு மணமுடிக்க விரும்புவதாக தெரிவித்தார். ஆகவே தசரத மகாராஜாவுக்கு உடனே தகவல் அனுப்பப்பட்டது. அவரும் சந்தோஷமாக தன் மக்களுடன் மிதிலைக்கு வந்தார்.

குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியது :

நமது அன்றாட வாழ்க்கையில் முதலில் நாமே முடிவெடுக்காமல், நமது பெற்றோர்களிடம் கலந்து ஆலோசனை செய்து அவர்களின் அனுமதியையும் ஆசீர்வாதங்களையும் பெற்ற பின்னே முடிவெடுக்க வேண்டும்.

கற்றுக்கொள்ள வேண்டிய நீதி :
பெற்றோர்களுக்குக் கீழ்படிதல், அவர்களிடம் பெருமதிப்பும் மரியாதையும் கொள்ளல்

நான்கு சகோதரர்களுக்கும் ஒரே சமயத்தில் திருமணம் நடந்தது. இராமர் சீதையையும், லட்சுமணன் சீதையின் தங்கை ஊர்மிளையையும், பரதனும் சத்ருக்னனும் ஜனகரின் சகோதரர் குசத்வஜனின் பெண்களான மாண்டவி, ஸ்ருதகீர்த்தியையும் முறையே மணந்தார்கள். அனைத்து மக்களும் மிகவும் சந்தோஷமடைந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன