ஜனங்களின் சேவையே ஜனார்தனன் சேவை
ஜனங்களின் சேவையே ஜனார்தனன் சேவை
ஆப்ரஹாம் லிங்கன் 1861ல் அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆனார். அவர் கனிந்த இதயம் பெற்ற கனவான் என்றும் வாய்மையையும் நேர்மையையும் விரும்பி மதிக்கும் பெருமகன் என்றும் அந்த நாடு முழுவதும் போற்றப்பட்டார்.
சிறுவனாக இருந்த போதே ஆப்ரஹாம், மக்களது தேவையிலும் துன்பத்திலும் அவர்களுக்கு உதவி செய்து சேவை புரிவதில் பெருவிருப்பம் கொண்டவராக இருந்தார். அவர் ஜனாதிபதியாக இருந்த போது ஒரு முறை, நண்பர்கள் சூழ்ந்து வர வழக்கம் போல் உலாவச் சென்றார். வீடு திரும்பும் போது சேணங்கள் பூட்டப்பட்ட ஒரு குதிரை, ஓட்டுபவன் இல்லாமல் தம் அருகில் வந்து கொண்டிருப்பதைக் கண்ணுற்றார். நண்பர்களிடம் ஆப்ரஹாம் “ அந்தக் குதிரை யாருடையதென்று ஏதாவது தெரியுமா?” என்று வினவினார். ஏன் அது இப்படி விந்தையான நிலையில் திரிகிறது? என்றும் கேட்டார். அவரது நண்பர்களுக்கு அந்தக் குதிரை யாருடையது என்று ஓரளவு தெரியும். அவன், பெருங்குடிகாரன். “ அவன் குடித்துவிட்டு வரும் வழியில் எங்காவது குதிரையின் மீதிருந்து விழுந்து விட்டிருப்பான்.” என்றனர் நண்பர்கள்.
அனைவரும் திரும்பிச்சென்று அவனைக் கண்டுபிடிக்கலாம் என்று ஆப்ரஹாம் கூறினார். “அவனை நாம் ஏன் தேட வேண்டும்? ஏற்கனவே இருட்டிக் கொண்டு வருகிறது. இப்போதே நாம் நேரம் சென்று திரும்புகிறோம். அந்த குடிகாரனுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டுமே!” என்று நண்பர்கள் கூறினர். உடனே நேரே போகவும் தொடங்கினர். ஆனால் ஆப்ரஹாம் அவர்களுடன் போகவில்லை.
“நண்பர்களே! என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் அனைவரும் வீட்டுக்குச் செல்லுங்கள். அந்த மனிதன் உதவி தேவைப்படும் நிலையிலிருக்கிறான் என்றே தோன்றுகிறது. அவன் குதிரை மீதிருந்து கீழே விழுந்து எங்காவது பலத்த அடிபட்டும் இருப்பான் என்றும் தோன்றுகிறது. அதனால் அவனைக் கண்டுபிடித்து அவனுக்கு வேண்டியன செய்யப்போகிறேன்,” என்று சொல்லிவிட்டுத் திரும்பி, வந்த வழியே நடக்கலானார். நண்பர்கள் வீட்டுப் புறமாக நடந்த போது, ஆப்ரஹாம் அவர்கள் வந்த பாதையில் அந்தத் துயருறும் மனிதனைக் கவனமாகத் தேடிக்கொண்டே சென்றார். கொஞ்ச தூரம் சென்ற பிறகு சாலையோரத்தில் அந்தக் குடிகாரன் நினைவிழந்த நிலையில் படுத்துக் கிடப்பதைக் கண்டார் ஆப்ரஹாம். அவனுக்குக் கொஞ்சமாவது நினைவு திரும்ப ஆவன செய்து, மிகுந்த கஷ்டத்துடன் அவனைத் தாங்கியவாறு தன் வீட்டிற்குக் கொண்டுவந்து சேர்த்தார். இத்துணை பாடுபட்டு ஒரு குடிகாரனை வீட்டுக்கே அழைத்து வந்து விட்டதைக் குறித்து வீட்டிலிருந்த அனைவரும் அவரைக் கோபித்தனர். ஆனால் அவரோ அவர்களது கடுமையான ஏச்சுப்பேச்சுக்களை பொருட்படுத்தவேயில்லை. அமைதியாக, “அவன் குடித்திருக்கலாம். நம்மைப் போல் ஒரு மனிதன். அவனுக்கு உதவ வேண்டியது நமது கடமையாகும்” என்று அழுத்தம் திருத்தமாக அவர்களிடம் கூறிவிட்டார்.
பிறகு அந்தக் குடிகாரனைக் குளியலறைக்கு அழைத்துச் சென்று, கொட்டும் குளிர்ந்த நீர் குழாயடியில்அவனைக் கொஞ்ச நேரம் அமரச் செய்தார் ஆப்ரஹாம். நீர் விழ விழத் தெளிவு பெற்று, அவன் தன் முழு உணர்வும் வரப் பெற்றான். அதன் பிறகு ஆப்ரஹாம் அவனுக்கு உணவு படைத்து அருந்தச் செய்தார். பின்னரே அவனை வீட்டுக்குப் போக அனுமதித்தார்.
கனிந்த அன்போடு மனிதனுக்குச் செய்யப்பெறும் சேவை கடவுளுக்குச் செய்யும் சேவையாகும் என்று ஆப்ரஹாம் நம்பினார். அமெரிக்கர்கள் கருப்பு நீக்ரோக்களை அடிமைகளாக்கி வேலை வாங்குவதைக் கண்டு அவர் மிகவும் மனம் நொந்து வருந்தினார். இத்தகைய அடிமைத்தனத்தை நீக்க வேண்டி, தம் நாட்டினரோடேயே அவர் போராட வேண்டி நேர்ந்தது. இறுதியில் நீக்ரோக்களுக்கு அடிமைத் தளையினின்றும் விடுதலையையும் வாங்கித் தந்து விட்டார் அவர். நீக்ரோக்களும் அமெரிக்கர் பலரும் “சொர்கத்தில்கடவுள்; பூமியில் ஆப்ரஹாம் லிங்கன். நாம், இவர்கள் இருவரை மட்டுமே நம்மைக் கவனித்துக்கொள்ளப் பெற்றிருக்கிறோம்,” என்று கூறுவர். மக்களுடைய அத்துணை மேன்மையான மதிப்புப் பெற்றிருந்தார் ஆப்ரஹாம் லிங்கன்.
கேள்விகள்:
- துன்புறும் ஒருவனுக்கு நீ எப்போதாவது உதவியோ சேவையோ செய்திருக்கிறாயா ? அப்படியாயின் எத்தகைய உதவி செய்தாய், அதனால் நீ பெற்ற அனுபவம் என்ன என்று விளக்கு.
- தம் நாட்டு மக்களால் லிங்கன் ஏன் அவ்வளவு விரும்பப் பெற்றார்?
- தம்மைப் போன்ற மனிதர்களுக்கு அன்போடு உதவி செய்த பெரியார்கள் யாராவது உனக்குத் தெரியுமா? தெரியுமாயின் அவரைப் பற்றி எழுது.