சீதா வல்லபர்

Print Friendly, PDF & Email
தெய்வீக சொற்பொழிவுகளின் தொகுப்பு
ரகுகுலம்

அரசர் ரகு ஒரு சிறந்த திறமையான ஆட்சியாளராக இருந்தார். அதனால் அவர் பெயரே அவர் வழித் தோன்றல்களுக்கு வழங்கப்பட்டது. பாபா அவர் எழுதிய ராமகதாரசவாகினியில், அரசர் ரகுவின் சிறப்பியல்புகளைப் பற்றி எழுதியிருக்கிறார். பாபா கூறுகிறார், “பேரரசர் ரகு தன் இளமைப் பருவத்திலேயே, பண்புகளில் செல்வந்தராக இருந்தார். எத்தனை நெருக்கடியான பிரச்சனை நிகழ்ந்தாலும், அதை சரிவரப் புரிந்துகொண்டு உடனடியாக அதைத் தீர்க்கும் வழிமுறைகளைக் கண்டறிந்து கொள்வார். அவர் தன் குடிமக்களை மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் வைத்திருந்தார். தன்னுடைய எதிரிகளை சமாதானமான அணுகுமுறைகளாலும், சாதுர்யமான ராஜ தந்திரங்களாலும், சிறிய அளவில் தன் போர்ப் படைகளை அனுப்பியும், தாமே களத்தில் நேரடியாகப் போரிட்டும் வென்றார்.”

சீதை

அன்னை சீதை ப்ரக்ருதியை, அதாவது இயற்கையை குறிப்பிடுபவளாக இருக்கிறாள். இந்த இயற்கை, ஸ்ரீராமர் என்னும் முழுமையான தெய்வீகத்திலிருந்துத் தோன்றியதாகும். இயற்கையின் புத்துணர்ச்சியும், அள்ளிக்கொடுக்கும் தன்மையும் மனிதர்களைப் போலவே தெய்வீகத்தின் ஒரு பகுதியே ஆகும். இயற்கை இல்லாமல் நம்மால் வாழ முடியுமா? முடியாது. இயற்கையானது தன்னலமற்றது. எவ்வித எதிர்பார்ப்புமின்றி அள்ளிக் கொடுப்பது.

ஆகையால் இயற்கையை நாம் சிறந்த முறையில் பேணிப் பாதுகாக்கவேண்டும்; நம் உபயோகத்திற்காக இயற்கையை முழுவதுமாக சுரண்டக்கூடாது. உலகில் திடீரென அவ்வப்போது நிகழும் இயற்கை சீற்றங்கள் எல்லாம் அந்த இயற்கை அன்னையின் பரிசுகளை நம் சுயநலத்திற்காகத் தவறாக உபயோகிக்கலாகாது என்பதை எச்சரிப்பவையே ஆகும். உயிரினங்களுக்கிடையே மிகச் சரியான சமநிலை நிலவினால் தான் இம்மாதிரியான இயற்கைச் சீற்றங்கள் அடிக்கடி நிகழாமல் இருக்கும்.

சீதா வல்லபர்

பகவான் பாபா, இயற்கை அன்னையைக் குறிப்பவளான அன்னை சீதையின் அதிபதியாகிய ராமபிரானே என்பதைக் எடுத்துக்காட்டும் வகையில் ஒரு நிகழ்ச்சி இங்கே சொல்லப்படுகிறது. சென்னைக்குத் தெற்குப்பகுதியில் 70கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு சிறிய நகரம் மதுராந்தகம். ஒரு பெரிய காவியமே இந்தப் பகுதியுடன் இணைந்திருக்கிறது. சீதையைத் தேடி வரும்போது, ராமர் இப்பகுதிக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. இங்கிருக்கும் பெரிய ஏரியில் இராமபிரான் நீராடியதாகவும் கூறப்படுகிறது. பிற்காலத்தில் ராமருக்கு இங்கு ஓர் ஆலயம் கட்டப்பட்டது.

1795ஆம் ஆண்டு, ஒரு சமயம் வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத்தினால், மதுராந்தகத்திலும் சுற்றுப் பகுதியிலும் கனத்த மழை பொழிந்தது. ஏரி நிரம்பியதாகவும், பெரிய ஆபத்து நேரப் போவதாகவும், அதனால் கடுமையான விளைவுகள் மதுராந்தகத்தின் சுற்றுவட்டாரங்களில் நிகழப் போவதாகவும் அப்போதிருந்த கலெக்டர் கொலோனெல் ப்ரைஸ்-க்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மதுராந்தகத்துக்கு விரைந்து சென்ற கலெக்டர், ஏரியைப் பார்வையிட்டு, பின் அதன் மதகுகளை அடைத்துவிடுமாறு ஆணை பிறப்பித்துவிட்டு, பின் ராமர் கோவிலுக்கு விஜயம் செய்யத் தீர்மானித்தார். கோவிலுக்குள் நுழைந்த அவர், கோவில் கட்டிடம் சிறிது சிதிலமடைந்திருப்பதைக் கண்டறிந்தார். கோயிலின் ஒரு மூலையில் செங்கல் குவியலைக் கண்டார்.

அது குறித்து விசாரிக்கையில், அன்னை சீதைக்குக் கோயில் கட்டுவதற்காக அந்த செங்கல் குவியல் இருப்பதாகவும், ஆனால் போதிய நிதிவசதி இல்லாததால் கோயில் கட்டும் பணி இயலாமல் போய்விட்டது என்றும் கோயிலின் பூசாரி கூறினார். அடிக்கடி ஏற்படும் புயல் காரணமாக ஏரி நிறைந்து உடைந்துவிட்டதால், அப்பகுதி வாழ் மக்களுக்குப் பெரிய இழப்பு ஏற்படுவதால் கோயில் கட்டுவதற்கு நிதி திரட்ட இயலவில்லை.

கலெக்டர் கொலோனல் ப்ரைஸ், “உங்கள் ராமர் ஏன் உங்களைக் காப்பாற்ற வரவில்லை? ஏரியை ஏன் பாதுகாக்கவில்லை? தன் துணையான சீதாதேவிக்குக் கோயில் கட்ட உங்களுக்கு ஏன் உதவவில்லை? என்று கேள்வி எழுப்பினார். இதைக் கேட்டு மிகவும் வேதனை அடைந்த கோயில் நிர்வாகிகள், அடுத்த முறை இப்படி நிகழும் போது எங்களைக் காப்பாற்ற ராமபிரான் வருவார்; அதை நிச்சயம் காண்பீர்கள் என்று பதிலளித்தார்.

அதன் பின்னர் சில நாட்கள் கழித்து, மிகக் கனத்த மழைப் பொழிந்து நிலைமை மிகவும் மோசமடைந்தது. கலெக்டர் மறுபடியும் மதுராந்தகத்துக்கு விரைந்து சென்றார். இயற்கையின் கோரதாண்டவம் அவரை நிலை குலையச் செய்துவிட்டது. அந்நிலையிலிருந்து கடவுள் மட்டுமே காப்பாற்ற முடியும் என்பதை உணர்ந்து கொண்டார். அவ்வாறு எண்ணிக் கொண்டிருக்கையில், அந்த கிராமத்தார் ஒரு பெருங்கூட்டமாக கோவிலுக்குள் தஞ்சம் புகுந்ததையும், அவர்களுள் ஒரு முதியவர் இடைவிடாமல் ராமபிரான் பற்றியும், ராமபிரானின் பெருமைகளையும், வல்லமையையும் பற்றியும் பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்தார். கொலோனல் ப்ரைஸ் ஒரு கிருஸ்துவராக இருந்தபோதும், அக்கணத்தில் மனதிற்குள் இவ்வாறு வேண்டிக்கொண்டார். “ஓ ராமபிரானே ! இவர்கள் நீர் வல்லமைப் பொருந்தியவர் என்று கூறுகின்றனர் அப்படியானால் தயைகூர்ந்து எங்களைக் காப்பாற்றவேண்டும். என் பிரார்த்தனைக்கு மனம் இரங்கினால், உம் துணையான சீதாதேவிக்கு நான் கோயில் கட்டுவேன்”.

அவர் வேண்டிக்கொண்ட அடுத்த கணமே வானில் மின்னல் மின்னியது; கொலோனல் ப்ரைஸ் வானில் ஸ்ரீராமரும் லக்ஷ்மணரும் புன்னகை புரியும் காட்சியைக் கண்டார். உடனே அவர் “அங்கே பாருங்கள் ” என்று ஆச்சரியத்தில் கூறிவிட்டு மயங்கிவிட்டார். நினைவு திரும்பியபோது, கொலோனல் ப்ரைஸ், தான் தன்னுடைய குவார்ட்டர்ஸில் ஒரு வசதியான படுக்கையில் இருப்பதை உணர்ந்தார். அதிசயக்கத்தக்க வகையில் மழை உடனே நின்று விட்டதையும், நீர்த்தேக்கத்தில் உள்ள தண்ணீரின் நீர்மட்டத்தினால் பிரச்சனை ஏதும் இல்லை என்பதையும் கேட்டறிந்து சமாதானம் அடைந்தார். பேராபத்திலிருந்து காப்பாற்றிய இறைவனின் நாடகத்தினை நினைத்து மனதிற்குள் நன்றி கூறினார்.

அவர் மட்டுமல்லாது, மதுராந்தக மக்களும் தங்களைக் காப்பாற்றியது ராமபிரானே என்பதை உணர்ந்து கொண்டனர். இன்றும் கூட அந்தக் கோவிலின் மூர்த்தி, ராமனாக மட்டுமல்லாது, நீர்தேக்கத்தைக் காப்பாற்றிய ராமர் என்றே அழைக்கப்படுகிறார். இயற்கையின் மீது பேரன்பு கொண்டவர் இறைவன் என்பதை இந்நிகழ்ச்சி எடுத்துரைக்கின்றதன்றோ? அதனால் ‘சீதா வல்லபன்’ என்று இறைவனை அழைப்பது மிகவும் பொருத்தமானதாகும். இந்த சொற்றொடரில் ‘சீதா’ என்பது இயற்கையைக் குறிக்கிறது.

[தகவல் : https://media.radiosai.org/journals/vol-03/100CT01/]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன