கல்லை கடவுளாக நடத்து கடவுளைக் கல்லாக நினையாதே
கல்லை கடவுளாக நடத்து கடவுளைக் கல்லாக நினையாதே
“உடைந்து போன விக்ரகத்தை எறிந்து விடு. புதிதாக வேறோன்று செய்து வைத்து வழிபடு” என்றனர் சிலர்.
அங்ஙனம் நீ செய்யக்கூடாது.” என்று இராமக்ருஷ்ணர் பதிலிறுத்தார்.
“உன்னோடு இணைந்த உறவினன் ஒருவன் காலை உடைத்துக்கொண்டால் அவனை மூலையில் ஒதுக்கித்தள்ளுவாயா” என்றார்
தக்ஷிணேஸ்வரத்தில் காளி கோவிலை அடுத்து இராதாகோவிந்தா கோவிலும் பன்னிரண்டு சிவன்கோவில்களும் உள்ளன. கோவில்களில் உள்ள ஒவ்வொரு மூர்த்திக்கும் ஒவ்வொரு அம்பிகைக்கும் தனித்தனி புரோகிதர் நாள் தோரும் வந்தனை வழிபாடுகள் செய்து வந்தனர்
திரு இராமகிருஷ்ணர் காளி மாதாவிற்குப் பக்தியோடு வழிபாடுகள் செய்யும் பணியை ஏற்றுக்கொண்ட பிறகு ஒரு நாள் எதிர்பாராத ஓர் விபத்து நேர்ந்தது. அன்று நந்தோற்சவம் எனப் பெறும் கிருஷ்ணரது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பெற்றது அன்று பகல் பூசைக்குப்பிறகு இராதாகோவிந்தரின் கோவில் இறைவர் கோவிந்தரது விக்ரகத்தை படுக்கையில் கிடத்த குருக்கள் எடுத்துச்சென்றார். செல்லும்போது அவரது கை தவறி விக்ரகம் கீழே விழுந்து விட்டது .உடனே அதன் கால் உடைந்து விட்டது.
உடைந்த உருவச்சிலைபூசைக்கு உரியதல்லவே! அந்த நிலையில் என்ன செய்ய முடியும்? மதுர்பாபுவுக்கும் ராணிராஸ்மணிதேவிக்கும் உடனே செய்தி அறிவிக்கப்பட்டது .அவர்கள் பண்டிதர்களை வரவழைத்து அவர்கள் கருத்தைக்கேட்டனர். பண்டிதர்கள் ஒன்றுகூடி சிந்தித்தனர்.பிறகு உடைந்த உருவச்சிலையை கங்கையில் எறிந்துவிட்டு, புது விக்ரகம் ஒன்று செய்து வைத்து வழிபடவேண்டும் என்று தங்கள் கருத்தை தெரிவித்தனர்
அப்போது மதுர்பாபுவிற்கு ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கலந்து ஆலோசிக்க ஆவல் ஏற்பட்டது. அங்ஙனமே விரைந்து சென்று கேட்டார். அதற்கு மறுமொழியாக, “இராணியின் மருமகன்களில் ஒருவன் விபத்து ஒன்றில் ஒரு காலை உடைத்துக் கொண்டானானால் அவனை வீசி எறிந்து விட்டு வேறு புது மருமகனைக் கொண்டு வந்து நிறுத்தினால் இராணி ஏற்பாரா? அல்லது ஒரு மருத்துவரை அழைத்துவந்து உடைந்த காலை எங்ஙனமாவது சரி செய்ய முயலுவாரா?அதேபோலதான் இங்கு இப்போதும் செய்யப்பெற வேண்டும். உருவச்சிலையின் உடைந்த காலைப்பொருத்தி சரி செய்து மீளவும் வழிபடத்துவங்குங்கள்” என்று அறிவுறுத்தினார் ஸ்ரீஇராமகிருஷ்ணர். அவரது கூற்றை அனைவரும் புரிந்துகொண்டனர். உண்மைதானே! நாம் கடவுளை, நமக்கு நெருங்கியவராக, அன்பிற்குகந்தவராக அல்லவா கருத வேண்டும்.ஓர் அன்னையாக ஒரு தந்தையாக ஒரு குழந்தையாக அவரை எண்ணி அன்பு செலுத்தி சேவைபுரிய வேண்டும். ஆனால் அவர்கள் கடவுளை ஒரு கல்லுருவமாக எண்னினர். ஸ்ரீராமகிருஷ்ணரே பின்னர் உடைந்த சிலையை ஒட்ட வைத்து சரியாக்கும் பணியை ஏற்று அழகுற ஐயன் காலை அமைத்துத் தந்தார்
கேள்விகள்:
- கிருஷ்ணரது உடைந்த உருவச்சிலையைப் பற்றி பண்டிதர் கருத்து என்ன?
- அது குறித்து ஸ்ரீராமகிருஷ்ணரது கருத்து என்ன?
- இந்தகதையின் நீதி என்ன?