பெயரின் பின்னணி கதை
புட்டபர்த்தி கிராமமும் அதன் பெயரின் பின்னணியில் உள்ள பழங்கதையும்
ஆந்திரபிரதேச மாநிலத்திலுள்ள புட்டபர்த்தி என்ற ஒரு சிறு கிராமத்தில் தான் ஸ்ரீ ஸத்யசாயி பாபா அவதரித்தார். குன்றுகள் மோதிரம்போல் சூழ்ந்திருக்க நடுவில் வைக்கப்பட்ட வைரம்போல் ஜொலித்தது அந்த கிராமம். சித்ராவதி நதியின் கரையில் அமைந்தது. அதன் கோவில் மணிகள் மலைகளில் எதிரொலித்தன. பண்டைய காலத்தில் அது கவிகள், பண்டிதர்கள், வீரர்கள் ஆகியோர் பிறந்து வளர்ந்த இடமாக இருந்தது. திருமகளும் கலைமகளும் ஒரிடத்தில் குடியிருக்கும் இருப்பிடமே புட்டபர்த்தி. தென் இந்தியாவில் இருந்த அந்த அமைதியான சிறிய கிராமத்தைப் பற்றி பல புராணக்கதைகள் கூறப்பட்டன. ‘புட்ட’ என்றால் பாம்பு குடிகொண்டிருக்கும் கரையான் புற்று என்றும் ‘பர்த்தி’ என்றால் பெருகுவது என்று பொருள்.
வெகுகாலத்துக்கு முன் அந்த கிராமம் ‘கொல்லபள்ளி’ என்ற பெயர் பெற்று இருந்தது. ஸ்ரீ க்ருஷ்ணனின் பிள்ளைப் பிராயத்தை நினைவு படுத்தும்வகையில், அதற்கு கோபாலர்களின் (இடையர்களின்) வீடு என்றுபொருள். அங்கு கோபாலர்கள் சந்தோஷமாக வாழ்ந்தனர். எனவே அவ்வூர் மகிழ்ச்சி நிறைந்த இடமாக இருந்தது. கால் நடைகள் கொழுகொழுவென்று வலிமையுடன் விளங்கின. பசுக்கள் ஒப்பற்ற சுவை கூடிய செறிந்த ஆடை நிறைந்த பால் தந்தன. ஒவ்வொரு வீட்டிலும் வெண்ணெய்யும் நெய்யும் நிறைந்து வழிந்தன.
அங்குள்ள மக்கள் வளமையாக செழிப்பாக இருந்தனர். இவ்வாறிருக்கையில் ஒரு நாள் ஒரு மாட்டிடையன் தனது அன்புக்கு உகந்த பசு குன்றுகளிலிருந்த புல்வெளியில் மேய்ந்த்து வீடு திரும்பிய பின் பால் ஒன்றும் தராத காரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற பிடிவாதத்துடன் அதன் பார்வையிலிருந்து தன்னை மறைத்துக்கொண்டு கவனித்தான். அவன் அதிசயப்படும் விதத்தில் அதன் சின்னஞ்சிறு கன்றுக்குட்டியை விட்டு விலகி மாட்டுக் கொட்டிலிலிருந்து வெளியே சென்று கிராமத்துக்கு வெளியெ இருந்த கரையான் புற்றை நோக்கி சென்றது. இடையன் பசுவைப் பின் தொடர்ந்தான். பாம்புப்புற்றிலிருந்து நாகப்பாம்பு ஒன்று வெளிவருவதைக்கண்டான். அது வாலைத்தரையில் வைத்து உடலை நிமிர்த்தி பசுவிடமிருந்து அனைத்து பாலையும் குடித்தது.
“தந்திரமாக இந்த பாம்பு இத்தனை பாலையும் குடித்துவிட்டதே! எனக்கு இதனால் எவ்வளவு நஷ்டம்” என்று நினைத்தான். இடையயனுக்கு சினம் தலைக்கேறியது. பக்கத்தில் இருந்த ஒரு பெரிய கல்லை தலை மேல் தூக்கி பாம்பின் மேல் குறி பார்த்து விட்டெறிந்தான். பாவம், அந்தக் கல் தாக்கி வலியால் துடித்த பாம்பு, இடையர்களுக்கு ஒரு சாபம் கொடுத்தது. அவ்விடம் கரையான் புற்றுக்களால் நிரம்பும். மேலும் மேலும் அவை முடிவில்லாது பெருகிச் சென்று பாம்புகள் வாழும் இருப்பிடமாகும் என்பதே அந்த சாபம்.
அந்த சாபம் உடனே பலித்தது. புற்றுகள் நாளுக்கு நாள் பெருகின. கொல்ல பள்ளியில் மாடுகள் எண்ணிக்கையிலும் ஆரோக்கியத்திலும் குறையத் தொடங்கின. அவ்வூரின் பெயரும் பேச்சு வழக்கில் வான்மீகபுரம் என்று மாறியது. வான்மீகம் என்றால் புற்று என்று பொருள். புட்டபர்த்தி என்றாலும் அதே பொருள்தான். வான்மீகபுரம் என்ற பெயர் அங்கிருந்த பெரியோர்க்கு ஒருவித மகிழ்சியை தந்தது. ஏனென்றால் வன்மீகத்தில் தோன்றிய வால்மீகி அழியாத கீர்த்தி வாய்ந்த இராமபிரானின் கதையைப் பாடி மனிதகுலத்துக்கே மோட்சத்துக்கு வழி காட்டிய மகான்.
சோகம் நிறைந்த இக்கதையை நிரூபிக்க இன்றும் அங்குள்ள மக்கள் அதே கனத்த வட்டமான கல்லை காட்டுவார்கள். கோபம் கொண்ட அவ்விடையனால் பாம்பின் மீது எறியப்பட்ட அந்தக்கல் ஒரு மூலையில் சிதைவுபட்டிருக்கிறது. அக்கல்லிலே நீண்ட சென்னிற்க்கீற்று ஒன்று இருக்கிற்து. அதுவே அந்த பாம்பின் இரத்தத்தின் அடையாளம். விரைவில் சாபத்தை தவிர்க்கவும், கால்நடைகள் வளம் பெறவும், அக்கல்லை வணங்கத் தொடங்கினர். அக்கல்லை இடையர்களின்(கோபர்களின்) தலைவனான ஸ்ரீகிருஷ்ணன் என்றும் கருதி, ஒரு கோவிலில் ப்ரதிஷ்டை செய்தனர். இதுவே கோபாலசாமி கோவில் என பலதலமுறைகளாக அனைவராலும் வணங்கபட்டு வருகிறது. இக்கல்லில் யாரும் அறியாதபடி ஒரு வடிவம் ஏற்பட்டிருந்தது. இதை வெளிப்படுத்த பகவான் பாபா சில ஆட்களை கொண்டு அக்கல்லைக்கழுவச்செய்தார். சிதைவுபட்ட பாகத்தின்மேல் சந்தனக்குழம்பைப் பூசும்படி செய்தார். அப்போது உலகத்தை அடிமைகொள்ளும் வேய்ங்குழலை உதட்டின்மேல் வைத்துக்கொண்டு பசு ஒன்றின்மீது சாய்ந்திருக்கும் ஸ்ரீகிருஷ்ணன் வடிவம் ஒன்றை அக்கல்லிலே கண்டார்கள். கிராமவாசிகள் சிலர், அக்கல்லில் இருந்து வேய்ங்குழல் கீதத்தை இப்போதும் கேட்க முடிகிறது என்று கூறுகிறார்கள்.
அன்றிலிருந்து புட்டபர்த்தியில் ஆரோக்கியம் நிறைந்த பசுக்கள் பெருகத்தொடங்கின. புட்டபர்த்தி வளமிகுந்த கிராமமாக மாறியது. புட்டபர்த்தியை இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்த பாளையத் தலைவர்களுக்கு முன்பு இருந்த செல்வாக்கையும், அதிகாரத்தையும் அதன் கிழக்கில் காணப்படும் பழையகோட்டையைக்கண்டு அறியலாம்.
[Source : Lessons from the Divine Life of Young Sai, Sri Sathya Sai Balvikas Group I, Sri Sathya Sai Education in Human Values Trust, Compiled by: Smt. Roshan Fanibunda]