சுவாமி தயானந்த சரஸ்வதியின் வாழ்க்கையிலிருந்து சில நிகழ்ச்சிகள்

Print Friendly, PDF & Email
சுவாமி தயானந்த சரஸ்வதியின் வாழ்க்கையிலிருந்து சில நிகழ்ச்சிகள்

குஜராத்தைச் சேர்ந்த கத்தை வாரில், தான்காரா என்ற நகரத்தில் கர்ஷன் லால்ஜி என்று ஒரு அந்தணர் வசித்து வந்தார். அவருக்கு 1825ம் ஆண்டு ஒரு மகன் பிறந்தான் அவனுக்கு மூல்ஷங்கர் என்று பெயரிட்டார். அவனுக்கு எட்டு வயதான போது, பூணூல் அணிவிக்கப் பெற்றது. வழி முறைப்படி அவன் காயத்ரி சந்தியா ஓதக் கற்றுக் கொண்டான். அவன் பெற்றிருந்த கூரிய நினைவாற்றல் போற்றத்தக்கதாக இருந்தது. பதினான்கு வயதிற்குள் வேதம் முழுவதும் மனப்பாடமாகக் கற்றுத் தேர்ந்தான். அந்த குடும்பம் ஒரு சிவபக்த குடும்பம். அதனால் மூலஷங்கரைச் சமய வழிபாடுகளில் ஈடுபடுத்தினார். அவரது சிவலிங்க வழிபாட்டு முறைகளையும் கற்றுத் தந்தார். மூல்ஷங்கர் பதினான்கு வயது முடியும்போது, சிவனாரைப் பற்றிய அவனது படிப்பு முற்று பெற்றிருந்தது.சிவராத்திரி வந்தது. கோவில் அலங்காரங்களுடன் ஒளி மிகுந்து அழகுற காணப்பெற்றது. பக்தர் பெருவாரியாகக் குழுமிப் பூசைகளும் பஜனைகளும் செய்து வந்தனர். மூல்ஷங்கரும் அவனது தந்தையாரும் கூட அதில் கலந்து கொண்டு இரவு முழுவதும் கண் விழித்திருந்தனர். நேரம் ஆக ஆக, பெரியவர்கள் சோர்வுற்று, ஒவ்வொருவராக உறங்க துவங்கினர். ஆனால் சிறுவன் மூல்ஷங்கர் மட்டும் கண்கொட்டாது விழித்திருந்தான். அங்கு பெரும் அமைதி நிலவியது. அப்போது ஒரு எலி, சுவாமிக்குப் படைத்திருந்த இனிப்புகளையும் மற்ற பழவகைகளையும் எடுத்துச் சென்றது. அதுமட்டுமல்ல, சிவனாரின் அருவுருவச் சின்னமாகிய இலிங்கத்தின் மீது ஏறி விளையாடி அசுத்தப்படுத்தியது. அந்தக் காட்சி சிறுவனின் உள்ளத்தில் சொல்லொணா ஒரு வியப்பையும் எண்ணத்தையும் உண்டு பண்ணியது. ”இந்த கைலாசவாசி, ஸாஸ்திரங்களில் கூறியுள்ளபடி எங்கும் நிறைந்துள்ளார், எங்கும் நடக்கிறார், உண்கிறார், உறங்குகிறார், பருகுகிறார், கையில் ஒரு நீண்டு பெரிய திரிசூலத்தை ஏந்தியிருக்கிறார்:- ஆனால் ஒரு சிறிய, கண்டதைக் கொரிக்கும் எலியின் அவமரியாதையினின்றும் தம்மைக் காத்துக் கொள்ள அவரால் முடியவில்லையே” என்று தனக்குள் வியந்து கூறிக் கொண்டான். பின்னர் பெரியவர்களிடமும் தன் ஐயத்தைக் கேட்டான். அவர்களால் அதற்கு நிறைவு தரும் வகையில் சரியான விடை பகர இயலவில்லை. இந்த நிகழ்ச்சி சிறுவனது வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. மஹாதேவரும், அந்த சிவலிங்கமும் ஒருவரே என்று அதன் பிறகு அவனால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.அவன் ஒரு நாள் ஒரு நண்பன் வீட்டில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றிருந்தான். அப்போது அவனுடைய சகோதரி காலரா கண்டு துன்புறுகிறாள் என்ற செய்தி வந்தது. அவன் உடனே வீடு திரும்பினான். அவன் திரும்பிய நான்கு மணி நேரத்தில் அவள் இறந்து விட்டாள். எளிதில் மறக்க முடியாத இந்த நிகழ்ச்சி அவனை உலுக்கி விட்டது. கற்சிலை போன்று சகோதரியின் சடலத்தருகில் வெகுநேரம் நின்று கொண்டிருந்தான், அவன். அதுவே அவன், மரணமடைந்த ஒரு உடலை சந்தித்த முதல் நிகழ்ச்சியாகும். ‘நானும் இது போல ஒரு நாள் மடிவேனோ’ என்று தன்னையே கேட்டுக் கொண்டான். அவன் பதினெட்டு வயதாக இருக்கும்போது அவனுடைய மாமாவும் இறந்துவிட்டார். அந்த இரண்டு துக்ககரமான நிகழ்ச்சிகளும், அவன் மனத்தில் வாழ்க்கையின் நிலையாமையைக் குறித்து சிந்திக்க வைத்தன. உலக வாழ்க்கையில் நம்பிக்கையை இழக்கச் செய்து விட்டன.

அவன் அடிக்கடி தனக்குத் தானே பேசிக் கொள்வான், “மரணம் என்பது என்ன? பிறப்பெடுத்த ஒவ்வொருவனும் இறந்துதான் ஆக வேண்டுமா? மனிதன் அதிலிருந்து தப்பவே முடியாதா? பிறப்பு இறப்புத் தளையின்றும் மீள வழி என்ன?” என்று பலவாறு சிந்தித்தான்.

உலகம் நிலையற்றது என்ற பேருண்மையை உணரலானான், மூல்ஷங்கர். எனவே இந்த உலகியல் வாழ்விலும் அதற்காகப் பாடுபடுவதிலும் ஒரு வித பயனும் இல்லை என்பதை அறிந்தான். தீவிர சிந்தனைகளின் முடிவில் உலகச் செயல்களிலிருந்து பற்றற்றதன்மையுணர்வினை அவன் பெற்றான். சத்தம் காட்டாது வரும் மரணத்தின் பிடியிலிருந்து தப்புவதற்கு ஏற்ற மார்க்கம் தேடினான். நிலையான முக்தி பெற அவன் மனம் பெரிதும் விழைந்தது. ஆன்மா அனுபவபூர்வமாக மேலான பரம்பொருளை அறிந்து கொள்ளும் ஆற்றலைப் பெற பெரிதும் விரும்பினான். அங்ஙனம் பெற்ற பிறகு எல்லோரும் அந்தச் சிறுவன் மூல்ஷங்கரை, “சுவாமி தயானந்த சரஸ்வதி” என்று போற்றி மதித்து வணங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன