யுதிஷ்டிரரின் கதை

Print Friendly, PDF & Email
உலகளாவிய நன்மைக்காக எப்படி பிரார்த்தனை செய்வது என்பது பற்றிய கதை

தர்மராஜா என்ற யுதிஷ்டிரன் நல்ல நீதியான நேர்மையான எல்லா நற்குணங்களும் உடையவன் என்று அறியப்படுபவன். அவன் வாழ்க்கை முழுவதும் தூய்மையும், புனிதமும், தெய்வீக செயல்களும் நிரம்பியவை. அவன் எந்தவித பாவச் செயல்களும் புரியாததால், அவன் புகழடைந்தான். ஆனால் அவன் செய்த மிகச்சிறிய செயல், அவனுடைய தூய்மையான வாழ்க்கைக்குக் களங்கமாக அமைந்தது.

குருக்ஷேத்ரப் போரில், பாண்டவர்கள் கௌரவர்களுக்கு எதிராகவும், அவர்களுடைய குரு துரோணாச்சாரியாருக்கு எதிராகவும் போரிட்டார்கள். ஸ்ரீ கிருஷ்ணனுக்குத் தெரியும், துரோணாச்சாரியரை வெல்வது கடினம் என்பது. துரோணர் போர் புரிய மறுத்து, தன் ஆயுதங்களைக் கீழே போட்டால் தான் அவரை வெல்வது என்பது சாத்தியமாகும். ஆனால் அவரை எப்படி ஆயுதங்களைக் கீழே போட வைப்பது? துரோணரோ அவர் மகன் அஸ்வத்தாமனை மிகவும் நேசித்தவர். “அஸ்வத்தாமன் இறந்தான்” என்ற செய்தியைக் கேட்டால், அதனால் அவர் மனமுடைந்து தன் ஆயுதங்களைக் கீழே போட வாய்ப்புள்ளது. ஆனால் துரோணரோ எந்த வதந்தியையும் நம்பக் கூடியவரல்லர். யுதிஷ்டிரன் உண்மை மட்டுமே பேசக்கூடியவன்; ஆதலால் அவர் யுதிஷ்டிரன் பேச்சை மட்டும் நம்புவார். யுதிஷ்டிரனை எப்படிப் பொய் சொல்ல வைப்பது?

ஸ்ரீ கிருஷ்ணன் ஒரு திட்டம் போட்டார். போரில் அஸ்வத்தாமன் என்ற யானை இறந்து விட்டது. பிறகு கிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம், துரோணர், அஸ்வத்தாமன் இறந்து விட்டானா? என்று கேட்டால் அவன் சத்தமாக ஆம் என்று கூறிவிட்டு பிறகு மிகவும் மெதுவான குரலில் “நரோ வா குஞ்சரோ வா” அர்த்தம் அது யானையா? அஸ்வத்தாமனா? என்று எனக்குத் தெரியாது” என்று கூற வேண்டும்.

அந்தத் திட்டப்படி அனைத்தும் நடந்து, துரோணரும் யுதிஷ்டிரனிடம் கேட்க யுதிஷ்டிரனும் கிருஷ்ணர் சொல்லியபடியே கூறினான். இங்கு யுதிஷ்டிரன் எந்த பொய்யும் சொல்லவில்லை. ஆனாலும் இறந்தது அஸ்வத்தாமன் அல்ல, அஸ்வத்தாமன் என்ற யானைதான் என்று அவனுக்கு நன்றாகவேத் தெரியும். இந்த சிறிய செயல் ஒன்றே அவனுக்குப் பாவமாக அமைந்தது

அவனுடைய வாழ்க்கையின் முடிவில் அவனுடைய இந்தச் சிறிய செயலின் விளைவாக அவன் சொர்க்கத்திற்குப் போய் அனுபவிக்கும் முன் சில நொடிகள் நரகத்திற்குச் செல்ல வேண்டி வந்தது. யுதிஷ்டிரனும் அதற்கு ஒப்புக் கொண்டு நரகத்தில் நுழைந்தான்.

அந்த நேரத்தில் நரகத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று ஒரு அமைதியையும், குளிர்ச்சியையும் தர்மராஜாவினால் அனுபவித்தார்கள். அவர்கள் இதுவரை அனுபவித்திராத சந்தோஷத்தை உணர்ந்ததாகக் கூறினார்கள். தர்மராஜாவும் அங்கு நிகழ்ந்த மாற்றத்தைக் கண்டார். அவன் மிகவும் அன்புடனும் கருணையுடனும் மற்றவர்களின் சந்தோஷமே தனக்கும் சந்தோஷம் என்று இருப்பவன். அவன் யமதர்ம ராஜாவைப் பார்த்து “கடவுளே! மற்றவர்களை மனிதத் தன்மையோடு சகோதரர்களாக பாவிக்காத மனித வாழ்க்கையினால் என்ன உபயோகம்? இந்த நரகத்திலுள்ளவர்கள் நான் இங்கு இவர்களோடு இருப்பதை விரும்புவதாக நினைக்கிறேன். அதனால் என்னுடைய அனைத்து புண்ணியங்களையும் கொடுத்துவிட்டு நான் இவர்களுடனேயே இவர்களுடைய சந்தோஷத்திற்காக இந்த நரகத்திலேயே இருந்து விடுகிறேன். எல்லோரும் சந்தோஷமாக இருக்கட்டும். எல்லோரும் கஷ்டப்படாமல் அமைதியாக இருக்கட்டும்” என்று கூறினார். என்ன ஒரு உயர்ந்த தியாகம்! யமதர்ம ராஜா மிகவும் சந்தோஷப்பட்டு, அந்நரகத்திலுள்ள அனைவரையும் அங்கிருந்து விடுவித்தான். தன்னுடைய அனைத்து புகழையும் மற்றவர்களுக்காகத் தியாகம் செய்ததால் யுதிஷ்டிரனுக்கு முன்பிருந்ததை விட மேலும் ஆயிரம் மடங்கு புகழ் கூடியது.

யுதிஷ்டிரனைப் போல் நாமும், இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து மக்களுக்காகவும், நம்முடைய உறவினர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும், நமக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் அனைவருக்காகவும், அவர்களுடைய சந்தோஷத்திற்காகவும், அமைதிக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும், கடவுளை பிரார்த்திக்க வேண்டும்.

[Illustrations by Haripriya, Sri Sathya Sai Balvikas Student]
[Source: Sri Sathya Sai Balvikas Gurus Handbook]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: