புத்த பூர்ணிமா
புத்த பூர்ணிமா
வைகாசி மாதத்து பௌர்ணமி, புத்த பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. இது மும்மடங்கு முக்கியத்துவம் கொண்டது. கவுதம புத்தர் அவதரித்ததும், போதி ஞானம் பெற்றதும், பரிநிர்வாணம் (பரிபூரண அமைதி) அடைந்து உடலை நீத்ததும், வைகாசி பௌர்ணமி அன்று தான்.
சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்னர் சுத்தோதனன் என்னும் அரசன் சாக்கிய நாட்டை ஆண்டு வந்தான். கபிலவஸ்து அவனுடைய தலைநகரம். சுத்தோதனனின் மனைவி மாயாதேவி.
ஒரு பௌர்ணமி நாள் மாயாதேவி ஆறு தந்தங்களுடன் கூடிய வெள்ளை யானை தன் உடலுள் புகுந்தாக அற்புதமான கனவு ஒன்று கண்டாள். கனவின் பொருளைத் தெரிந்து கொள்ள சுத்தோதனன் அறிஞர்களை அழைத்தான். அறிஞர்கள் அரசனிடம் கூறினர்: 1. அரசனுக்கு மேன்மையான மகன் பிறப்பான். 2. அவன் அரண்மனைச் சூழலில் வளர்ந்தால், உலகை வெல்லும் பேரரசனாவான். துறவியானால், தன் ஞான ஒளியால் மனித குலத்தைக் காப்பான்.
நாட்கள் நகர்ந்தன. மாயாதேவி கருவுற்றாள். குழந்தைப் பேற்றுக்காக தன் பெற்றோரிடம் செல்ல விரும்பினாள். சுத்தோதனன் சம்மதித்தான். கபிலவஸ்துவில் இருந்து தேவதாகாவுக்கு மாயாதேவி பல்லக்கில் அனுப்பி வைக்கப்பட்டாள். வழியில், லும்பினி வனத்தில், வைகாசி பௌர்ணமியன்று, மாயாதேவிக்கு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் ஒரு நீரூற்று தோன்றியது. குழந்தை அதில் நீராட்டப்பட்டது. பின்பு குழந்தை ஏழு அடி எடுத்து வைத்தது. ஏழு கவிதை பாடியது. கவிதையின் கருத்து:
“நல்லவற்றுக்கு எல்லாம் நான் எடுத்துக்காட்டாய் விளங்குவேன். இதுதான் என் இறுதிப்பிறப்பு. இந்தப் பிறவியிலேயே என்னால் சம்சார சாகரம் கடக்கப்படும்.”
சித்தார்த்தன் என்று குழந்தைக்குப் பெயரிடப்பட்டது. கௌதம கோத்திரத்தில் குழந்தை கி.மு.6ம் நூற்றாண்டில் பிறந்தது. சித்தார்த்தன் போதிமரத்தடியில் தியானத்தில் ஆழ்ந்து ஞானம் பெற்று புத்தரானார். புத்தர் பிறந்த வைகாசி பௌர்ணமி புத்த ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
புத்த பூர்ணிமையை எப்படிக் கொண்டாட வேண்டும்? பூரண புத்தி (மனது) யுடன் கொண்டாட வேண்டும் என்று பாபா கூறுகிறார். மனதிற்கு அதிபதி சந்திரன். சூரிய ஒளியால் சந்திரன் பிரகாசிக்கிறது. சூரிய ஒளி ஞானத்தைக் குறிக்கிறது. சந்திர ஒளி உலகளாவிய அன்பைக் குறிக்கிறது. ஞானமில்லையெனில் அன்பு மலர்வதில்லை.
புத்த பூர்ணிமை அன்று புத்தரின் போதனைகளை நடைமுறைப்படுத்துவேன் என்று தீர்மானம் செய்து கொள். போதனைகளில் இருந்து கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவி. அகிம்சையே மிக உயர்ந்த தர்மம் என்பது முதன்மையான போதனை. ஆதலால் எண்ணம், சொல், செயல் ஆகியவற்றால் யாருக்கும் தீங்கிழைக்காதே.
புத்தம் ஷரணம் கச்சாமி – சத்சங்கத்தால் புத்தியைத் தூய்மையாக்கு சங்கம் ஷரணம் கச்சாமி – சமுதாய சேவைக்கு புத்தியைப் பயன்படுத்து தர்மம் ஷரணம் கச்சாமி – அறவழியில் வாழ்ந்து அகிம்சையைப் பின்பற்று