சங்கரரின் வாழ்க்கை

Print Friendly, PDF & Email
சங்கரரின் வாழ்க்கை

ஆதிசங்கரர் கேரளத்தின் மையத்திலுள்ள காலடி என்ற கிராமத்தில் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தார். சிவகுரு, ஆர்யாம்பாள் என்ற பக்தி மிகுந்த நம்பூதிரி பிராமணத் தம்பதிகளுக்கு ஒரே மகன் ஆவார். திருச்சூரில் உள்ள விருஷபாலேசுவரர் கோயில் சிவபிரானை நீண்ட காலம் பிரார்த்தனை செய்ததன் பயனாக அவர் பிறந்தார். அவர் அபாரத் திறமை மிகுந்த குழந்தையாக விளங்கினார். வேதங்கள் முழுமையினையும் எட்டு வயதிலேயே கற்றுணர்ந்தார். அவர் மிகச் சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். அவர் அன்னை அவரை மிகுந்த அன்புடனும், பரிவுடனும் வளர்த்து வந்தார். இச்சிறுவனிடம் துறவு மனப்பான்மை நிறைந்திருந்தது. அதை அறிந்த அவர் அன்னை அதிர்ச்சியடைந்தார். அன்னையின் பாசத்தினின்று சங்கரரை விடுவிக்க ஓர் அற்புத நிகழ்ச்சி தேவைப்பட்டது. (பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே – திருவாசகம்).

ஒருநாள் பூர்ணா நதியில் சங்கரர் நீராடிக் கொண்டிருந்தபோது, அன்னை கரை மேல் நின்று கொண்டிருந்தார். ஒரு முதலை சங்கரரின் காலைப்பிடித்து, தண்ணீரினுள்ளே இழுத்துச் செல்லத் துவங்கியது. மரணம் நெருங்கியதைக் கண்ணுற்ற சங்கரர் சந்நியாச ஆசிரமத்தை ஏற்றுக் கொள்வதற்கு அன்னையின் அனுமதி வேண்டினார்.

இத்தகைய ஆபத்தான சூழ்நிலையில், ஆபத் சந்நியாசம் ஏற்றுக் கொள்வது வழக்கமாக இருந்தது. பாசம் பின்னிழுத்தாலும், ஆர்யாம்பாள் தனது சம்மதத்தை அளித்தார். வந்த வழியிலேயே முதலையும் மர்மமாக சென்றுவிட்டது. ஆற்றினின்று கரைக்கு வந்த பால சந்நியாசி, பரிவ்ராஜக (நாடெங்கும் அலைந்து திரிகின்ற) சந்நியாசியாக முடிவு செய்தார். தாயினைச் சமாதானப்படுத்தித் தாயின் இறுதிக்காலத்தில் கூடவே இருப்பதாகவும், அவரது ஈமச் சடங்குகளைச் செய்வதாகவும் வாக்களித்துப் பின் கிராமத்தினை விட்டு அகன்றார். விளையாட்டுப் பருவம் நீங்காத எட்டு வயதிலேயே சங்கரர் தமது தெய்வீகப் பணிக்குக் கிளம்பினார்.

தென்னிந்தியா முழுவதும் சுற்றி முடிவில் குருவைத் தேடி நர்மதை நதிக்கரைக்கு வந்தார். அங்கு கோவிந்த பகவத் பாதரைச் சந்தித்தார். கோவிந்த பாதரும் மகிழ்ச்சியுடன் பால சந்நியாசியாகிய சங்கரரைத் தமது சீடராக ஏற்றுக்கொண்டு வேதாந்தத்தின் நுட்பமான கருத்துக்களைக் கற்பித்துத் தெளிவித்தார்.

ஏழாண்டுகளில் சங்கரர் வேதாந்தப் பாடங்களையெல்லாம் கற்றுத் தெளிந்து, சாதனா முறைகளையெல்லாம் பயின்றார். சங்கரர் காசிக்குச் சென்று, அங்கிருந்து பகவத் கீதை,உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம் இவற்றிற்கு பாஷ்யங்கள் (விரிவுரைகள்) எழுதி அத்வைத வேதாந்தத் தத்துவக் கோட்பாடுகளைப் பரப்புதல் வேண்டும் என அவரது குரு கூறினார். குருவின் வாக்கினைச் சிரமேற்கொண்டு சங்கரர் காசிக்குச் சென்று சிறிது காலத்தில் வேதாந்தக் கோட்பாட்டின் தலைசிறந்த பாதுகாவலராக தம்மை நிலைநாட்டிக் கொண்டார். பற்பல வாதங்களில் அவர் வென்றார். சீடர்கள் பலர் கூட்டங்கூட்டமாக அவரை நாடி வந்தனர். அவர்களுள், பத்மபாதரும், ஹஸ்தாமலகரும், தோடகரும் சிறந்து விளங்கினர். இவ்வாறு பதினாறு வயதிலேயே, இந்தியாவின் ஆன்மீக மலர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும் இதயம் போன்று மையமாக விளங்கிய வாரணாசி நகரத்தில், உயர்ந்த தத்துவ ஞானி எனப் பிரபலமடைநதார்.

காசியில் பிரம்ம சூத்திர பாஷ்யம் எழுதிக் கொண்டிருந்த பொழுது அவரது அகக்காட்சியில் வேத வியாசர் தோன்றினார். அவர் இட்ட கட்டளைக்குக் கீழ்படிந்து, நாடு முழுவதும் திக் விஜயம் செய்யக் காசியிலிருந்து புனிதப் பயணத்தைத் துவங்கினார். அவர் சென்றவிடமெல்லாம், பல்வேறு தத்துவக் கோட்பாடுகளில் தலைசிறந்த அறிஞர்களை சந்தித்து, அவர்களுடன் வாதாடி வெற்றி கண்டு, அத்வைதக் கோட்பாடுகளை நிலைநிறுத்தினார். அவரது ஆன்மீக ஞானத்திற்கும், வாதத்திறமைக்கும் முன்னால் யாரும் எதிர் நிற்க இயலவில்லை. இத்தகைய வாதங்களில் மண்டன மிச்ரருடன் அவர் மேற்கொண்ட வாதம் மிக முக்கியமானதாகும்.

மண்டன மிச்ரரின் மனைவி உபயபாரதி. இவர் அறிவிற் சிறந்தவர்; நடுநிலை தவறாதவர். ஆதலால், உபயபாரதியே வாதத்திற்கு நடுவராக இருந்தார். பல நாட்கள் வாதம் நடைபெற்றது. சங்கரர் வாதத்தில் வெற்றி பெற்றார். தோல்வியுற்றவர் வென்றவரின் சீடராக வேண்டும் என்பதே வாதத்தின் நிபந்தனையாகும். மண்டன மிச்ரர் அவ்வாறே சந்நியாச ஆசிரமம் மேற்கொண்டு, சுரேச்வரர் என்ற பெயர் சூட்டப்பட்டார். சங்கரர், தெற்கே சிருங்கேரியிலும், வடக்கே பத்ரியிலும், மேற்கே துவாரகையிலும், கிழக்கே ஜகந்நாத் பூரியிலும் ஆக நான்கு இடங்களில் மடங்களை நிறுவினார். காஞ்சியிலும் காமகோடி மடத்தை ஸ்தாபித்ததாகக் கூறுவர்.

சிருங்கேரி மடத்தில் சுரேசுவரரையும், துவாரகையில் பத்மபாதரையும், பத்ரியில் தோடகரையும், பூரியில் ஹஸ்தாமலகரையும் மடத்துத் தலைவர்களாக சங்கரர் நியமித்தார். வெகுகாலம் சிருங்கேரியில் தங்கினார். இறக்குந் தறுவாயிலிருந்த தாயினைக் காண சங்கரர் காலடிக்கு விரைந்தார். அவரருகில் இருந்து சிவனைப் பற்றியும், விஷ்ணுவைப் பற்றியும் இனிமை மிகுந்த துதிப் பாடல்கள் பாடினார். அன்னையின் ஆன்ம சோதி பரஞ்சோதியுடன் கலந்தது. மதச் சடங்குகளில் ஊறிய உறவினரின் எதிர்ப்பினைப் பொருட்படுத்தாது, வீட்டிற்குப் பின்னிருந்த நதிக்கரையினில் அவரது அன்னையின் உடலைத் தகனம் செய்தார். அது புனித யாத்திரைத் தலமாக இப்போதுள்ளது.

புனிதத்தலங்கள் சென்று ஸ்ரீசக்கரங்களைப் பிரதிஷ்டை செய்தார். அவற்றில் காஞ்சியிலுள்ள காமாட்சி கோயில், பத்ரியிலுள்ள நரநாராயணர் கோயில், நேபாளத்திலுள்ள குஹ்யேஸ்வரி கோயில் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இவ்வாறு பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யராகிய (உலகினை வலம் வந்த ஆச்சார்யர்) சங்கரர் காஷ்மீரத்திலுள்ள பேரறிஞரையும் வென்றார். தமது திக் விஜயத்தை முடித்துக் கொண்டு, சகல கலைகளையும் கற்றுணர்ந்து, தேர்ந்து அதன் அடையாளமாக சர்வக்ஞ பீடத்தில் அமர்ந்தார்.

நேபாளத்துக்குக் கடைசி முறையாகச் சென்று, ஸ்ரீ தத்தாத்ரேயரை அகக்காட்சியில் கண்டார். அங்கிருந்து முப்பத்திரண்டாம் வயதில் கேதார்நாத் திருத்தலத்துக்குச் சென்றபோது அங்குள்ள கோயிலுக்கு அருகிலுள்ள இடத்தில் அவரது பூதவுடல் மறைந்ததாகக் கூறுவர் (புனிதக் காஞ்சியில் அன்னை காமாட்சியின் திருவுருவத்தில் அவர் மறைந்ததாகக் கூறுவதுமுண்டு).

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன