மகான்களின் அறிவுரைகள்
மகான்களின் அறிவுரைகள்
எல்லா நாடுகளிலும் மகான்களும், ஞானிகளும், மதிப்பிற்கும், வணக்கத்திற்கும் உரியவர்களாகப் போற்றப் பெறுகின்றனர். ஏனெனில் அவர்கள் மக்களுக்குப் பேருண்மைகளை மிக எளிய முறையில் போதித்து வந்தனர். நிலையான இன்பத்திற்கு நமக்கு வழி காட்டினர். தென்னிந்தியாவில் இரமண மகரிஷி ஒரு பெரும் ஞானியாகத் திகழ்ந்தார். நாட்டின் எல்லாப் பாகங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் கூட அவரைச் சேவிக்கவும் அவரிடம் அறிவுரை பெறவும் பக்தர்கள் திரண்டு வந்தனர்.
ஒரு நாள் மகரிஷி உலர்ந்த ஆல இலைகளை ஒன்றோடொன்று சேர்த்துத் தைத்துக்கெண்டிருந்தார். அந்தத்தையல் இலைகள் ஆசிரம வாசிகள் உணவு வைத்து உண்ணப் பயன்பெற்றன. மகரிஷி அருகில் நின்று கொண்டிருந்த ஓர் இளம் பக்தர் “பகவான்! தாங்களும் இலை தைக்கிறீர்களா? இது தங்கள் அரிய நேரத்தை வீணடிக்கிறதே! தங்களுக்கு இது தேவையற்ற வேலையல்லவா?”என்று கேட்டார். அதற்கு ஞானியான இரமணர் புன்னகையுடன் “மகனே! நல்ல முறையில் நேர்மையான வழியில் செய்யப்பெற்றால் எந்தப்பணியுமே காலத்தை வீணாகப் பாழடிக்கும் செயலல்ல. நீ செய்யும் ஒவ்வொரு செயலிலும் பயனுள்ள வகையில் நீ சிலவற்றை அறிந்து கொள்ளலாம். இந்த இலை தைக்கும் வேலையை எடுத்துக்கொள். பசியோடு இருப்பவர்க்கு உணவு பரிமாறும்போது இந்த இலைகள் எத்துணை முக்கியத்துவம் பெறுகின்றன! உணவருந்தி முடித்த பிறகோ அவை வீசி எறிந்து விடத்தான் ஏற்றவை. அதே போல் நம் உடலும், ஒரு சிறந்த வாழ்க்கை வாழ்ந்து நம் உதவியை நாடும் மற்றவர்க்குச் சேவைபுரியப் பயன் படுத்தப்படும் போது பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. தன்னலம் மிகுந்த ஒருவன் அவனுக்காகவே வாழ்ந்தானானால் நூறு ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவன் தன் வாழ்க்கையை வீணாக்கியவனாகவே ஆகிறான். வௌ்ளாடுகள் செம்மறியாடுகள் போன்று சாப்பிட்டு வாழ்ந்து, வளர்ந்து இருக்கும் அவன் மிருகங்களைவிட உயர்ந்த இனத்தினன் என்று கருதப்படமாட்டான்” என்று அறிவுறுத்தினார்.
மற்றொரு நாள் இரமண மகரிஷி சமையலறை அருகில் அரிசி சிந்தியிருக்கக் கண்டார். உடனே அவர் கீழே அமர்ந்து ஒவ்வொரு அரிசியாகப் பொறுக்கி எடுக்கலானார். அவர் அங்கு அமர்ந்து என்ன செய்கிறார் என்று அறிய சில பக்தர்கள் ஆவலோடு விரைந்து மகரிஷியைச் சூழ்ந்து நின்றனர். வீட்டைத் துறந்து வந்து அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்துவிட்ட அந்தப்பெரும் ஞானி சில அரிசி மணிகள் சிந்திக்கிடப்பதைப் பொறுக்க மாட்டாது அவற்றைக் கருத்தாகப் பொறுக்கி எடுக்கிறார் என்பதை அறிந்து வியப்பினால் வாயடைத்து நின்றனர். அவர்களில் ஒருவன் துணிந்து ‘பகவான்! சமையலறையில் பல அரிசி மூட்டைகள் நிறைந்து உள்ளனவே! தரையில் சிந்திவிட்ட சில அரிசிகளைப் பொறுக்கி எடுக்கத் தாங்கள் ஏன் இந்த அளவுக்கு வருத்திக் கொள்கிறீர்கள்?” என்று கேட்டான்.
அது கேட்ட ஞானி தலை நிமிர்ந்து பார்த்தார். “உங்களுக்கு இவை அரிசி மணிகளாகத் தெரிகின்றன. ஆனால் இந்தத் தானியங்களின் உள்ளே இருப்பதை உன்னிப்பாகக் கவனித்தீர்களா? நிலத்தை உழுது விதைவிதைத்துப் பாடுபடும் விவசாயியின் கடினமான உழைப்பை இதில் கண்டீர்களா? மேலும், கடல் நீர், சூரிய வெப்பம், கரிய மேகங்கள், கனத்த மழை, குளிர்ந்த காற்று, இளஞ்சூடான வெய்யில், மென்மையான பூமி, நெற்பயிரின் வளர்ச்சி – இவை அனைத்தும் அல்லவா இந்தச்சிறிய அரிசியில் பொதிந்துள்ளன! இந்தப் பேருண்மையை நீங்கள் முழுமையாக அறிந்து கொண்டால் ஒவ்வொரு தானிய மணியிலும் கடவுளின் கைவண்ணத்தைக் காண்பீர்கள். சிறப்பு மிக்க சிறு அரிசி மணிகளைக் காலின் அடியிலிட்டு மிதிக்கலாமா? மண்ணில் விழுந்து விட்ட அவை உங்களுக்குப் பிடிக்காவிடில் அவற்றைப் பறவைகளுக்குப் போட்டு விடுங்கள்” என்று அறிவுறுத்தினார் மகரிஷி.
மகிழ்ச்சியாகவும், பயனுள்ள முறையிலும் வாழவேண்டிய வழிமுறைகளை ஞானிகள் இங்ஙனமாக நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள். நம் நல்வினையின் பயனாக அவ்வப்போது ஞானிகளின் கூட்டுறவைப் பெற்றுவரும் நாம் உயர்ந்த நல்வாய்ப்பைப் பெற்றவர்தாமே!
கேள்விகள்:
- ஒரு ஞானி மற்ற மனிதர்களிடமிருந்து எப்படி வேறுபட்டு இருக்கிறார்?
- நீ பார்த்தோ, படித்தோ, கேள்விப்பட்டோ இருக்கும் ஒரு ஞானியைப்பற்றி விளக்கமாக எழுது. அவரிடமிருந்து நீ ஏதாவது நல்லதாக கற்றுக் கொண்டாயா?
- ஞானி ஏன் எல்லோராலும் போற்றி மதிக்கப் பெறுகிறார்?
- இரமண மகரிஷியின் கூற்றுப்படி, வாழ்க்கை எப்போது பயனுள்ளதாக ஆகிறது? வாழ்ந்தது வீணான காலமாக எப்போது அமைகிறது?
- ஓவ்வொரு தானிய மணியிலும் கடவுளின் கைவண்ணத்தை நாம் எங்ஙனம் பார்க்கக்கூடும்?