வாய்மையே தெய்வம் III
வாய்மையே தெய்வம் III
கோலாப்பூரிலுள்ள ஓர் பள்ளியின் வகுப்பறை அது. ஆசிரியர் மாணவர்களுக்குச் சில கணக்குகளைக் கொடுத்துச் செய்யச் சொல்லியிருந்தார். கொஞ்ச நேரத்தில், வகுப்பறை முழுவதிலும் ஒரு முணு முணுப்பு ஒலி எழுந்தது. மாணவர்கள் மிகமிகச் சிக்கலான, எளிதில் விடை காண இயலாத அந்த கணக்குகளால் வெறுப்புற்றவர்களாக முணுமுணுத்தனர். ஆசிரியர் அதுவரை அது போன்ற கணக்குகளைக் கற்றுத்தரவும் இல்லை. அதனால்தான் அவர்களால் அவற்றைச் செய்ய இயலாதிருந்தது
ஆசிரியரும் தம் தவறை உணர்ந்தார். அப்போது வகுப்பில், கோபால் என்ற ஒரு சிறுவன், பொறுமையாக மிக்க கருத்துடன் அந்த கணக்குகளை செய்து, சரியான விடைகளைக் கண்டுபிடிக்க முயல்வதை அவர் கண்ணுற நேர்ந்தது. கோபால் வகுப்பில் கெட்டிக்கார மாணவரில் ஒருவன். ஆசிரியர் அவன் அருகே சென்றார்.கோபால் அனைத்து கணக்குகளையும் சீராகச் செய்து, சரியான விடைகளை எழுதியிருந்தான்.
திறமையுடன் நீ எல்லா கணக்குகளையும் முன்னரே கற்றுக் கொண்டவனைப் போலச் சரியாகப் போட்டுவிட்டாயே? மிகவும் நல்லது, கோபால்! போய் வகுப்பின் முதலிடத்தில்முதல்மாணவனாகத் தகுதியோடு உட்கார்! என்று மகிழ்ந்து கூறினார். கோபால் மெதுவாக எழுந்தான்.பணிவான குரலில் “ஐயா, என்னுடைய அறிவை மட்டும் பயன் படுத்தி நான் இவற்றைச் செய்து விடவில்லை. சென்ற வாரம் என் உறவினர் ஒருவர் என் வீட்டுக்கு வந்திருந்தார். கணக்கு அவரது விருப்பப் பாடம். அவர்தான் எனக்கு இதே கணக்குகளைத் தெளிவாகச் சொல்லித் தந்தார். அதனால் தான், நான் இன்று மிக எளிதாக அவற்றை விரைவில் போட்டுவிடமுடிந்தது. எனவே முதல் மாணவனாக மதிப்புப் பெறும் தகுதிக்கு நான் உரித்தானவன் அல்லன்” என்று கூறினான். கோபால் உண்மையிடம் கொண்டிருந்த விருப்பம், ஆசிரியர் மனதை நெகிழச் செய்தது. அவர் தனக்குரியனவல்லாத மதிப்பையும், புகழையும் ஏற்றுக்கொள்ள மறுத்த பண்பு அவரைக் கவர்ந்தது
அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல, பெரிய சமூக சீர்திருத்தவாதியான கோபால கிருஷ்ண கோகலே தான் அவன். மகாத்மா காந்தியே அவரை தமது குரு என்று மதித்து போற்றினார். கோகலே, “இந்தியச் சமுதாயத்தின் பணியாட்கள்” என்று ஒரு குழுவை நிறுவினார். அது தற்போதும் நாட்டில் உள்ள ஏழை எளியவர்களுக்கும் துன்புறுபவர்களுக்கும் தாழ்த்தப்பட்ட இனத்தார்களுக்கும் மிகச் சிறந்த சேவை புரிந்து புகழ் பெற்று விளங்குகிறது.
கேள்விகள்:
- ஆசிரியர் கோபாலுடைய சொற்களால் ஏன் மனம் மகிழ்ந்தார்?
- நாம் பெறத்தகுதியில்லாத மதிப்பையும், புகழையும் ஏன் நாம் பெற்றுக் கொள்ளக்கூடாது?
- நாம் அவற்றை ஏற்றுக்கொண்டால் என்ன நேரிடும்?
- ‘வாய்மையே தெய்வம்’ என்ற கதைகளினால் நீ என்ன தெரிந்து கொள்கிறாய்?