கோபாலா கோபாலா தேவகி – மேலும் படிக்க

Print Friendly, PDF & Email
பாகவத வாஹினி அத்தியாயம் 42

கிருஷ்ணாவதாரமாகத் தோன்ற முக்கிய காரணம் என்னவென்பதை விளக்கும், பெரும் மகிமை வாய்ந்த கதையைக் கூற முனிவர் ஆரம்பித்தார். அவர் கூறினார்: “சிறைச்சாலையில் நாட்களைக் கழித்த தேவகி வசுதேவன் இருவருக்கும் பைத்தியக்காரர்களுக்கும் இடையில் எவ்வித வித்தியாசமும் இல்லாதிருந்தது. பசியற்று, உணவற்று தங்களின் தேகத்தைப் புறக்கணித்து, உடல் மெலிந்து, தலை முடி சீவாது உட்கார்ந்து இருந்தனர். உணவு உட்கொள்ளவோ உறக்கம் கொள்ளவோ அவர்கள் எண்ணவில்லை. குழந்தைகளைப் பறிகொடுத்த துக்கத்தில் அவர்கள் உருகிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் சிறைவாசம் இரண்டாவது வருடத்தை எட்டியதும், தேவகி எட்டாவது முறையாக கர்ப்பமுற்றாள்! ஓ! என்ன ஒரு ஆச்சரியம்! என்ன ஒரு மாறுதலை அது ஏற்படுத்திற்று! வாடி வதங்கிய தேவகி-வசுதேவனின் முகங்கள் திடீரென முழுதாகப் பூத்தத் தாமரை மலரைப் போல் மலர்ந்து காணப்பட்டன. ஏதோ ஒரு விநோத கலையுடன் அவர்கள் ஜொலித்தார்கள்.”

வற்றிப்போய், எலும்பும் தோலுமாக இருந்த அவர்களின் உடல் சதைப்பற்று ஏற்பட்டு, நல்ல வடிவுற்று, மிருதுவான, பொலிவான தங்க மேனி போல ஜொலிக்க ஆரம்பித்தது. தேவகி அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அறையில், நறுமணம் கமழ ஆரம்பித்தது. அவ்வறையில் ஓர் அற்புதமான ஒளி நிறைந்து, இனம்புரியாத, இனிமையான, இதமான இசையுடன், நடனமாடும் பாதங்களின் ஒலி நிறைந்திருந்தது. என்ன அற்புதமான காட்சிகள், அற்புதமான இசை ஒலிகள்! தேவகியும் வசுதேவனும் இந்த மாறுதல்கள் ஏற்படுவதை உணர்ந்தனர். ஆனால், அவர்கள் கம்ஸனிடம் தெரிவிக்க பயந்தனர். காரணம், எங்கு அவன் பழிவாங்கும் வெறியில் கர்ப்பத்தை சுக்கு நூறாக்கும் வகையில் அடித்து சிதைத்து விடுவானோவென்று. பிறக்கப் போகும் மகனின் விநோதமான எதிர்காலத்தைப் பற்றிக் கவலையடைந்தார்கள். அதிசயக்கத்தக்க எதிர்கால நிகழ்ச்சிகள் குறித்து மனம் நிலைகொள்ளாது அவர்கள் தவித்தனர்.”

“ஓர் இரவு, சிறைச்சாலை அறையில் தரையில் படுத்திருந்த பொழுது தேவகிக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. பகவானைத் தியானித்து, சிமிழ் விளக்கின் ஜோதியை உற்று நோக்கியவாறே, ‘எனக்கு என்ன நேரப்போகின்றதோ, எனது எதிர்காலம் எவ்வாறோ?’ எனக் கவலையுடன் தன்னையே கேட்டுக்கொண்டாள். அப்போது, திடீரென விளக்கு அணைந்து, அந்த அறையில் இருள் சூழ்ந்தது. பிறகு, மிகுந்தப் பிரகாசத்துடன் கூடிய ஒருவித வினோத தேஜஸுடன் கூடிய ஓர் உருவம் அவள் முன்பு நிற்கக் கண்டாள். அது யாராக இருக்க முடியும் என யோசித்தாள். ஒரு வேளை கம்ஸன் அந்த உருவத்தில் வந்து விட்டானோவென பயந்து வசுதேவரை அழைத்தார். அவள், தன் முன்பு நின்றிருந்த அசாதாரண தோற்றத்தின் உண்மையை எண்ணி, குழப்பமும் சந்தேகமும் அடைந்தாள்.”

“திடீரென்று அந்த உருவம் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது! சங்கு, சக்கரம், கதாயுதம், இவைகளை அது ஏந்தியிருந்தது. நான்காவது கை அபயம் எனக் கூறும் வகையில் காட்டிக் கொண்டிருந்தது. மெதுவாகவும் இதமாகவும் அந்த உருவம், ‘கவலை வேண்டாம். யாம் நாராயணன். உமது மாபெரும் தவத்தின் காரணமாக, உமது முன் தோன்றி உமக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி உமது துன்பங்களை எல்லாம் நீக்க, உமது மகனாக இன்னும் சில நிமிடங்களில் பிறக்கப்போகிறேன். எம்மைப் பற்றிக் கவலையுற வேண்டாம். அரங்கேற்றம் நடைபெறப்போகும் நாடகத்திற்குச் சாட்சிகளாக இருங்கள். இந்த ஈரேழு உலகத்திலும், எமக்கு மிகச்சிறிய வகையிலும் கூடத் தீங்கு விளைவிக்க, இதுவரையில், எவரும் பிறந்ததும் இல்லை, இனி பிறக்கப் போவதும் இல்லை. இதை நன்றாக அறிந்துகொள்ளுங்கள். பெற்றெடுக்கப்போகும் பிள்ளை பாசத்தால், நீர் சிறிது பதட்டம் அடைந்த போதிலும், உமது மனதை மாயை மறைத்த போதிலும், எமது மகிமைகளைப் பறைசாற்றும் அற்புதங்களை உடனடியாக உங்களால் காணமுடியும்.”

“நான் பிறந்தவுடன், உங்களின் கை கால்களிலிருந்து விலங்குகள் தாமாகவே விழுந்துவிடும். சிறைக்கதவுகளும் தாமாகவே திறந்து கொள்ளும். இங்கிருந்து யாருக்கும் தெரியாமல் எம்மைத் தூக்கிக்கொண்டு கோகுலத்தில் நந்தகோபரின் வீட்டிற்குச் சென்று, இப்போதுப் பிரசவ வேதனையில் இருக்கும் அவர் மனைவியான யசோதையின் பக்கத்தில் எம்மைப் படுக்க வைத்துவிடவும். அவள் பிரசவித்து, தன் பக்கத்தில் படுக்க வைத்திருக்கும் அவளின் பெண் குழந்தையை இச்சிறைச் சாலைக்குத் தூக்கி வந்து உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள். பிறகு கம்ஸனுக்குச் செய்தி அனுப்புங்கள். அச்செய்தி அவன் காதுக்கு எட்டும் வரையில் மதுரா நகரிலோ, கோகுலத்திலோ உள்ள யாருமே உம்மைக் கண்டு கொள்ளவும் மாட்டார்கள், தடுக்கவும் மாட்டார்கள். அவ்வாறே நடக்க யாம் ஆவன செய்வோம்’, என்று கூறினார். தெய்வீக ஒளியுடன் அவர் ஜொலித்தார். தேவகியையும் வசுதேவனையும் ஆசிர்வதித்த பின்னர், ஒரு ஒளிக் கோல வடிவத்தில் தேவகியின் கர்பத்திற்குள் பிரவேசித்தார். சில நிமிடங்களுக்குப் பின்னர் ஒரு குழந்தை பிறந்தது.”

“அப்போது பிரம்ம முகூர்த்தக் காலை நேரம் 3.30 மணி. அவ்வமயம் விஷ்ணு மாயம் அங்கிருந்த காவலாளிகள், பாதுகாவலர்கள், அதிகாரிகள் ஆகிய அனைவரையும் திடீரென ஆழ்ந்த நித்திரையில் ஆழ்த்தியது. நின்றிருந்த அந்த இடத்திலேயே அவர்கள் விழுந்துத் தூங்கினார்கள். நொடி நேரத்தில் வசுதேவனின் கை கால்களைப் பிணைத்திருந்தத் தடித்த சங்கலிகள் தாமாகவே அறுந்து விழுந்தன. சிறைக்கதவுகளும் வாயிற்கதவுகளும் தடாலெனத் தாமாகவே திறந்து கொண்டன. அப்போது கும்மிருட்டான இரவு நேரமான போதிலும் ஆனந்த வெள்ளத்தில் குயில்கள் பாட ஆரம்பித்தன. உள்ளத்தில் பேரின்ப மகிழ்ச்சியை அறிவிக்கக் கிளிகள் கூவ ஆரம்பித்தன. உள்ளூர ஏற்பட்ட களிப்பில் ஒவ்வொரு நட்சத்திரமும் புன்னகைப்பது போல மின்னியது. இந்திரன், பூ போன்ற மழைத்துளிகளை பூலோகத்தின் மீதுத் தூவினான். சிறைச்சாலையைச் சுற்றிப் பறவைக் கூட்டங்கள் ஒன்றாகக் கூடி, இனிமையான கீதங்களைப் பாடி மகிழ்ந்தன.”

“இவையனைத்தும் பகவானின் மகிமைகளை உணர்த்தும் நிகழ்ச்சிகள் என்பதை வசுதேவன் உணர்ந்தான். அவன் அப்பச்சிளங்குழந்தையை நோக்கினான். கண்ட காட்சி அவனை பிரமிக்க வைத்தது. இது உண்மைதானா அல்லது மனம் செய்யும் மாயையா எனத் தன்னையே அவன் கேட்டுக்கொண்டான். தூண் போல அவ்விடத்திலேயே அசையாது நின்றான். காரணம் என்னவெனில், அக்குழந்தையைச் சுற்றிப் பிரகாசம் மிக்க ஒரு ஒளி வட்டம் காணப்பட்டது. தனது தாயையும் தந்தையையும் கண்ட அக்குழந்தை அப்போதே வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்தது. அக்குழந்தை ஏதோ கூற விரும்புவதைப் போலக் காணப்பட்டது! ஆமாம். அவர்கள் இவ்வார்த்தைகளை கேட்டனர். நேரம் தாமதிக்காமல், எம்மை இப்போதே கோகுலத்திற்கு எடுத்துச் செல்லும்.” “வசுதேவன் சற்றும் தாமதிக்கவில்லை. ஒரு பழைய வேஷ்டியை மூங்கிலாலானத் தடுக்கின் மீது விரித்து, அதன் மீது அக்குழந்தையைப் படுக்க வைத்தான். தேவகியின் பழைய சேலையிலிருந்து கிழிந்த ஒரு முந்தானையை அக்குழந்தை மீதுப் போர்த்தினான். பிறகு திறந்திருந்தக் கதவுகள், வாசற்கதவுகள் வழியாக தூங்கிக் கொண்டிருந்த காவலர்களைக் கடந்து சென்றான்.” “வானத்திலிருந்து இலேசாகத் தூறிய மழைத்துளிகளைக் கண்ட வசுதேவன் அந்தப் பச்சிளம் குழந்தை முழுதாக நனைந்துவிடுமோ எனக் கவலையுற்றான். ஆனால், சற்று பின்புறமாகத் திரும்பிப் பார்த்த அவன், ஆதிசேஷன் அக்குழந்தை நனையாமல் இருக்க, தனது சிரங்களைக் குடையாக அகல விரித்து, தன் காலடியைத் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதைக் கண்டான்! காலெடுத்து வைத்த வழி நெடுகிலும் மங்களகரமான, சாதகமான சகுனங்கள் நடப்பதை வசுதேவன் கண்ணுற்றான். சூரியன் இன்னமும் உதிக்காதிருந்த போதிலும், எல்லா தாமரைத் தடாகங்களில் தாமரை மொட்டுகள் மலர்ந்து, தங்களின் தண்டுகளை வளைத்து வசுதேவனை நோக்கிய வண்ணம் நின்று கொண்டிருந்தன. அந்த இரவு, சந்திரன் தோன்றாத இரவாக இருந்தபோதிலும், அந்தத் தெய்வீகக் குழந்தையைக் காணும் ஏக்கத்தில் முழு நிலவு, மேகங்களுக்கு இடையில் எட்டிப்பார்த்து, தனது இதமான ஒளியால் அந்த மூங்கிலாலான தடுக்கை வழி நெடுகப் பிரகாசிக்கச் செய்தது! இவ்வளவு மங்களகரமான நிகழ்ச்சிகளை விளைவித்த அக்குழந்தை நந்தகோபரின் இல்லத்தில் வைக்கப்பட்டது; சற்று முன்பே அங்கு பிறந்திருந்த மற்றுமொரு குழந்தை தூக்கி வரப்பட்டு, தேவகியின் கையில் ஒப்படைக்கப்பட்டது. இதைச் செய்து முடித்த வசுதேவன் அழத் தொடங்கினான். அவனால் தன் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.”

“கிருஷ்ணர் அஷ்டமித் திதியில் பிறந்தார். தான் பிறந்ததிலிருந்து, எப்பொழுதும் அவர் கஷ்டத்திற்கு உள்ளாகியிருந்தார். ஆனால், கடவுளின் திருப்பெயரை யார் தன் இதயத்தில் நிறைத்திருந்தார்களோ, அவர்களெல்லாம், பற்றிலிருந்து விடுவிக்கப்பட்டனர். வசுதேவர் சிறைவாசியாக இருந்தார். ஆனால், குழந்தைக் கிருஷ்ணனை தேவகி அவரது தலையில் வைத்ததுமே அவர் விடுவிக்கப்பட்டார். கிருஷ்ணர் தன் தலையைத் தொட்டவுடனேயே, வசுதேவரின் தளைகள் அறுந்து விழுந்தன. கிருஷ்ணரைத் தன் தலையில் தாங்கி, கோகுலத்தில் அவரைக் கீழிறக்கிய வரையிலும் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். அவர் யசோதையின் வீட்டில் அவர் குழந்தையை விட்டார். அதன் பின், அவர் தன் சிறைக்கு வந்து சேர்ந்ததும் மீண்டும் தளைப்பட்டார். இந்நிகழ்ச்சியின் உட்கருத்து என்ன? கடவுள் சிந்தனைகள் நம் மனதிலிருக்கும் வரை தளையில்லை. ஆனால் கடவுளைத் துறந்தவுடனேயே, ஒவ்வொரு வகையிலும் தளைப்படுவீர்கள்.”

[Ref:- தெய்வீக உரை, 10-ஆகஸ்ட்-1993]

வசுதேவரின் பக்தி

குரல் கூறிய வண்ணம், குழந்தையை ஒரு கூடையில் வைத்து, சுமந்து கொண்டு, (பிளந்து, அவருக்கு வழி கொடுத்த) யமுனையாற்றைக் கடந்து, நந்தரின் மனைவியாகிய யசோதை, ஒரு பெண் குழந்தையை அதே வேளையில் ஈன்றிருந்த கோகுலத்திற்கு வசுதேவர் சென்றடைந்தார். அவர் சிறையிலிருந்து வெளியேறியதும் நல்ல சகுனத்தைக் குறிக்கும் படியாக ஒரு கழுதைக் கத்தியது! ஆனால் வசுதேவரோ, அந்தக் கத்தல் ஒரு வேளை பாதுகாவலர்களை எழுப்பிவிட்டுவிடுமோ என்று பயந்து, அதன் கால்களை நன்றாகப் பற்றிக்கொண்டு அமைதியாக இருக்கும்படி அதனிடம் பிரார்த்தித்தார். அவர் தம் ஆணைப்படி, தான் கூட்டிச் சென்று கொண்டிருக்கும் பகவான் மீது அவருக்கு அந்த அளவு பக்தி இருந்தது.

[Ref:- தெய்வீக உரை, 2-செப்டம்பர்-2010]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன