வேத வியாசர்
குரு பூர்ணிமா
வியாசர் நம் இலக்கு/குறிக்கோள் மற்றும் இடத்தை அடைய நாம் மேற்கொள்ளும் பாதை/வழி நெறிமுறை ஆகியவைகளை நிர்ணயம் செய்த முதல் குரு ஆவார். குரு பூர்ணிமாவுடன் அவர் தொடர்பு படுத்துவற்கு, இதுவே காரணமாக அமைந்தது.
மிகப் புனிதமான குரு, வேத வியாசருக்கு நமது மரியாதையை செலுத்தும் நாள் தான் குருபூர்ணிமா. குரு வேத வியாசர் தான் இப்போதுள்ள முறையில் வேதங்களை தொகுத்து அளித்தவர். வேதங்கள் தாம், கடவுளின் விருப்பத்தை ஒட்டி செயல்படும் பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கின்ற சக்தியாகும். இந்த உண்மை எல்லா அறிவுக்கும் மதத்திற்கும் அடிப்படை. துவாபர யுகத்தின் முடிவில் இந்த உண்மைகள் மறைந்ததால் மனித குலமும் இதை மறந்து விட்டது. ஒரு ஒழுங்குமுறையோ அல்லது தொகுப்போ இல்லை. எனவே அவற்றை வகைப்படுத்தி, மெய்யாகக் கற்பவருக்கு பயன்படும் வகையில் செய்ய ஆற்றல் வாய்ந்த ஒருவர் தேவைப்பட்டார். அந்த மகத்தான பணியை முடித்தவர் வியாசரே. ஆகவே அவர் வேதவியாசர் என அழைக்கப்பட்டார். அவர் பிரம்மரிஷி வசிஷ்டரின் கொள்ளுப்பேரனும், பராசுரமுனிவரின் மகனும் ஆவார். வசிஷ்ட முனிவர் நன்கு கற்றறிந்தவர். மனித குலத்திற்கு பல நன்மைகளை செய்தவர். சிறந்த குருவாகவும் விளங்கியவர்.
வியாசர் கறுப்பு நிறத்தவர். ஆகவே அவர் கிருஷ்ணன் என்று அழைக்கப்பட்டார். ஒரு தீவில் பிறந்த காரணத்தினால் “த்வைபாயனர்” என்று அழைக்கப்பட்டார்.
எண்ணிலடங்கா வேதங்களை ரிக்வேதம், யஜீர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்று நான்கு பிரிவாகப் பிரித்தவர் வியாசராகும். “வியாச” என்றால் வகைப் படுத்துவது அல்லது பிரிப்பது என்று பொருள்.
வியாசமுனிவர் பிரம்மசூத்திரம், இதிகாசமாகிய மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், பகவத்கீதா ஆகியவற்றைப் படைத்தார்.
குருபூர்ணிமா, வியாசர் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. “வியாசபூர்ணிமா” இது ஒரு புனித நாளாகப் போற்றப்படுகிறது. அந்த நாளில் பிரார்தனைகள் செய்தும், தவறுகளை திருத்திக் கொண்டும், சீராகக் கொண்டாட வேணடும். அது உள்ளத்தைத் தூய்மைப் படுத்தும். வெறுமே விருந்து ஏற்றோ, உணவை புறக்கணித்தோ, உடலைப் பாதிக்கும் செயல்களில் ஈடுபட்டோ இருக்க வேண்டாம் (Feasting or Fasting). அன்று பௌர்ணமியாதலால் சந்திரன் களங்கமின்றி பிரகாசிக்கும். அது போல மக்கள் மனமும் ஒளியாக, குளுமையாக, முழுமையாக இருக்க வேண்டும் என்பதாகும். இங்கே சந்திரன் மனதைக் குறிப்பது.
ஒரு லட்சம் சுலோகங்களைக் கொண்ட மகாபாரதத்தை இயற்றியவர் வியாசராவார். இதை இதிகாசம், எனக்கூறுவார்கள். இது அறியாமை (மாயை) என்ற இருட்டையும், சுயநலத்தையும், மனித இதயங்களிலிருந்து அறவே நீக்குவதற்காகத் தொகுக்கப் பட்டது. ஆகவே தான் வியாசர் உலக குருவாகக் கருதப்படுகிறார். அவர் தெய்வீக ஒளி நிரம்பியவர். நாம் வியாசர் காட்டிய அறநெறியில் செல்ல வேண்டும். நம் மனதை சுத்தப்படுத்த அவர் கற்றுக் கொடுத்துள்ள மந்திரங்களைக் கூறியும், அவைகளை முறைப்படி செயற்படுத்தி இறைவனது பெரும் கருணையையும் சாந்தியையும் அடைய வேண்டும்.