ஜொராஷ்டிரிய மதம்

Print Friendly, PDF & Email
ஜொராஷ்டிரிய மதம்

முன்னுரை: பார்ஸி மத தீர்க்கதரிசி ஜொராஷ்டிரர், 8500 ஆண்டுகளுக்கு முன்பு, ஜொராஷ்டிரிய மதத்தை ஸ்தாபித்தார். தீய சக்திகளை அழிக்க வேண்டும் என்று பூமித்தாய் பிரார்த்தித்ததால் கி.மு.6400ஆம் ஆண்டு இவர் பிறந்தார். சிறு வயதிலேயே அவருக்கு மஸ்தாயஸ்னின் மதப்படி தீட்சை அளிக்கப்பட்டது. 15 வயதிலேயே குஷ்டி (பூணூல்) அணிவிக்கப்பட்டது. தமது 20ஆம் வயதிலேயே மனித வாழ்வின் நோக்கத்தையும், பொருளையும் அறிவதற்காக, ஒரு தனி இடத்திற்குச் சென்று 10 வருடங்கள் தவம் புரிந்தார். அப்போது அஹுரா மஸ்தாவை அவர் அறிந்ததோடு, அவருடன் பேசவும் செய்தார்.

அப்போது தீர்க்கதரிசிகளுக்கு வேதம் வெளிப்பட்டது போல இவருக்கும் பார்சி மதத்தின் புனித நூல்களான கதாக்கள் அவருடைய புனிதமான அறிவில் வெளிப்பட்டன. தமக்குத் தெரிவிக்கப்பட்டவைகளை, அவர் மக்களுக்குப் போதித்தார். இதுவே ஜொராஷ்டிரிய மதம் என்று வழங்கலாயிற்று. மஸ்தாயஸ்னின் மதத்தில் உள்ள தீ வழிபாடு மற்றும் குஷ்டி அணிதல் ஆகிய இரண்டையும் பார்ஸி மதத்தில் பின்பற்றச் செய்தார். சுமார் 13 நூற்றாண்டுகளுக்கு முன்பு, பார்ஸியர்கள் இந்தியாவில் குடியேறிய போது பார்ஸி மதம் அவர்களுடன் இந்தியாவிற்கு வந்தது.

புனித நூல்கள்

ஜொராஷ்டிரிய புனித நூல்களுள் முக்கியமானது ஜெண்ட் அவெஸ்தா. பார்ஸிகள் இந்தியாவில் குடியேறிய பிறகு தஸ்தூர் நர்யோகங்க் தாவை என்பவர், ஜெண்ட் அவெஸ்தாவை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தார்.

கோட்பாடுகள்

ஜொராஷ்டிரிய மதமும், இந்து மதமும் ஆர்ய மதத்தைச் சார்ந்தவைகள். ஆதலால் இரண்டு மதத்திற்கும் பொதுவான அம்சங்கள் நிறைய உள்ளன. (உ-ம்) சூரியன் மற்றும் நெருப்பை வணங்குதல், ஹோமம் வளர்த்தல். இம்மதம் கடவுள் ஒருவரே என்பதை வலியுறுத்துகிறது. அவரே அஹுரா மஸ்தா. அவரே இந்தப் பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்துக் காப்பவர். மனிதர்களின் இதயங்களில் சத்ய, தர்மமாக வீற்றிருப்பவர்.

நல்லெண்ணம், நல்வார்த்தை, நல்ல செயல் (ஹூமதா, ஹூக்தா, ஹ்வர்ஷ்டா) இம்மதத்தின் அடிப்படை போதனைகள் ஆகும். அதன் ஐந்து அறநெறிகளாவன:

  1. நற்பண்பு
  2. இசைவு
  3. அமைதி
  4. நல்லறம்
  5. புனிதத் தன்மை.
நான்கு கடமைகள்:
  1. அஹுரா மஸ்தாவை வழிபடுவது
  2. ஜொராஷ்டிரரைத் தலைவராக ஏற்றுக் கொள்ளுதல்
  3. தீமைக்கு எதிராக நிற்றல்
  4. அஹுரா மஸ்தாவின் செயல்பாட்டில் முழு நம்பிக்கை கொண்டிருத்தல்

இரட்டை நிலைகளான ஒளிலில் இருள், பருப்பொருள் – நுண்பொருள் ஆகியவைகளில் நம்பிக்கை உண்டு. சாத்தானைப் போல அஹ்ரிமான் கெடுதல் செய்வதாகக் கருதப்படுகிறது. புனித வீரனைப் போல மனிதன், தீமை, பொய் மற்றும் அநியாயம் ஆகியவைகளை எதிர்த்துப் போராட வேண்டும். நல்லொழுக்க நெறிக்கும், மேற்சொன்ன நல்லெண்ணம், நற்சொல், நற்செயல் ஆகியவைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இவைகள் நன்னடத்தைக்கு அடிப்படையாகக் கருதப்படுகின்றன.

அமைதி கோபுரம்

இயற்கையின் புனிதத் தன்மை இம்மதத்தின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். கடவுளின் பெரிய வஸ்திரமாக விளங்கும் இந்த இயற்கையை மனிதன் மாசுபடுத்தக் கூடாது. இறந்தோரை எரிப்பதால் பூமி மாசுபடுகிறது; நெருப்பையும் இழிவுபடுத்துவதாக உள்ளது. எனவே, இறந்த உடல்கள் அமைதிக் கோபுரத்தில் (பர்ஜ்ங்ழ் ர்ச் நண்ப்ங்ய்ஸ்ரீங்) சூரியனின் நேரடிக் கதிர்களால் எரிக்கும் வண்ணம் வைக்கப்பட்டு, பறவைகளால் விழுங்கப்படுகின்றன.

ஆரியர்களைப் போல ஜொராஷ்டிரிய மத மக்களும் நெருப்பை வழிபட்டனர். நெருப்பு தூய்மையின் அடையாளச் சின்னம். வாழ்க்கையின் ஆதாரம். சூரியனிடமிருந்து வெளிப்படுவது. சிருஷ்டிகர்த்தா அஹுரா மஸ்தாவின் ஒளி பொருந்திய உடலாக உள்ளது.

உபதேசம்

‘அமேஷா ஸ்பெண்டா’ எனப்படும் ஏழு நிலைகளைக் கொண்ட உபதேசத்தை ஜொராஷ்டிரர் நல்கினார். அவைகளாவன:

1. அஹுரா மஸ்தா கடவுளிடம் பக்தி
2. வோஹு மனோ குற்றமற்ற, நேசிக்கும் மனம்
3. அஷவஹிஷ்டா மிக உயர்ந்த அறம்
4. வோஹு க்ஷத்ரம் வைரம் சக்தி, பலம், திறமை
5. ஸ்பென்டா ஆர்மைதி அழியாத இனிமை
6. கொர்தாத் முழுமை / அமைதி / சமநிலை
7. அமேரதாத் சகித்துக் கொள்ளல்
மதச்சடங்கு

ஒவ்வொரு பார்ஸியும் சூத்ரா எனப்படும் புனித ஆடையையும், குஷ்டி எனப்படும் புனிதப் பூணூலையும் அணிய வேண்டும். சூத்ரா மற்றும் குஷ்டி பார்ஸியர்களின் சீருடைகளாக அமைந்துள்ளன. 7 வயதிலிருந்து 11 வயதிற்குள் இவைகளைக் குரு மூலம் அவர்கள் அணியவேண்டும். இந்து மதத்தில் செய்யப்படும் உபநயனத்தைப் போல, நவஜோதி என்றழைக்கப்படும் இச்சடங்கு அமைந்துள்ளது.

சூத்ரா என்பது வெள்ளை ஆடையாகும். வெண்மை தூய்மையை எடுத்துக் காட்டுகிறது. தூய்மை ஜொராஷ்டிர மதத்தின் ஆதாரமாக உள்ளது. சூத்ரா அணிதல், நாம் தினமும் செய்யும் பணிகள், இறுதித் தீர்ப்பிற்காக பதிவு செய்யப்படுகின்றன என்பதை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. ஆட்டின் கம்பளியில் இருந்து குஷ்டி தயாரிக்கப்படுகிறது.

குஷ்டி, அணிபவர்களைச் சிருஷ்டி கர்த்தாவுடன் இணைக்கிறது. இது 72 இழைகளைக் கொண்டது. இம்மதத்தின் புனித நூல்களில் ஒன்றான யஸ்னாவில் உள்ள 72 அத்தியாயங்களை இது குறிக்கிறது. சீரான, நடுநிலையான பாதையைக் குறிக்க இது இடுப்பின் மீது கட்டப்படுகிறது. மூன்று சுருக்குகளையும், நான்கு முடிச்சுகளையும் (முன் பக்கம் இரண்டு, பின் பக்கம் இரண்டு) கொண்டது. அஹுரா மஸ்தா ஆக்குபவர், காப்பவர், அழிப்பவர் மற்றும் முக்காலத்தையும் கட்டுப்படுத்துபவர் என்பதை மூன்று வளையங்கள் குறிப்பிடுகின்றன.

நான்கு முடிச்சுகள் குறிப்பாக உணர்த்துவது:
  1. கடவுளின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிதல்
  2. இந்த ஆணைகளை நிறைவேற்ற வாழ்க்கையை அர்ப்பணித்தல்
  3. தீமைக்கு எதிராக விடாது போரிடுதல்
  4. கடவுளிடம் மிக உயர்ந்த நம்பிக்கை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன