முன்யோசனையின் அவசியம்
முன்யோசனையின் அவசியம்
அயோத்தி நகர இளவரசன் தசரதனின் புகழ் எங்கும் பரவியிருந்தது. இரவில் ஒலி வரும் திசை நோக்கி அம்பு விடும் திறமை பெற்ற ‘சப்தபேதி’ என்று மக்களிடம் புகழ் பெற்று, அதனால் மிகவும் பெருமிதத்துடன் இருந்தான். மாலை நேரத்தில் தேரில் தனியே சென்று, காட்டின் நடுவில் அசையாது காத்திருப்பான். தண்ணீர் குடிக்க வரும் எருமை அல்லது யானையின் காலடிச் சத்தத்தையோ, துள்ளிச் செல்லும் மானின் ஒலியையோ, ஓசையில்லாமல் வரும் புலியின் சத்தத்தையோ கேட்பதுண்டு.
ஒரு நாள் இவ்வாறு புதர்களுக்கிடையே இலைகள் அசைவுக்காகவோ, தண்ணீரின் அசைவுக்காகவோ காத்து மறைந்திருந்தபோது, ஏரியின் கரைமேல் ஏதோ ஒன்று நகர்ந்து செல்வதைக் கேட்டான். இரவில் பார்வைக்கு ஒன்றும் புலப்படவில்லை. தசரதன் சப்த பேதியல்லவா? அது யானையின் சப்தமாகத் தான் இருக்க வேண்டும். அம்பெய்ய இந்த ஓசை போதும் என்று அவன் அம்பெய்தான். உடனே, “உதவி, உதவி, யாரோ என்னை அம்பால் துளைத்துவிட்டார்களே” என்ற கூக்குரல் கேட்டு பதைத்தெழுந்தான்.
வில் கையிலிருந்து வீழ, விம்மி நின்றான். மன உளைச்சலால் முகம் வெளிறி மயக்கமடைந்தான். “என்ன வேலை செய்தேன்? காட்டு விலங்குக்குப் பதிலாக மனிதனையல்லவா காயப்படுத்தினேன்” என்று பதறி, காட்டின் வழியே ஏரியை நோக்கி ஓடினான். கரையின் மேல் ஒரு இளைஞன், தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்த குடத்தைக் கையில் வைத்துக் கொண்டு, தனது இரத்தத்திலேயே நனைந்து விழுந்து கிடந்தான்.
“அய்யா! என் உயிரைக் குடிக்கும் அம்பை எய்தவர் நீங்கள் தானா” என்று அவன் முனகினான். “என்னை நீங்கள் கொல்லுமளவுக்கு நான் தங்களுக்கு என்ன தீங்கிழைத்தேன். நான் ஒரு முனிவரின் மகன். என் வயதான தாய் தந்தையருக்கு கண் பார்வை இல்லை. நான் அவர்களைக் கவனித்து, பராமரித்து அவர்களுக்குரிய தேவைகளைப் பூர்த்தி செய்கிறேன். அவர்களுக்காகத் தண்ணீர் கொண்டு செல்ல வந்தேன். ஐயோ, அவர்களுக்கு இனிமேல் சேவை செய்ய இயலாதே! நீங்கள் இவ்வழியே அவர்கள் குடிசைக்குச் செல்லுங்கள். நடந்ததென்ன என்று அவர்களிடம் கூறுங்கள். முதலில் என் மார்பிலிருந்து அம்பை உருவி எடுங்கள். எனக்குத் தாங்கமுடியாத வலியைத் தருகிறது.”
தசரதன் புண்ணிலிருந்து அம்பை இழுத்தெறிந்தான். ஒரு தீனமான முனகல், பெருமூச்சுடன் அவ்விளைஞனின் உயிர் பிரிந்தது. இளவரசன் குடத்தை நிரப்பி, இளைஞன் கூறிய வழியிலே நடந்து சென்றான். அவன் அருகில் வரும் காலடி சத்தம் கேட்டு, இளைஞனின் தந்தை கூவியழைத்தார்.
