சீக்கிய மதம்
சீக்கிய மதம்
முன்னுரை உலகமதங்களிடையே ஒற்றுமையையும், இசைவையும் ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகவே சீக்கிய மதம் உருவாகியது. சீக்கிய மதத்தை நிறுவியர் குருநானக் ஆவார்.
குருநானக் கி.பி. 1469-ம் ஆண்டு பஞ்சாபிலுள்ள தலவண்டி என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தை காலூ சந்தும், தாய் திருத்தா. அவர் இளைஞராக இருந்த காலத்தில் இந்துக்கள் பல மூடநம்பிக்கைகள் உடையவர்களாகவும், முஸ்லீம்கள் பலர் மதப்பற்றுக்கு பதிலாக மதவெறி கொண்டவர்களாகவும் இருந்தார்கள். மதத்தின் பெயரால் கலவரங்களும் போர்களும் நடந்து கொண்டிருந்தன.
இந்து மதம் இஸ்லாம் ஆகிய இரண்டு மதங்களின் உயரிய கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து இணைத்து இரு மதத்தினரிடமும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவே குருநானக் இந்த மதத்தை நிறுவினார். அமைதியும், நல்லிணக்கமுமே இம்மதத்தின் முக்கிய நோக்கம். ஆனால் இஸ்லாமிய அரசர்கள் இந்துக்களை மதமாற்றம் செய்ய முயன்றதாலும், மதம் மாற மறுத்தவர்களை கொடுமைப்படுத்தியதாலும் சீக்கியர்கள் ஆயுதம் தாங்கி சிங்கங்கள் போல் போரிட வேண்டியதால் இவர்களுக்கு ‘சிங்’ என்ற பட்டப் பெயர் ஏற்பட்டது.
புனித நூல்
சீக்கியர்களின் மதநூல் ‘குருகிரந்த சாஹிப்’ ஆகும்.
கோட்பாடுகள்
சீக்கியர்கள் உருவ வழிபாடு செய்வதில்லை. ஞானிகள் மதகுருமார்களின் புகழையும், அவர்களது அறிவுரைகளையும் போற்றிப்பாடுகிறார்கள். தங்களுடைய மதகுருவிடம் மிகுந்த பக்தியும் அர்ப்பணிப்பும் கொள்வதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்ததால் இந்த மதம் சீக்கிய மதம் என்று அழைக்கப்படுகிறது. சீக் என்றால் சிஷ்யன் அல்லது சீடன் என்பது பொருள். சீக்கியர்கள் சாதி வேறுபாடுகளில் நம்பிக்கை கொள்வதில்லை.
சீக்கியர்கள் கடவுளை ஜோதிவடிவமாக வழிபடுகிறார்கள். ஜோதி தியானம் அவர்களது முக்கியமான வழிபாட்டு முறையாகும். கடவுள் ஒருவரே. அவர் சத்புருஷர்; அவரே இவ்வுலகை படைத்துக் காப்பவர்; அவரே பரிபூரணர்.
குருமார்களின் கட்டளைப்படி கீழ்க்கண்ட 5 பொருட்களை சீக்கியர்கள் தங்களது அடையாளமாகக் கொள்கிறார்கள்:
- சிகை (Kesh) – தலைமுடியை வெட்டாது வளர்த்தல்.
- சிகையை ஒழுங்குபடுத்துவதற்கான சீப்பு (Kangha)
- கையில் அணிகலனாக எஃகினால் ஆன கங்கணம் (Kara)
- சிறிய வாள் (Kirpan)
- வெள்ளை ஆடை அணிதல் (Kachha)
பிரார்த்தனை
வாஹே குரு வாஹே குரு வாஹே குருஜி போலோ சத்நாம், சத்நாம், சத்நாம் ஜி போலோ