திருப்பூர் குமரன் - Sri Sathya Sai Balvikas

திருப்பூர் குமரன்

Print Friendly, PDF & Email
திருப்பூர் குமரன்

திருப்பூர் குமரன் (1904-1932) இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி ஆவார். ஈரோடு மாவட்டம், சென்னிமலையில், 1904 அக்டோபர் 04ம் தேதி நாச்சிமுத்து-கருப்பாயி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தார். குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை ஆரம்பப்பள்ளி அளவிலேயே முடித்துக் கொண்டார். குமரன் கைத்தறி நெசவுத்தொழிலைச் செய்து வந்தார். தனது 19ம் வயதில் ராமாயியை மணமுடித்தார். நெசவுத்தொழி-ல் போதிய வருமானம் இல்லாததால், மாற்றுத்தொழில் தேடி திருப்பூர் சென்றார். அங்கு மில்-ல் எடைபோடும் பணியில் சேர்ந்தார்.

காந்தியக்கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காகக் காந்தி அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டார். வீட்டுப்பணியைக் காட்டிலும், நாட்டுப்பணியில் அதிக நாட்டம் இருந்தது. தேசபந்து வா-பர் சங்கம் என்ற விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். கள்ளுக்கடை மறியல், அந்நியப்பொருள்களை எரித்தல் போன்ற போராட்டங்களில் குமரன் ஈடுபட்டார்.

காந்தியடிகள் கைது ஆனதைக் கண்டித்து 06-01-1932 அன்று மாலை, திருப்பூர் நொய்யல் நதிக்கரையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் திருப்பூரில் சட்டமறுப்பு இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ஜனவரி 10ம் தேதி, சுதந்திரப்போராட்ட வீரர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். குமரன் தேசியக் கொடியைக் கையில் பிடித்தபடி, “அச்சமில்லை அச்சமில்லை” என்ற பாரதியாரின் பாடலைப் பாடிக்கொண்டு ஊர்வலத்தில் சென்றார்.

எழுச்சிமிகு ஊர்வலம் கண்டு வெள்ளையர்கள் குண்டாந்தடியால் தாக்குதல் நடத்தினர். அதில் குமரனின் மண்டை பிளந்து, செந்நீர் கொட்டியது. குமரன் செயலற்றுப்போய் தரையில் சாய்ந்தார். அந்நிலையிலும் அவரது வலதுகையில் உள்ள தேசியக்கொடி கீழே விழவில்லை. உடலை மண்ணுக்குத் தந்து தன் மார்பை மணிக்கொடிக்குத் தந்தார். இதனால் கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் பலனின்றி 1932 ஜனவரி 11ம் நாள், அவரது ஆவி பிரிந்தது. இந்திய விடுதலைப்போரில் உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றையும் தியாகம் செய்தவர்கள் பட்டிய-ல், தியாகி குமரன் முதன்மையான இடம் பெற்றார். தியாகி குமரன் சாவைச் சரித்திரமாக்கினார்.

அவரது தேசப்பற்றினையும், தியாகத்தையும் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசு திருப்பூரில் நினைவகம் அமைத்துள்ளது. இங்கு இந்தியச் சுதந்திரப்போராட்ட வீரர்களின் படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. படிப்பகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இவரது 100வது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில், அக்டோபர் 2004ல் சிறப்பு நினைவுத் தபால்தலையை இந்திய அரசு வெளியிட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: