மக்கள் சேவையே மாதவன் சேவை

Print Friendly, PDF & Email
மக்கள் சேவையே மாதவன் சேவை

ஒரு முறை, கிறிஸ்தவ மதச் சாது ஒருவர் ஜெருசலத்திற்கு வந்திருந்தார். அவரைக் கண்டு அவரது ஆசிகளைப் பெறுவதற்கு, வெகு தொலைவிலிருந்தும் அண்மையிலிருந்தும் நாள்தோறும் மக்கள் திரண்டு வந்தனர். ஜெருசலத்தை அடுத்துள்ள ஒரு கிராமத்தில் அமைதியும் பொறுமையும் உள்ள ஒரு மூதாட்டி வசித்து வந்தார். வயது முதிர்ச்சியின் காரணமாக, அவர் மிகவும் நலிந்தும் மெலிந்தும் இருந்தார். வீட்டில் கூட ஒரு தடியை ஊன்றிக்கொண்டு மிக மெதுவாக அடி மேல் அடி வைத்து தான் அவரால் நடக்க இயலும்.

அந்த மூதாட்டி தினமும் தம் வீட்டு வழியாக ஆண்களும் பெண்களும் ஜெருசலம் செல்வதைக் கண்டார். அதனால், மூதாட்டிக்குத் தானும் ஜெருசலம் சென்று அந்த சன்யாசியின் ஆசி பெற ஆவல் ஏற்பட்டது. “ நான் இறப்பதற்கு முன் அந்தப் பெரியவரைக் கண்டு ஆசி பெற்றால் எத்தகைய நன்மை பயக்கும்! ஒரு வேளை வழியில் நான் இறந்து விட்டால், இறைவன் நம்மை ஆசீர்வதித்துச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வாரே!” என்று எண்ணினாள்.

ஒரு நாள் அம்முதியவள் துணிந்து ஜெருசலம் செல்ல வீட்டை விட்டுக் கிளம்பி விட்டாள். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் அவள் தடுமாறிக் கீழே விழுந்து விடுபவள் போல அவள் உடல் நடுங்கியது. எனினும், இதயத்தில் ஆர்வம் உந்த, இழுத்துப் பறித்துக் கொண்டு நடந்தாள். கையில் தடியுடனும் இதயத்தில் இறைவனுடனும், பாதித் தொலைவே இங்ஙனம் தள்ளாடித் தள்ளாடி அவளால் செல்ல முடிந்தது. அதற்குள் சூரியனது வெப்பமும் மிகுந்து விடவே, சோர்வினால் தளர்ந்து, தலையைச் சுற்றி மயக்கம் எங்கோ கொண்டு தள்ள, உதவி புரியவும் யாரும் இல்லாதவளாய்த் துவண்டு போனாள். மிக்க முயன்று, மெதுவாக நகர்ந்து நகர்ந்து வந்து, சாலையோரம் இருந்த ஒரு பெரிய பாறையின் மேல் அமர்ந்து கொண்டாள். யாருடைய உதவியுமற்ற அந்த நிலையில் தனக்கு இறைவனே துணை என்று அவரை அழைத்தவண்ணம் அமர்ந்திருந்தாள்.

அப்போது சாலையில் சில இளைஞர்களும் பெண்களும் நடந்து சென்றனர். உடனே கிழவி, ”அருமைக் குழந்தைகளே! ஜெருசலத்திற்கு என்னை சற்றுத் தூக்கிச் சென்று உதவ மாட்டீர்களா?” என்று நைந்த குரலில் பரிதாபமாகக் கெஞ்சினாள். அவளது வேண்டுகோள் சிலருக்குக் கோபத்தைத் தந்தது. சிலர், இந்த வயதில் இத்தகைய ஆசையா என்று வியந்து அவளை நோக்கினர். பின்னும் சிலரோ, “பாட்டி! உன்னை ஜெருசலத்திற்குத் தூக்கிச் செல்வதை விடச் சுடுகாட்டிற்கே தூக்கிச் செல்லலாமே!” என்று எள்ளி நகையாடினர். அவளது ஆசையைக் கேட்ட அனைவரும் பெருங்குரலெடுத்துச் சிரித்து விட்டுத் தங்கள் வழியே சென்று விட்டனர்.

சிறிது நேரம் சென்றது. இளமையும் இனிமையும் கொண்ட ஒரு பாதிரியார் அவ்வழியே வந்தார். அவரைக் கண்டதும் மீண்டும் நம்பிக்கை துளிர்த்தவளாய்க் கிழவி, “அன்பு சகோதரனே! என்னை ஜெருசலத்திற்குத் தூக்கிச் செல்வாயா?” என்று கேட்டாள்.அவளது மொழிகளைச் செவி மடுத்து, அந்தப் பாதிரியார் அவளது அருகே வந்தார். “பாட்டி! கவலைப் படாதீர்கள்! என் தோள்களின் மேல் கால்களைப் போட்டுக் கொண்டு முதுகில் அமர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களை ஜெருசலம் வரை சுமந்து செல்கிறேன்“ என்று மகிழ்வுடன் கூறினார்.

எல்லாரும், சந்யாசி தங்கியிருந்தப் புனித இடத்தை அடைந்தனர். சந்நியாசி ஒரு உயர்ந்த பீடத்தில் அமர்ந்திருந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் அப்பெரியவரைச் சூழ்ந்து நின்றிருந்தனர். மூதாட்டியை எள்ளிநகையாடிய இளைஞர்களும் அங்கு நின்றிருந்தனர். அவர்களுக்கு முன்னர் உயரமான மனிதர்கள் சிலர் நின்றிருந்தனர். எனவே அந்த இளைஞர்களால் சந்யாசியை சரியாகப் பார்க்க இயலவில்லை. அதனால் ஒருவர் முதுகில் ஒருவர் ஏறி அவரைத் தரிசிப்பது என்று திட்டமிட்டனர். அதன்படி முதலில் ஒருவன், மற்றொருவன் முதுகில் ஏறிப் பார்த்தான். அங்ஙனம் பார்த்தவன் அயர்ந்து விட்டான்.என்ன விந்தை இது! சந்யாசி அமர்ந்திருந்த இடத்தில் அவரைக் காணவில்லை. தான் ஏளனம் செய்து சிரித்த, முகச்சுருக்கங்களுடனும் நரைத்த தலையுடனும் கூடிய அதே கிழவியல்லவா அங்கு அமர்ந்திருக்கிறாள் என்று வியந்தவன், தான் காண்பது கனவா அல்லது மாயத்தோற்றமா என்று கண்களைத் தேய்த்து விட்டுக்கொண்டு மறுபடியும் பார்த்தான். அதே கிழவி பொக்கை வாயைத் திறந்து சிரித்தபடி அமர்ந்திருந்தாள். “ நான் சந்யாசியைக் காணவில்லையே! நாம் சாலையோரம் விட்டு வந்த பாட்டி தான் பீடத்தில் அமர்ந்திருக்கிறாள்!.” என்று அவன் வியந்து கூவினான். உடனே அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர் முதுகில் ஏறிப் பார்த்துச் சந்யாசியைக் காணவில்லை என்று ஏமாற்றக் குரலில் கூவினர்.

இவர்கள் நிலை இங்ஙனமாக இருக்க, கிழவியைச் சுமந்து சென்ற இளம் பாதிரியாரது அனுபவம் வேறு விதமாக இருந்தது. அவர் சென்று நின்ற இடத்தில் சந்யாசியின் முழுத் தோற்றமும் நன்கு தெரிந்தது. அதிலும் அப்பெரியவர் தம் கையை உயர்த்தி பக்தர்களை ஆசீர்வதிக்கும் போது பாதிரியார் அவரை நன்கு சேவித்தார் .அது மட்டுமல்ல! தம் தோள்களில் மூதாட்டி அமர்ந்திருந்த இடத்தில், அந்தப் பெரியவரைத் தான் சுமப்பதைச் சற்று நேரம் அவர் உணர்ந்தார். தம் தோள் மீது இருந்து கொண்டு, தம்மை அந்த சாது ஆசீர்வதிப்பதாகவும் அவருக்குத் தோன்றியது. உடனே அவரது இதயத்தில் சொர்க்கத்தின் இன்பமெல்லாம் பாய்ந்து வந்து அவரை அமைதிப்படுத்துவதை உணர்ந்தார்.

உண்மையில் கூறப்போனால்,அந்த ஆண்டு முழுவதும் ஜெருசலத்திற்கு வந்த யாத்திரிகர்களில் அந்த இளம் பாதிரியார் மட்டுமே இறைவன் அருளை முழுமையாகப் பெற்ற புண்ணியவான் எனலாம். ஏனெனில், கடவுளைத் தாம் நெஞ்சார நேசிப்பது போலவே கடவுள் படைத்த உயிர்களிடமும் அகமாற அவர் அன்பு கொண்டிருந்தார். அதனால் இயன்ற உதவியைச் செய்வதற்குத் தயாராக இருந்தாரல்லவா?

கேள்விகள்:
  1. மூதாட்டி ஜெருசலேம் செல்வதற்கு இளம் பாதிரியார் ஏன் உதவ முன் வந்தார்? அதனால் என்ன பலன் பெற்றார்?
  2. முதலில் வந்த இளைஞர்கள் ஏன் மூதாட்டியை ஜெருசலேம் அழைத்துச்செல்ல விரும்பவில்லை? அதன் விளைவு என்ன?
  3. அந்த இளைஞர்களில் நீயும் ஒருவனாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பாய்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன