கைகேயியின் இரண்டு வரங்கள்
கைகேயியின் இரண்டு வரங்கள்
அயோத்திக்கு திரும்பிய பிறகு இராமரும் சீதையும் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்தனர். இராமர் நாட்டு மக்களின் நலத்தை பார்த்துக் கொண்டிருந்தார். எந்த சூழ்நிலையிலும் நிதானத்தை இழக்காமல் மற்றவர்களுக்கு உதவுவார். தசரதன் தனக்கு வயதாகிவிட்டதாக எண்ணி தன் இராஜ்ஜியத்தை இராமரிடம் ஒப்படைக்க விரும்பினார். அதற்காக இராமருக்கு முடிசூட்ட ஆணை பிறப்பித்தார். அந்த நேரத்தில் பரதனும் சத்ருக்னனும் அயோத்தியிலிருந்து தங்கள் பாட்டனார் நாடான கேகய நாட்டிற்குச் சென்றிருந்தனர். அரசிகள் மூவரும் இராமரின் பட்டாபிஷேகச் செய்தியைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். கைகேயி இராமரிடம் தன் சொந்த மகன் போல் அன்பு செலுத்தினாள். ஆனால் அவளுடைய பணிப்பெண் மந்தரைக்கு இது சந்தோஷத்தை தரவில்லை. மந்தரை, கைகேயியின் மகன் பரதன் தான் அரசனாக வேண்டும் என்று விரும்பி, அதற்காக தந்திரமாக செயல் பட்டாள். அவள் இராமர் அரசனாக முடிசூட்டப்பட்டால், கௌசல்யா அனைத்து அதிகாரங்களும் பெற்று கைகேயியை அடிமையாக நடத்துவாள் என்று கைகேயியின் மனதில் நஞ்சை விதைத்தாள். கைகேயியின் மனதிலும் சந்தேகம் தோன்ற ஆரம்பித்தது. ஆகவே ஒருவழியாக அவளும் மந்திரையின் ஆலோசனைக்குக் கட்டுப்பட்டாள்.
குருமார்கள் குழந்தைகளுக்கு சொல்லவேண்டியது:
சாதாரணமாக கைகேயி நல்ல குணமுள்ள பெண்தான். ஆனால் அவளது வேலைக்காரி மந்தரை தன்னிடம் மிகுந்த நாணயமும், விசுவாசமும் கொண்டவள் என்று கருதியதால், நஞ்சை ஒத்த விஷ போதனைகளை கேட்டு தனது சுயபுத்தியை இழந்தாள். ஆகையால்தான் நாமும் நமது நண்பர்களின் சேர்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
நண்பர்கள் கூறுவதை கண்மூடித்தனமாக பின் பற்றுவதோ அல்லது அவர்கள் எதைக் கூறினாலும் கேட்டுக்கொள்வதோ, அவர்கள் சொல்வதை எல்லாம் செய்வதோ கூடாது. அவர்கள் நம்பிக்கைக்கு உரிய சிறந்த நண்பர்களாக இருந்தாலும் சரி, எந்த முடிவையும் எடுப்பதற்குமுன் நமது சுய புத்தியினால் தீர விசாரணை செய்த பிறகு எது நமக்கும், நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் நன்மை பயக்குமோ அதையே செய்ய வேண்டும்.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி : வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய ஏ பி சி என்பது – “கெட்ட சகவாசத்தைத் தவிர்”. “எப்போதும் ஜாக்கிரதையாக இரு” “முதலில் விவேகம், அதன்பின் முடிவெடுத்தல்”.
தசரத மகாராஜன் ஒரு முறை போர்க்களத்தில் கைகேயியால் காப்பாற்றப் பட்ட போது அவளுக்கு இரண்டு வரங்கள் அளிப்பதாக உறுதியளித்திருந்தார். அதை மந்தரை, கைகேயியிக்கு நினைவு படுத்தினாள். தசரதன் இராமரின் பட்டாபிஷேகத்தைப் பற்றி கைகேயியிடம் கூற வந்தார். அப்போது கைகேயி அந்த இரண்டு வரங்களை அளிக்கும்படி தசரதனிடம் கேட்டாள். ஒன்று பரதன் அரசனாக முடிசூட்டப்பட வேண்டும் என்றும், இரண்டாவதாக இராமர் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும் என்றும் தசரதனிடம் கூறினாள். இதைக் கேட்டதும் தசரதன் மிகவும் அதிர்ச்சியுடன் மயக்கமடைந்தார்.
மறுநாள் காலை மந்திரி சுமந்திரர் இராமரின் பட்டாபிஷேக ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ளன என்று தெரிவிக்க வந்தபோது தசரதன் மிகுந்த துயரத்துடன் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டார். அருகிலிருந்த கைகேயி சுமந்தரரிடம் இராமரை உடனே அழைத்து வருமாறு ஆணையிட்டாள். இராமர் வந்து தந்தையின் துயரத்திற்குக் காரணம் கேட்ட போதும் எந்த பதிலும் இல்லை. கைகேயி தான் தசரதரிடம் கேட்ட இரண்டு வரங்களைப் பற்றி சொன்னாள். உடனே இராமர் புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டு தந்தையின் ஆணைப்படியே தான் நடந்து கொள்வதாக வாக்களித்தார். அவன் கைகேயியிடம் பரதன் அரசாள்வது தந்தைக்கு மகிழ்ச்சியை கொடுக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டினார்.
பிறகு அவர் தந்தையையும் கைகேயியையும் வணங்கி கௌசல்யாவிடம் சென்றார். கைகேயி சொன்னதைக் கேட்டு ஆத்திரமடைந்த லஷ்மணனை சமாதானம் செய்து தந்தை சொல்வதை கேட்பது தமது கடமை என்று கூறினார்.
குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்லவேண்டியது:
நமது வாக்கை எவ்வாறு காப்பாற்றுகிறோம் என்பது முக்கியம். தனது தந்தைக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற இராமர் உடனடியாக அயோத்யாவை விட்டு செல்ல முடிவெடுத்தார்.
இராமர் எப்படி சமநிலையை பாவித்தார் – காட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற செய்தியைக்கேட்டு தனது சமநிலையை இழக்கவில்லை, கைகேயியின் வரங்களைக் கேட்டு கோபம் கொள்ளவில்லை. மற்றவர்கள் இதைக்கேட்டு மிகவும் துயரம் அடைந்த போதிலும் இராமர் மட்டும் அமைதியாக இருந்தார்.
குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்லவேண்டியது:
உன்னால் செய்யப்பட்ட சத்தியத்தை எப்போதும் காப்பாற்ற வேண்டும். சத்தியம் செய்வதற்குமுன் எதற்காக செய்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஒருமுறை சத்தியம் செய்தபின் அந்த வார்த்தைகளை புறக்கணிக்கலாகாது.
போட்டிகளிலோ, விளையாட்டுகளிலோ தோற்றுவிட்டால் வருத்தமோ கோபமோ கொள்ளக்கூடாது. முயற்சி செய்து உன்னுடைய தரத்தை மேலும் உயர்த்திக்கொள்ள வேண்டும்.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி: எந்த சூழ்நிலையிலும் (துன்பக்காலத்திலும்) மனதின் சமநிலையை தவறவிடாமல் வைத்துக்கொள்ளப் பழகு.
போட்டிகளிலோ, விளையாட்டுகளிலோ தோற்றுவிட்டால் வருத்தமோ கோபமோ கொள்ளக்கூடாது. முயற்சி செய்து உன்னுடைய தரத்தை மேலும் உயர்த்திக்கொள்ள வேண்டும்..
குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்லவேண்டியது:
எப்படி பெற்றோர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் பையனாக இராமர் இருந்தார்; தந்தையின் வார்த்தைக்குத் தான் கீழ்ப்படிந்தது மட்டுமல்லாது, இலட்சியமும், உயர்ந்த குறிக்கோள்களும் கொண்ட ஒரு மகன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று லக்ஷ்மணனுக்கு புத்திமதியும் கூறினார்.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி : பெற்றோர்களுக்கும் பெரியோர்களுக்கும் கீழ்ப்படிதல்./ முதலில் நீ நடந்து காட்டு; பிறகு உபதேசம் செய்.
கௌசல்யாவும் இராமனுடன் காட்டுக்குச் செல்ல விரும்புவதாக கூறினாள். ஆனால் இராமர் அவள் கணவன் தசரதருக்கு சேவை செய்வதே தன் அன்னையின் கடமை என்றும், மேலும் பரதன் அரசனாக முடிசூட்டப்பட்டாலும் அவள் சந்தோஷப்பட வேண்டும் என்றும் கூறினார். லஷ்மணனும் இராமருடன் காட்டிற்கு வருவதாகச் சொன்னதும் அனுமதித்தார். சீதாவும் இராமருடன் வருவதாகக் கூறியதும் காட்டில் அவள் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்று எடுத்துரைத்தார். ஆனால் முடிவில் சீதையும் தீர்மானமாக இராமருடன் காட்டிற்கு செல்ல முடிவாயிற்று.