செருக்கு தகுந்த பாடம் கற்றது

Print Friendly, PDF & Email
செருக்கு தகுந்த பாடம் கற்றது

ஒரு முறை காந்திஜி மேல் நாட்டுக் கப்பல் ஒன்றில் இங்கிலாந்தில் ஒரு மகாநாட்டில் கலந்து கொள்ளப் பயணம் செய்து கொண்டிருந்தார். கப்பலின் மேல் தளத்தில் அமர்ந்து ஒரு சிறிய சாய்வு மேசையில் வைத்துக் கடிதம் ஒன்று எழுதிக் கொண்டிருந்தார். அப்போது அழகாக உடுத்திக் கொண்டு அங்கு வந்த ஒரு ஐரோப்பியனுக்கு, மற்றப் பயணிகளிடமிருந்து மாறுபாடான நிலையில் தோற்றமளித்த காந்திஜி ஒரு வேடிக்கைப் பொருளாகத் தோன்றினார்.

வறட்டுக் கௌரவம் படைத்த அவன் உடனே தன் அறைக்குச் சென்றான். சில தாள்களை எடுத்தான். அவற்றில் காந்திஜிக்குக் கோபமூட்டும் வகையில் இழிவான செய்திகளையும், கேலிப்படங்களையும் வரைந்தான். அரை ஆடையணிந்து, வழுக்கைத் தலையுடன், பல்லில்லாத பொக்கை வாய்க்கிழவரான காந்திஜி, இங்கிலாந்து மகாநாட்டிற்குச் சென்று என்ன சாதிக்கப் போகிறார் என்று வியந்தான். அதனால் வெளிநாட்டுக்குப் போகும் இத்தகைய பைத்தியக்காரத்தனமான வேலையை விட்டுவிடும்படி அவன் காந்திஜிக்கு அறிவுறுத்தினான். இவற்றையெல்லாம் விவரமாக எழுதி, அந்தத் துண்டுக் கடிதங்களைக் குண்டூசியால் கோர்த்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான்.

பெருமை மிக்கவனாய் நடந்து சென்று காந்திஜி அமர்ந்திருந்த மேசை அருகே வந்தான். காந்திஜி தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தார். உடனே, கறுப்பு நிறமுள்ள இந்தியர்களிடம் தான் கொண்டுள்ள வெறுப்பை வெளிக்காட்டும் வகையில் அலட்சியமாக அந்தத்தாள்களை அவரிடம் தந்தான் அந்த ஐரோப்பியன். “இவற்றை நீங்கள் பயனுள்ளதாகவும் ஆர்வத்தை ஊட்டுபவனவாகவும் உணர்வீர்கள். நன்கு படித்துவிட்டுப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்” என்றான்.

பிறகு அவன் மறைவாக நின்று கொண்டு, தன் கடிதங்களால் காந்திஜியிடம் ஏற்படும் விளைவுகளைக் காண ஆவலோடு இருந்தான். காந்திஜி பொறுமையாக அவை ஒவ்வொன்றையும் எடுத்து, அவன் எழுதியிருந்த ஒவ்வொரு சொல்லையும் ஊன்றிப்படித்து முடித்தார். பிறகு தலையைத் தூக்கி ஒரு நொடி நேரம் அந்த ஐரோப்பிய இளைஞனை உற்றுப் பார்த்தார். பின்னர் அந்தத் தாள்களைக் கோர்த்திருந்த குண்டூசியை எடுத்து வைத்துக்கொண்டு, அந்தத் துண்டுக்கடிதங்களை அப்படியே மேசையடியில் இருந்த குப்பைக் கூடையில் போட்டுவிட்டார். தமக்கே உரித்தான புன்னகையுடன் “நீ கேட்டுக் கொண்டபடியே செய்துவிட்டேன். நீ தந்ததில் எனக்குப் பயனுள்ளதும், ஆர்வம் பயப்பதுமான குண்டூசியை நான் எடுத்துப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு விட்டேன். மிக்க நன்றி” என்று நிதானமாகச் சொன்னார் காந்திஜி.

அந்த இளைஞன் உடனே தன் தவறை உணர்ந்து வருந்தினான். அந்தக் காகிதத்துண்டுகளைக் கண்ணுற்றவுடன் காந்திஜி கோபத்தில் கொதித்தெழுவார், அவமானத்தில் ஒரு நாடகமே ஆடிக்காட்டுவார், அதைத் தானும் கப்பலிலிருந்த மற்றப் பயணிகளும் கண்டு களிக்கலாம் என்று எண்ணி இருமாந்திருந்தான். இப்போது சுருக்கமாகவும் இனிமையாகவும் காந்திஜி விடை கூறியது நேரடியாக அவனது நெஞ்சத்தில் சென்று தாக்கியது. எவ்வளவு அறிவிற்சிறந்தவராகவும், பண்பாடு மிக்கவராகவும், பணிவானவராகவும் காந்திஜி இருக்கிறார் என்று வியந்து போற்றினான். தன் தலையைக் கீழே தாழ்த்திக் கொண்டு வந்த வழியே திரும்பிச் சென்றான். காந்திஜியிடம் அவன் அன்று கற்ற பாடம் அவனது ஆடம்பரச் செருக்கை என்றென்றும் அவனிடமிருந்து நீக்கிவிட்டது.

கேள்விகள்:
  1. இளைஞனான ஐரோப்பியன் செய்த தவறு என்ன??
  2. காந்திஜி அவனுக்கு என்ன பாடம் கற்பித்தார்?
  3. உன்னை ஒரு இறுமாப்புப் பிடித்த மாணவன் ‘அறிவற்ற முட்டாள்’ என்று கூப்பிட்டால் நீ என்ன செய்வாய்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: