கடமை என்பது என்ன?
கடமை என்பது என்ன?
இளந்துறவி ஒருவர் காட்டிற்குச் சென்று கடுந்தவம் இயற்றினார்.தியானமும் வழிபாடுகளும் யோகாசன பயிற்சிகளுமாக நெடுநாள் தவம் புரிந்தார். இங்ஙனம் பன்னிரெண்டு ஆண்டுகள் கடுமையான உழைப்பிற்குப் பிறகு அமைதியாக ஒரு மரத்தடியில் அவர் அமர்ந்தார், அப்போது அவர் தலைமீது சில காய்ந்த சருகுகள் விழுந்தன. உடனே தலையை நிமிர்த்தி பார்த்தார். ஒரு காக்கையும் கொக்கும் மரத்தின் உச்சியில் சண்டையிட்டதன் விளைவாகவே சருகுகள் உதிர்ந்தன.
இளம் துறவிக்கு கோபம் வந்து விட்டது. “எத்துணை துணிவிருந்தால் சருகுகளை என்மேல் உதிர்ப்பீர்கள்?” என்று கோபத்தோடு அவை இரண்டையும் உறுத்துப்பார்த்தார். உடனே அவரது தலையிலிருந்து ஒரு நெருப்புபொறி கிளம்பிப் பறந்து சென்று பறவைகள் இரண்டையும் ஒரு சேர எரித்து சாம்பராக்கிவிட்டது அதைக் கண்டதும் துறவிக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டது. இத்தகைய ஆற்றலை வளர்த்துக்கொண்டதற்குக் களிப் பேருவகை அடைந்தார். அவர் ஒரு விழி விழித்தால் கொக்கு காக்கை இரண்டையும் ஒருங்கே அவர் சுட்டு சாம்பராக்க முடியுமே!
சில நாட்கள் சென்றபிறகு அவர் அடுத்துள்ள ஊருக்கு உணவு தேடிச் சென்றார். அங்கு, ஒரு வீட்டின் முன் நின்று “அன்னையே உணவு தாருங்கள்.” என்று கேட்டார் . வீட்டினுள் இருந்து ஒரு குரல் “சற்று பொறு மகனே” என்று கூறி அவரைக் காக்க வைத்தது. உடனே இளந்துறவியின் இதயத்தில் செருக்கு மிகுந்து எழ “ மிக அற்பமான பெண்ணே! என்னைப் பொறுத்திருக்கவா சொல்லுகிறாய் என்னுடைய ஆற்றலை நீ அறியமாட்டாய் என்று மனதிற்குள் பொருமினார். அவரது மனத்தில் இத்தகைய எண்ணங்கள் ஓடும்போது “ மகனே! உன்னைப் பற்றியே உயர்வாக நினைக்காதே! இங்கு காக்கையோ,கொக்கோ கிடையாது” என்று மீண்டும் உள்ளிருந்து அதே குரல் வந்து ஒலித்தது
துறவி வியந்து வாயடைத்து நின்றுவிட்டார். மேலும் சற்று நேரம் அவர் காத்திருக்க நேர்ந்தது. நெடுநேரம் சென்று ஒரு பெண்மணி வெளியே வந்தாள். துறவி அவள் கால்களில் பணிந்து வணங்கி ” அன்னாய்! காட்டில் நடந்ததையும் என் மனதில் ஓடிய என்ணங்களையும் எங்ஙனம் அறிந்தீர்கள் என்று கேட்டார்.
அதற்கு அவன் “ அருமை மகனே! நீ ஆற்றிய யோகப் பயிற்சிகளும் சிறிதும் எனக்கு தெரியாது. நான் ஒரு எளிய குடும்பப் பெண். என் கணவர் நலிவுற்று இருப்பதால், அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்துக் கொண்டிருந்தேன். அதனால் நான் உன்னைக் காக்க வைத்துவிட்டேன். என் வாழ்நாள் முழுவதுமே என் கடமையை ஒழுங்காகச் செய்ய நான் கடுமையாக உழைத்திருக்கிறேன். ஒரு மகளாகத் திருமணத்திற்கு முன்பு பெற்றோருக்குப் பணியாற்றினேன். இப்போது மணமான பிறகு கணவருக்குப் பணிவிடை செய்து கடமையைச் செய்கிறேன். நான் அறிந்துள்ள யோகப் பயிற்சிகள் இவை தான், இங்ஙனம் கடமையைச் சரிவர ஆற்றி வருவதால் நான் ஞானஒளி பெற்றேன். அதனால்தான் உன் மனதில் ஓடிய எண்ணங்களையும், நீ காட்டில் செய்த செயல்களையும் என்னால் அறிய முடிந்தது. ஆனால் இன்னும் மேலாக,விளக்கமாகக் கடமையைக் குறித்து நீ அறிந்துகொள்ள விரும்பினால் காசிக்குப்போ. அங்கு கடைவீதியில் ஒர் கசாப்புக் கடைக்காரன் இருப்பான். அவன் இன்னும் விரிவாக நீ தெரிந்து கொள்ள விரும்புவதைக் குறித்து விளக்குவான்” என்று கூறினாள் அந்தப்பெண்மணி.
“நான் எதற்காகக் காசிக்குச் சென்று அந்த கசாப்புக்கடைக்காரனை சந்திக்க வேண்டும்” என்று முதலில் நினைத்தார் துறவி. மிருகங்களைக் கொலை செய்யும் தொழிலைச் செய்யும் அவர்கள் அந்தக் காலத்தில் இழிந்தவர்களாகக் கருதப்பட்டனர், சண்டாளர் என்று ஒதுக்கப்பட்டனர். அவர்களை மற்ற இனத்தினர் தொடுவது கூட கிடையாது. அவர்கள் மலத்தை எடுத்துப்போட்டு அந்த இடங்களைச் சுத்தம் செய்யும் வேலையும் செய்து வந்தனர். ஆனால் கண்கூடாக நடைபெற்றதைக் கண்டபின் துறவியின் அறிவு சற்று விரிந்திருந்தது. அதனால் அவர் உடனே கிளம்பி காசிக்குச் சென்றார் நகரத்தின் அருகில் சென்றபோதே அந்த கடைவீதியையும் அந்த கசாப்புக்கடைக்காரனையும் கண்டார். மிகப்பெரிய கத்தி ஒன்றால் அவன் விலங்குகளை வெட்டிக் குவித்து வந்தான். தன்னிடம் இறைச்சி வாங்க வந்தவர்களிடம் கூச்சலிட்டு பேரம் பேசிக்கொண்டிருந்தான். அச்சம் தரும் தோற்றம் பெற்றிருந்த அவனைக் கண்டதும், துறவி துவண்டு போய் விட்டார்.” இறைவா! இவனிடமா நான் ஏதோ பாடம் கற்கவேண்டும்? பேய் பிறப்பெடுத்து வந்தது போல் இருக்கிறானே” என்று அஞ்சி நடுங்கினான். அதற்குள் அவனே துறவியைப் பார்த்துவிட்டான். உடனே “ஸ்வாமி! அந்த பெண்மணி தங்களை இங்கு அனுப்பினாளா? அமருங்கள், என் வியாபாரத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்றான்.
துறவிக்கு தூக்கிவாரிப்போட்டது. “எனக்கு இப்போது என்ன ஏற்பட்டு விட்டது?” என்று தம்மைத் துணிவு படுத்திக்கொண்டு அமர்ந்தார் . அவன் தன் வணிகத்தை எல்லாம் முடித்து விட்டு விற்ற பணத்தை , எண்ணி எடுத்துக்கொண்டு துறவியிடம் வந்தான். “ வீட்டுக்கு வாருங்கள் ஐயா” என்று தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.
வீட்டிற்குச் சென்றதும் துறவிக்கு இருக்கை தந்து உபசரித்தான். பிறகு அவரைச் சற்று பொறுத்திருக்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்று தாய் தந்தையரை வணங்கினான். அவர்களை குளிப்பாட்டி உடைகளை அணிவித்து உணவு தந்து மற்றும் அவர்களுக்குத் தேவையான பணிவிடைகளையெல்லாம் அவர்கள் மனம் மகிழ செய்து முடித்தான். அதன் பின்னரே துறவியிடம் வந்து அவரருகில் அமர்ந்தான். “ என்னை நாடி வந்த காரணம் என்ன ஐயா! நான் உங்களுக்கு என்ன உதவி செய்யக்கூடும்?” என்று பணிவோடு கேட்டான்.
துறவி அவனிடம் உலக வாழ்க்கை, இறைவன் இரண்டைப் பற்றிய பல பல கேள்விகள் கேட்டார். அதற்குத் தக்க விடைகளை அந்த கசாப்புக்கடைக்காரன் ஒரு பெரிய விரிவுரையாகவே தந்தான். அது “வியாத கீதை ” என்று இந்தியாவின் ஒரு அரிய நூலாகவே போற்றப் பெறுகிறது.
கிருஷ்ணரது சொற்பொழிவுகளான பகவத்கீதையைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் அதைப் படித்து முடித்தப் பிறகு நீங்கள் வியாதகீதையையும் படிக்க வேண்டும்! வேதாந்த தத்துவத்தை அளவு கடந்து அறிவுறுத்துகிறது வியாத கீதை.
கசாப்புக்காரன் தன் உரையை முடித்தபோது துறவி வியப்பினால் வாய் அகல திகைத்து நின்றார் அவர் அவனிடம், ”இவ்வளவு சிறந்த அறிவைச் செறிந்து பெற்றுள்ள நீ ஏன் இந்த தாழ்மையான உடலோடு, இத்துணை இழிவான அருவறுக்கத்தக்கத் தொழிலைச் செய்து வருகிறாய்” என்று கேட்டார்.
அதற்கு அவன் “ மகனே! எந்த வேலையும் அருவறுக்கத்தக்கது அல்ல. எந்த பணியும் தூய்மையற்றதும் அல்ல. என் பிறப்பு, இடம், சூழ்நிலை இவற்றையும் உன்னித்துப் பார்க்க வேண்டுமல்லவா? இளம் பருவத்திலிருந்தே நான் இந்த வணிகத்தில் ஈடுபட்டேன் எனினும் நான் அதனோடு ஒன்றாமல் தான் என் கடமையை செய்து வருகிறேன்?. என் தாய் தந்தையரை மகிழ்வுறுத்த என்னென்ன செய்ய இயலுமோ அவை அனைத்தையும் செய்ய நான் ஆயத்தமாக இருக்கிறேன். எனக்கு ஒரு யோகப் பயிற்சியும் தெரியாது, நான் ஒரு சன்னியாசியும் அல்லன். உலகை துறந்துவிடவில்லை. காட்டிற்கும் சென்றதில்லை, நான் இருக்கும் சூழ் நிலைக்கேற்ப, என்னுடய கடமையைச் சரிவர ஆற்றி வருவதால்தான் இவ்வளவு ஞான அறிவு பெற்றேன்” என்று மேலும் விளக்கம் தந்தான்
நம் பிறப்பினால் நாம் ஆற்றவேண்டிய கடமைகளை முதலில் செய்து முடிப்போமாக!. அவற்றை முழுமையாய் முடித்தபிறகு, நம் நிலைக்கும், தகுதிக்கும் ஏற்ற வகையில் மேலும் சில கடமைகளைச் செய்வோமாக. ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு நிலையில் பொருத்தப் பெற்றிருக்கிறான் முதலில் அந்த நிலைக்கேற்ப அவனது கடமைகளை அவன் சரிவர ஆற்ற வேண்டியவனாகிறான். மனித இனத்தின் இயல்பில் பெரும் குறை ஒன்றுள்ளது. அவன் தன் நிலையையும் தரத்தையும் உன்னித்துப் பார்ப்பதேயில்லை என்பதுதான் அது. சிம்மாசனத்தில் அமர்ந்து அரசனாகும் தகுதி பெற்றவன் என்று அவன் நம்புகிறான். அப்படி தகுதி இருந்தாலும் அவனுடைய அப்போதைய நிலைக்கேற்ப தன் கடமைகளை ஒழுங்காக ஆற்றி வந்திருக்கிறானா அன்று அவன் முதலில் கவனிக்க வேண்டும், அவற்றை அவன் சரிவர முடித்திருந்தால் அதற்குமேல் உயர்வான். பணிக்கு அவன் உரியவனாகி அந்த பணிக்கு ஏற்ப கடமையை ஒழுங்காக ஆற்றிவர இயலும்.