திருவிழாவின் உட்கருத்தும், கதைகளும்

Print Friendly, PDF & Email

ஜோதி ஒன்றே, விளக்குகளோ கோடானு கோடி

இந்நாட்டின் பல பகுதிகளில் இப்பண்டிகையின் காரணத்தைக் குறித்துப் பலவித வரலாறுகள் இருக்கின்றன. நீண்டகால வனவாசத்திற்குப் பிறகு ராக்ஷச இனத்தை அழித்த பின் இராமர் சீதையுடனும் இலஷ்மணனுடனும் அயோத்திக்கு வெற்றிகரமாகத் திரும்பிய நிகழ்ச்சியைத் தீபாவளி குறிக்கிறது என்று வட இந்தியாவில் சொல்கிறார்கள். இந்தியாவின் மற்றப் பகுதிகளில் ஸ்ரீ கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த வரலாற்றோடு தீபாவளி சம்பந்தப்பட்டிருக்கிறது. மற்ற சில பகுதிகளில் வாமன அவதாரத்தோடும், அவர் அசுர அரசனான பலியினுடைய அகங்காரத்தை அடக்கிய பின்பு அவனை ஆசீர்வதித்ததோடும் தீபாவளி சம்பந்தப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சிகளில் தீபாவளி நரகாசுரனுடைய வீழ்ச்சியைக் குறிப்பதாகும் என்பதே பரவலாக அனைவராலும் ஒப்புக்கொள்ளப்படுகிறது. நரகாசுரனுடைய பெயரே அவன் நரகத்துச் செல்லும் வாழ்க்கை முறைகளை வளர்த்துக் கொண்டிருந்தான் என்பதைக் குறிக்கிறது. எல்லா தீமைகளும், பாவங்களும் அவனால் வளர்க்கப்பட்டன. ஆகவே அவனுடைய சொந்த தாயாரான பூதேவியே அவனையும் அவனுடைய கொடிய கூட்டத்தையும் அழிக்கும்படி இறைவனைப் பிரார்த்தித்தாள்.

அசுரர்கள் ஆதிக்கம் செய்த இருண்ட நாட்கள் முடிந்து விட்டன என்பதைத் தெரிவிக்கத் தீபாவளியன்று மக்கள் அதிகாலையிலேயே எழுந்து தம் வீடுகளில் வீதிகள் பக்கம் விளக்கேற்றுகின்றனர். அவர்கள் சடங்கு பூர்வமான ஸ்நானத்தைச் செய்து புதுத்துணிகளை அணிந்து வெடிகளுக்கும் மத்தாப்புகளுக்கும் இடையே நடனமாடிக் களிக்கின்றனர்.

நரகாசுரன் மனிதனைக் கீழ்நிலைக்கு இழுத்துச் செல்லும் மனப்பான்மைகளைக் குறிக்கிறான். மனிதன் அவற்றை வெற்றி கண்டதையே தீபாவளி குறிக்கிறது. அவனுடைய தலைநகரத்தின் பெயர் அவனுடைய அடிப்படையான குற்றத்தை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளது. அவனது தலைநகரத்தின் பெயர் ‘ப்ராக் ஜோதிஷபுரம்’. ப்ராக் என்றால் முந்தைய ஜோதி– ஒளி, ஷ– இழக்கப்பட்ட, புரம்– நகரம் என்று பொருள்படும். ப்ராக் ஜோதிஷ புரம் என்றால் முந்தைய ஒளி (ஆத்ம ஒளி) இழக்கப்பட்ட பட்டணம் என்பது பொருள். நரகாசுரன் பிராக் ஜோதிஷபுரத்தில் இருந்தான் என்றால் அவன் ஆத்ம ஒளி இல்லாதவனாய் இருந்தான் என்று பொருள். ப்ராக் ஜோதிஷ புரத்து மக்கள் ஆத்ம ஒளி இல்லாதவர்கள். அவர்கள் தம் உடல், புலன்கள், அஹங்காரம், தீவிர உணர்ச்சிகள், புலன் தூண்டுதல்கள் இவற்றிலேயே நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்கள் அழிவை விலக்க வேண்டின், ஆத்ம ஒளியை அடைய வேண்டும் என்று தீபாவளி குறிக்கிறது. நரகாசுரன் பூதேவியின் மகன் ஆவான். உண்மையில் எல்லா மனிதர்களும் பூதேவியினுடைய குழந்தைகளே. எல்லா மக்களுக்கும் நரகாசுரனுக்குள்ள கீழ்நிலைக்கு இழுத்துச் செல்லும் தூண்டுதல்கள் உள்ளன. அனைவரும் பூதேவியின் குழந்தைகளானாலும் கீழ்நிலை உணர்ச்சிகளுக்கு வசப்பட்டால் அழிந்தே தீருவர் என்பதை நரகாசுரனுடைய வரலாறு மனித குலத்துக்கு அறிவூட்டுகிறது.

