நச்சுத் தன்மையான விதைகள்
நச்சுத் தன்மையான விதைகள்
தசரதர் தம் மக்கள் நால்வரும், மருமகப்பெண்கள் நால்வரும் தொடர அயோத்திய நகருக்குத் திரும்பினார். எங்கே பார்த்தாலும் ஒரே கோலாகலமான இன்பம் நிலவியது. பொலிவோடு விளங்கிய நான்கு சகோதரர்களுமே, நாடு மக்களைக் கவர்ந்தனர். அதிலும் முக்கியமாக இராமர், அயோத்திய நாட்டு மக்கள் கண்களுக்கு ஒரு விண்மீன் போன்று ஒளி வீசும் உருவத்துடன் காணப்பட்டார். தசரதரது, மனம் நிறைவையும், மகிழ்ச்சியையும் விவரிக்க இயலுமா! இங்ஙனம் இன்பமயமாக சில காலம் சென்றது.
தசரதருக்கு எதிர் காலத்தைப் பற்றி நினைவு ஓடியது. உடல் தளர்ந்து, தமக்கு வயதாவதை அவர் உணர்ந்தார். நீண்ட நாட்கள் தாம் உயிருடன் இருக்க இயலுமா என்று ஐயுற்றார். அதனால் இராமருக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்துவிட காலம் நெருங்கி விட்டதையும் சிந்தித்தார். இக்ஷ்வாகு குலத்தினரின் குருவான வஸிஷ்டரைக் கலந்தாலோசித்து, அறிவுரைக் கேட்டார். குலகுருவும் அவரது எண்ணங்களை ஆதரித்து, அடுத்த நாளே இராமருக்குப் பட்டாபிஷேகம் செய்யச் சிறந்த உகந்த நாளாக, இருப்பதைத் தெரிவித்தார். உடனே அதற்கேற்ப ஆயத்தங்கள் விரைந்து செயல் பெற்றன. முடி சூட்டும் செய்தியறிந்தவுடன் நாட்டு மக்களது மகிழ்ச்சி எல்லை கடந்து பெருகியது. எல்லோரும் மறுநாள் பொழுது விடிவதற்குத் துள்ளும் மனத்துடன் துடிப்போடு காத்திருந்தனர்.
இன்பமயமான இந்தச் சூழ்நிலையிலும் கெடுமதி படைத்த ஒருத்தியும் இருந்தாள். அவள்தான் அரசி கைகேயியின் பணியாளான கூனி மந்தரை என்பவள். அவளது தீய மனம் வேறு விதமான திட்டம் தீட்டியது. அவள் மெதுவாகக் கைகேயியை அணுகினாள். பலவாறு பேசி அவளது மனத்தில் நஞ்சினைப் புகுத்தினாள். இராமரிடம் அளவு கடந்த அன்பு கொண்டிருந்த கைகேயி முதலில் மந்தரையின் கூற்றுக்குச் சற்றும் செவி சாய்க்கவில்லை. ஆனால் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதற்கேற்ப, மெல்லமெல்ல அவள் மந்தரையின் சொற்களில் மயங்கிப் பணிந்து விட்டாள்.
தசரதர் வந்தால் எப்படி எப்படியெல்லாம் நடந்து, எங்ஙனமெல்லாம் பேசி எவ்வாறெல்லாம் செயலாற்றி வெற்றி பெற வேண்டும் என்பதற்கு கெடுமதி படைத்த மந்தரை ஒரு நாடகமே உருவாக்கித் தந்தாள். பாவம் தசரதர், தம் மனதிற்குகந்த மனையாளிடம், பட்டாபிஷேகச் செய்தி கூற மகிழ்வோடு வந்தார். ஆவலோடு அவரை வரவேற்கும் கைகேயி அங்கில்லாதது அவருக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. மற்றவர்களும் அவரை விரும்பி வரவேற்காதது வியப்பைத் தந்தது. கைகேயி எங்குள்ளாள் என்று அவர் கேட்டதற்கு ஒருவரும் சரியான மறுமொழி கூறவில்லை. அவரே சென்று, அடுத்துள்ள சிறிய அறை ஒன்றில் ஒரு மூலையில் அவள் சுருண்டு படுத்திருப்பதைக் கண்டு பிடித்தார். உடல்வலி ஏதாவது அவளைத் துன்புறுத்திகிறதோ என்று எண்ணினார். அருகே சென்று அவளது நலமின்மைக்குக் காரணம் வினவினார். ஆனால் அவரது பரிவைக் கண்டு, அவள் மனம் மாறாது, அவரை விட்டுத் திடுமென விலகித் தூரச் சென்றாள்.
பலவாறு நயந்து பேசி, புகழ்ந்து கூறி அவளை அமைதி பெறச் செய்தார் தசரத மன்னர். அதனால் தெளிந்தது போல எழுந்த கைகேயி, கொஞ்சம் கூட தவறு ஏற்படாத வகையில் தன்னுடைய திட்டங்களை விவரித்தாள்.
“அன்பரே! தாங்கள் எனக்கு, இரண்டு வரங்கள் தர வாக்களித்து அவற்றை நான் விரும்பும்போது பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியது , தங்களுக்கு நினைவிருக்கிறதா? அவற்றை நான் பெற்றுக் கொள்ளும் தருணம் இப்போது வந்துள்ளது” என்றாள்.
தசரதர், “உடனே போயும் போயும் இதற்காகவா நீ இத்துணைத் துன்புற்று உன்னையே வருத்திக் கொண்டுள்ளாய். நீ எளிதாகக் கேட்பதை நான் உனக்கு வழங்க ஆயத்தமாக இருக்கிறேன்,” என்று விடையிறுத்தார்.
அதற்கு கைகேயி, “தாங்கள் வாக்கைக் காப்பாற்றுவீர்கள் என்று எனக்கு உறுதியாகத் தெரியும். ஆனாலும் கவனியுங்கள்! முதலாவது வரம் என் மகன் பரதன் தான் அடுத்தபடியாக அயோத்திய அரசனாகப் பட்டம் சூட்டப் பெற வேண்டும். இரண்டாவது வரம்; இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வசிக்க வேண்டும்.” என்று கேட்டாள்.
தசரதனுக்குத் தம் கண்களையே நம்ப முடியவில்லை. வியப்பும் வருத்தமும் அவரை வாயடைத்துப் போகச் செய்து விட்டன. “இராமன் உனக்கு என்ன கெடுதி செய்தான்? அவன் சிறிய எறும்புக்குக் கூட தீங்கிழைக்க மாட்டானே! என் அன்பிற்குகந்த இராமனைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது என்று உனக்குத் தெரியாதா? அன்பே! மனமிரங்கி யோசித்துப் பார்! உன் இத்தகைய வேண்டுகோள்களை விட்டுவிடு. வேறு ஏதாகிலும் கேள், நான் உடனே தருகிறேன் என்று மன்றாடிக் கெஞ்சிக் கேட்டார், கைகேயிடம். ஆனால் கைகேயி சற்றேனும் தன் பிடிவாதத்தினின்றும் தளரவேயில்லை. ஒரே உறுதியாகத் தன் தேவைகள் இந்த இரண்டு வரம் தான் என்று வற்புறுத்தினாள்.
தசரதர் சிக்கலான நிலைமையில் மிகவும் குழம்பித் துவண்டுப் போனார். கைகேயியின் கால்களைப் பற்றி மன்றாடவும் அவர் முயன்றார். ஆனால் எதற்கும் கைகேயி அசைந்து கொடுக்கவில்லை. கலங்காத கற்பாறையாக அவள் நின்றாள். “இராமன் முடிசூட்டப் பெற்றால், நான் நஞ்சு அருந்தி மடிவேன்” என்று அழுத்தம் திருத்தமாக வெளியிட்டாள். என்ன செய்வார் தசரதர்? பாவம்! அவரது மனநிலையை யாராலும் விவரிக்கவே இயலாது. இராமரிடம் கொண்டிருக்கும் அளவு கடந்த பாசமா, தர்மத்திடம் கொண்டிருக்கும் ஆழ்ந்த பற்றுதலா எதைத் தேர்ந்தெடுத்து முடிவு செய்வது என்று புரியாமல் சற்று நேரம் தவித்துப் போனார். இறுதியில் அவரது வாய்மையின் ஆர்வமே வென்றது. “சரி உன் விருப்பபடியே நடக்கட்டும், இராமன் பெயரை உதட்டில் உச்சரித்துக் கொண்டே நான் சாகிறேன்,” இங்ஙனம் கூறிவிட்டு மயக்கமுற்று கைகேயியின் அடிகளிலேயே சுருண்டு விழுந்து விட்டார்.
பொழுது விடிந்து கொண்டிருந்தது. அயோத்தி நாடு மக்கள், முடிசூட்டு விழா நிகழ்ச்சியை அறிவிக்கும் சங்கின் ஒலியையும், இசைக் கருவிகளின் ஒலிகளையும் செவியுற ஆவலோடு ஆயத்தமாகக் காத்திருந்தனர். ஆனால் பொழுது புலரத் துவங்கியும் ஓர் ஒலியும் அங்கிருந்து எழும்பவேயில்லை.
இராமர் கைகேயியின் அறைக்கு அழைக்கப் பெற்றார். அங்கே சென்றதும் தந்தையார் நினைவற்றுக் கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு திடுக்குற்றார். துடித்துப் போய் மாற்றாந்தாயிடம் காரணம் வினவினார். அதற்கு அவள் “ அன்பு மகனே! உன் தந்தையின் கவலையை நீதான் மாற்ற முடியும்….” என்று அமைதியோடு கூறினாள். “அம்மா! என் தந்தையின் மனம் மகிழ நான் எது வேண்டுமானாலும் செய்கிறேன்! கட்டளையிடுங்கள், தாயே! என்று இராமன் பணிவாகச் சொல்லவும் கைகேயி தனக்கு தசரதர் வாக்களித்துள்ள இரண்டு வரங்களைப் பற்றி விவரித்தாள்.
ஆழ்ந்த அமைதியோடு கைகேயியின் சொற்களைச் செவி மடுத்த இராமர், விளைவுகள் எப்படிப் பட்டனவாக இருந்தாலும், தந்தையாரது விருப்பம் “நிறைவேற்றப் பட வேண்டும் “என்று உறுதியோடு கூறினார். பிறகு தந்தையாரது திருவடிகளில் பணிந்து, கைகேயியையும் வணங்கி, வெளியே வந்து நேராக அன்னை கெளசல்யையின் அரண்மனைக்குச் சென்றார். அங்கே சுமித்திரை, சீதை, இலட்சுமணன் யாவரும் கூடியிருந்தனர். அவர்களுக்கு அமைதியோடு மெதுவாகச் செய்தியைத் தெரிவித்துத் தாம் காட்டிற்குச் செல்வதற்காக அநாவசியமாகக் கவலைப் பட வேண்டாம் என்றும் எடுத்துரைத்தார்.
ஆனால் செய்தி அறிந்தவுடன் கெளசல்யாதேவி துவண்டு போய் மயக்கமுற்று கீழே விழுந்தாள். இராமர் அவளருகே அமர்ந்து பலவாறாக ஆறுதல் கூறி அவளை அமைதிப்படுத்த முயன்றார். கலக்கமுற்ற கசப்பான நிலைமை சற்று நேரம் நீடித்தது. பிறகு தெளிந்து சீதையும் இலட்சுமணரும் இராமரோடு காட்டிற்குச் செல்வது என்று முடிவு செய்யப் பெற்றது. எல்லோரும் கைகேயியைக் குறை கூறத் துவங்கினர். இராமர் பணிவன்போடு அங்ஙனம் அவளை இகழ்ந்துரைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மன நிறைவான மகிழ்வோடு தந்தையாரின் கட்டளைகளைத் தாம் நிறைவேற்றுவதாகவும், வேறு ஒன்றும் குறிப்பாக நிகழ்ந்து விடவில்லை என்றும் அவர்களுக்குத் தெரிவித்தார்.
இறுதியில் தசரதரே அங்கு வந்து, அயோத்தியை முழுவதுமே இராமரைப் பின் தொடர்ந்து காட்டிற்குச் செல்ல வேண்டுமென்றும், காட்டில் அரச போகத்துடன் இருக்க எல்லா வசதிகளையும் அவர்கள் செய்ய வேண்டுமென்றும் கட்டளையிட்டார். ஆனால் அதற்கு இராமர், “பரதன் வெறுமையான அரண்மனையில் வாழ்ந்து கொண்டு, ஒரு வெற்று இராஜ்யத்தை ஆள்வதா?” என்று கூறித் தடுத்து விட்டார். இராமர், இலட்சுமணர், சீதை மூவரும் வனவாசத்திற்குரிய மரவுரிகளைத் தரித்துக் கொண்டனர்.
அரசரது உத்தரவுக்கிணங்க அமைச்சர் சுமந்தரர், இராம, இலட்சுமணர், சீதையைத் தேரில் ஏற்றிக் கொண்டு மக்களின் கலக்கமான கூச்சலுக்கு இடையே அயோத்தியை விட்டு வெளியேறினார்.
கௌசல்யாதேவியின் துயரம் எல்லை கடந்து போயிற்று. அருமை மகனைக் காட்டிற்கு அனுப்பிவிட்டதற்காக அவள் தசரதரைக் கடிந்து கொண்டாள். அப்போது தசரதருக்கு, கடந்த கால நிகழ்ச்சி ஒன்று நினைவிற்கு வந்தது. இளைஞராக இருந்தபோது, நடைபெற்ற, சிரவண குமாரன் என்பவனைப் பற்றிய அந்த வரலாற்றை அவர் கௌசல்யா தேவிக்குக் கூறினார்.
தசரதர் ஒருமுறை வேனிற்கால இரவு வேட்டைக்குச் சென்றிருந்தார். அவர் ஒரு தலை சிறந்த வில்லாளர். கண்களால் காணமுடியாத தொலைவாயினும் ஒலி வரும் இடத்தைக் கொண்டே குறி தவறாது அம்பு எய்யக் கூடியவர். அப்போது திடீரென யானை ஒன்று தும்பிக்கையில் நீர் உறிஞ்சிப் பருகுவது போலக் “களக் களக்” என்று ஓசை கேட்டது. உடனே ஒலி வந்த திசையில் ஓர் அம்பைச் செலுத்தினார். அம்பு பறந்த வேகத்தில், பாய்ந்து வந்தது ஒரு மனிதக் குரல். ‘ஆ! அப்பா! அம்மா! நான் மடிகிறேன்” என்று அந்தக் குரல் ஓலமிட்டது.
தசரதர் திகைத்து நின்று விட்டார். குரல் வந்த திக்கை நோக்கி ஓடினார். அம்பு பாய்ந்த வேதனையோடு, ஓர் இளம் துறவி குளக்கரையில் விழுந்துக் கிடப்பதைக் கண்டார். தசரதரைப் பார்த்தவுடன், அவர், “தசரதா! ஏன் என்னைக் கொன்று விட்டாய் ஒரு பாவமும் அறியாமல், என் பெற்றோர் தாகம் தீர்க்க நான் நீரை மொண்டு கொண்டிருந்தேனே! அவர்கள் என்னை விட்டுப் பிரிவதைப் பொறுக்க மாட்டார்களே! நான் இனி பிழைக்க மாட்டேன், மரணத் தறுவாயில் இருக்கிறேன். இந்த நீரை என் பெற்றோருக்கு எடுத்துச் சென்று தந்து, அவர்கள் காலில் விழுந்து பொறுத்திடும்படி கேட்டுக் கொள் “ என்று கூறினார்.
தசரதர் நீர்க் குடத்துடன் சிரவண குமாரனின் வயோதிகப் பெற்றோரிடம் விரைந்து சென்றார். அவர்களின் கால்களில் விழுந்து வணங்கினார். “ நான் உங்கள் மகனல்லன், உங்கள் மகனை, என்னை அறியாமல் கொன்றுவிட்டு ஒரு பெரிய பாவத்தைச் செய்து விட்டேன். என்னை அன்பு கூர்ந்து மன்னித்தருளுங்கள்” என்று புலம்பினார்.
தசரதரது சொற்கள் அவர்களிருவரையும் செயலற்றுப் போகச் செய்து விட்டன. “அறியாமல் செய்த போதிலும் நீ மிகப் பெரியதொரு பாவத்தைச் செய்து விட்டிருக்கிறாய். அதனால் நீயும் ஒரு தந்தையாகி, அன்பிற்குகந்த மகனைப் பிரிவதென்பது எத்தகைய துன்பத்தை விளைவிக்கும் என்பதை ஒரு நாள் உணர்வாய் “ என்று மனம் நொந்து சபித்தனர்.
தசரதர் இந்த நிகழ்ச்சியைக் கெளசல்யாதேவிக்கு விவரித்துக் கூறி, “என்னுடைய செயல்களின் பலனைத்தான் நான் அனுபவிக்கிறேன்….” என்று வருந்தினார்.