கவி துளசிதாஸர் கதை
கவி துளசிதாஸர் கதை
இக்கதை, பெருமை வாய்ந்த கவி துளசிதாசரைப் பற்றியது. அவர் அனாதைக் குழந்தை. தன்னுடைய தாய் மாமனால், பேணி வளர்க்கப்பட்டார். அந்தக் குழந்தையின் பெயர் முன்னா. அவன் தன் தாய் தந்தையைப் பற்றி எப்போது கேட்டாலும், ஸ்ரீ ராமர் தான் அவனுடைய தாயும் தந்தையுமாவார் என்று மாமா கூறுவார். அவன் வளர்ந்த பின், எல்லாக் குழந்தைகளும் தங்கள் தாய் தந்தையுடன் வசிக்கின்ற போது ஏன் தன்னுடைய தாயும் தந்தையும் தன்னைத் தனியே விட்டு விட்டனர் என எண்ணினான். கோவில்களில், மிக்க பொலிவுடனும், ஆடம்பரமாகவும், நிறைய மக்கள் சூழ இருந்தாலும் தன்னைத் தனியே விட்டுவிட்டனரே என எண்ணினான். தன்னுடைய களங்கமற்ற தன்மையால் தன் மாமா சொன்னதை உண்மையென்றே நம்பினான்.
ஒரு நாள் இரவு முன்னா, கோவிலின் ஜன்னல் வழியாகப் புகுந்து, ராமர் சிலையை அடைந்தான். அவனுக்கு அப்போது மிகுந்த பசியாக இருந்ததால், உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் அவன் அழ ஆரம்பித்தான். முன்னா உண்மையாகவே ஸ்ரீ ராமர் தான் தன் தாய் என நினைத்து, “என்னை ஏன் தனியாக விட்டுவிட்டு, நீங்கள் இங்கு வசிக்கின்றீர்கள்” என்று மனமுருகிக் கேட்டான்.
மேலும், “குழந்தையுடன் தான், தாயும் தந்தையும் இருக்க வேண்டும். அப்போது தான் குழந்தையாகிய என்னையும் கவனித்துக் கொள்ள முடியும்” என்று நினைத்து அந்தச் சிலையைத் தன்னுடன் எடுத்துச் செல்ல முயன்றான். அப்பொழுது ஏற்பட்ட சத்தத்தில் பூஜை செய்கின்ற பட்டாச்சாரியார்கள் விழித்துக் கொண்டனர். சிறுவன் சிலையைத் தூக்கிக்கொண்டு ஓடவே, அவர்கள் அவனைத் தடுத்து நிறுத்தினர். சிறுவன், “நான் என் தாயையும் தந்தையையும் என்னுடன் எடுத்துச் செல்வதை தடுக்க நீங்கள் யார்” என்று கேட்டு, தன்னால் முடிந்த வரை வேகமாக ஓடத்துவங்கினான். ஓடும் போது, ஒரு துளசி வனத்தில் தடுக்கி விழுந்து மூர்ச்சையானான்.
கருணைமிக்க ராமர், அவனுடைய உண்மையான அன்பையும், கள்ளம் கபடமற்ற நம்பிக்கையையும் கண்டு மனமிரங்கினார். அவரது அருளால் ராமானந்தர் என்ற யோகி அவ்வழியே வந்து அவனைத் தூக்கி ஆறுதல் சொன்னார். துளசி வனத்தில், அந்த சிறுவனைத் தான் கண்டதால், அவனுக்கு “துளசிதாஸ்” என்று பெயரிட்டார். அன்று முதல் துளசிதாஸருக்குத் தாயாகவும், தந்தையாகவும் இருக்க, ஸ்ரீ ராமர் தான், தன்னை அனுப்பி வைத்தார் என்று சொன்னார்.
அந்த யோகி, தன் பேரில் செலுத்தும் மட்டிலாத அன்பையும், பரிவையும் கண்டு, துளசிதாசர் மிகுந்த திருப்தியும், சந்தோஷமும் அடைந்தார். ராமானந்தர் துளசிதாசரைப் பேணி வளர்த்ததோடு, கல்வியும் கற்றுக் கொடுத்து இறைவனை மனதால் வழிபட வைத்தார். இதிலிருந்து, இறைவன் தான் நமக்கு தாய், தந்தை அனைத்தும் என்பதை அறிகின்றோம். நாம் இறைவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், அவர் நம்மை நோக்கி பல அடிகள் வைத்து அருளுவார்.
[Illustrations by Smt. Uma Manikandan]
[Source: Sri Sathya Sai Balvikas Guru Handbook for Group I, First Year]