தீபாவளியைப் பற்றி வட இந்தியாவில் பரவலாக நம்பப்படும் வரலாற்றிலும் ஓர் ஆழ்ந்த கருத்துள்ளது. ‘ராமன்’ என்ற சொல்லுக்கு ரமிக்கச் செய்பவன் என்பது பொருள். ஆனந்தம் வழங்குகின்ற ஆத்மா அவரே. ஆத்மராமன் என்பதும் அவரே. அவருடைய தலைநகரான அயோத்தி என்ற சொல்லுக்கு ‘பகைவரால் வெல்ல முடியாதது’ என்று பொருள். அப்படிப்பட்ட அயோத்தியில் இராமன் பிரஸன்னமாக இல்லாதபோது ஆனந்தம் குறைந்திருந்தது. இராமன் அயோத்திக்குத் திரும்பியபோது அனைவரும் பேரானந்தத்தைத் திரும்பப் பெற்றனர். எங்கும் கோலாகலமும் களியாட்டமும் மிகுந்தன. தாமாகவே மக்கள் விழாக் கொண்டாடினர். சீதை அயோத்தியாவின் அரண்மனையில் விளக்கை ஏற்றி இலட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் ஆனந்தம் பரவச் செய்தாள்.

சீதை இராமனின் நிழல். அவள் சாந்தியின் திருவுருவம். இராமன் தர்மத்தின் திருவுருவம் இராமனும் (தர்மமும்) சீதையும் (சாந்தியும்) நகரத்துக்குத் திரும்பி வந்த நாள் தீப ஒளியின் விழாவாக மாறியது. தர்மமும் சாந்தியும் இருந்தால் தான் ஆத்ம ஒளியை அடைய முடியும் என்பதைத் தீபாவளி உணர்த்துகிறது. தீபாவளியின் போது வீட்டில் வரிசையாக ஏற்றப்படும் சர விளக்குகளும், கதவுகளில் தொங்கவிடப்படும் பல சிறு விளக்குகளும் அறிவுக்கு ஒளியூட்டும் சங்கேதங்களாக உள்ளன. இவ்விளக்குகள் அனைத்தும் ஒரு விளக்கிலிருந்து ஏற்றப்பட்டவை. அதுபோல இலட்சக்கணக்கான மனித உயிர்களிலும் அமைந்துள்ள ஆன்ம தத்துவம் ஒன்றே. ஒவ்வொருவரும் பரஞ்ஜோதியிலிருந்து ஒளி பெற்றவரே. கோடிக்கணக்கான விளக்குகள் ஒரு ஜோதியிலிருந்து ஏற்றப்பட்டாலும் அது தனது மஹிமையையோ ஒளியூட்டும் சக்தியையோ இழப்பதில்லை. ஜீவ ஜோதி ஒளிவிடுவதற்கு ஆதாரமான பரஞ்ஜோதியைத் தியானம் செய்க. நிரந்தர பிரபஞ்ச ஜோதியின் ஒரு பொறியே நீ என்றுணர்க. இதை அனுபவ பூர்வமாக உணரும்போது, இருட்டான தமஸிலிருந்து ஜோதியாகிய அறிவொளிக்கு இட்டுச்செல்லப்படுவதை உணர்கிறாய் என்பதே தீபாவளி அறிவுறுத்தும் தெய்வீகத் தத்துவமாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: