அழிவுப் பாதை

Print Friendly, PDF & Email
அழிவுப் பாதை

அரக்கர்களது பேரரசனான இராவணன் இணையற்ற முறையில், அரச சபையொன்றை அமைத்திருந்தான். ஏற்கனவே இந்திரன், அஷ்டதிக் பாலகர்கள் உட்பட தேவர்களை எல்லாம் வெற்றிக் கொண்டு அவர்களைத் தன் அரண்மனையைக் காவல் புரிய நியமித்திருந்தான்.

அப்போது அகம்பனன் என்ற அரக்கன் அச்சத்தினால் நடுங்கிக் கொண்டே அவைக்குள் நுழைந்தான். வந்தவுடன் இராவணனின் அடிகளில் சரணாகதியாக விழுந்தான். அதைக் கண்டதும் “ஏன் இப்படி அஞ்சி நடுங்குகிறாய்? நீ என்ன சொல்ல வந்தனையோ அதைத் தைரியமாகச் சொல்,” என்று ஆணவக் குரலில் முழங்கினான் இராவணன்.

பெரிய தண்டக வனத்தில் இராமர் என்று ஓர் இளவரசர் புகுந்து சூர்ப்பணகையை அங்க பங்கப் படுத்தி, கர தூஷணன் திரிசூலர்களை மாய்த்து, அந்த வனத்திலிருந்த அரக்கக் கூட்டத்தினர் அனைவரையும் நாசப்படுத்தி விட்டதாக அகம்பனன் குரல் நடுங்கக் கூறி முடித்தான்.

அதைக் கேட்டதும் இராவணனது கோபம், எல்லை கடந்து போய் விட்டது. தன் சிம்மாசனத்தினின்றும் வெகுண்டு எழுந்தான், அவன். “அந்தச் சிறிய மானிடப் பதரான இராமனை உடனே கொல்வேன்.” என்று அகங்காரத்தோடு வெளியிட்டான். ஆனால் அகம்பனன் கையசைத்து, “ஐயா ! அது அவ்வளவு எளிதான செயல்ல, வீரத்தில் தாங்கள் அவனுக்கு ஈடாக மாட்டீர்கள். இங்ஙனம் கூறுவதற்கு என்னை மன்னித்து விடுங்கள் ஆனால் அது உண்மையே. எனினும் அவனை வெற்றிக் கொள்ளவும் ஒரு வழி இருக்கிறது. அந்த இராமனுடைய மனைவி சீதை இருக்கிறாளே! அவளைப் போன்ற பேரெழில் படைத்தவள் மூவுலகிலும் யாருமே கிடையாது. என்னால் அவளது அழகை உள்ள வண்ணம் வர்ணிக்க இயலவில்லை அவளை எப்படியாவது , தந்திரமாகக் குறுக்கு வழியில் அபகரித்துக் கொண்டு வந்து விடுங்கள். அப்போது இராமன் அவளது பிரிவை நினைத்து நினைத்து அழுது மடிவான்.” என்று அறிவுறுத்தினான். அதைக் கேட்ட பின்பே இராவணன் ஓரளவு அமைதி பெற்று சிந்திக்கலானான்.

அடுத்த நாள் காலை, இராவணன் மாரீசன் வசிக்கும் குடிலுக்குச் சென்றான். அங்கு மாரீசனிடம் சீதையைக் கவர்ந்து வர, தன் திட்டங்களை விவரித்து, அவனுடைய உதவியையும் நாடி வேண்டினான். மாரீசன் சற்று நல்லவன். அதனால் இராமனோடு மோதுவதினின்றும், இராவணனை மாற்றப் பெரிதும் முயன்றான். “ என் அரசே! இராமரைப் பற்றி தாங்கள் நினைக்கவும் வேண்டாம். அவரோடு ஒரு போரைத் துவக்கி விட்டால் தங்கள் வம்சமே பூண்டோடு அழிந்து போகும். தற்பெருமையும், அகங்காரமும் தங்கள் கண்களை, மேக மூட்டமாக மறைக்க, நீதிக்குப் புறம்பாக நடக்க முயலாதீர்கள். இராமரைப் பற்றி நான் நன்றாக அறிவேன். பதினாறு வயது சிறுவனாக இருந்தபோதே, அவன் அடித்த அடியினால் நான் பெற்ற காயங்களின் வடுக்களைப் பாருங்கள்! தாங்களும் தங்கள் வம்சமும் செழிப்புற வாழ, நான் பெரிதும் விரும்புகிறேன். அதனால் அரக்கர் குலத்தையே அழித்து விடக் கூடிய செயலில் நான் சேர மாட்டேன்,” என்று கூறினான். இராவணனும் அவனுடைய அறிவுரையால் அமைதி பெற்று இலங்கைக்குத் திரும்பினான்.

மறுநாள் அவன் அரண்மனைக்கு, கண், காது, மூக்கு எல்லாம் அறுபட்ட காயங்களுடன் அவனது தங்கை சூர்ப்பணகை வந்தாள். இராமன் இலட்சுமணன் என்ற இரு மனிதர்களால் அவள் எப்படியெல்லாம் துன்புறுத்தப்பட்டாள் என்பதையும், அவள் பட்ட துயரத்தைக் கண்டு, இளம் அழகியான சீதை, வேடிக்கைப் பார்த்து, எங்ஙனமெல்லாம் மகிழ்ந்து சிரித்தாள் என்றும் அழுது புலம்பியவாறு விவரித்தாள். இராவணன் அமைதிப் படுத்த சூர்ப்பணகை பின்னும் பெரிதாக அழலானாள். இறுதியில், “உன் மதிப்பை மீண்டும் பெறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும், என்று சொல்லு! அங்ஙனமே செய்கிறேன்,” என்று இராவணன் கேட்டான். அதற்கு அவள், “அண்ணா! அந்த இளநங்கை சீதாவை, அவமானப் படுத்தும் வரை எனக்கு உறக்கமோ வராது; உணவோ ஏற்காது. அவளுடைய பேரெழிலைக் கண்டவுடனே, அவள் உன்னுடைய அந்தப்புரத்தில் இருக்க வேண்டியவள் என்று நான் தீர்மானித்து விட்டேன். அவள் அழகுக்கு ஏற்ற பொருத்தமான ஆள் நீ தான். அத்துணை வசீகரமான தோற்றம் வாய்ந்தவள் என்று பலவாறு இராவணனை ஏற்றியும், சீதையைப் புகழ்ந்துரைத்தும் அண்ணனை மயக்கி விட்டாள்.

அவளது சொற்கள் இராவணனிடம் அளவு கடந்த ஆசையைத் தூண்டி விட்டன. அந்த நொடியே தண்டகாரண்யத்திற்குப் போய், சீதையைக் கடத்தி இலங்கைக்கு எடுத்து வருவதாக தங்கையிடம் உறுதியோடு கூறினான். “அன்புத் தங்காய்! உன் மனம் மகிழ்வுறச் செய்கிறேன். அங்ஙனம் செய்யாவிடில் புகழ் பெற்ற என் பெயரின் மதிப்பு என்னாவது?” என்று சூளுரைத்தான்.

இத்தகைய தீர்மானத்துடன் அவன் மீண்டும் மாரீசனது உதவியை நாடிச் சென்றான். மாரீசனுக்கு அவனைக் கண்டதுமே எங்கோ தவறு நேர்ந்திருக்கிறது என்று புரிந்து விட்டது. இராவணன் மாரீசனிடம் தன் திட்டத்தை விவரித்தான். அதாவது மாரீசன் ஒரு பொன் மான் வடிவம் கொண்டு இராமரை மயக்கி எளிதில் அவர் கையில் அகப்படாமல் நெடுந்தொலைவு அழைத்து செல்ல வேண்டும். காட்டின் நடுப் பகுதிக்குச் சென்றதும், மாரீசன் இராமரது குரலில் இலட்சுமணனை விளித்துக் கூவ வேண்டும். அந்தக் குரல் ஒலிகேட்டு இலட்சுமணன் குடிலை விட்டு இராமரைத் தேடி வருவான், அதுபோது, தனியாக விடப்பெற்ற சீதையை இராவணன் கவர்ந்து செல்வான் – இதுவே இராவணனது நயவஞ்சகத் திட்டம்.

மாரீசன் செய்வதறியாது திகைத்து நின்றான். சற்று நேரம், பிறகு, கரங்களைக் குவித்து வணங்கியவாறு, “அரசே! இராமருக்கோ சீதைக்கோ தீங்கு இழைக்கும் எண்ணத்தை அடியோடு விட்டு விடுங்கள். இராமர் தங்களை உயிரோடு விட மாட்டார், என்றே நம்புகிறேன். இத்தகைய தீச்செயலால் தாங்களும் தங்கள் அரக்கர் குலம் முழுவதும், எஞ்சியிராமல் அழிக்கப் படுவீர். தாங்கள் அரக்கர் இனத்திற்கே புகழும் பெருமையும் ஈட்டித் தந்துள்ளீர்கள். அந்தப் புகழையும் பெருமையும் தாங்களே ஏன் முட்டாள் தனமாக நடந்து கொண்டு நாசமாக்கவேண்டும்?” என்று பணிவோடு அறிவுறுத்தினான்.

ஆனால் இந்த முறை, இராவணன் உறுதியான திட்டத்தோடு வந்திருந்தான். அதனால் அவனை மாற்றுவது என்பது எளிதாக இல்லை. மேலும் அவன் மனம் சீதையின் பால், பேராசை கொண்டு அலைந்தது. எனவே, எத்தகைய நல்ல அறிவுரையையும் அவன் ஏற்க இயலாது கிடந்தான். அதனால், கோபமாக மாரீசன் பக்கம் திரும்பி, “உன்னிடமிருந்து அறிவுரை பெற நான் இங்கு வரவில்லை. ஓர் அரசன் என்ற முறையில் நான் உனக்கு கட்டளையிடுகிறேன்,” என்று இரைந்தான். மாரீசனால் ஏதும் செய்ய இயலவில்லை. இராவணன் அழிவுப் பாதையை நெருங்கி விட்டான் என்று அவன் உணர்ந்தான். அவனை மாற்ற அவன் பல வழிகளை மேற்கொண்டு தோல்வியே அடைந்தான். இராவணன் கட்டளைக்குப் பணியாவிட்டால், இராவணனே அவனைக் கொன்று விடுவான். மாறாக, “தலைவனுடைய கட்டளையை நிறைவேற்றிவிட்டு, தெய்வத்தன்மை பொருந்திய இராமர் கையால் மடிவது நல்லது,” என்று எண்ணினான்.

இராவணனும் மாரீசனும், தங்கள் குரூரமான திட்டத்தை நிறைவேற்ற, தண்டகாரண்யம் செல்லலாயினர்.

கேள்விகள்:
  1. இராமரோடு ஒரு சண்டையை ஏற்படுத்திக் கொள்ள இராவணனை தூண்டியது எது?
  2. மாரீசனது அறிவுரை என்ன?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: