நஸிருதீனுடைய ஞானமும் அறிவும்
நஸிருதீனுடைய ஞானமும் அறிவும்
முல்லா நஸிருதீன் என்பவர் துருக்கி நாட்டைச்சேர்ந்தவர். தம் அறிவாளித்தனமான பேச்சுக்கும் ஞானம் நிரம்பிய நகைச்சுவையோடு கூடிய கருத்துக்களுக்கும் அவர் போற்றி சிறக்கப் பெற்றிருந்தார். இன்று கூட அவரது நினைவு நாளை ஒட்டி ஆண்டுதோறும் அங்கு ஒரு விழா நடத்துகிறார்கள்
நஸிருதீன் ஒரு நாள் ஒரு சோப்புத்துண்டு வாங்கிவந்து தன் மனைவியிடம் தந்து தமது சட்டையைத் தோய்க்கச்சொன்னார். அவரது கட்டளைப்படி அவரது மனைவி சட்டைக்குச் சோப்பு இட்டுக்கொண்டிருந்தாள். திடீரென ஒரு காக்கை கீழ் நோக்கி பறந்து வந்து அவளது கையிலிருந்த சோப்பை கொத்திச்சென்று அடுத்துள்ள் ஒரு மரத்தின் கிளைமீது அமர்ந்துகொண்டது முல்லாவின் மனைவிக்கு கோபம் வந்து உரக்கச் சத்தமிட்டு அந்த காக்கையைச் சபிக்கத் துவங்கி விட்டாள்
சத்தம் கேட்டு நஸிருதீன் வீட்டினுள்ளிருந்து ஓடி வந்தார். “என்அன்பே என்ன நேர்ந்தது?” என்று பரிவோடு வினவினார். “ நான் உங்கள் சட்டைக்கு சோப்பு போட்டுக்கொண்டிருந்தபோது அந்த பொல்லாத காக்கை பறந்து வந்து சோப்பை பறித்துச்சென்றது” என்ற கத்தினாள் மனைவி
வாய்விட்டுச் சிரித்தார் முல்லா. “ என்னுடைய சட்டையின் நிறத்தையும் காக்கையின் நிறத்தையும் ஒப்பிட்டுப்பார். என்னைவிட கருமையான காக்கைக்குத்தான் சோப்பு மிக அவசியம் என்று உனக்கு புரியவில்லையா? கவலைப்படாதே! வேறு சோப்பு வாங்கி வருகிறேன்.” என்று வேடிக்கையாக பேசி அவளதுகோபத்தை மாற்றினார்.
ஒரு நாள் நஸிருதீன் வழியில் துக்கம் கவிந்து வருத்தம் தோய்ந்த முகத்துடன் ஒருவரைப் பார்த்தார்.அவரருகே சென்று,” என்ன நேர்ந்தது? ஏன் இப்படியிருக்கிறிர்கள்?” என்று பரிவோடு வினவினார்
“தம்பி! எனக்கு வாழ்க்கையில் ஒருவித விருப்பமும் இல்லையப்பா! எனக்கு நிறைய பணமிருக்கிறது. நல்ல மனைவி அருமையான குழந்தைகளும் உள்ளனர். எனினும் நான் நிறைவையோ மகிழ்ச்சியையோ பெற முடியவில்லையே” என்று நைந்த குரலில் பதில் சொன்னார் அவர்.
மறு வினாடி, மறு பேச்சு பேசாது நஸிருதீன் அவரது பயணப்பையை எடுத்துக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓடினார். அவரது ஓட்டத்துக்கு ஈடாக எத்துணை முயன்றும் அந்த மனிதரால் ஓட முடியவேயில்லை. இப்படியே கொஞ்ச நேரம் தம்மை துரத்திக்கொண்டு அவரை ஓடவிட்டு பையைச் சாலை ஓரத்தில் வைத்துவிட்டு அடுத்துள்ள மரத்தின் பின்னே மரைந்து நின்றுக் கொண்டு நடப்பதை கவனிக்கலானார். மேல் மூச்சு வாங்க வேகமாக ஓடியதில் களைத்துபோன அந்த ஆள், சாலை ஓரத்தில் தன் பையைக் கண்டதும் மகிழ்ச்சியில் உரக்கக் கத்திக் கொண்டே விரைந்து சென்று பையை எடுத்துக் கொண்டார். அப்போது மரத்தின் பின்னிருந்து வெளியே வந்து” இதுதான் இன்பம்! இதை நீ இப்போது பெற்று விட்டாய் அல்லவா!” என்று மகிழ்வோடு கூறிச் சிரித்தார் முல்லா நஸிருதீன்.
கேள்விகள்:
- நஸிருதீன் மனைவி ஏன் கோபம் கொண்டாள்?
- அதற்கு நஸிருதீனின் பதில் என்ன?
- நஸிருதீன் அந்த பயணியை எப்படி மகிழ்வாக இருக்கச்செய்தார்?