“மகனே, ஏன் இவ்வளவு தாமதமாயிற்று? ஏரியில் நீச்சலடித்தாயா? உனக்கு ஏதோ கெடுதல் நடந்து விட்டது என்று நாங்கள் பதறிக் கொண்டிருந்தோம். ஏன் நீ பதிலே கூறவில்லை?”நடுங்கும் குரலுடன் தசரதன் கூறினான்., “வணக்கத்துக்குரிய புனிதமிக்க முனிவரே, நான் தங்கள் மகனல்ல. நான் க்ஷத்திரியன். இன்றுவரை எனது வில் திறமை பற்றி நான் கர்வமுடன் இருந்தேன். காட்டில் வேட்டையாடக் காத்திருந்தபோது, ஏரிக்கரையில் உள்ள ஓசை கேட்டு, யானை தண்ணீர் குடிக்க வந்தது என்று எண்ணினேன். உடனே அம்பு எய்தேன். ஐயோ, உங்கள் மகனை அது தைத்தது. இந்தப் பாவத்துக்கு நான் என்ன பிராயச்சித்தம் செய்வது என்றே தெரியவில்லை. ”முதிய தாய் தந்தையர் இதுகேட்டு கதறியழுதனர். தமது ஒரே மகன் விழுந்து கிடந்த இடத்துக்கு இட்டுச் செல்லுமாறு இளவரசனைப் பணித்தனர். புனித மந்திரங்கள் கூறி, அந்திமக் கிரியைகளுக்கான நீரை அவன் மேல் தெளிந்தனர். பின் அம்முனிவர் கூறினார்.
“கேள், தசரதா! நீ செய்த தவற்றின் காரணமாக, எங்கள் அருமை மகனுக்காக நாங்கள் கண்ணீர் சிந்துகிறோம். ஒரு நாள், நீயும் உன் அருமை மகனைப் பிரிந்து கண்ணீர் விடுவாய். அது நிகழ்வதற்குப் பல வருடங்களாகும், ஆனால் இத்தண்டனை நிறைவேறியே தீரும்.”
மகனின் உடலை எரிக்கத் தீ மூட்டினார்கள். அத்தீயில் அவர்கள் விழுந்து கருகி மாண்டனர்.
ஆண்டுகள் பல சென்றன. தசரதன் அயோத்திக்கு அரசனாக முடிசூட்டிக் கொண்டான். கௌசல்யா தேவியை மணம் புரிந்து கொண்டான். அவனுக்கு ஸ்ரீராமன் பிறந்தான்.
தசரதனின் மூன்றாவது மனைவி ராணி கைகேயி, அவளது சொந்த வேலைக்காரி ஆகிய இருவரையும் தவிர மற்ற அனைவரும் இராமனை மிகவும் நேசித்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து இராமன் பட்டம் சூட விடாமல் தடுத்து, அவன் காட்டில் 14 வருடங்கள் இருக்கும்படி செய்தனர்.
ஏரிக்கரையில் நடு இரவில் இறந்து கிடந்த இளைஞனின் பிரிவாற்றாமையால் நடுக்காட்டில் அவனது வயதுமுதிர்ந்த பெற்றோர்கள் எவ்வாறு வருந்தினார்களோ அவ்வாறே தசரதனும் தன் மகனின் பிரிவுக்காக வருந்தினான்.
ஒரு காலத்தில் தன் திறமையில் கர்வங்கொண்டிருந்த தசரதனுக்கு முன் யோசனை இல்லை. இரவில் தவறுதலாக யாராவது காயமுறுவர் என்பதைக் கூட அவன் சிந்திக்கவில்லை. சப்த பேதி என்ற பெயர் வாங்கும் அளவுக்கு அவனுக்குத் திறமை இருக்கலாம். ஆனால் நல்ல வெளிச்சத்தில், பகற்பொழுதில், விவரமறிந்து அம்பெய்தலே மிகவும் சிறந்தது. துன்பம் இழைக்கும் நோக்கம் அவனிடமில்லை: ஆனால் முன்யோசனையும் அவனிடம் இல்லை.
கேள்விகள்:
- ‘சப்தபேதி’ என்பவர் யார்?
- வயதான முனிவரின் மகன் மேல் தசரதன் ஏன் அம்பெய்தான்?
- ஏன் இந்தத் தவற்றைச் செய்தான்?
- அதற்கு எவ்வாறு இவன் பிராயச்சித்தம் – கழுவாய் தேடினான்?
- ஏன் முனிவரும் அவர் மனைவியும் தீக்குளித்து மரணமடைந்தார்கள்?
- முனிவர் தசரதனுக்கிட்ட சாபம் என்ன?
- நீ முன் யோசனையுடன் நடந்த, முன் யோசனையில்லாமல் நடந்த ஓரிரு சம்பவங்களைக் கூறு. அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் விவரித்துக் கூறு.