ஒருமுக மனக்குவிப்பின் மதிப்பு

Print Friendly, PDF & Email
ஒருமுக மனக்குவிப்பின் மதிப்பு

சுவாமி விவேகானந்தர் சிறுவனாயிருந்த போது அன்புடன் “பிலே” என்று அழைக்கப்பெற்றார். பிலேவும் அவனது நண்பர்களும் விளையாடிய களியாட்டங்களில் தியானம் ஒன்றாகும்.. சிறுவர்கள் அனைவரும் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு, அவரவர் மிக விரும்பும் தெய்வத்தை மனத்தில் நிறுத்தி நினைத்தவாறு இருப்பர்.

Biley's steady concentration

ஒரு நாள் அவர்கள், இங்ஙனம் கண்களைமூடி தியானத்தில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த போது, மெல்லிய ஓசை ஒன்றை ஒருவன் கேட்டான். உடனே கண்களைத் திறந்த போது ஒரு நீண்ட பாம்பு ஊர்ந்து கொண்டு அவர்களை நோக்கி வருவதைக் கண்டான். மறு நொடி, அவன் பாம்பு! பாம்பு! என உரக்கக் கூவி எல்லோரையும் எழுப்பி விட்டான். பிலே தவிர மற்ற எல்லோரும் அலறி அடித்துக் கொண்டு ஓடி விட்டனர். பிலே எழுந்திராதது கண்டு, “பிலே, பிலே, எழுந்திரு! வேகமாக ஓடிவந்துவிடு! பெரிய பாம்பு ஒன்று உன்னிடம் வருகிறது. அது உன்னை கடித்து விடும்! எழுந்து ஓடி வந்துவிடு! என்று கத்திக் கூப்பிட்டனர் பிலேவின் காதுகளில் அவர்களுடைய கூக்குரல் விழவேயில்லை. அவன் கண்களை மூடியவாறு இறைவன் நினைவில் ஆழ்ந்திருந்தான். சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்று அறிந்துகொள்ளும் நிலையில் அவன் இருந்தால்தானே!

அப்படியாயின், அந்த பாம்பு என்ன செய்தது? அது அங்கும் இங்கும் சற்று அலைந்து, பிறகு வந்த வழியே சென்றுவிட்டது. பிலேவின் நண்பர்கள், அவனுடைய பெற்றோர், அக்கம்பக்கத்தினர் அனைவரும் வந்து பிலேவின் ஒருமுக மனக்குவிப்பையும் (concentration) இறைஅன்பு நிறைந்த ஆற்றலையும் வியந்து போற்றினர்.

இத்தகைய ஒருமுக மனக்குவிப்பின் ஆற்றலால் தான் பிலேவினால் தன் பாடங்களை ஒன்றிரண்டு முறை படித்தாலேத் தெளிவாக நினைவில் நிறுத்த இயன்றது. கல்லூரியிலும் கூட அவன் சிறந்த திறமையான மாணவனாக விளங்கினான். இந்த ஆற்றல் அவன் பின்னர் சுவாமி விவேகானந்தராக ஆனபிறகு பெரிதும் உதவியது.

ஒருமுறை, சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சிகாகோ நகரில் இருந்தபோது, சில சிறுவர்கள் ஆற்றில் மிதக்கும் முட்டை ஓடுகளை குறிபார்த்து சுட முயல்வதைக் கண்ணுற்றார். அந்த ஓடுகள் அலைகளால் அப்படியும் இப்படியுமாக ஆடின. அதனால் அந்த சிறுவர்களால் அவற்றைக் குறி பார்த்துச் சுட முடியவில்லை. ஒவ்வொருவரும் பலமுறை முயன்றும் குறியை தவறவிட்டுத் தோற்று வந்தனர். அவர்களில் சிலர் சுவாமி விவேகானந்தர் தங்களையே ஆர்வத்துடன் கூர்ந்து கவனிப்பதைக் கண்டனர். உடனே அவரை விளித்து “ ஐயா! நீங்கள் இதுவரை எங்கள் செயல்களை கவனித்து வந்தீர்கள், உங்களால் சரியாக சுட முடியும் என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டனர். விவேகானந்தர் ஒரு புன்னகையுடன், “செய்ய இயலும்” என்பது போல் தலையை அசைத்தார். பிறகு, துப்பாக்கியைக் கையில் எடுத்துக்கொண்டு முட்டை ஓடுகளைக் குறி பார்த்தார். ஒருமுகமனக்குவிப்புடன், கூர்ந்து சற்று நேரம் அவற்றையே பார்த்தார் பிறகு டுமீல்,டுமீல்,டுமீல் என்று பன்னிரண்டு முறை சுட்டார்.ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முட்டை ஓடு அடிபட்டது.

சிறுவர்கள் சுவாமியின் திறமையைக் கண்டு வியப்பினால் செயலற்று நின்றனர். பிறகு அவரை அணுகி, ஐயா! மிக்க மகிழ்ச்சி. ஒருவித பயிற்சியுமின்றி எப்படி உங்களால் இத்துணை சரியாகச் சுட முடிந்தது? என்று கேட்டனர், அது கேட்டு விவேகானந்தர் வாய்விட்டு உரக்க சிரித்தார். சரி,சரி. உங்களுக்கு அதன் ரகசியத்தைக் கூறிவிடுகிறேன் கேளுங்கள். நீங்கள் என்ன வேலை செய்தாலும் உங்கள் கவனத்தை ஒருமுகமாகக் குவித்து செயல்படுங்கள். வேறு எதைப்பற்றியும் நினையாதீர்கள். நீங்கள் சுட முயன்றால் உங்கள் இலக்கு மேலேயே கவனத்தை பொருத்துங்கள் அப்போது உங்கள் எண்ணம் தோற்கவே தோற்காது. இந்த ஒருமுகமான மனத்தைக் குவித்தல் இருக்கிறதே அது பல அற்புதங்களை விளைவிக்கக்கூடியது. நீங்கள் பள்ளிப்பாடங்களைப் படிக்கும்போது கூட அந்த பாடங்களிலேயே மனம், ஒன்றியிருங்கள். அப்போது நீங்கள் படித்தவை பெரும்பாலும் உங்கள் நினைவில் அச்சுகோர்த்ததுபோல் நிலைத்து நிற்கும், என்று அறிவுறுத்தினார். இத்தகைய ஒருமுக மனக்குவிப்பின் ஆற்றலால்தான் சுவாமி விவேகானந்தர் உலகுக்காக மாபெரும் செயல்களை ஆற்ற முடிந்தது.

கேள்விகள்:
  1. ஒருமுக மனக்குவிப்பினால் பெறும் நன்மைகள் யாவை?
      1. சாலையைக்கடக்கும்போது
      2. வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனிக்கும்போது
      3. வீட்டுபாடங்களைச் செய்யும்போது
      4. பஜனை பாடும்போது
      5. தேர்வுக்கு நீ படிக்கும்போது
      6. சாப்பிடும்போது
      7. ஒரு திரைப்படம் பார்க்கும்போது
      8. கிரிக்கெட் விளையாடும்போது,

    ஒருமுகமான மனக்குவிப்பு பெறாது இருந்தால் என்ன நேரிடும்?

  • ஒருமுக மனக்குவிப்புடன் முழுமையாக செய்யப்பட்ட ஒரு அனுபவம் ஏதாவது கூறி அதன் நல்ல விளைவை விளக்குக.
  • ஒருமுக மனக்குவிப்புக்குறைவால் தோற்றுப்போன ஒரு அனுபவத்தை விளக்குக

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: